Search This Blog

Wednesday, August 01, 2012

இயங்குவது எப்படி? இண்டர்நெட்

முதலில் ‘இன்டர்நெட்’ என்றால் என்ன?


உங்கள் வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் இருக்கிறது. அதில் நீங்கள் ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறீர்கள். பார்க்கிறவர்கள் அனைவரும் பிரமாதமாகப் பாராட்டுகிறார்கள். மகேஷ் பிறந்த நாள் விழாவில் உங்கள் அம்மா, என் மகன் நன்றாகப் படம் வரைவான்" என்கிறார்.

அப்படியா! நீ வரைந்த படத்தையெல்லாம் பார்க்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆசையாய் இருக்கு, நாளைக்கு எடுத்துக்கிட்டு வந்து காட்டறியா?" என்கிறார் மகேஷ் அம்மா.

அச்சச்சோ, அதெல்லாம் பேப்பர்ல ப்ரஷ் வெச்சு வரைஞ்ச படம் இல்லை, கம்ப்யூட்டர்ல வரைஞ்சது!" என்கிறீர்கள் நீங்கள். நல்லது, எங்க வீட்லயும் கம்ப்யூட்டர் இருக்கு. அதுல உன்னோட படத்தையெல்லாம் எடுத்துக் காட்டலாமே!"

எங்க வீட்ல இருக்கிற கம்ப்யூட்டர் வேற, உங்க கம்ப்யூட்டர் வேற, அங்கே வரைஞ்ச படம் எப்படி இங்கே வரும்? நீங்க என் வீட்டுக்கு வந்தால் காட்டறேன்!" என்கிறீர்கள்.

அடடா! ரெண்டுமே கம்ப்யூட்டர்தானே? அங்கே இருக்கற படத்தை இங்கே ஏன் பார்க்க முடியாது?"

ஒரு கம்ப்யூட்டரில் இருக்கிற விஷயங்களை இன்னொரு கம்ப்யூட்டரில் பார்க்க முடியாதா? ஏன்?

பல வருடங்களுக்கு முன் சில ஆராய்ச்சியாளர்கள் இப்படி யோசித்ததன் விளைவுதான், கம்ப்யூட்டர் நெட்வொர்க்.

ஆங்கிலத்தில் ‘நெட்வொர்க்’ என்றால் வலைப்பின்னல். ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தோடு பிணைப்பது. உதாரணமாக, பலசெல்போன்கள் இணைந்த ஒரு பின்னலை ‘செல்போன் நெட்வொர்க்’ என்று சொல்கிறோம், பல பள்ளிகள் இணைந்த ஒரு கூட்டமைப்பை ‘ஸ்கூல் நெட்வொர்க்’ என்று சொல்கிறோம்.

கம்ப்யூட்டரைப் பொறுத்தவரைக்கும், அது தனியாக இருந்தால் கொஞ்சம் லாபம்தான். பல கம்ப்யூட்டர்கள் இணைந்து இருக்கும்போது நாம் நிறைய விஷயங்களைச் சாதிக்கலாம். இதுக்காகத்தான் ‘கம்ப்யூட்டர் நெட்வொர்க்ஸ்’ உருவாக்கப்பட்டது.

உதாரணமாக, உங்கள் வீட்டு பெட்ரூமில் ஒரு கம்ப்யூட்டர், ஹாலில் ஒரு கம்ப்யூட்டர் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த இரண்டையும் சில கம்பிகள் (கேபிள்) மூலமாகப் பிணைத்து விட்டோம் என்றால், அவை ஒரு நெட்வொர்க் ஆகிவிடுகின்றன. பிறகு நீங்கள் இங்கிருந்து அங்கே செய்தி அனுப்பலாம், அங்கே இருக்கிற ஃபைல்களை இங்கே பார்க்கலாம்...

கொஞ்ச நாள்கள் கழித்து,நீங்கள் ஒரு பிரிண்டர், அதாவது அச்சிடும் இயந்திரத்தை வாங்குகிறீர்கள். அதையும் இந்த ‘நெட்வொர்க்’கில் இணைத்து விட்டால் போதும், நீங்கள் எந்த கம்ப்யூட்டரில் வேண்டும் என்றாலும் எழுதலாம், அங்கிருந்தபடி அதை அச்சிடலாம்.

இப்படி ஒரு வீட்டுக்குள், அல்லது ஓர் அலுவலகத்துக்குள் ஏற்படுத்துகிற இணைப்புகளை 'LAN' அதாவது 'Local Area Network' என்று சொல்வார்கள். இதில் இரண்டு முதல் இருபது, முப்பது கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், மற்ற கருவிகள் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கும்.

அடுத்த ஸ்டெப், 'WAN’, அதாவது 'Wide Area Network'. உங்கள் வீட்டு கம்ப்யூட்டரையும், பல தெருக்கள் தள்ளி இருக்கிற மகேஷ் வீட்டு கம்ப்யூட்டரையும் ஒரே நெட்வொர்க்கில் இணைக்கிறது.

அதுக்கு ஏகப்பட்ட கேபிள் தேவைப்படுமே!


