குடும்ப அரசியல் நடக்கும் நமது சமகாலச் சூழலில் ஒரு
குடும்பமே அரசியலுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தியாகிகளாக வாழ்ந்த
வரலாறு இன்றுள்ளவர்களுக்கு பிழைக்கத்தெரியாத மனிதர்களாக தோன்றச் செய்யும்.
ஆனால், அந்தப் பிழைக்கத் தெரியாதவர்கள் நடத்திய போராட்டங்கள்தான் நாம்
இன்று சுதந்திரமாக வாழ்வதற்கு அடித்தளம் அமைத்து இருக்கிறது என்பதை
ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
கவிக்குயில் சரோஜினி நாயுடுவை அறிந்த பலருக்கும் அவரது
தம்பி வீரேந்திரநாத் சட்டோபாத்யாயவை தெரிந்திருக்காது. காரணம் அவர் ஒரு
புரட்சியாளர். இந்தியப் பொதுப்புத்தியில் புரட்சியாளர் என்றாலே தீவிரவாதி
என்று பதிவாகியிருப்பது பிரிட்டிஷ் செய்த சூழ்ச்சி. அவர்கள்தான்
புரட்சியாளர்களை தீவிரவாதிகளாவும் காந்தியவாதிகளை வன்முறையாளர்களாகவும்
தங்கள் சுயநலத்துக்காக உருமாற்றினர். ஒருவன் தேசவிரோதி ஆவதும் தேசபக்தன்
ஆவதும் ஆள்பவர்கள் யார் என்பதைப் பொறுத்தே அமைகிறது. பிரிட்டிஷ் ஆட்சியில்
பகத்சிங் தேசவிரோதி. இன்று, அவர் சிறந்த தேசபக்தர். ஆளும் அதிகார வர்க்கம்
தன்னை எதிர்ப்பவர்களை தேச விரோதிகளாக மாற்றுவது காலம்காலமாக நடந்து வரும்
ஒரு வன்செயல். இப்படித்தான் வீரேந்திரநாத் சட்டோபாத்யாயவையும் கம்யூனிஸ்ட்,
புரட்சியாளர், ரஷ்யாவில் இருந்து கொண்டு இந்தியாவை கைப்பற்ற நினைத்த
தீவிரவாதி என்று முத்திரை குத்தினர். ஆனால், இன்றைய வரலாறு அவற்றை மாற்றி
அமைத்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வீரேந்திர நாத்தின் பங்கு எவ்வளவு
முக்கியமானது என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது. சாட்டோ என்று
நண்பர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட வீரேந்திரநாத் சட்டோபாத்யாய
வங்காளத்தைச் சேர்ந்தவர். இவரது அப்பா அகோரிநாத் சட்டோபாத்யாய ஹைதராபாத்
நிஜாமின் கல்லூரியில் முதல்வர் பதவி வகித்த காரணத்தால், இவர்கள் குடும்பம்
ஹைதராபாத்தில் வசித்தது. முற்போக்குச் சிந்தனை உடைய குடும்பம் என்பதால்
இந்திய சுதந்திரத்துக்கான வேட்கை, குடும்பம் முழுவதும் இயல்பாகவே இருந்தது.
கலை, இலக்கியம், எழுத்து என்று நுண்ணர்வு கொண்ட சரோஜினி
நாயுடுவும் சாட்டோவும் ஆங்கில வழிக் கல்வியை கற்றனர். சென்னைப் பல்கலைக்
கழகத்திலும் கல்கத்தா பல்கலைக் கழகத்திலும் வீரேந்திநாத் கல்வி பயின்றார்.
இவருக்குத் தமிழ், தெலுங்கு, உருது, பெர்சியன், ஹிந்தி,
பிரெஞ்சு, ரஷ்யன், டச், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் ஸ்காண்டிநேவிய மொழி
ஆகியவற்றைப் பேசவும் எழுதவும் நன்றாகத் தெரியும். 1902-ம் ஆண்டு
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார் வீரேந்திரநாத். ஐ.சி.எஸ்.
