Search This Blog

Wednesday, February 09, 2011

இந்தியா வல்லரசாக வளர்கிறதா?

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் பராக் ஒபாமா கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல் போனால் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளிடம் தோற்றுப் போவோம் என்று எச்சரித்துள்ளார்.

எந்த ஒரு துறையிலும் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும்; மற்றவர்களை விடக் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்; சர்வதேச அளவில் போட்டியிட்டு வெற்றி காண வேண்டும்; எல்லாத் துறையிலும் நம்முடைய கட்டமைப்பே தலைசிறந்ததாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இதிலிருந்து தெரிவது என்ன? அமெரிக்கப் பேரரசு எப்போதும் வல்லரசு என்னும் மதிப்பீட்டைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று எண்ணுகிறது. உலகில் தன் தலைமையிடத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் துடிக்கிறது; அதிலிருந்து தாழ்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கவலைப்படுகிறது. 

இந்தியாவின் நிலை என்ன ?

இந்தியாவின் சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாள் கொண்டாட்டங்களின்போது, நமது ஆட்சியாளர்கள், "இந்தியா வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கிறது' என்று கூறிக்கூறி அகமகிழ்ந்து போகின்றனர்.

2020-ம் ஆண்டோ அல்லது அதற்கு முன்னதாகவோ ஒரு வளர்ந்த இந்தியா உருவாகும் என்பது வெறும் கனவு அல்ல; இது இந்தியர் பலரின் உள்ளங்களில் இருக்க வேண்டியதோர் தொலைநோக்குகூட அல்ல; அது ஒரு பணி இலக்கு. இதை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து செயல்படுவோம்; வெற்றி காண்போம்...'' என்று முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் செல்லும் இடமெல்லாம் சொல்லி வருகிறார்.

இந்திய அரசாங்கம் அமெரிக்காவின் உறவுக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறது. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுவதை இடதுசாரிக் கட்சிகளும், முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் எதிர்ப்பது தெரிந்தும், அதனால் தனது ஆட்சியே கவிழ்ந்து போகலாம் என்ற நிலையிலும் பிரதமர் மன்மோகன் சிங் விடாப்பிடியாக இருந்தார். ஆட்சி நிலைப்பதற்காகப் பணத்துக்கு ஆள்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது; 

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோதும் வரலாறு காணாத வரவேற்பு. இந்தியப் பாதுகாப்பின்மேல் நம்பிக்கையில்லாமல் அவரது பாதுகாப்புப் படையினரே இந்தியாவுக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்; அவர் மும்பைக்குச் சென்றபோது பொதுமக்கள் கூட வெளியில் நடமாட அனுமதிக்கப்படவில்லை;  

 ஆனால் இந்தியாவை அமெரிக்கா மதிக்கிறதா? தோழமை நாடாக ஏற்றுக் கொள்கிறதா? வளர்ந்து வரும் நாட்டுக்கு வளர்ந்த நாடு தரும் மரியாதை இதுதானா? தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதைப் பற்றி இந்தியா கவலைப்படுகிறதா?

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள திரிவேலி பல்கலைக்கழகத்தில் படித்த இந்திய மாணவர்கள் போலி விசாவில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. இதுதொடர்பான விசாரணை முடியும் வரை மாணவர்களின் நடமாட்டத்தை அறிவதற்காக அவர்களின் காலில் ரேடியோ அதிர்வலை கொண்ட கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டது. இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு ஏற்பட்டதும் இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

"போலி விசாவில் தங்கிப் படித்த மாணவர்களை முறைப்படி கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஆனால் அதற்கு பதில் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க காலில் ரேடியோ அதிர்வலைக் கருவி பொருத்தப்பட்டது...'' என்று ஹைதராபாதில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி ஜூலியட் உர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியர்களை அவமானப்படுத்துவது அமெரிக்காவுக்குப் புதிதல்ல. நம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அந்த நாட்டில் பாதுகாப்புச் சோதனை என்ற பெயரில் அவமதிக்கப்பட்டபோது, மக்கள் ஆத்திரப்பட்டனர்; ஆனால் அரசு அமைதி காத்தது. இதேபோல அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களை இந்தியா சோதனைக்கு உள்படுத்தினால் அமெரிக்கா அதைச் சகித்துக் கொள்ளுமா?

