Search This Blog

Saturday, August 11, 2012

ஒலிம்பிக்ஸ் - போதுமா இந்தப் பதக்கங்கள்?

‘நான் குத்துச்சண்டையில் ஆர்வம் காட்டியபோது, பெண்களுக்கு எதற்குக் குத்துச்சண்டை என்று கேலி செய்தார்கள். திருமணத்துக்குப் பிறகு, இனிமேல் அவ்வளவுதான் என்றார்கள். குழந்தைகள் பிறந்த பிறகு, இனி எப்படி விளையாட்டில் ஈடுபடமுடியும் என்று கேள்வி எழுப்பினார்கள். உலக சாம்பியன் பட்டத்தைத் தொடர்ந்து ஜெயித்துதான் என் மீதான விமர்சனங்களை ஒவ்வொரு முறையும் கடந்து வந்திருக்கிறேன்,’ -குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் ஒலிம்பிக்ஸ் சாதனை, இத்தனை தடைகளைத் தாண்டிப் பெற்றதுதான். லண்டன் ஒலிம்பிக்ஸ், மேரி கோமுக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கும் மறக்கமுடியாத அனுபவத்தைத் தந்திருக்கிறது. 1900லிருந்து இந்திய அணி, ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்டு வருகிறது. இந்தமுறைதான் அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளது. லண்டன் ஒலிம்பிக்ஸுக்காக இந்திய அரசு 135 கோடி ரூபாயை, கடந்த இரண்டு வருடங்களில் செலவழித்திருக்கிறது. கடைசி நேரத்தில், பணத்தை வாரி இறைத்தால் மட்டும் போதாது என்பதற்கு நிறைய படிப்பினைகள் கிடைத்திருக்கின்றன.
லண்டனில் வெள்ளிப் பதக்கம் வாங்கிய விஜகுமாருக்கு சந்தோஷமே இல்லை. ஹிமாசலப் பிரதேச அரசு ஒரு கோடி ரூபாய் அளிக்க முன்வந்ததற்கு வருத்தம்தான் தெரிவிக்கிறார். இத்தனை வருடங்களாக என்ன செய்துகொண்டிருந்தது என்று கேள்வி எழுப்புகிறார். ‘தேசிய அளவில் 110 போட்டிகளில் வெற்றி அடைந்திருக்கிறேன். 45 சர்வதேசப் பதக்கங்களும் பெற்றிருக்கிறேன். ஆனால், என்னுடைய சாதனையை யாரும் அறிந்துகொள்ளவுமில்லை; மதிப்பளிக்கவுமில்லை. நான் பணிபுரியும் இந்திய ராணுவத்திலும் இதே நிலைமை தான். பயிற்சிகளுக்கான வசதிகளைத் தந்து உதவினாலும், என் சாதனைகளைக் கௌரவப்படுத்தும் விதத்தில் எந்தப் பதவி உயர்வும் எனக்கு அளிக்கப்படவில்லை. 2010 காமன்வெல்த் கேம்ஸில் மூன்று தங்கங்களைப் பெற்றபிறகும் இந்திய ராணுவத்தில் இன்னமும் சுபேதாராகத்தான் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்,’ என்று அவர் குமுறுகிறார். இந்த அவமானங்களும் காயங்களும் எல்லா இந்திய விளையாட்டு வீரர்களிடமும் புதைந்துகிடக்கின்றன.
சானா நேவாலுக்கும் ஆரம்பத்தில் இதே நிலைமைதான். எந்த ஸ்பான்ஸரும் இல்லாததால், மகளிர் பேட்மிண்டன் தொடர்பான செலவுகளுக்காக ஆறுமுறை பி.எஃப்-லிருந்து பணம் எடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது, சானாவின் தந்தைக்கு. மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்றுதான் ஒவ்வொருமுறையும் காரணம் சொல்லவேண்டியிருந்தது. சானா போன்ற ஒரு வீரரை இளம் வயதிலேயே கண்டுகொள்ளாத விளையாட்டுத் துறையை என்னவென்று விமர்சிப்பது? ஜெயித்தபிறகு கொட்டிக் கொடுக்கப்படுகிற கோடிகளையெல்லாம் பத்து வருடங்களுக்கு முன்பு கொடுத்திருந்தால் லண்டனில் தங்கம் வென்றிருப்பார், சானா. அரசின் அலட்சியத்தால் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்துவதில்லை.

ஒலிம்பிக்ஸில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏராளமான பண உதவிகளும் அனுசரணைகளும் கிடைக்கின்றன. ஆனால், பதக்கத்துக்கு அருகில் சென்ற வீரர்களுக்குத்தான் இப்போது தனி கவனம் தேவைப்படுகிறது. கிருஷ்ணா பூனியா, கே.டி. இர்ஃபான் போன்ற வீரர்கள் கடுமையான போட்டிகளினால்தான் பதக்கம் வெல்லாமல் போனார்கள். இவர்களை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியது அரசின் பொறுப்பு. ஐந்தாண்டுத் திட்டம் போல நீண்டகால திட்டங்களால் மட்டுமே கௌரவமான நிலைமையை இந்திய வீரர்கள் அடையமுடியும். ஜமைக்கா போன்ற ஒரு சிறிய நாடு, ஒலிம்பிக்ஸ் அரங்கில் பீடு நடைபோடுகிறது. தமிழ்நாட்டை விடவும் குறைவான மக்கள் தொகை கொண்ட கொரியா, நான்காம் இடத்தைப் பிடிக்கிறது. ஆனால், வெள்ளியிலும் வெண்கலத்திலும் திருப்தி அடையும் தேசமாகி விட்டது, இந்தியா.

No comments:

Post a Comment