தேர்ச்சி பெற வேண்டும் என்பதே அவரது ஆசை. மிடில் டெம்பிள் கல்லூரியில்
சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். லண்டனில் இருந்த நாட்களில் சுதந்திரப்
போராட்ட மையமாக விளங்கிய ஷியாம்ஜி கிருஷ்ணவர்மாவின் இந்தியா ஹவுசுக்கு
அடிக்கடி சென்றுவந்தார். சாவர்க்கர், வ.வே.சு.அய்யர், டி.எஸ்.எஸ்.ராஜன்
உள்ளிட்டோர் தங்கியிருந்த எண்: 65, கிராம்வெல் அவின்யூவிலுள்ள 'இந்தியா
ஹவுசில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் பயிற்சி, நாட்டுப்பற்றைத்
தூண்டக்கூடிய இலக்கியங்களை எழுதி வெளியிடுதல் போன்றவற்றில் இணைந்து
செயல்படத் தொடங்கினார். இந்த நாட்களில் அவருக்கு ஆதர்சமாக இருந்தவர்
சாவர்க்கர். சோஷலிஸ்ட் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இணைந்து
வேலைசெய்தபோது வ.வே.சு. ஐயருடன் அவருக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது.
போலீஸ் கெடுபிடியில் இருந்து தப்பி இருவரும் பாரீஸுக்கு சென்று தங்கி
இருந்தனர். 1912-ல் மிஸ்.ரெனால்டு என்ற பெண்ணை சாட்டோ திருமணம் செய்து
கொண்டார். ஆனால், உலகப்போரின் போது ஏற்பட்ட நெருக்கடியால் ரெனால்டு
இங்கிலாந்திலும் சாட்டோ ஜெர்மனியிலும் தனித்து வாழ்ந்தனர். ஜெர்மனியில்
தன்னை எவரும் சந்தேகிக்கக் கூடாது என்பதற்காக பல்கலைக்கழக மாணவனாக தன்னைப்
பதிவுசெய்து கொண்டார் வீரேந்திரநாத். பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்கும் இடையே
ஏற்பட்ட பகைமை காரணமாக, ஜெர்மனியில் முகாமிட்டிருந்த இந்தியர்கள்
அரசாங்கத்தின் உதவியை எதிர்நோக்கினர். அதேபோன்று ஆங்கிலேயரின் ஆட்சியை
அகற்ற விரும்பிய இந்தியர்களை ஜெர்மனிக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக்கொள்ள
எண்ணியது கேய்ஸர் அரசாங்கம்.
முதல் உலகப் போர் நடந்தபோது, பெர்லின் நகரில் இயங்கிய
இந்திய விடுதலைக் குழுக்களுடன் ஜெர்மனியின் வெளியுறவுத் துறை நெருங்கிய
நட்பு கொண்டிருந்தது. 1915-ல் ஆயுதப்புரட்சி ஒன்றை இந்தியாவில் நடத்திவிட
வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான ஆயுதங்கள் வாங்குவதற்கும், போராளிகளைத்
தயார் செய்வதற்கும் முனைப்புடன் இயங்கி வந்தார் சாட்டோ. இதற்காக, ஆயுதம்
ஏந்திப் போராடும் ஆயிரக்கணக்கான வீரர்கள் வங்காளத்தில் தயார்
செய்யப்பட்டனர். ஆனால், போதுமான ஆயுதங்கள் கிடைக்காமல் போகவே தாக்குதல்
திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், சாட்டோவை கொல்வதற்காக பிரிட்டிஷ் உளவு
நிறுவனத்தின் கூலிப்படைகள் அவரை இடைவிடாமல் துரத்திக்கொண்டிருந்தனர்.
மூன்றுமுறை துப்பாக்கித் தாக்குதல்களில் உயிர்தப்பிய சாட்டோ ஆயுத உதவி
கிடைக்காத காரணத்தால் ஜெர்மனியை இனியும் நம்பிக் கொண்டிருக்ககூடாது என்று
ஸ்டாக்ஹோமில் இந்திய தேசியக் குழு ஒன்றை உருவாக்கினார். சாட்டோவை
பிரிட்டிஷ் உளவுப்படை கொலைசெய்ய முயன்ற நிகழ்வை எழுத்தாளர் சாமர்செட்மாம்
'குயிலியா லாஷாரி’ என்ற சிறுகதையில் விரிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.
சாமர்செட்மாம் பிரிட்டிஷ் உளவுப்படையில் பணியாற்றியவர் என்பது
குறிப்பிடத்தக்கது. ஸ்டாக் ஹோமில் இருந்த பிரிட்டிஷ் தூதரகம் இந்திய
தேசியக் குழுவை கண்காணிக்கத் தொடங்கியது. ரஷ்யப் பிரதிநிதிகளை அவர்கள்
அடிக்கடி சந்திக்கின்றனர், இதன் விளைவு இந்தியாவுக்குப் பாதகமாக
முடியக்கூடும் என்று புலனாய்வுக் குறிப்புகளை அனுப்பி எச்சரிக்கை செய்தது
பிரிட்டிஷ் தூதரகம்.
'சர்வதேச சோஷலிஸ்ட் காங்கிரஸ் - இந்தியாவைப் பற்றிய
உரைகளும், தீர்மானங்களும்’ என்னும் துண்டறிக்கை ஒன்றை இந்திய தேசியக் குழு
அச்சிட்டு வெளியிட்டது. ஸ்டாக் ஹோமில் இருந்தபடியே வீரேந்திரநாத்
சட்டோபாத்யாய, பி.டி.ஆச்சார்யா ஆகியோர் ஆற்றிய பங்களிப்புகள்
குறிப்பிடத்தக்கவை. அவர்கள் ரஷ்யன் சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சியுடன்
தொடர்பு கொண்டிருந்தனர். இந்த அமைப்பின் முன்னணி பிரதிநிதியான
டிராயனாவ்ஸ்கியுடன் உறவை ஏற்படுத்திக்
கொண்டு, இந்தியப் புரட்சிக்கான ஆயத்தப் பணிகளுக்கு உதவி செய்யும்படியாக
ரஷ்யாவைக் கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு உதவுவதாக ரஷ்யா வாக்குறுதி
அளிக்கவே சாட்டோவுக்கு புதிய நம்பிக்கை பிறந்தது. 1915-ம் ஆண்டு டிசம்பர்
மாதம், இந்தியாவின் தற்காலிக அரசாங்கம் என்ற பெயரில் காபூலில் ஓர்
அரசாங்கத்தை அமைத்த மன்னர் மகேந்திர பிரதாப்பை சந்தித்த சாட்டோ, அவரை ரஷ்யா
சென்றுவர கேட்டுக்கொண்டார். அதன்படி 1918-ம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில்
மகேந்திர பிரதாப் பெட்ரோகிராட் நகருக்குச் சென்றார். சோவியத் அரசின்
உயர்நிலைப் பிரதிநிதிகள் பலர் மகேந்திர பிரதாபை வரவேற்று விவாதித்தனர்.
1919-ல் லெனினைச் சந்தித்த இந்தியப் புரட்சியாளர்களின் சிறப்புத்
தூதுக்குழுவுக்கு மகேந்திர பிரதாப் தலைமை வகித்தார்.
