மகாராஷ்டிரா
மாநிலம் அஹமத் நகரைச் சேர்ந்த தீபா மாலிக் ஒரு பைக் ரேஸர். பைக் ரேஸர்
என்பது ஒரு வார்த்தைதான். அதற்குப் பின்னால் தீபா மாலிக் கடந்து வந்த
ஒவ்வோர் அடியும் துயரத்தால் நிரம்பியது. அவருக்கு வயது 42. பக்கவாத
பாதிப்பால் இடுப்புக்குக் கீழே உடல் இயங்காது. வீல் சேர்தான் முழு வாழ்க்கை
என்று ஆகிவிட்ட நிலையில், அந்த நிலையிலிருந்து போராடி, இன்று இந்தியாவின்
நம்பர் 1 மாற்றுத் திறனாளி பைக் ரேஸர் ஆகியிருக்கிறார் தீபா. அது
மட்டுமல்ல... பாரா ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட முதல் இந்தியத் தடகள
வீராங்கனை, நீச்சல் மற்றும் குண்டு, ஈட்டி எறிதல் வீராங்கனை, கார் ரேஸர் என
தீபாவுக்குப் பல முகங்கள்... பல திறமைகள்!
தீபா மாலிக்குக்கு ஆறு வயது இருக்கும்போது
முதுகெலும்பில் சிறியதாகக் கட்டி வந்திருக்கிறது. அப்போது தீபாவின் பள்ளிப்
பருவங்கள் வலியோடும், விளையாட்டோடும் கழிந்திருக்கின்றன. பள்ளி நேரம்
முழுவதும் விளையாட்டு, பின் மருத்துவமனை என மாறி மாறி அலைந்திருக்கிறார்
தீபா. ஆனாலும் பள்ளி, கல்லூரி விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு
சாம்பியன் பட்டம் வென்ற தீபாவின் வாழ்க்கை திசை மாறியது அவரது 29 வயதில்.
திருமணம் முடித்து இரண்டு மகள்கள் பிறந்த பிறகு, அந்த முதுகெலும்பு கட்டி
வீங்கி உடல் இயக்கத்தை முடக்கிப் போட்டிருக்கிறது. சக்கர நாற்காலியில்
தீபாவின் வாழ்க்கை முடங்கியது!
''ஆனால், நான் சோர்ந்துபோகவில்லை. ஒரு பேட்டியில்,
'நீங்கள் வேறு என்னவெல்லாம் செய்வீர்கள்?’ என்ற கேள்விக்கு, 'மிக வேகமாக
நீச்சல் அடிப்பேன்’ என்று சொன்னேன். சொன்னதோடு ஏதோ ஒரு நம்பிக்கையில்
நீச்சல் அடித்தேன். எனக்கே என் மீது நம்பிக்கை வந்த சம்பவம் அது. நீச்சல்
மூலமாகவே என் உடல்நிலையைச் சமன் செய்து விளையாட்டுப் பயிற்சிகளை
மேற்கொண்டேன். வீல்சேரை இயக்கிய அனுபவத்தைக் கொண்டு நான்கு சக்கர பைக்கை
இயக்கினேன். இமயமலையின் எலும்பை ஊடுருவும் குளிரில் 1,700 கி.மீ. தூரத்தை
எட்டு நாட்களில் கடந்தேன். பாரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில்
வெண்கலம் வென்றேன். 'இப்படி இருந்து எப்படிச் சாதித்தாய்?’ என்று
கேட்கிறார்கள். முடியாது என்ற சொல்லுக்குப் பின்னேதான் முடியும் என்கிற
சொல் ஒளிந்திருக்கிறது. அதைக் கண்டிபிடித்துவிட்டால், உங்களை யாரும் தடுத்த
நிறுத்த முடியாது!'' என்று சிரிக்கிறார்.
No comments:
Post a Comment