அண்மையில் மறுபடியும் இரண்டு இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளும் பாதுகாப்புச் சோதனை என்ற பெயரால் அவமதிக்கப்பட்டனர். அண்மையில் பாகிஸ்தான் லாகூரில் அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் தொழில்நுட்ப அதிகாரி டேவிஸ், தன்னை வழிமறித்தவர்களை கைத்துப்பாக்கியால் சுட்டதால் 3 பேர் இறந்துள்ளனர். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி, அவரை விடுதலை செய்ய வேண்டுமென்றும், இச்செயல் வியன்னா தீர்மானத்தை மீறிய செயலாகும் என்றும் கூறியுள்ளார். 

அமெரிக்காவின் அடியொற்றிவரும் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களும், இளைஞர்களும் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். 2010 ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற பஞ்சாபைச் சேர்ந்த நிதின் கார்க் என்ற இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வே அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்பினர்.

அப்போது நமது வெளியுறவுத் துறை என்ன செய்தது தெரியுமா? ஆஸ்திரேலிய அரசைத் தட்டிக் கேட்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கே அறிவுரை கூறியது.ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் மாணவர்கள் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துப் படிக்கச் செல்ல வேண்டும். இன்னும் சொல்லப் போனால் ஆஸ்திரேலியா சென்று படிப்பதைத் தவிர்க்க வேண்டும். வேறு நாடுகளில் உள்ள பட்டப்படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்...'' என்று நமது வெளியுறவுத் துறையமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கூறினார்.

 வளர்ச்சி பெற்று வரும் நாடு தம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையிலிருந்து நழுவலாமா? ஒரு சின்னஞ்சிறு நாடான இலங்கையைத் திருப்தி செய்வதற்காக தம் நாட்டு மீனவர்களையே பலியிடுகிறது.      

இந்தியாவின் எதிர்ப்பு நாடான பாகிஸ்தான் கூட அந்நாட்டுக் கடல் எல்லையைத் தாண்டி வரும் குஜராத் மீனவர்களைக் கொன்றதில்லை. பக்கத்து நாடான வங்கதேசமும் கடல் எல்லையை மீறும் மேற்கு வங்க மாநில மீனவர்களைத் தாக்குவதில்லை.ஆனால், இலங்கைக்கு ஆயுத உதவியும், ஆலோசனைகளும் அளித்து அங்கு நடந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த இந்தியா, நிதி உதவிகளையும் வாரி வழங்குகிறது. இவ்வளவு உதவிகளையும் பெற்றுக்கொண்ட இலங்கை அரசு "வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்ததுபோல' இந்திய மீனவர்களையே பதம் பார்க்கின்றனர்.

இந்தியாவை ஆளும் கூட்டு அமைச்சரவையில் தமிழகக் கட்சியும் பங்கு பெற்றுள்ளது. இவ்வளவு இருந்தும் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற இயலவில்லையென்றால் நம்ப முடிகிறதா? இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தமிழர்களை அந்நியர்களாகப் பார்க்கிறது; அலட்சியம் காட்டுகிறது; அதனால்தான் தமிழக மீனவர்கள் கடல் எல்லை தாண்டிப் போவதால்தான் இப்படி நடக்கிறது என்று சமாதானம் கூறுகின்றனர். நமது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இன்னும் ஒருபடி மேலே போய், ""கடல் எல்லையைத் தாண்டி போகிறவர்களுக்கு நாங்கள் பாதுகாப்புத் தர முடியாது...'' என்று நாடாளுமன்றத்திலேயே அறிவிக்கிறார்.

1987-ம் ஆண்டு இலங்கைக் கடற்படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும்போது, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கியதும் இந்தக் கடற்படை வீரன்தான். இலங்கை அரசு என்ன செய்தது? மன்னித்து விடுதலை செய்தது. காந்தியின் தேசம் என்று போற்றப்படும் இந்தியாவுக்கு உலக அளவில் அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா வல்லரசாக வளர்ச்சி பெறுவது இதற்குத்தானா? 

அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடும் அரசு வல்லரசும் ஆகாது; நல்லரசும் ஆகாது.   


No comments:

Post a Comment