சிலர்
இருக்கிறார்கள்; தாங்கள் நினைப்பதுதான் சரியாக இருக்கும் என்று அவர்களாகவே
கணக்குப் போட்டு, அதிலிருந்து துளியும் நழுவாது செயல்படுவார்கள்.
அப்படிப்பட்டவர்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் தவறாகவே இருக்கும்;
மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவே இருக்கும்.
எனக்குத் தெரிந்த
ஒருத்தர் அடிக்கடி வாயில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே இருப்பார்.
பேசிக்கொண்டிருக்கும்போதே இடம், பொருள், ஏவல் பார்க்காமல் 'புளிச்'சென்று
பக்கத்திலேயே துப்பிவிடுவார். குறிப்பாக, ரயில் நிலைய கட்டடத் தூண்கள்
பக்கம் நடந்துபோனால், அவருக்குள் அந்த நேரத்தில் என்னமோ பண்ணும்போல;
ஏற்கெனவே போதை வஸ்துக்களை வாயிலே மணிக்கணக்கில் போட்டுக் குதப்பி
புளிச்சென்று துப்பி, அங்கே சிவப்பு பெயிண்ட் போன்று கறையைப் பலர்
படியவிட்ட இடத்தில்... இவரும் வாயிலே போட்டு மென்ற வெற்றிலையைப்
'புளிச்'சென்று துப்புவார். அவரது இப்படியான செயலை எத்தனையோ முறை நான்
சுட்டிக்காட்டித் தடுக்க முயன்று, அதிலே தோற்றுப்போனதுதான் மிச்சம்!
ஒருநாள், அவருக்கு
வெற்றிலை மடித்துத் தரும் துரதிருஷ்டம் எனக்கு வாய்த்துவிட்டது.
அப்போதுதான் அந்த 'ஐடியா’ என் மூளைக்குள் பளிச்சிட, வெற்றிலையை மடித்து,
அதற்குள் பாக்கு வைப்பதற்குப் பதிலாக குட்டியான இரு கருங்கற்களை வைத்துக்
கொடுத்துவிட்டேன். அதை வாயிலே போட்டு நறுக்கென்று நண்பர் கடிக்க...
படக்கென்று ஒரு சத்தம். பாக்குக்குப் பதிலாக நான் வைத்த கல், ஏற்கெனவே
ஆட்டம் கண்டுகொண்டிருந்த அவரது சொத்தைப் பல்லைப் பதம் பார்த்துவிட, அக்கணமே
அது கழன்று வந்துவிட்டது.
இந்தச் சம்பவத்தால்
நண்பர் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க... ''நல்ல விஷயம்தானே நடந்திருக்கு!
டாக்டர்கிட்ட போய் பல்லை பிடுங்கணும்னு பல நாளா என்கிட்ட சொல்லிட்டு
இருக்கீங்க. இப்போ தானாவே பல் கழன்று வந்திடுச்சு. டாக்டர் செலவு
மிச்சம்!'' என்று நான் சொல்லிச் சமாளிக்க, அந்தச் சம்பவத்துக்குப் பிறகு
வெற்றிலையை வாயில் போட்டுக் குதப்பும் பழக்கத்தை அறவே விட்டுவிட்டார்
நண்பர்.
இப்படித்தான், கடமை
மறந்து கண்டபடி ஆட்சி செய்த ஒரு நாட்டின் மன்னனை கவிஞர் ஒருவர் மனம்
திருந்த வைத்த வித்தியாசமான கதையை இங்கே அழகாகச் சொல்கிறார் மகா பெரியவா.
'ஷாஹஜின்னு
ஒரு ராஜா. அவர் காலத்துல, 'குட்டிக்கவி’ன்னு ஒருத்தர் இருந்தார். பெயர்ல
மட்டுமில்ல, வயசுலேயும் அப்ப அவர் குட்டியா- குழந்தையாத்தான் இருந்தார்.
