டென்னிஸ் உலகின் சிறப்புமிக்க
விம்பிள்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், 'பூவா
தலையா?’ போடும் அரிய கௌரவத்தைப் பெற்றுள்ளார், 11 வயது இந்தியச் சிறுமி
பிங்கி சோன்கர்.
யார் இந்தப் பிங்கி?
உத்தரப்பிரதேசத்தின் மிர்ஸாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த
பிங்கி, அன்னப்பிளவு எனப்படும் உதட்டுப் பிளவு பாதிப்புடன் பிறந்தவர். இதை
ஆங்கிலத்தில் க்ளெஃப்ட் லிப் (Cleft lip) என்பர். பிங்கிக்கு அவளது
பெற்றோரால் சிகிச்சை அளிக்கும் அளவுக்கு வசதி இல்லை. இந்தத் தகவல், அன்னப்பிளவு
சிகிச்சைகளுக்கு உதவும் பிரபல 'ஸ்மைல் ட்ரெயின்’ என்ற தன்னார்வ
அமைப்புக்குச் சென்றது. பிங்கியைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்ட
நியூயார்க்கைச் சேர்ந்த அந்த அமைப்பு, 2007-ல் பிங்கியின் உதட்டுப் பிளவைச்
சீராக்கியது.
இந்த விஷயத்தை அறிந்த மேகன் மைலன் என்ற பிரேஸில்
திரைப்பட இயக்குநர், பிங்கியை வைத்து 'ஸ்மைல் பிங்கி’ என்ற 39 நிமிட
ஆவணப்படத்தை எடுத்தார். உதட்டில் பிளவு உள்ள நபர்களைக் கண்டவுடன், பக்குவம்
இல்லாத சிலர் முகத்தைச் சுளித்துக்கொண்டே பார்ப்பதும், அதனால்
சம்பந்தப்பட்டவருக்கு ஏற்படும் மன வருத்தத்தையும் அந்தப் படத்தில்
பதிவுசெய்தார்.
அன்னப்பிளவு என்றால் என்ன? அதை எப்படிக்
குணப்படுத்துவது? அந்தப் பிரச்னையை நம் சமூகம் எப்படிப் பார்க்க வேண்டும்
என்று மிகவும் அற்புதமாகப் பாடம் நடத்திய அந்தப் படத்துக்கு, சிறந்த ஆவணப்
படத்துக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.
இந்த நிலையில், விம்பிள்டனின் அறக்கட்டளைப்
பங்குதாரராக, 'ஸ்மைல் ட்ரெயின்’ அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ள விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்
போட்டியில், 'டாஸ்’ போடும் அரிய கௌரவ வாய்ப்பு பிங்கிக்குக்
கிடைத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பிங்கி முதலில் அமெரிக்கா
செல்கிறார். நியூயார்க் நகரில் நடைபெறும் விம்பிள்டன் கொண்டாட்டத்தில்,
முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மோனிகா செலஸ், டென்னிஸ் வீரர் ஜிம் கூரியர்
ஆகியோருடன் பங்கேற்கிறார். பின்னர், தனக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை
செய்த மருத்துவர், சுபோத் குமார் சிங்குடன் லண்டன் புறப்படுகிறார்.
விம்பிள்டன் இறுதிப் போட்டியில் டாஸ் போடும் பிங்கி,
ரோஜர் ஃபெடரர், ஆன்டி முர்ரே, நோவாக் ஜோகோவிச் போன்ற முன்னணி வீரர்களையும்
சந்திக்கிறார்.
கங்கிராட்ஸ் பிங்கி!
No comments:
Post a Comment