முகமது பரக்கத்துல்லா, அப்துல் ராப், பி.டிஆச்சார்யா,
தலிப் சிங் கில், இப்ராஹிம் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
இந்தக் குழுவினர் 1919-ம் ஆண்டு மே மாதத்தில் லெனினைச் சந்தித்து உதவி
கேட்டனர். எம்.என். ராயின் விருப்பம் காரணமாக சாட்டோ 1920-ல் மாஸ்கோ
சென்றார். அவருடன் ஆக்னஸ் என்ற அமெரிக்கப் பெண் பத்திரிகையாளரும் உடன்
சென்றார். இருவரும் எட்டு ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தனர். புரட்சிகர
செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த ஆக்னஸ் சமூக பிரச்னைகள்
குறித்துப் பத்திரிகைகளில் தொடர் கட்டுரைகள் எழுதிவந்தார். இந்தியாவில்
பிறந்தவர் என்பதால் ஆக்னஸுக்கு இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு உதவி
செய்வது தனது கடமை என்றே தோன்றியது.
ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்ட
சாட்டோ, இந்திய மொழிகளுக்கான பிரிவுத் தலைவராக பணியாற்றினார். இதனால், நேரு
ஐரோப்பியாவுக்கு வந்தபோது சாட்டோ உடனிருந்து உதவிகள் செய்தார். 1932 முதல்
மாஸ்கோவில் வாழ்ந்த சாட்டோ, கம்யூனிஸ்ட் கட்சியின் நேரடி செயல்பாடுகளில்
தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். 1937-ல் அவரை தேசத்துரோகி என
அறிவித்த ஸ்டாலின் அரசாங்கம் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்தது.
அவருடன் தேசத் துரோகியாக அறிவிக்கப்பட்ட அறிவாளிகள், எழுத்தாளர்கள் என 184
பேர் கைது செய்யப்பட்டனர். அத்தனை பேரும் ஒரே நாளில் சுட்டுக்
கொல்லப்பட்டனர். சாட்டோவை காப்பாற்றும்படி கடைசி நிமிடத்தில் எடுத்த
முயற்சிகள் யாவும் தோற்றுப்போயின. வெளிநாடுகளில் வாழ்ந்தபடியே ஒரு
புரட்சியாளராக இந்திய சுதந்திரம் குறித்த கனவு கண்ட வீரேந்திரநாத்தின்
வாழ்க்கை இந்திய சுதந்திரத்தை காணாமலேயே முடிந்து விட்டது. இந்திய
சுதந்திரம் என்பது ஒரு விடுமுறை நாள் என்று மட்டுமே நினைக்கும் இந்த
தலைமுறையினர் சுதந்திரத்துக்காக நமது முன்னோர்கள் செய்த உயிர்த் தியாகத்தை
மறந்து விட்டனர் என்பது கண்டிக்கப்பட வேண்டியது. குதிராம் போஸ் என்ற 16
வயதுப் பையன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தூக்குத் தண்டனை
விதிக்கப்பட்டான். சிறையில் இருந்தபடியே அவன் ஒரு பாடலை எழுதினான்.
அந்தப் பாடல்...
'விடைகொடு அம்மா!
என் அருமை அம்மா!
நான் மீண்டும் பிறப்பேன்
சித்தியின் வயிற்றில்...
பிறந்தது நான்தான் என்பதையறிய
குழந்தையின் கழுத்தைப் பார்
அதில் சுருக்குக் கயிற்றின்
தடம் இருக்கும்'
குதிராம் போஸ் தூக்கிலிடப்படும் போது, அவரது சித்தி
கருவுற்றிருந்தார். ஆகவேதான் மறுபடி பிறப்பேன் என்ற நம்பிக்கை அவனுக்கு
இருந்தது. போராடுவதற்காக மீண்டும் இந்த மண்ணில் பிறக்க வேண்டும் என்ற
வேட்கை தெறிக்கும் கவிதைதான் போராளியின் மனது. இப்படி, தன்னுயிரை இழந்து
போராடியவர்களின் தியாகத்தை மறந்து இன்று இந்திய சுதந்திரத்தை மீண்டும்
பன்னாட்டு வணிகர்களிடம் அடகு வைத்து வருகிறோம் என்பதுதான் தாங்கமுடியாத
ஆதங்கம்.
No comments:
Post a Comment