ஷாஹஜிக்கு அப்புறம் அவருடைய பிள்ளை ப்ரதாப ஸிம்ஹன்
ராஜாவானான். ராஜ்ய நிர்வாஹத்தைத் திறம்பட நடத்தி வந்த முக்ய அதிகாரிகளான
நானாஜி ப்ரபு, சந்தர பானு, ஆனந்தராயர் முதலான பெரியவர்கள் கால க்ரமத்தில்
காலமாகிவிட்டார்கள். நல்லவனான ப்ரதாப ஸிம்ஹன் துரதிருஷ்டவசமாக கல்வி,
கேள்விகள் இல்லாத சில சில்லறை ஆஸாமிகளின் வசப்பட்டுவிட்டான். அவர்களை
ஆலோசகர்களாக வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்ததில் ஆட்சி சீர்குலைந்து, அவனது
சோணாட்டு மக்கள் பலவிதத்தில் கஷ்டப்படும்படி ஆயிற்று.
அப்போதுதான் ராஜாவை தைர்யமாக இடித்துரைக்க வேண்டுமென்று
குட்டிகவி ஒரு காவியம் எழுதப் புறப்பட்டார். இப்போது 'குட்டி’யாக இல்லாமல்
நல்ல வயஸு வந்தவராகவே அவர் ஆகியிருந்தார். மன்னனை எப்படி வழிக்குக்
கொண்டுவருவது என்று யோசித்த குட்டிகவி, இக்காலத்தில் satire என்றும் irony
என்றும் சொல்கிறார்களே... மறைமுகமாக, ஹாஸ்ய ரஸத்தோடு குத்திக்காட்டி
எழுதுகிறார்களே... அப்படி ஒரு காவியம் எழுதுவது என்று ஆரம்பித்தார். இப்படி
எழுதுவதை 'சலோக்தி’ என்பார்கள். வெளியிலே ஒன்றைச் சொல்லி உள்ளே இன்னொன்றை
உணர்த்துகிற முறையையும் கையாண்டார். இந்த அணிக்கு 'அந்யாப தேசம்’ என்று
பெயர். இக்காலத்திலே கார்ட்டூன் என்று போடுகிறார்கள். அதில் மநுஷர்களையே
மிருகங்கள் மாதிரி கூடக் கேலியாகச் சித்திரிக்கிறார்கள். குட்டிகவி
வார்த்தையாலேயே கார்ட்டூன் போட்டார்.
அந்த நூல் இப்போதும் இருக்கிறது. நூறு ச்லோகம் கொண்ட
அதற்கு 'மஹிஷ சதகம்’ என்று பெயர். எருமையை ஸ்தோத்ரம் பண்ணும் நூறு பாட்டு
என்று புரிகிற தோல்லியோ? தலைப்பிலேயே பரிஹாஸமாக இடித்துச் சொல்லுதல்!
'மஹிஷி’ என்று ராணிக்குப் பெயர் இருக்கிறது.
'பட்டமஹிஷி’ என்கிறோம். ஆனால் ராஜாவுக்கு 'மஹிஷன்’ என்று பேரில்லை. 'மஹி’
என்றால் பூமி என்பதை வைத்து 'மஹீசன்’ 'மஹிபதி’ என்றுதான் பெயர்கள்
இருக்கின்றன.
குட்டிகவி, மஹிஷ சதகம் பண்ண ஆரம்பித்து விட்டார். அவர்
'சதகம்’ பண்ணத்தான் நினைத்தாரோ அல்லது 'ஸாஹஸ்ரீ’யாக ஆயிரம் ச்லோகம் பண்ண
நினைத்தாரோ? கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோகம் பண்ணிப் பண்ணி, அவற்றை ராஜாவுக்கே
அனுப்பிவைத்தார்.
அதன் ஸப்ஜெக்ட்டைச் சுருக்கமாகச் சொன்னால்...
அஸத்தானவர்களைத் தன் பையில் வைத்துக்கொண்டு, அவர்களுக்கு 'ஆமாம் பூசாரி’
போடுகிற ஒரு ராஜாவுக்கு ஸேவகம் செய்து பிழைப்பதைவிட, ஒரு எருமைக்கடாவை
வைத்துக் கொண்டு, அதனால் 'உழுதுண்டு வாழ்வதே மேல்’ என்பதுதான்! உழுதுண்டு
வாழ்வதற்காக எதை ஏரிலே பூட்டிப் 'பின் செல்கி’றோமோ, அந்த எருமையையே
'தொழுது’ ஸ்துதிப்பதாகத்தான் ஸ்லோகங்கள் செய்தார்.
அதிலே இரண்டே இரண்டின் தாத்பர்யத்தை மட்டும் சொல்கிறேன்.
