Search This Blog

Sunday, July 07, 2013

டாக்ஸ் ஃபைலிங்... மாற்றங்களைக் கவனியுங்கள் !

அலுவலகப் பணியாளர்கள் வருமான வரிக் கணக்கு விவரத்தை தாக்கல் செய்ய ஜூலை 31, கடைசி தேதி. கடைசி சில நாளில் அவசரஅவசரமாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிர்க்க அந்த வேலையை இப்போதே செய்து முடித்துவிடுவது நல்லது.

சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப்., லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம், வீட்டுக் கடனுக்கான அசல் மற்றும் வட்டி, பிள்ளைகளின் கல்விச் செலவு உள்ளிட்ட வரிச் சலுகைகளை கழித்ததுபோக மீதி உள்ள வருமானத்துக்கு மட்டும் வரி கட்டவேண்டும். இந்த முதலீடு, செலவு, வரிச் சலுகை பெற்ற விவரத்தை வருமான வரித் துறைக்கு தெரிவிப் பதுதான் வரி கணக்குத் தாக்கல்.

ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் அவர் வரிக் கணக்கு எதுவும் தாக்கல் செய்ய வேண்டிய தில்லை. இவர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் வழங்கப்படும் படிவம் 16, வருமான வரிக் கணக்கு படிவமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இதிலும் சில நிபந்தனைகள் உள்ளன. உதாரணத்துக்கு, ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குள் இருந்து நிதி ஆண்டில் அவருக்கு வங்கிச் சேமிப்புக் கணக்கு மூலம் 10,000 ரூபாய்க்கு மேல் வட்டி வருமானம் கிடைத்திருந்தால் அவர் வரிக் கணக்கு தாக்கல் செய்வது அவசியம். நிதி ஆண்டில் இரண்டு கம்பெனிகளில் பணிபுரிந்தவர்கள், சம்பளம் தவிர இதர வருமானம் உள்ளவர்கள், ரீஃபண்ட் வரவேண்டும் என்றாலும் வரிக் கணக்கு தாக்கல் செய்வது அவசியம்.


சமீபத்திய மாற்றங்கள்!

2012-13-ம் ஆண்டுக்கான வரிக் கணக்கு தாக்கல் முறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு வரையில் மொத்த வருமானம் (பிரிவு 80 சலுகை களைக் கழித்தபின்) 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள் கட்டாயமாக  இ - ஃபைலிங் என்கிற எலெக்ட்ரானிக் முறையில்தான் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். இது இப்போது, 5 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களும் வரிக் கணக்கை கட்டாயமாக இ-ஃபைலிங் முறையில் தாக்கல் செய்யவேண்டும் என்று மாற்றப்பட்டுள்ளது.  

இதற்குமுன் வரிக் கணக்கு படிவத்தில் வங்கியின் எம்.ஐ.சி.ஆர். கோடு எண்ணை குறிப்பிடுவது அவசியம். தற்போது அதற்கு பதிலாக ஐ.எஃப்.எஸ்.சி. கோடு குறிப்பிட வேண்டும். இது உங்களின் வங்கி காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும். அல்லது வங்கியின் வலைதளத்திலிருந்தும் எடுக்கலாம்.

மேலும், உங்கள் வங்கிக் கணக்கின் 11 இலக்க எண்ணையும் கொடுப்பது அவசியம்.
நிதி ஆண்டில் உங்களுக்குக் கிடைக்கும் வரி விலக்கு பெற்ற வருமானம், 5,000 ரூபாயைத் தாண்டும்போது, வரிக் கணக்கு படிவம் ஐ.ஆர்.டி. 2 பயன்படுத்தவேண்டும். வரி விலக்கு பெற்ற வருமானம் என்பதில் டிவிடெண்ட், விவசாய வருமானம், லைஃப் இன்ஷூரன்ஸ் முதிர்வுத் தொகை, பி.பி.எஃப். வட்டி போன்றவை அடங்கும். வெளிநாட்டு வருமானம் இருந்தால் இ-ஃபைலிங் முறையில்தான் வரிக் கணக்கு தாக்கல் செய்யவேண்டும்.

யாருக்கு என்ன படிவம்..!
ஐ.டி.ஆர். 1 (சஹாஜ்)
* சம்பளம் / ஓய்வூதியம்.
* ஒரு வீட்டிலிருந்து வாடகை வருமானம் வருதல்.
* வட்டி வருமானம்.
* வெளிநாட்டில் சொத்து இருக்கக் கூடாது.
வரி விலக்கு பெற்ற வருமானம் நிதி ஆண்டில் 5,000 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது
மேலேகண்ட விதிமுறைகள் பொருந்தும் பட்சத்தில் ஐ.ஆர்.டி. 1 பயன்படுத்தவேண்டும்.

ஐ.டி.ஆர். 2
சம்பளம் / ஓய்வூதியம்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வாடகை வருதல்.
மூலதன ஆதாயம்.
மூலதன இழப்பை அடுத்த ஆண்டுகளுக்கு கொண்டு செல்லுதல்.
வட்டி வருமானம்.
வெளிநாட்டில் சொத்து இருந்தால்..!

ஐ.டி.ஆர். 3
நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருப்பவர்கள்.
வட்டி வருமானம், சம்பளம், போனஸ், கமிஷன் போன்ற வருமானத்தைக்கொண்டவர்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வாடகை வருதல்.
மூலதன இழப்பை அடுத்த ஆண்டுகளுக்கு கொண்டு செல்லுதல்.

