Search This Blog

Sunday, August 12, 2012

பங்குச் சந்தை என்றால் என்ன?


'மாப்பிள்ளைக்கு எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. பீடி சிகரெட் பிடிக்கமாட்டார்... வெற்றிலை, பீடா பழக்கம் கிடையாது... சீட்டுக்கட்டை கையால்கூடத் தொடமாட்டார். இவ்வளவு ஏன், பங்குச் சந்தையில்கூட பணம் போடலைன்னா பாத்துக்கோங்களேன்!'

இப்படிப்பட்ட பட்டியலில்தான் இருக்கிறது பங்குச் சந்தை... இன்னமும் பலருக்கு அது கெட்டசகவாசம்தான். உங்களுக்கும் அப்படிப்பட்ட எண்ணம் ஏதாவது இருந்தால் இனியாவது அதை மாற்றிக் கொள்ளுங்கள்... கவனமாகக் கையாண்டால் நிச்சயமாக அது லாபத்தை அள்ளிக் கொடுக்கும் நல்ல வழிதான். உடனடியாக இல்லாவிட்டாலும் நீண்ட காலத்தில் பங்குச் சந்தை பற்றிய உங்கள் கருத்தை நிச்சயமாக மாற்றிக்கொள்வீர்கள்.

கம்பெனி நாலு விதம்!

கம்பெனி... கம்பெனினு சொல்றோமே அதிலே நாலுவிதம் இருக்கு. முதல்ல தனி ஆள் சொந்தமாக நடத்துற கம்பெனி. அடுத்து ரெண்டு மூணுபேர் சேர்ந்து நடத்துற பார்ட்னர்ஷிப் கம்பெனி... அடுத்து, கொஞ்சபேர் கூட்டாச் சேர்ந்து பணம் போட்டு நடத்துற பிரைவேட் லிமிடெட் கம்பெனி. இந்த மூணுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாலாவதா இருக்கற பப்ளிக் லிமிடெட் கம்பெனிதான் நமக்குத் தேவை! ஏன்னா, அந்த கம்பெனிக்கும் நமக்கும் தொடர்பு இருக்கே... பின்னே அந்த பப்ளிக் நாமதானே!

சிம்பிளாச் சொல்லணும்னா பப்ளிக்கா வந்து பலபேரை கூட்டாளியாச் சேர்த்துக்கிட்டு அவங்ககிட்டேயும் பங்கு வாங்கி தொழில் நடத்தும் கம்பெனிதான் பப்ளிக் லிமிடெட் கம்பெனி. அதுல கூட்டாளியா இருக்கறவங்க பங்குதாரர். அட, நீங்கதாங்க அது!

அதாவது ஒரு கம்பெனியை நடத்துறதுக்கு பத்து கோடி ரூபா தேவைனு வெச்சுக்கோங்க... அதை கோடி பேர்கிட்டே பத்து பத்து ரூபாயா வாங்கி பணத்தைச் சேர்த்தா அது பப்ளிக் லிமிடெட் கம்பெனி. அந்த கம்பெனியை நடத்தி, அதில் கோடி ரூபா லாபம் வந்ததுன்னா அதை பத்து ரூபாய் கொடுத்த ஆளுக்கு ஒரு ரூபாய் லாபம்னு கணக்கு வெச்சு பிரிச்சுக் கொடுத்திடலாம். இதுதான் பங்குக் கணக்கு.

பங்குச் சந்தைன்னா என்ன?

இப்போ உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்குமே...அந்த கம்பெனியில பத்து ரூபாய் கொடுத்து பங்குதாரர் ஆகலாம்னு எப்படித் தெரிஞ்சுக்கறதுன்னு... அதைக் கூவிக் கூவி விக்கறதுக்குனு சந்தை இருக்கு... நம்ம ஊர் வாரச் சந்தை மாதிரியே... அதுக்குப் பேர்தான் பங்குச் சந்தை!

பாயின்ட்டுக்கு வந்துட்டோமா..? கம்பெனிகள் எல்லாம், 'எங்க கம்பெனிப் பங்குகளை வாங்கிக்கோங்க'னு சந்தையில் கடைவிரிப்பாங்க... வேணுங்கறவங்க பங்குகளை வாங்கி அந்த கம்பெனியில பங்குதாரர் ஆவாங்க... இப்படிப் பங்குகளை விக்கிற இடம்தான் பங்குச் சந்தை. 'சரி, இது ஒருநாள் வியாபாரம் தானே..? முதல்ல பங்கை வாங்கிட்டா... அதுக்குப் பிறகு பணம் போட்டவருக்கும் கம்பெனிக்கும்தானே நேரடி பேச்சுவார்த்தை... சந்தைக்கு என்ன வேலை'னு கேக்கத் தோணுதா..

ஐ.பி.ஓ... செகண்டரி சந்தை..!