''மஹா
பண்டிதரான ஸ்ரீதரர் தம் வித்யையைக் காசுக்கு விற்கிறார். ஷட்-தர்சனம் கற்ற
அம்பு தீக்ஷிதர், சோற்றுக்குத் தாளம் போடுகிறார். ஷட்-தர்சனமாவது... சை!
க்யாதி வாய்ந்த குட்டிகவியுங்கூட துஷ்ட தனிகரின் வாசலில் காத்துக் காத்து
ஓய்ந்து போய்த் தூங்கி விழுந்துவிட்டார். இத்தனையும் எதனால்? மஹிஷேச்வரனான
எருமைக் கடவுளான- உன்னை அநுஸரித்து ஆச்ரயிக்காத துர்பாக் யத்தின்
பலன்தான்!'' என்று ஒரு ஸ்லோகம்.
இன்னொன்றில், 'எருமையே! ராப் பகலாக நிலத்தை உழுது உழுது
ஏன் கஷ்டப்படுகிறாய்? இப்போது ராஜஸபையில் இருப்பவர்களோடு நீயும் சேர்ந்து
ஸுகஜீவனம் பெறலாமே! 'எனக்கு அறிவில்லையே, ஸாமர்த்யமில்லையே!’ என்றெல்லாம்
வீணுக்கு அலட்டிக் கொள்ளாதே! தற்போதைய ஸபாக்காரர் களோடு பார்த்தால் உன்னை
ப்ருஹஸ்பதி என்றே சொல்லணுமாக்கும்!'' என்கிறார்.
இவர் அனுப்ப அனுப்ப ஸ்லோகங்களைப் பார்த்துக் கொண்டே போன
ராஜாவுக்கு - அவனும் உள்ளூர நல்ல ஸ்வபாவமுள்ளவன் என்றேனே... அதனால்,
மனஸிலே நன்றாகத் தைத்து, தான் பண்ணுகிறது தப்பு என்று உணர்ந்தான்.
ராஜரீக ஹோதாவைப் பார்க்காமல் ப்ரதாப ஸிம்ஹன்
குட்டிகவியிடம் போய், தனக்கு நல்லறிவு பிறந்துவிட்டதாகவும், ஞான சூன்யமான
ஸ்வய நல கோஷ்டியை நீக்கிவிட்டு, விஷயமறிந்த ஸத்துக் களை ஆலோசகர்களாகப்
போட்டுக்கொண்டு ஆட்சி நடத்துவதாகவும் வாக்குக் கொடுத்தான். தேசத்துக்கு
உபகாரமாகத் தாம் எடுத்துக்கொண்ட காரியம் பலிதமானதில் குட்டிகவி ஸந்தோஷம்
அடைந்தார்.
அதோடு, அவர் தாம் கவனம் செய்து கொண்டிருந்த பரிஹாஸ
காவியத்துக்கும் 'ஃபுல் ஸ்டாப்’ போட்டுவிட்டார். அதுவரை ஸரியாக நூறு
ஸ்லோகங்கள் ஆகியிருந்ததால் 'மஹிஷ சதகம்’ என்று அதற்குப் பெயர் கொடுத்து
வைத்து விட்டார்.
'ராஜாதான் திருந்திவிட்டானே, ஏன் அந்த ச்லோகங்களைக்
கிழித்துப் போட்டிருக்கக் கூடாது?’ என்றால், 'ராஜாவையுங்கூட ஒரு கவியானவன்
அடக்கி நல்வழிக்குக் கொண்டு வரமுடியும். நாட்டை அடக்கி, ஆள்கிற வனுக்கும்
மேலான சக்தியைக் கவி நிஜமாகவே பெற்றவன்’ என்பதற்கு ப்ரத்யக்ஷ நிரூபணமாக
இந்தக் காவியம் இருந்து கொண்டிருக்கட்டும் என்றே கிழித்துப் போடாமல்
வைத்துவிட்டார். வருங்காலத்தில் ஆட்சிக்கு வருபவர்களுக்கும் ஒரு பாடமாக-
எச்சரிக்கையாக இருக்கட்டுமென்று வைத்துவிட்டார்.
ராஜாவும் அந்தச் சுவடிகளை confiscate பண்ணுவது, proscribe பண்ணுவது என்று பறிமுதல், தடை செய்யாததையும் இங்கே சொல்லவேண்டும்.'
ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
நல்ல கதை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete