Search This Blog

Monday, July 29, 2013

திவாலான அமெரிக்க நகரம்!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் மிகப்பெரிய நகரம் டெட்ராட். 1960களிலும் 1970களிலும் அமெரிக்காவின் இரண்டாவது பணக்கார நகரம் இது. உலக கார்களின் தலைநகரமும்கூட. ஆனால், டெட்ராடை திவாலான நகரமாக அறிவிக்க வேண்டும் என கோர்ட்டில் மனு செய்திருக்கிறார் அம்மாநில கவர்னர் ரிக் ஸ்னைடெர்.

இந்த நகரத்தில் இருந்த முன்னணி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸுக்கு நிதிப்பிரச்னை வந்தபோது அமெரிக்க அரசு உதவியது. அன்றைய அரசு, ‘எது ஜெனரல் மோட்டார்ஸுக்கு நல்லதோ அது அமெரிக்காவுக்கும் நல்லது’ என்றது. அந்தளவுக்கு அமெரிக்கப் பொருளாதாரத்துக்குப் பலம் சேர்த்த இந்நகரம் இன்று வெறிச்சோடிக் கிடக்கிறது. வாழும் மனிதர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தில் இருந்து எழுபதாயிரமாகக் குறைந்திருக்கிறது. எழுபத்தெட்டாயிரம் தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன.டெட்ராடை, திவால் நகரமாக மாநில கவர்னர் அறிவிக்க வேண்டியதன் காரணம், நகர நிர்வாகத்தின் கடன் சுமை 1800 கோடி டாலர் அளவுக்கு மூழ்கி இருப்பதுதான். அமெரிக்க அரசியலமைப்பில் உள்ளாட்சி நிர்வாகங்கள் மிக வலிமையானவை. பெரிய தொழில் நகரங்களில் வசூலிக்கப்படும் வரிகளிலிருந்தே அந்த நகரச் செலவுகள், மக்களின் சமூகப் பாதுகாப்பு, நலிந்தோர், சீனியர் சிட்டிசன் ஓய்வு ஊதியம்... போன்றவற்றை உள்ளாட்சி நிர்வாகம் செய்யும். தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் இன்று டெட்ராட் நகருக்கு வரிவருமானம் இல்லை. எனவே, நிர்வாகத்தால் சம்பளம், ஓய்வு ஊதியம் எதுவும் கொடுக்க முடியவில்லை. அவ்வகையில் கொடுக்க வேண்டியது மட்டுமே 900 கோடி டாலர். மாநகராட்சிக்குச் சொந்தமான சொத்துகளை விற்க வேண்டுமானால் அந்த மாநகரம் திவால் என்று அறிவிக்கப்பட வேண்டும் என்பது அமெரிக்கச் சட்டம். அரசின் சொத்துகளை விற்று மேற்கண்ட செலவினங்களைச் சமாளிக்க அனுமதிக்க வேண்டும் என மனு செய்திருந்தார் கவர்னர். அதில் ஒரு டாலருக்கு ஒரு சென்ட் வீதம் கடன்காரர்களுக்கு (நூறில் ஒரு பங்கு) திருப்பியளிக்க வேண்டும் என்பது ஹைலைட் குறிப்பு. ஆனால், மிச்சிகன் ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்மேரி, ‘இந்த மனு சட்ட விரோதமானது. இது ஓய்வூதியர்களை மிரட்டும் நடவடிக்கை’ என்று சொல்லி மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டார். மாநில நிர்வாகம், மேல் கோர்ட்டுக்கு முறையீடு செய்திருக்கிறது. அமெரிக்க வரலாற்றில் ஒரு மாநிலம் இப்படிக் கேட்பது இது தான் முதல்முறை.

ஏன் தொழிற்சாலைகள் மூடப்பட்டன? 

காரணம், 1994லும் 2004லும் அமெரிக்க அரசு வெளியிட்ட புதிய தொழிற்கொள்கைகள். அந்தக் கொள்கை வட-அமெரிக்காவில் இயங்கும் எந்தத் தொழில் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை அண்டை நாடுகளில் தயாரித்து, அமெரிக்கத் தயாரிப்பு என்று சொல்லி உலகெங்கும் விற்கலாம் என்றது. மெக்ஸிக்கோ போன்ற நாடுகளில் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கிளைகளைத் தொடங்கின. காரணம், அங்கு தயாரிப்புச் செலவுகள் மிகக் குறைவு. மெல்ல முழு உற்பத்தியை அங்கே மாற்றின. இதை அரசாங்கம் தடுக்கவில்லை. இன்று அமெரிக்காவில் ஓடும் கார்களில் எழுபது சதவிகிதம் மெக்ஸிக்கோவில் தயாராகி ரயிலில் அமெரிக்காவுக்கு வந்தவை என்கிறது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை. 

‘நகரத்தின் நிதிப் பிரச்னையைப் புரிந்து கொண்டு மக்கள், நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும். சிக்கல்கள் சரியானவுடன் டெட்ராட் நகரை மீண்டும் எழுப்ப அரசு முடிந்தளவு உதவி செய்யும்’ என்கிறது வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று.

ஆதித்யா

No comments:

Post a Comment