Search This Blog

Tuesday, July 02, 2013

உங்கள் தட்டில் உணவா... விஷமா?

 கோலா குளிர்பானங்களின் மருத்துவ குணங்களை ஆராயும் முன், அவற்றில் உள்ள கலவைப் பொருட்களைத் தெரிந்துகொள்வோம்.
 
கார்பன் டை ஆக்ஸைடு கலந்த சோடா, எல்லா பானங்களுக்கும் பொது. அதற்கு அடுத்து 'அதிக ஃப்ரெக்டோஸ் சோளச்சாறு’  (High Fructose Corn Syrup - HFCS) மூன்றாவதாக ஃபாஸ்போரிக் அமிலம். கேரமல், சிட்ரிக் அமிலம், சோடியம் பென்ஸயோட், வினிகர், புரோமின் கலந்த எண்ணெய், ரெட் 7 இன்னும் பல 'இயற்கை நிறங்களும், கலவைகளும்’ எல்லா பானங்களுக்கும் பொது. கோகோ கோலாவில் கொகெயின் + கேஃபின், பெப்ஸியில் கேஃபின் மட்டும் உண்டு.

இந்தக் கலவைகள் காலத்துக்கு ஏற்ப, அன்றாட சட்ட திருத்தங்களுக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றப்படுவது உண்டு. கோகோ கோலாவில் இருந்த கொகெயின் தடைபடுத்தப்பட்டதால், பின்னர் நீக்கப்பட்டது. செவன் அப்-ல் இருந்த லித்தியம் மன உற்சாகத்தை தூண்டும் பொருளாக கருதப்பட்டதால், பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இவை தவிர, பெயர் குறிப்பிடப்படாத சில ரகசிய பொருட்களும் உண்டு. 'கோகோ கோலாவின் ரகசிய ஃபார்முலா அட்லான்டாவில் உள்ள வங்கியின் லாக்கரில் இருக்கிறது. அது இரண்டே பேருக்கு மட்டும்தான் தெரியும்' என்றும் நம்பப்படுகிறது.

இனி, குளிர்பானங்களில் உள்ள ஒவ்வொரு வேதிப்பொருளும் உடல் நலத்தை எப்படி பாதிக்கும் என்பதை பார்ப்போம்.


முதலில், கரியமில வாயு எனப்படும் 'கார்பன் டை ஆக்ஸைடு'. உயிருக்குத் தேவையான ஆக்ஸிஜனுக்கு நேர் எதிரான வாயுதான் இந்த கார்பன் டை ஆக்ஸைடு என்று உங்களுக்குத் தெரியும். இதைத் தண்ணீரில் அழுத்தத்துடன் கரைத்துக் குடித்தால் என்ன நிகழும்? பானத்தின் அமிலத் தன்மை அதிகமாகும். அமிலத் திரவம் வாயில்படும்போது பற்களின் எனாமல் கரையும். வயிற்றுக்குள் போனவுடன் அமிலத்தன்மையினால் புண் உண்டாகலாம். அண்மையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஒரு சாப்பாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் ஒரே நேரத்தில் எட்டு பாட்டில் கோலா குடித்த ஒரு மாணவன், உடனே இறந்துவிட்டான். கார்பன் டை ஆக்ஸைடுதான் காரணமாகக் கருதப்பட்டது. ஆண்களின் மலட்டுத்தன்மைக்கும் இது ஒரு காரணமாக இப்போது கருதப்படுகிறது. ஆனாலும் சோடா குடித்தவுடன் காற்று ஏப்பமாக வெளியேறும்போது வயிறு சரியாகிவிட்டதாக ஒரு மன நிறைவும் சுகமும் உண்டாவதுதான் இதை மறுபடியும் குடிக்கத் தூண்டுகிறது!

குளிர்பானங்களின் அடுத்த முக்கிய கலவை 'ஹெச்.எஃப்.சி.எஸ்' எனப்படும் 'அதிக ஃப்ரெக்டோஸ் சோளச்சாறு'. இதைப்பற்றி நீங்கள் சற்று விரிவாகவே தெரிந்துகொள்வது அவசியம். ஆரம்பத்தில் கரும்பில் இருந்து எடுக்கும் சீனிதான் குளிர்பானங்களில் சேர்க்கப்பட்டது. இதன் விலை அதிகமாக இருந்ததாலும், இனிப்புச் சோளம் (Sweet Corn) அதிகமாக விளைந்ததாலும், பின்னர் சீனிக்குப் பதிலாக, 'சோளச்சாறு' உபயோகிக்க ஆரம்பித்தார்கள். கரும்பு விவசாயத்தைவிட, சோள விவசாயம் மலிவானது. அமெரிக்க அரசு இதற்கு நிறைய மானியம் கொடுக்கிறது. இதையெல்லாம்விட இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களில் சோளம்தான் மிகவும் முக்கியமானது (மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைப் பற்றிய மருத்துவ உண்மைகளை பின்னர் விளக்கமாகப் பேசுகிறேன்).

கரும்பு சீனியிலும், சோளச் சாறிலும் இருப்பது சுக்ரோஸ் (Sucrose). சுக்ரோஸ் என்பது, குளூக்கோஸ் + ஃப்ரெக்டோஸ் ஆகியவற்றின் கூட்டு. கரும்புச் சர்க்கரையில் குளூக்கோஸ், ஃப்ரெக்டோஸ் ஒவ்வொன்றும் 50% இருக்கும். மேலும் அவை ஒன்றோடொன்று வேதியல் இணைப்பில் இருக்கும். சோளச்சாறு சர்க்கரையில் ஃப்ரெக்டோஸ் 55 சதவிகிதமும், குளூக்கோஸ் 45 சதவிகிதமும் வேதியல் இணைப்பின்றி, வெறுமனே உதிரியாகக் கலந்திருக்கும்.

