Search This Blog

Thursday, August 30, 2012

அருள்வாக்கு - கல்யாண குணங்கள்!


உலகத்திலுள்ள நல்லது-கெட்டது, அழகு-அவலக்ஷணம், இன்பம்-துன்பம் எல்லாமே பிரம்மத்திடமிருந்து வந்தவைதாம். ஜீவாத்மா, பரமாத்மாவுடன் ஐக்கியமாகி பிரம்மநிலை அடையும்போது நல்லது, கெட்டது, அழகு, அவலக்ஷணம், சந்தோஷம், துக்கம் என்கிற பேதமில்லை.

ஆனால் இப்போது நாம் இருக்கிற நிலையில் இவை எல்லாம் ஒன்றாகத் தோன்றவில்லை. இந்த நிலையில் ஈசுவரனை எல்லா அழகுகளுக்கும், எல்லா நன்மைகளுக்கும், எல்லா இன்பங்களுக்கும் உருவமாகப் பாவித்து அன்பு செலுத்த வேண்டும். குணமே இல்லாத பிரம்மத்தை நம்மால் நினைத்தே பார்க்க முடியாது. அந்த நிர்குணத்திலிருந்தே சகல குணங்களும் தோன்றியிருக்கின்றன. ஒரு நிறமும் இல்லாத சூரிய வெளிச்சம் கண்ணாடிப் ‘பிரிஸத்’தில் பட்டு ஒளிச் சிதறலில் (refraction) சகல வர்ணங்களையும் வாரிக் கொட்டுகிறதல்லவா? அப்படியே நிர்குணப் பிரம்மம்மாயை என்கிற கண்ணாடியில் பட்டு ஈசுவரனாகி சகல குணங்களையும் வாரிக் கொட்டுகிறது. நிர்குணத்தை நம்மால் நினைக்க முடியாது. ஆனால் குணங்களை நினைக்க முடியும். ஆனால் கெட்ட குணங்களை நினைத்தால் அது நம்மை மேலும் கஷ்டத்தில், சம்ஸார ஸாகரத்தில் தான் இழுத்துக் கொண்டு போகும். அதனால் நல்ல குணங்களை கல்யாண குணங்களையே நினைக்க வேண்டும். வெறுமே குணத்தை நினைப்பதென்றால் முடியாது. அதனால் உயிரோடு, உருவத்தோடு, அந்த நல்ல குணங்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒருத்தனை நினைக்க வேண்டும். எல்லாக் குணங்களும் உயிர்களும் உருவங்களும் எதனிடமிருந்து வந்ததோ, எது இதையெல்லாம் ஆட்டிப் படைத்து வைத்துக் கொண்டிருக்கிறதோ, அதையே அனந்த கல்யாண குணங்களும் கொண்ட தெய்வ ரூபமாக அன்போடு நினைக்க நினைக்க அந்தக் கல்யாண குணங்கள் நமக்கும் வரும்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.

No comments:

Post a Comment