Search This Blog

Wednesday, July 31, 2013

காணாமல் போகும் நிலத்தடி நீர்... காப்பாற்ற என்ன வழி?

அது, 1917-ம் ஆண்டு... 'ராஜாஜி’ என அழைக்கப்பட்ட சி. ராஜகோபாலச்சாரியார், சேலம் நகரத் தந்தை (நகராட்சித் தலைவர்) பதவியில் இருந்த காலகட்டம். நகர மக்களுக்கு, மேட்டூரில் இருந்து குழாய் மூலமாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு... அதற்கென விழா நடந்தது. அப்போது பேசிய ராஜாஜி, ''தண்ணீர் தங்கம் போன்றது... அதை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்'' என்றார். கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன் ராஜாஜி சொன்னதை இன்று வரையும் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளாததுதான் பெரும்சோகம்.
 
மனிதனின் அதீத ஆசையால், நதிகளில் மணல் முற்றுப்பெற்று, ஆறுகளில் நீர் அற்றுவிட்ட நிலையில், மிகப்பெரிய அபாயத்தை மனித சமுதாயம் எதிர்கொள்ளப் போகிறது. அதலபாதளத்துக்கு சென்று கொண்டிருக்கும் நிலத்தடி நீர்; நிலத்துக்குள் ஊடுருவும் கடல் நீர்; கழிவுநீர் கால்வாய்களாக மாற்றப்பட்டுவிட்ட ஆறுகள், வாய்க்கால்கள்; கழிவுநீர்த் தேக்கமாக மறுவடிவம் பெற்றுவரும் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள்... என ஒட்டுமொத்த நீராதாரங்களின் நிலையும் கேள்விக்குறியாகி நிற்கிறது. இதன் காரணமாக உயிரினங்கள் அனைத்தும்... அணு அயுதங்களைவிட மோசமானதொரு தாக்குதலை எந்நேரமும் எதிர்கொள்ள வேண்டிய ஆபத்து சூழ்ந்திருக்கிறது. இவை அனைத்துக்கும் அடிப்படை... தொலைநோக்குப் பார்வையில்லாமல் நீராதாரங்களைச் சிதைத்தது/சிதைத்துக் கொண்டிருப்பதுதான்.
 
'நிலத்தடி நீர் என்பது நாளைய சந்ததியினருக்குச் சொந்தமானது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப்புரிதல் அரசுக்கும் வேண்டும். குளம், குட்டை, ஆறு, ஏரி போன்ற நீராதாரங்களை முறையாகப் பராமரிக்காமல் விட்டதன் பலன், தற்போது தெரியத் தொடங்கியுள்ளது. வாட்டி வதைக்கும் வெப்பத்துக்கும், மழை பொய்த்துப் போவதற்கும், நிலத்தடி நீருக்கும் தொடர்புண்டு. பல்வேறு சூழலியல் மாற்றங்களுக்கு நிலத்தடி நீர் குறைவும் ஒரு காரணம்.
 

தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் அளவுக்கு தமிழ்நாடு பாலைவனம் அல்ல. 'காவிரி, தென்பெண்ணை, பாலாறு - தமிழ்கண்டதோர் வைகை, பொருணைநதி என மேவிய ஆறுபல ஓட திருமேனி செழித்த தமிழ்நாடு’ என்று பாரதி பாடிய வளம் எங்கே போனது..?

குறிஞ்சி, முல்லை, மருதம் முதலான நிலவகை முறை நிலவிய அந்தக் காலங்களிலும் பருவமழை தவறி... விளைச்சலின்றி பஞ்சம் ஏற்பட்டது உண்டு. ஆனால், 'தாகம் தீர்க்க தண்ணீர் இல்லை’ என யாரும் தவித்தது இல்லை. 'பஞ்சம் முற்றியதால் நல்லதங்காள் தன் ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிவிட்டாள்’ என்றபோதும்கூட நீர் நிறைந்த கிணறுகள் எங்கும் இருந்ததாகவே வரலாற்றுக் கதைகள் பதிவு செய்திருக்கின்றன.

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகை ஊட்டிக் காக்கும்’ என்பது மாறி, ஆறுகளின் ஊற்றுகளும் அடங்கி விட்டன. காவிரி உட்பட, தமிழக ஆறுகள் யாவற்றிலும் சீமைக்கருவேல் மிகுந்து வருகின்றன. நிலம், காடு, மலை, கடலோரம் என்றில்லாமல் 500, 1,000, 1500 அடிகள் என பூமியை சல்லடைக் கண்களாகத் துளைத்து, அடியில் இருந்த நீரையும் மின் மோட்டார்களைக் கொண்டு வெளியேற்றி, கபளீகரம் செய்து விட்ட மனிதர்களின் அறியாமையும், சுயநலம் மேலோங்கிய, தொலைநோக்கற்ற ஆட்சி நிர்வாகங்களின் மெத்தனமுமே இன்றைய நிலைக்குக் காரணம்.

மனதை உறைய வைக்கும் வரலாறு காணாத பெருவெள்ள உயிர்ச்சேதம் ஒருபுறம்! தாகம் தீர்க்க தண்ணீரைத் தேடி அலைகின்ற நிலை மறுபுறம்! யாவற்றுக்கும் கண்மூடித்தனமான சுற்றுப்புறச்சூழல் கேடுகள்தான் காரணம். இந்நிலையில், நிலத்தடி நீரைக் காக்க வேண்டிய கடமை அரசுக்கு மட்டுமல்ல... நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

என்ன செய்யப் போகிறோம் நாம்?
 

1 comment:

  1. Some of us do have awareness and are trying to set right, in our way. I wonder, how is that we know this, but many people do not care? Why are people not sensitive to these important issues. We have failed in teaching proper values to masses. We have encouraged cinema culture, gold culture, glamour culture and money culture.

    But we have failed to admonish and educate on issues of ecology and earth shaking important stuff affecting generations. Where to start?

    ReplyDelete