'ஜோதிதா’ என்று இளைய தலைவர்களும் ஜோதி பாபு என்று லட்சோப லட்சம் தோழர்களும்
அழைத்துக் கொண்டாடிய ஜோதிபாசுவுக்கு இது நூற்றாண்டு தொடக்க விழா.
ஜோதிபாசு என்ற பெயரைச் சொன்னாலே, அச்சம் அல்லது
பெருமிதம் கொள்பவர்கள்தான் உண்டு. இன்று தமிழ்நாட்டில் நூற்றுக் கணக்கான
குழந்தைகளுக்கு அவரது பெயரிடப்பட்டு உலாவருவதைப் பார்க்கலாம். டெலிபோன்
டைரக்டரியைப் புரட்டினால், சென்னையில் மட்டும் தொலைபேசி வைத்துள்ள
ஜோதிபாசுகள் 10-க்கும் மேல். இன்னும் மதுரை, தஞ்சை, கோவை என்று புரட்டிப்
பார்த்தால், அவரது பெயர் ஏராளமானோருக்கு உண்டு. தவிர, டெலிபோன் வசதி
இல்லாத ஏழைத் தொழிலாளிகள், விவசாயிகளின் வீட்டில் பல ஜோதிபாசுகள்
இருக்கின்றனர்.
அவரது பெயரைச் சொன்னதற்கு அரசே நடுங்கிய சம்பவம் தமிழகத் திலேயே நடந்தது.
ஒருமுறை, அரசு ஊழியரின் கூட்டத்தில் பேசிய தொழிற்சங்கத் தலைவர், ''இப்படித்
தொடர்ந்து தொழிலாளிகளை தமிழக அரசு நசுக்கி னால், எங்களைப் பாதுகாக்க வங்க
முதல்வர் ஜோதிபாசு இருக்கிறார்'' என்று சொன்னார். உடனே, பயந்துபோன தமிழக
அரசு, அந்தத் தொழிற்சங்கத் தலைவருக்கு மெமோ கொடுத்தது. 'இரு மாநிலங்களுக்கு
இடையே பகையை மூட்டப் பார்க்கிறார். சங்கத் தலைவர் பேசியது ராஜதுரோகக்
குற்றம்’ என்று குற்றம் சாட்டப்பட்டது. அந்தளவுக்கு அச்சுறுத்தும் மனிதராக
அவர் கருதப்பட்டார்.
1967-ல் முதல்முறையாக நான் ஜோதிபாசுவைப் பார்க்க நேர்ந்தது. தி.நகர்
பேருந்து நிலையத்தின் பின்புறம் மாபெரும் பொதுக்கூட்டம். காங்கிரஸுக்கு
எதிராக அப்போது தி.மு.க. - மார்க்சிஸ்ட் - சுதந்திரா கூட்டணி அமைந்து
இருந்தது. அறிஞர் அண்ணா அவர்கள் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி யில்
போட்டியிடுகிறார். ஜோதிபாசு அந்தக் கூட்டத்தில் பேசுகிறார் என்றதும்,
ஏராளமான கூட்டம். அந்தக் கால கட்டத்திலேயே தமிழகம் அறிந்த மனிதராக ஜோதிபாசு
இருந்தார்.
தமிழகத்தில் உள்ள தோழர்களுக்கு ஜோதிபாசு என்றாலே ஒரு தனி மரியாதை உண்டு.
அதற்குக் காரணம் அவருடைய பல குணநலன்கள். முதல்வராக இல்லாதபோது, சென்னைக்கு
வரும்போதெல்லாம் எம்.எல்.ஏ. விடுதியில்தான் தங்குவார். அவரது சூட்கேஸில்
மூன்று செட் துணிகளே இருக்கும். பொதுக்கூட்டத்துக்குப் போய்விட்டு வந்த
பிறகு, அறையில் தனது துணிகளை அவரே சோப்பு போட்டுத் துவைப்பார். உணவு
உண்ணவும் சாதாரண ஹோட்டல்களுக்கே வந்து எங்களுடன் உணவருந்துவார்.
ஒருமுறை பாட்னா ரயில் நிலையத்தில் அவர் வந்திறங்கியபோது ஒருவன் அவரைத்
துப்பாக்கியால் சுட்டான். குண்டு குறிதவறி அவரது பக்கத்தில் இருந்த ஒரு
எல்.ஐ.சி. தோழர் மீது பாய்ந்தது. அந்த சமயம் எதற்கும் அஞ்சாமல் பதற்றம்
அடையாமல் இருந்தார் ஜோதிபாசு. அவர் ஓடி ஒளியவில்லை. 'அவனைப் பிடியுங்கள்’
என்று அந்த மனிதனைப் பார்த்து கையைக் காட்டினார். அத்தகைய சூழ்நிலையில்
இப்படிப்பட்ட துணிச்சல் வெகு சிலருக்கே உண்டு. இலங்கைக்கு அமைதிப்படை
அனுப்பி வைக்கப்பட்டதை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு
ஆதரித்தபோதும், காங்கிரஸ் இல்லாத முதலமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய
ஜோதிபாசு, 'இலங்கையில் இந்தியாவின் தலையீடு தோல்வி அடைந்தது’ என்று கூறத்
தயங்கவில்லை.
இன்று பல கட்சியினர் அடுத்த பிரதமர் தங்கள் தலைவர்தான்
என்று பேசியும் ஃப்ளெக்ஸ் போர்டு வைத்தும் வருகிறார்கள். நாட்டின்
எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய பலம் இருந்தும், பிரதமர் பதவி தன்னைத்
தேடி வந்தும், கட்சியின் உத்தரவுப்படி, அந்தப் பதவி தனக்கு வேண்டாம் என்று
நிராகரித்தார் ஜோதிபாசு. பின்னர், கட்சியின் முடிவு ஒரு வரலாற்றுப் பிழை
என்று கூறவும் அவர் தயங்கவில்லை.
இன்று பல தலைவர்கள் எவ்வளவு வயதானாலும் கட்சியிலும்
பதவியிலும் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். பல கட்சிகளில் இளைஞர் அணித்
தலைவர்கள் 60 வயதைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால், பதவியில்
இருக்கும்போது தனது வயதைக் கருதி இனிமேல் பொலிட் பீரோ உறுப்பினராக இருக்க
மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து அந்தப் பதவியில் இருந்து தன்னை
விலக்கிக்கொண்டவர் ஜோதிபாசு.
இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் சார்பில் 'மாநில சுயாட்சி’
பற்றி பேச அழைத்தபோது, உடனே கலந்துகொள்ள சம்மதித்தார். மைலாப்பூரில் மிக
விமரிசையாக அந்தக் கூட்டம் நடை பெற்றது. அப்போது அவர் மேற்கு வங்க
முதல்வராக இருந்தபோதும், தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட கௌரவங்களைத்
தவிர்த்தார்.
அவர் இறுதி வரை ஒரு நாத்திகராகவே இருந்தார். மதுரையில்
9-வது 'கட்சி காங்கிரஸ்’ நடக்கும்போது அவரது மனைவி கமலா பாசுவும் மகன்
சந்தன் பாசுவும் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்ல விரும்பியபோது... வர
மறுத்ததோடு, அவர்களையும் கடிந்துகொண்டதை நேரில் பார்த்தவன் நான். அவர்
இறந்த பிறகும் அவரது உடல் இடுகாடு/சுடுகாடு எடுத்துச் செல்லப்படாமல், அவரது
விருப்பத்துக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. கடைசி
வரை அவர் தனது கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை.
கட்சி முடிவுகளுக்கு உட்பட்டு பாரதப் பிரதமராக ஜோதிபாசு
ஆகாவிட்டாலும், அவர் மக்கள் மனதில் பாரதத்தின் ரத்னமாக ஒளிர்கிறார். பாரத
ரத்னா விருது இதுவரை அவருக்கு வழங்கப்படாதது வேதனை அளிக்கிறது. அவரது
நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த ஆண்டிலேயே, அவருக்கு 'பாரத ரத்னா’ விருதை
மத்திய அரசு வழங்கி, விருதுக்கான கௌரவத்தை உயர்த்திக்கொள்வது நல்லது.
No comments:
Post a Comment