ஐ.டி.ஆர். 4
வியாபாரம் அல்லது நிபுணத்துவம் மூலம் வருமானம் வருதல்.
இதர வருமானம் ஏதாவது.
வெளிநாட்டில் சொத்து.
ஐ.டி.ஆர். 4 எஸ் (சுகம்)
ஒப்பந்தக்காரர்கள், சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டிருப் பவர்கள் குறிப்பாக, கணக்கு வழக்கு பராமரிக்காமல் லாபத்தில் 8% வரி கட்டி வருபவர்கள்.
வரி விலக்கு பெற்ற வருமானம் நிதி ஆண்டில் 5,000 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.
ஊக வணிகம் மூலம் வருமானம் பெற்றிருக்கக் கூடாது.
ஐ.டி.ஆர். க்ஷி V (ITR- V Form)
இது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான ஆதாரப் படிவம்.
  
வருமான வரி அலுவலகத்தில் நேரில் சென்று வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்துதரவேண்டும். அதில் அலுவலக முத்திரை பதித்து தருவார்கள்.

ஆன்லைனில் இ-ஃபைலிங் முறையில் வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது, டிஜிட்டல் கையெழுத்து பயன்படுத்தவில்லை என்றால் இந்தப் படிவத்தை பெங்களூருவில் உள்ள சி.இ.சி. அலுவலகத்துக்கு 120 நாட்களுக்குள் அனுப்பி வைக்கவேண்டும். இது பெங்களூரு அலுவலகத்துக்குச் சென்று சேராதவரையில் நீங்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்தது கணக்கில் வராது.
- சி.சரவணன்.

 
தற்போது தனிநபர்களைப் பொறுத்தவரையில், ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் மதிப்பீடு ஆண்டு (அசெஸ்மென்ட் இயர்) 2013-14-ல் இ-ஃபைலிங் முறையில்தான் வரிக் கணக்கு தாக்கல் செய்யவேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

இ-ஃபைலிங் செய்ய களம் இறங்கும்முன், பான் கார்டு, ஃபார்ம் 16 (நிறுவனம் வழங்கியது), ஃபார்ம் 16 ஏ (சம்பளம், ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றுக்காக டி.டி.எஸ். பிடித்து கட்டப்பட்ட விவரம்), வங்கிக் கணக்குகளின் மொத்த பரிமாற்ற விவரம், மூலதன ஆதாய விவரம், வீட்டு வாடகை வருமானம், வரிச் சலுகைக்கான முதலீடு மற்றும் செலவு விவரங்கள் போன்றவற்றை தயார்படுத்திக்கொள்வது அவசியம்..!

இந்த இ-ஃபைலிங் செய்ய சுமார் 25 நிமிடங்களே ஆகும். தவிர, இ-ஃபைலிங் முறையில் வரிக் கணக்கு தாக்கல் செய்தால் ரீஃபண்ட் விரைவில் கிடைக்கும்.
இ-ஃபைலிங் செய்ய, இந்திய வருமான வரித் துறையின் இணையதளமான https://incometaxindiaefiling.gov.in/- க்கு சென்று பான் எண் மூலம் பதிவு செய்துகொள்ளவேண்டும். ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் லாகின் செய்து உள்ளே சென்றுவிடலாம். உங்களுக்குப் பொருத்தமான படிவத்தைத் தேர்வு செய்து, வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான சாஃப்ட்வேரை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.


டவுன்லோடு செய்த படிவத்தில் விவரங்களை சரியாகப் பூர்த்தி செய்து அப்லோடு செய்யவேண்டும். உங்களின் டிஜிட்டல் கையெழுத்தை இ-ஃபைலிங் செய்ததற்கு ஆதாரமாக ஐ.டி.ஆர். V படிவம் தோன்றும். டிஜிட்டல் கையெழுத்து இல்லை என்றால், ஐ.டி.ஆர். V படிவத்தை பிரின்ட் எடுத்து கையெழுத்துப்போட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு சாதாரண தபால் அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலம் அக்னாலெஜ்மென்ட் இல்லாமல் இணைத்து அனுப்பவேண்டும்.

Income Tax Department - CPC
Post Bag No.1, Electronic City Post Office,
Bengaluru, Karnataka - 560 100
கட்டணமில்லா தொலைபேசி: 18004252229
கட்டணத் தொலைபேசி: 08022546500

டிஜிட்டல் கையெழுத்து பயன் படுத்தவில்லை என்கிறபட்சத்தில், இதை பெங்களுரூவில் உள்ள சி.இ.சி. அலுவலகத்துக்கு 120 நாட்களுக்குள் அனுப்பி வைக்கவேண்டும். இது பெங்களூரு அலுவலகத்துக்குச் சென்று சேராத வரையில் நீங்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்தது கணக்கில் வராது.

மேலும், ஆடிட்டர்கள் மூலமும் இ-ஃபைலிங் செய்ய முடியும். இந்த வேலையை செய்துகொடுப்பதற்கு என பல இணையதளங்கள் இருக்கின்றன. அவை கட்டணமாக சுமார் 250 ரூபாயிலிருந்து வாங்குகின்றன.

இவர்களிடம் உங்களின் படிவம் 16 கொடுத்தால் போதும். அவர்கள் உங்கள் சார்பாக இ-ஃபைலிங் செய்து விடுவார்கள். பெங்களூருவில் உள்ள மத்திய பரிசீலனை மையத்துக்கு (சி.பி.சி.) ஐ.டி.ஆர். V கூட அவர்களே  அனுப்பி வைத்துவிடுவார்கள்.

1 comment:

  1. அனைவருக்கும் பயன்படும்
    அருமையான அறிந்திருக்கவேண்டிய தகவல்கள்
    அடங்கிய பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete