Search This Blog

Thursday, September 09, 2010

"பீப்ளி-லைவ்" PEEPLI (LIVE) ---- என் விமர்சனம்


'பீப்ளி' என்ற சிறிய கிராமத்தில் கதை தொடங்குகிறது. இங்கு உள்ள நத்தா(Omkar Das Manikpuri), புதியா (Raghuvir Yadav)என்ற இரண்டு விவசாயிகள் கடும் வறுமையில் வாடுகின்றனர். அவர்கள் நிலத்தை பேங்கில்  வைத்து அரசிடம் கடன் வாங்கியுள்ளனர். அந்தக் கடனை அவர்களால் திருப்பிச் செலுத்த முடிய வில்லை. உடனே பேங்கு நிலத்தை ஜப்தி செய்யப் போவதாக சொல்கிறது. நிலத்தை தக்க வைத்துக்கொள்ள நத்தாவும், புதியாவும் போராடுகின்றனர். என்ன செய்தும் அவர்களால் பணம் புரட்ட முடியவில்லை. அந்த நிலையில், தற்கொலை செய்துகொள்ளும் விவசாயி களுக்கு அரசு ஒரு லட்ச ரூபாய் பரிசு அறிவிக்கிறது. இதனை அவர்கள் அந்த ஊரில் இருக்கும்  அரசியல்வாதி மூலம் அறிகிறார்கள். உடனே, யாராவது ஒருவர் தற்கொலை செய்துகொண்டு அந்த லட்ச ரூபாய் பணத்தை வாங்குவது என்றும் இன்னொருவர் அந்தப் பணத்தைக் கொண்டு நிலத்தை தக்க வைத்துக் கொள்வது எனவும் முடிவு செய்கின்றனர். நத்தா தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிடுகிறார். அவரது திட்டம் வெளியில் கசிந்துவிட... அந்த சிறிய கிராமத்தை நோக்கி டி.வி. மீடியாக்கள் படை எடுக் கின்றன. ஒரு தற்கொலையை 'லைவ்' செய்வதுதான் அவர்களின் திட்டம்! 

நத்தாவின் ஒவ்வொரு நடவடிக்கை யையும் டி.வி. கேமராக்கள் கண்காணிக் கின்றன. டி.வி-காரர்கள் அங்கேயே வேன்களோடு தங்கிவிட, திருவிழா கணக்காக அந்தக் கிராமத்தில் தற்காலிகக் கடைகள் முளைக்கின்றன. 'நீங்கள் ஒரு பரபரப்பான காட்சியைப் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். ஒரு தற்கொலையை நேரடி ஒளிபரப்பு செய்வது உலகத்திலேயே இதுதான் முதல் முறை' என்ற ரீதியில் டி.வி. ரிப்போர்ட்டர்கள் மைக்கும் கையுமாக பேசியபடி இருக்கிறார்கள்.

இதற்கிடையே, அரசியல்வாதிகளும், சாதிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அந்த பரபரப்பில் தாங்களும் பங்கெடுக்க வேண்டி, நத்தாவை வந்து சந்தித்து டி.வி-க்களுக்குப் பேட்டி அளிக்கின்றனர். சாப்பிட வழியற்ற நத்தாவின் குடும்பத்துக்கு பெரிய டி.வி. ஒன்றைப் பரிசு அளிக்கின்றனர். ஒரு பாறை மறைவில், நத்தா, மலம் கழிப்பதற்காக ஒதுங்குகிறார். அதையும் ஒரு கேமரா படம் எடுக்கிறது. தப்பித்து ஓடும் நத்தா காணாமலே போகிறார். எல்லோரும் அவரைத் தேடுகின்றனர். இறுதியில் பீப்ளி கிராமத்தில் இருந்து டி.வி. வேன்கள் வெளியேறுகின்றன. கேமரா கிராமத்தில் இருந்து பின்னோக்கி நகர்ந்து நகரத்துக்குள் நுழைகிறது. பெரிய கட்டடம் ஒன்றின் கட்டுமான வேலைகள் நடக்கும் இடத்துக்குள் கேமரா போகிறது. அங்கு பரிதாப முகத்துடன் நத்தா கட்டுமானத் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். 

'1991 முதல் 2001 வரை எட்டு மில்லியன் விவசாயிகள் இந்தியாவில் விவசாயத்தைக் கைவிட்டுள்ளனர்' என்ற குறிப்புடன் படம் முடிவடைகிறது. 
 
உயிரோடு இருக்கும்போது பணத்துக் காக நிலத்தைப் பிடுங்கும் அரசு, செத்தால் லட்ச ரூபாய் பணம் தந்து கடனைக் கழித்துக் கொள்கிறது என்றமுரண்பாடு தான் படத்தின் உயிரோட்டம்! அனுஷா ரிஸ்வி என்ற அறிமுக பெண் இயக்குநரின் படைப்பான 'பீப்ளி லைவ்', விவசாயிகள் தான் இந்த தேசத்தின் உச்சகட்ட பரிதாப ஜீவன்கள் என்பதை நடு மண்டையில் அடித்தாற்போல் சொல்கிறது. அதேசமயம், ஜனரஞ்சக ரசிகர்களையும் மனதில்கொண்டு அரசாங்கத்தை நோக்கியும், ஊடகங்களின் சில போலித்தனங்கள் பற்றியும், சமூகத்தின் சுயநலப் பார்வை பற்றியும் சிரிக்கச் சிரிக்க கிண்டலடித்தபடி நகர்கிறது படம். 'டார்க் ஹியூமர்' என்ற,- அதிகாரத்தை நோக்கிய இந்த கிண்டல் பாணி ஒவ்வொரு ஃபிரேமிலும் வெளிப்படுகிறது. 'நத்தாவின் இந்த நிலைமைக்குக் காரணம், முஸ்லிம் தீவிரவாதிகள்தான்' என்று ஒரு கேரக்டர் அபத்தமாகப் பேசும் வசனம் இதற்கு ஒரு நல்ல உதாரணம். தொலைக்காட்சிகள் டி.ஆர்.பி. ரேட்டிங்குக்காக அடிக்கும் கூத்துகளையும், எல்லாவற்றையும் வெறும் செய்தியாக மட்டுமே, உணர்வற்று விலகி நின்று பார்க்கும் மனநிலையையும் சவட்டி எடுக்கிறார்கள். 

லகான்,' 'ரங் தே பசந்தி,' 'தாரே ஜமீன் பர்,' '3 இடியட்ஸ்' என்று வரிசையாகபொது நோக்குப் பார்வை கொண்ட படங்களில் கலக்கி வரும் அமீர்கான் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். ஆரம்பத்தில் அமீர்கான் இந்த நத்தா கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம். அதற்குள் இன்னும் பொருத்தமான புதுமுக நடிகர் கிடைத்ததும் அவரையே ஹீரோவாக்கி விட்டாராம். படம் வெளியானதும் அமீர்கான் நாட்டின் முக்கியத் தலைவர்கள் அனைவருக்கும் இந்தப் படத்தைப் போட்டுக்காட்டத் தொடங்கினார்.

படத்தில் எனக்கு பிடித்த சில காட்சிகள் :

நத்தாவின் மகன் தூங்கிக் கொண்டிருக்கிற நத்தாவை எழுப்பிக் கேட்கிறான் "எப்பப்பா செத்துப் போவே?. நான் லேஅதேர் ஆவேன்னு மாமா சொல்லுறாரு , ஆனால் நான் போலீஸ்காரனாவனும்".

"உன்னிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்ளாமல் அரசாங்கம் எதையும் உனக்குத் தராது தம்பி" என்கிறான் ஒரு அரசியல்வாதி. 

"உயிரோட இருக்கறவங்களுக்கே எந்த உதவியும் செய்யாத அரசாங்கமா, செத்தவங்களுக்கு உதவப் போவுது?" என்று அரசுத் திட்டத்தை ஒரு பாமரன் கிண்டலடிக்கிறான்.

ராணுவத்திற்கான பல கோடி செலவுகளையும் செய்யும் அரசங்கம் மிக ஆதாரமான விவசாயத்தை இப்படியாக புறக்கணிக்கும் போது 'வருங்காலத்தில் நாம் எதை உண்ணப் போகிறோம்' என்கிற கேள்வி பூதாகரக் கவலையுடன் நம் முன்னே நிற்கிறது.
  


2 comments:

  1. Nice review da...I initially thought it to be a professional review from Ananda Vikatan...Supera eluthirukka...:)

    ReplyDelete