மேலே சொன்னோமே... கம்பெனிகள் தங்களோட பங்குகளை கடைவிரிக்கும்னு அதுக்குப் பேர்தான் பங்கு வெளியீடு! இங்கிலீஷில் ஐ.பி.ஓ-னு சொல்வாங்க. அதாவது, ஒரு கம்பெனி தன்னுடைய தொழிலை விரிவுபடுத்துறதுக்காக பங்குச் சந்தைக்கு வந்து பங்குகளை வெளியிடுவாங்க... இந்தப் பங்கு விற்பனையை, மெர்ச்சென்ட் பேங்க்கர்ஸ் அப்படிங்குற நிதி நிறுவனங்கள் முன்னாடி நின்னு நடத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நிதி திரட்டிக் கொடுக்கும். ஒரு கம்பெனி பங்கு வெளியிட்டாச்சுன்னா அந்த கம்பெனி சந்தைக்கு வந்தாச்சுனு அர்த்தம்.

இப்படி ஒரு கம்பெனி ஐ.பி.ஓ. வரும்போது அது நல்ல கம்பெனி... நல்ல லாபம் கிடைக்கும்னு நினைச்சு பல பேர் அந்தப் பங்குகளை அடிச்சுப் பிடிச்சு வாங்கிடுறாங்கனு வச்சுக்கோங்க... அப்படின்னா சிலருக்கு அந்தப் பங்கு கிடைக்காமப் போயிடும் இல்லையா? ஆனா அவங்க வாங்கறதுக்கும் ஒரு வாய்ப்பு வரும். அதுக்கு செகண்டரி மார்க்கெட் அதாவது இரண்டாம் நிலை சந்தைனு பேரு!

ஐ.பி.ஓ-வுல வாங்காதவங்க அதுக்குப் பிறகு இந்த செகண்டரி மார்க்கெட்டுல வாங்கிக்கலாம். ஐ.பி.ஓ-வில பங்குகளை வாங்கினவங்க அந்தப் பங்குகள் வேண்டாம்னு நினைச்சோ அல்லது நல்ல டிமாண்ட் இருக்கிறதால லாபத்துக்கு வித்துடலாம்னு நினைச்சோ விற்க முன்வருவாங்க. அந்தச் சமயத்துல அந்தப் பங்குகளை மத்தவங்க வாங்கிக்கிடலாம். ஆனா ஒரு வித்தியாசம்... ஐ.பி.ஓ-விலே கம்பெனி நிர்ணயம் செஞ்ச விலைக்கு பங்கு கிடைக்கும். ஆனா, செகண்டரி மார்க்கெட்டுல எந்த விலைக்கு விற்க விரும்பறாங்களோ அந்த விலை கொடுத்துதான் வாங்கணும். பத்து ரூபாய் பங்குன்னா பத்து ரூபாய்தானே இருக்கணும். அது எப்படி அதிகமாகும்னு நினைக்கிறீங்களா..?

நாம பசுமாடு ஒண்ணை பத்தாயிரம் ரூபாய்க்கு ஒருத்தர்கிட்ட வாங்குறோம். வாங்கின பிறகு நாம எதிர்பார்த்ததை விட அது அதிகமா பால் கறக்குதுனு வச்சுக்குவோம்... இப்போ அந்த மாட்டை விற்க நினைச்சா அதே பத்தாயிரத்துக்கா விற்போம்? கூடுதல் லாபம் வச்சுதானே விற்போம். அப்படித்தான் நல்ல லாபம் கொடுத்தா... பங்கோட மதிப்பும் சந்தையில கூடும். பத்து ரூபாய்க்கு வாங்கின பங்கு நூறு ரூபாய்க்குகூட போகும்!

ஐ.பி.ஓவுல கம்பெனி நிர்ணயம் பண்ணின விலைக்குத்தான் பங்கு கிடைக்கும்னு முதல்ல பார்த்தோமே... அந்த காலமும் இப்போ மலை-யேறிடுச்சு. முன்ன-யெல்லாம் பத்து ரூபாய் மதிப்-புள்ள பங்குகளை ஒரு கம்பெனி வெளியிடு-துன்னா, அந்த பத்து ரூபாய்க்கே வாங்கலாம். ஆனா, இப்போ பிரீமியம் ரேட்டுங்கற பேர்ல ஐம்பது மடங்கு, நூறு மடங்கு அதிகமாத்தான் கம்பெனியே விலை நிர்ணயம் பண்ணுது.

இப்போ ஒரு விஷயம் புரிஞ்சிருக்குமே... பங்குச் சந்தைக்கு வர்ற கம்பெனிகள்ல நல்ல திறமையான கம்பெனியோட பங்குகளை வாங்கினா, அது நமக்கு நல்ல லாபத்தை சம்பாதிச்சுக் குடுக்கும்.
 

1 comment:

  1. விரிவான விளக்கம்... பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete