Search This Blog

Saturday, July 20, 2013

பாசுபத சித்தாந்தம்

 
முக்திநிலை அடைவதில், ஒரு புதிய பாதையைக் காட்டும் விதமாக அறிமுகமாகிய இந்த சித்தாந்தம், குஜராத் மாநிலம் கார்வான் என்ற இடத்திலிருந்து கிளம்பி இந்தியாவெங்கும் பரவியது.
 
கார்வானில், ஒரு பிரம்மச்சாரி இளைஞன் தீயில் எரிந்து சாம்பலான நிலையில் மீண்டும் உயிர்பெற்று எழுகிறான். சிவபெருமானே மீண்டும் வந்திருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். அந்த இளைஞனால் உருவாக்கப்படுகிறது புதிய சித்தாந்தம். இந்த சித்தாந்தத்தைக் கடைபிடிப்பவர்கள் நிர்வாணமாக உடலெங்கும் விபூதி பூசிக்கொண்டு சுடுகாட்டில் கடும் தவமிருப்பார்கள். தமிழ்நாட்டில் இந்த சித்தாந்தத்தைப் பரப்ப வந்தவர்கள் தங்கிய இடங்களுக்கு காரோணம் என்று பெயர் வந்தது.  தமிழ்நாட்டில் மூன்று காரோணங்கள் உண்டு. கச்சி காரோணம், குடந்தை காரோணம் மற்றும் நாகை காரோணம். முன் காலத்தில் எந்த ஒரு சித்தாந்தமும் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டுமானால் காஞ்சி, குடந்தையில் இருந்த சமய அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் குஜராத்திலிருந்து காஞ்சிக்கு இந்த சித்தாந்தம் வந்திருக்கலாம் என்கிறார்கள். தேவாரத்தில் பல இடங்களில் காரோணம் என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது.ஆனால், காலப்போக்கில் காரோணம் என்பது காயா ரோகணம் என்று மருவியது. இதை காயம்+ ஆரோகணம் என்று பிரித்துப் பார்த்தார்கள். காயம் என்பது உடல். ஆரோகணம் என்றால், ஏற்றி அல்லது உயர்த்தி வைத்தல். இந்தப் பின்னணியில்தான் காஞ்சியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் காயாரோகணேஸ்வரர். இந்தப் பெருமான் வேகவதி ஆற்றங்கரையில் சுடு காட்டின் ஓரத்தில் கோயில் கொண்டிருக்கிறார். இந்தக் கோயிலின் வரலாறு சித்தாந்தத்தின் அடிப்படையில் இருந்தாலும், புராண வரலாற்றையும் சொல்கிறது காஞ்சி புராணம். திருமாலும், பிரம்மனும் ஒருங்கே அழிய நேரும் சமயத்தில் ஈசன் அவ்விருவரையும் ஒடுக்கி அவர்களுடைய திருமேனியை தன் தேகத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்கிறார். இந்தச் செயலே காயாரோகணம் எனப்படுகிறது என்கிறது காஞ்சி புராணம். தம்முள் அவர்களை ஒடுக்கிக் கொண்ட ஈசன் ஆனந்த நடனம் ஆடியதால், ‘காரோணம்’ என்ற பெயர் பெற்றதாம் இத்தலம். இங்கே திருமகள், ஈசனை வழிபட்டு அச்சுதனை தன் நாயகனாகப் பெற்றாள்.
 
சீதள கமலப் பொகுட்டனை கிழத்தி
செஞ்சுடை பிரானை வில்வத்தால்
கோதற வழிபட் டச்சுதன் தனக்கு
கொழுநனாய்ப் பெற்றனள் அங்கண்
என்கிறது காஞ்சிப் புராணம். இந்தத் தலத்தில் தான் எமன் ஈசனை வழிபட்டு தென்திசைக்கு அதிபதியாகும் பேறு பெற்றானாம்.

இந்தக் கோயிலின் அம்பாள் கமலாம்பிகை. விநாயகப் பெருமான், வள்ளி தெய்வானை உடனுறை முருகப்பெருமான், மகாலட்சுமி, சூரியன், பைரவர் ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் உள்ளன. கோயில் கிழக்கு பார்த்தவண்ணம் இருந்தாலும், கருவறை நுழைவாயில் தெற்கு பார்த்த வண்ணமும் மூலவர் அமைந்துள்ள வாயில் கிழக்கு பார்த்த வண்ணமும் உள்ளன. இது குருபகவான் (பிரகஸ்பதி) தலமாகவும் போற்றப்படுகிறது.

இந்தக் கோயிலின் திருக்குளம், தாயார் குளம் என்றழைக்கப்படுகிறது. இந்தக் குளக்கரையில் பித்ருக்களுக்கு கர்மா செய்தால், அவர்கள் முக்தி அடைவார்கள் என்கிறது காஞ்சி புராணம். இந்த புண்ணிய தீர்த்தம் மாசுபட்டுக் கிடப்பது வருத்தமாக இருக்கிறது. இப்படிப்பட்ட பல சிறப்புகளைத் தாங்கிய இந்தக் கோயிலின் திருப்பணி சமீபத்தில் முடிந்து கும்பாபிஷேகமும் நடந்திருப்பதால், கோயில் புதுப்பொலிவுடன் இருக்கிறது. மிகவும் பழமையான இந்தக் கோயிலின் கல்வெட்டுகள் காலப்போக்கில் அழிவைச் சந்தித்துவிட்டன.

குருவருள் பெற...

இந்தலத்தில் குருபகவான் (பிரகஸ்பதி) தனிச் சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். குரு பரிகார ஸ்தலமாகவும் இருப்பதால், வியாழக்கிழமையில் கணிசமாக மக்கள் வருகிறார்கள். குரு பகவான் இத்தலத்தில் ஈசனை வழிபட்டு அவருடைய பேரருளுக்குப் பாத்திரமாகி, சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று தேவர்களுக்கு ஆசானாகும் பேறு பெற்றார் என்கிறது காஞ்சி புராணம்.

எப்படிப் போவது?

காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். பேருந்து வசதி கிடையாது. ஆட்டோக்களில்தான் செல்ல வேண்டும். கோயில் அமைந்துள்ள தாயார் குளம், சாலையிலிருந்து சற்று தள்ளி அமைந்திருக்கிறது.

ப்ரியன்

 

No comments:

Post a Comment