உலகின்
பழமையான டென்னிஸ் பந்தயத் தொடர் விம்பிள்டன். அதில் இந்த வருடம், தமிழ்
சினிமா போலப் புதியவர்கள் ஆச்சர்யங்களையும் அதிரடிகளையும் அரங்கேற்றி
இருக்கிறார்கள். விம்பிள்டன் தொடரின் கழுகுப் பார்வைத் துளிகள் இங்கே...
ஆரம்ப அதிரடி!
கடந்த ஆண்டின் சாம்பியன்களான ரோஜர் ஃபெடரர், செரீனா
வில்லியம்ஸ் ஆகியோரை ஃபைனலில் எதிர்கொள்வது யார்? நடாலின் ஒரே கிராண்ட்
ஸ்லாமின் எட்டு சாம்பியன் பட்டங்கள் சாதனையை ஃபெடரர் சமன் செய்வாரா?
செரீனாவின் 34 தொடர் வெற்றிகள், ஃபெடரரின் 36 தொடர் வெற்றிகள் இன்னும்
எத்தனை போட்டிகளுக்கு நீளும்? விம்பிள்டனில் முதல் நாள் போட்டிகள்
துவங்குவதற்கு முன், சமூக வலைதளங்கள் முதல் சூதாட்ட புக்கிகள் வரை இவைதான்
பரபர விவாதம். ஆனால், ரஃபேல் நடால் முதல் சுற்றிலேயே தோற்று அதிர்ச்சி
சுனாமியின் முதல் பேரலையைத் தோற்றுவித்தார். போட்டித் தொடரின் மூன்றாவது
நாளான ஜூன் 26-ஐ விம்பிள்டன் வரலாற்றில் 'கறுப்பு புதன்’ என்று
குறிப்பிடுகின்றனர். அந்த அளவுக்கு அன்றைய தினம் மட்டுமே ரோஜர் ஃபெடரர்,
மரியா ஷரபோவா, விக்டோரியா அஸ ரென்கா, லெய்டன் ஹுவிட், அனா இவானோவிச்,
ஜோகோவிச், கரோலின் வோஸ்னியாக்கி என முன்னாள், இன்னாள் டாப் ரேங்கிங்
பிளேயர்கள் ஏழு பேர் அதிர்ச்சித் தோல்வி அடைந்தும், காயம் காரண மாகவும்
போட்டிகளில் இருந்து விலகி னர். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் டாப் ரேங்கிங்
வீரர்களின் மோசமான சாதனையை இந்த விம்பிள்டன் வரலாற்றில் பதிவுசெய்ய,
போட்டித் தொடர் முழுக்க இளைஞர்களின் ராக்கெட்டுக்கு இடம் பெயர்ந்தது!
புதியவர்கள் புலிப் பாய்ச்சல்!
பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்குள் நுழைந்த
நால்வரில், மூவர் முதல்முறையாக அரையிறுதி தொடும் வீராங்கனைகள். போட்டி
தொடங்குவதற்கு முன்னரே 'சாம்பியன்’ என்ற அங்கீகாரத்துடன் கலந்துகொண்ட
செரீனாவை நான்காவது சுற்றில் நேர் செட்களில் தோற் கடித்த ஜெர்மனியின்
செபினா லிசிக்கிதான் இந்த வருட ரன்னர் அப். முதல் சுற்றிலேயே நடாலைத்
தோற்கடித்த பெல்ஜிய வீரர் ஸ்டீவ் டார்சிஸ், ரேங்கிங்கில் தன்னைவிட 130 இடங்
கள் முன்னே இருக்கும் ஒருவரை வென்றவர் என்ற புதிய சாதனையைத் தன் வசப்படுத்
தினார். ஆனால், காயம் காரணமாக அடுத் தடுத்த சுற்றுகளில் விளையாட முடியாமல்
டார்சிஸ் விலகிவிட்டது சோகம். இப்படிப் புதிய முகங்களிடம் காலிறுதிக்கு
முந்தைய சுற்றுகளிலேயே பிரபலங்கள் அடிவாங்கியது இதற்கு முன் எப்போதும்
விம்பிள்டனில் அரங்கேறாதது!
இனிய எதிரிகள்!
பெண்கள்
ஒற்றையர் விம்பிள்டன் பட்டம் தட்டிய மரியான் பர்டோலிக்கு வயது 28. கடந்த
2007-ம் ஆண்டில் விம்பிள்டன் ஃபைனலில் வீனஸ் வில்லியம்ஸிடம் தோற்ற பர்டோலி,
ஆறு ஆண்டு போராட்டத்துக்குப் பின் அதிக வயதில் விம்பிள்டன் பட்டம்
வெல்லும் பிளேயர் என்ற பெருமையோடு பட்டம் ஜெயித்திருக்கிறார். இருந்தாலும்,
பர்டோலி இந்த விம்பிள்டனில் தான் விளையாடிய ஏழு போட்டிகளிலும் தரவரிசை
யின் டாப் டென் பிளேயர்கள் எவரையும் எதிர்கொள்ளவில்லை. ஆனால், இறுதிப்
போட்டியில் அவர் எதிர்கொண்டது, செரீனா வில்லியம்ஸைத் தோற்கடித்த
லிசிக்கியை. இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் 81 நிமிடங்கள்
போராடினார்கள். லிசிக்கி சர்வீஸ் முதல் டிஃபென்ஸ் வரை ஏகப்பட்ட தவறுகள்
செய்ய, அதைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டார் பர்டோலி.
மண்ணின் மைந்தன்!
கடந்த ஆண்டு இதே ஃபைனலில் ரோஜர் ஃபெடரரிடம் தோற்ற ஆண்டி
முர்ரே, இந்த முறை சொந்த மண்ணில் நம்பர் 1 வீரர் ஜோக்கோவிச்சை வீழ்த்தி
சாம்பியன் பட்டம் தட்டியிருக்கிறார். 77 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து
வீரர் ஒருவர் வென்ற விம்பிள்டன் பட்டம் இது. முர்ரே அரை இறுதியில் போலந்து
நாட்டைச் சேர்ந்த ஜெர்ஸியுடன் ஆடிய ஆட்டம்தான் இந்த ஆண்டில் அதிக
ஆங்கிலேயர்கள் டி.வி- யில் பார்த்த விளையாட்டு என்கிறது பி.பி.சி.
கிட்டத்தட்ட 1 கோடியே 32 லட்சம் நேயர்கள் அந்தப் போட்டியைப்
பார்த்திருக்கிறார்கள். விம்பிள்டன் பட்டம் வென்ற ஆண்டி முர்ரேவின் படம்
ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்யப்பட்ட ஐந்தே நிமிடத்தில் 17,000 பேர் லைக்
செய்திருக்கிறார்கள். டென்னிஸ் உலகில் நடால் - ஃபெடரர் இடையிலான மோதல்தான்
ஏக பிரபலம். இனி, அவர்களோடு மோத இன்னொரு ஆள் தயார்!
No comments:
Post a Comment