நிலநடுக்கம்
வந்தால்கூட பெரிதாகப் பயப்படாத நம் மக்கள் விலைவாசி உயர்வு என்றவுடன்
அதிருகிறார்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை தாறுமாறாக
ஏறுவதே இதற்கு காரணம். இந்த விலைவாசி எதிர்காலத்தில் குறையவே குறையாது;
இன்னும் கொஞ்சம் கூடவே செய்யும் என பல அனலிஸ்ட்கள் வயிற்றில் புளியைக்
கரைத்து வருகிறார்கள். எதிர்காலத்தில் விலைவாசி எப்படி இருக்கும் என்று
பார்ப்பதற்கு முன்பு அனலிஸ்ட்கள் சொல்லும் காரணத்தை முதலில்
பார்த்துவிடுவோம்.
மழை குறைவு!
நிலங்கள் குறைவு!
தேவை அதிகரிப்பு!
இப்படி பல்வேறு காரணங்களால் பணவீக்கம் இப்போதைக்குக் குறைய வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள் நிபுணர்கள். இது இப்படி இருக்க, எதிர்காலத்தில் பணவீக்கம் எப்படி இருக்கும்?, மேலே சொன்ன காரணங்களால் விலைவாசி உயருமா? என கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொருளாதாரப் பேராசிரியர் டாக்டர் மோகன சுந்தரத்திடம் கேட்டோம்.
''முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பணவீக்கம் என்பது இன்றியமையாதது. ஆனால், அது எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில்தான் பிரச்னை. சீரான பணவீக்கம்தான் இந்தியா வளர்ச்சி பாதையில் இருக்கும் என்பதைக் காட்டுகிறது. பணவீக்கமே இல்லை என்றால் நாம் வளரவில்லை என்றுதான் அர்த்தம்.அதற்காக அதிகளவு பணவீக்கம் இருந்தால் வளர்ச்சியா என்றால் அதுவும் இல்லை. சராசரியாக ஐந்து முதல் ஆறு சதவிகிதம் வரைக்கும் இருக்கலாம். பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருப்பது ஆபத்தானது. ஆனால், பணவீக்கத்தை நாம் குறைக்க முடியும். அதை செய்வதற்கான வழிமுறைகளை நாம் பின்பற்றுவதில்லை.
விவசாய நிலங்கள் குறைவாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும், நம் உற்பத்தி ஓரளவுக்கு இருக்கிறது. இப்போதைய பிரச்னையே நம்மிடம் இருக்கும் உணவு தானியங்களை எப்படி மக்களிடத்தில் கொண்டு செல்வது என்பதில்தான் இருக்கிறது. அதில் இருக்கும் பிரச்னைகளை களைந்தாலே விலை குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும், பணவீக்கம் அதிகமாக இருப்பதற்கு சப்ளை டிமாண்ட் தாண்டி குரூட் ஆயில் விலை அதிகரிப்பு உள்ளிட்ட சில மேக்ரோ பிரச்னைகளும் காரணங்களாக இருக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில், நடுத்தர காலத்தில் அதாவது ஆறு மாதம் முதல் ஒரு வருட காலத்துக்கு பணவீக்கம் அதிகமாக இருக்கவே வாய்ப்பு இருக்கிறது. அரசின் பல்வேறு கொள்கை முடிவுகள், பருவமழை உள்ளிட்ட பல விஷயங்கள் இருப்பதால், அதன்பிறகு என்ன நடக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது'' என்றார்.
எல்லா விஷயங்களும் சரியாக இருந்தாலே பணவீக்கத்தை தடுக்க முடியாது என்கிறபோது, இப்போது எந்த விஷயமும் சரியாக இல்லாத நிலையில் பணவீக்கம் எப்படி குறையும் என்று எதிர்பார்க்கலாம்?
No comments:
Post a Comment