குளூக்கோஸைவிட, ஃப்ரெக்டோஸ் பல மடங்கு இனிப்பானது. பழங்களிலும், தேனிலும் முக்கியமாக இருப்பது ஃப்ரெக்டோஸ்தான் (ஆனாலும் பழங்களில் உள்ள அபரிதமான நார்ச்சத்தும், தேனில் உள்ள மற்ற இயற்கைக் கலவைகளும் இந்த ஃப்ரெக்டோஸ் கெடுதல் விளைவிக்காமல் பாதுகாக்கின்றன). கரும்புச் சர்க்கரை வயிற்றில் ஜீரணமாகும்போது குளூக்கோஸ் + ஃப்ரெக்டோஸ் கூட்டு உடைக்கப்பட்டு, பிறகுதான் உறிஞ்சப் படுகிறது. ஆனால், சோளச்சாறில் உள்ள குளூக்கோஸ் + ஃப்ரெக்டோஸ் கூட்டு, உதிரிக்கலவையாக இருப்பதால்... உடனே சிதறி வெகு சீக்கிரம் உறிஞ்சப் பட்டு ரத்தத்தில் கலக்கிறது. ஆகவே, கரும்புச் சர்க்கரையைவிட... சோளச் சர்க்கரை அதிக ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை.

இந்த சோளச்சாறு சர்க்கரையை இயற்கையான சர்க்கரையாக ஏற்றுக்கொள்ள முடியாது. சோளச்சாற்றில் பல்வேறு வகையான வேதியியல் முறைகளைப் புகுத்திதான் இந்த சர்க்கரை உருவாகிறது. இதில் பல்வேறு வேதிப்பொருட்கள் கலந்திருக்கின்றன என்பது உண்மை. அதில் பாதரசம் கலந்திருக்கிறது என்பது அதி அதிர்ச்சியான தகவல்.
மலிவானதும், மிகவும் இனிப்பானதும் என்பதால் பல்வேறு உணவுப் பொருட்களில் தற்போது உலகெங்கும் இந்த சோளச்சாறு சர்க்கரை சேர்க்கப்படுகிறது. குளிர்பானங்கள் தவிர, ஜாம், ஐஸ்கிரீம், பேக்கரி பதார்த்தங்கள், பல்வேறு தானிய உணவு வகைகள், ரொட்டிகள் என்று பலவற்றிலும் இது தற்போது முக்கிய அங்கம் வகிக்  கிறது. 1960-ல் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் 1970-ல் அமெரிக்காவுக்குள் நுழைந்து, அன்று முதல் இன்று வரை உலகம் முழுவதும் உள்ள மக்களின் உணவுப் பழக்கத்தை அடியோடு மாற்றிப் போட்டுவிட்டது இந்த சோளச்சாறு சர்க்கரை.

சமீபகாலங்களில் சோளச்சாறு சர்க்கரை தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கிளப்பிய சர்ச்சையைத் தொடர்ந்து, சோளம் பதனிடும் அமைப்புகள் கடுமையான எதிர் பிரசார யுத்தத்தில் இறங்கியுள்ளன. ''சோளச் சர்க்கரையும் கரும்புச் சர்க்கரையும் ஒன்றுதான். இனிமேல் 'ஹெச்.எஃப்.சி.எஸ்' (HFCS) என்று சொல்லாமல் 'கரும்புச் சர்க்கரை' என்பது போல, 'சோளச் சர்க்கரை' என்று நாமகரணம் சூட்ட வேண்டும்'' என்று அமெரிக்காவின் மருந்து, உணவு தரக்கட்டுப்பாட்டின் உச்சபட்ச அமைப்பான 'எஃப்.டி.ஏ'-வுக்கு  (FDA)  மனு செய்தனர். ஆனால், அதை அந்த அமைப்பு ஏற்கவில்லை. இதுதான் சந்தர்ப்பம் என்று கரும்புச் சர்க்கரை ஆலை அதிபர்கள் எதிர்பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள். 'கரும்புச் சர்க்கரைதான் உடலுக்கு நல்லது. சோளச்சாறு சர்க்கரை கெடுதல்’ என்ற ரீதியில் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். இதை எதிர்த்து, அமெரிக்க நீதிமன்றங்களில் சர்க்கரை ஆலைகளுக்கு எதிராக சோளச்சாறு அமைப்புகள் தொடர்ந்த வழக்குகள், தற்போது நிலுவையில்.

இரண்டையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு என்ன தோன்றுகிறது? கரும்புச் சர்க்கரை, சோளச் சர்க்கரை - இரண்டில் எது ரொம்ப கெட்ட சர்க்கரை என்பதுதானே? 'எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி' என்பது போல. 'கரும்புச் சர்க்கரை கெடுதல்' என்றால், 'சோளச் சர்க்கரை மிகவும் கெடுதல்' என்பதுதான் உண்மை.

2 comments:

  1. விழிப்புணர்வு பதிவு! அருமை! நன்றி!

    ReplyDelete
  2. இதுவும் உண்மையா! ? என்ன உலகம்டா ???

    ReplyDelete