உண்மைதான். அதேசமயம் கொஞ்சம் கஷ்டப்பட்டு இதைச் சாதித்து விட்டோம் என்றால் எத்தனை வசதி என்று யோசியுங்கள். நீங்கள் இங்கே வரைந்த ஓவியங்களை எல்லாம் உடனே மகேஷ் வீட்டில் திறந்து காட்டிடலாமே!

பெரிய நிறுவனங்கள் மயிலாப்பூரில் ஒரு ஆபிஸ், தி. நகர்ல ஒரு ஆபிஸ், அடையாறில் ஒரு ஆபிஸ் என்று பல கிளை அலுவலகங்களை வைத்திருப்பார்கள். அந்தந்த அலுவலகங்களில் இருக்கிற கம்ப்யூட்டர்கள் எல்லாம் தனித்தனியாக 'LAN'ல் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், மயிலாப்பூரில் இருக்கற ஒரு கம்ப்யூட்டர் அடையாறில் இருக்கிற இன்னொரு கம்ப்யூட்டரோடு பேச வேண்டும் என்றால் அதுக்கு 'WAN' தேவை. புரியுதா?

ஒருவேளை, எனக்குக் கோயம்புத்தூரில் இன்னொரு ஆபிஸ் இருந்தால் என்ன செய்வது? சென்னையிலிருந்து கோயம்புத்தூர் வரைக்கும் கேபிள் இழுக்க வேண்டுமா?

இந்தப் பிரச்னையைத்தான் இண்டர்நெட் தீர்த்துவைக்கிறது. லோக்கல் நெட்வொர்க்கில் இருந்து ஆரம்பித்து, ஓர் உலகளாவிய நெட்வொர்க்குக்கு இப்போது நாம் போகிறோம்.

ஆங்கிலத்தில் ‘இண்டர்நெட்’, தமிழில் ‘இணையம்’. இதன் அர்த்தம், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்களுடைய தொகுப்பு. மெகா சைஸ் நெட்வொர்க்.

‘இன்டர்நெட்’ என்பது ஏதோ ஓர் ஊரில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கிற விஷயம் இல்லை. அது ஓர் உலகப் பொதுவான வலைப்பின்னல். அதில் பலவிதமான கம்ப்யூட்டர்கள், இணையதளங்கள் இணைந்திருக்கின்றன.

உதாரணமாக, ‘கூகுள்’ என்பது ஓர் இணையதளம். இது இண்டர்நெட்டில் இணைந்திருக்கிறது. இதுக்கான இணைய முகவரி http://www.google.com/.

இப்போது நம் வீட்டில் இருக்கிற ஒரு கம்ப்யூட்டரில் இந்த இணைய முகவரியைத் தட்டுகிறோம். சட்டென்று கூகுள் இணையதளம் திறக்கிறது. எப்படி?

முதலில், கூகுளைப் போலவே நம் கம்ப்யூட்டரும் இணையத்துடன் சேர்ந்திருக்க வேண்டும், அது தொலைப்பேசி வயர்கள் வழியாக வருகிற இண்டர்நெட்டாக இருக்கலாம், ‘பிராட்பேண்ட்’ என்ற விசேஷ அகலப்பட்டை கேபிள்கள் மூலம் வருகிற ‘சூப்பர் ஃபாஸ்ட்’ இண்டர்நெட்டாக இருக்கலாம், கம்பிகளே இல்லாத ‘வயர்லெஸ்’ இன்டர்நெட்டாகவும் இருக்கலாம், மொபைல் நெட்வொர்க் மூலம்கூட இணைய ஜோதியில் கலக்கலாம், இப்படி ஏதோ ஒரு வழியில் நாம் இணையத்தில இணைய வேண்டும்.

அடுத்து, இணையத்தைப் பார்க்க நம்மிடம் ஒரு கருவி வேண்டும். தொலைவில் இருக்கிற ஒருவரோடு பேசுவதற்கு ஒரு தொலைப்பேசிக் கருவி தேவைப்படுகிறதில்லையா? அது போல, இணைய தளங்களைப் பார்வையிடுவதற்குத் தேவைப்படுகிற கருவி, ஆங்கிலத்தில் Browser, தமிழில் ‘உலவி’. Internet Explorer, Firefox, Chrome... இதெல்லாம் பிரபலமான பிரௌசர்கள். இதில் ஏதாவது ஒன்று நம் கம்ப்யூட்டரில் இருக்கவேண்டும்.

மூன்றாவதாக, நாம் அந்த பிரௌசரைத் திறந்து, கூகுள் இணைய முகவரியைத் தட்ட வேண்டும். ஏற்கெனவே நாம் இணையத்தில் இருக்கிறோம், கூகுளும் இணையத்தில் இருக்கிறது. ஆகவே, அந்த இணையதளம் நம்ம பிரௌசரில் காண்பிக்கப்படுகிறது.

இதுதான் அடிப்படை. ஈமெயில், இணைய அரட்டை (சாட்), வீடியோ கான்ஃபரன்ஸ், வலைப்பதிவுகள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் நெட்வொர்க் என்று பலவற்றைச் செய்யலாம்! இணையம் ஓர் அமுதசுரபி, வேண்டியதைத் தேடிப் பிடிப்பது நம் சாமர்த்தியம்!

என்.சொக்கன்

No comments:

Post a Comment