டிஸ்க்: இது சொந்த ஊர் புராணம் மற்றும் புலம்பல். கொஞ்சம் போரடிக்கும்.
எனக்கு சிறு வயது முதலே என் சொந்த ஊர் விருதுநகர் மீது தனிப்பட்ட பிரியம் (சொந்த ஊரின் மீது யாருக்குத்தான் பாசம் இருக்காது?). எங்கள் ஊரை திரையில் காட்டிய இரண்டே படங்கள் ஒன்று வெயில்(வசந்தபாலன் விருதுநகர்காரர்), மற்றும் ரேணிகுண்டா(படத்தில் காட்டுவது ரேணிகுண்டாவே அல்ல). குறுகிய பரப்பளவு, தண்ணீர் பஞ்சம், குறுகிய தெருக்கள் என்று பல குறைகளை தாண்டி இந்த ஊருக்குள்ளே வரும்போதே தாயின் அரவணைப்பில் இருக்கும் குழந்தை போல மனம் குதூகலிக்கும். படிக்கும் காலத்தில் யாராவது இந்த ஊரை குறை கூறி விட்டால் உடனே கோபம் பொத்துக்கொண்டு வரும். கல்லூரியில் படிக்கும்போது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஒரு நண்பன், "இப்படி வறண்ட பாலைவனத்தில் எப்படித்தான் இந்த மனிதர்கள் இருக்கிறார்களோ?" என்று எகத்தாளமாக கூறினான். உடனே என்னிடம் பதில் வந்தது "நாளைக்கே எங்கள் ஊர் பசுமையாக மாறினாலும், இல்லை இப்படி வறண்டு போனாலும் அதை தாங்கும் சக்தி இந்த ஊர் மனிதர்களுக்கு இருக்கிறது. ஆனால் உங்கள் ஊர் ஒரு வருடம் மழை இல்லாமல் போனால் கூட உங்களால் தாங்க முடியாது!" என்று. எந்த ஒரு கணத்திலும் இதை நான் விட்டு கொடுத்ததில்லை.
சுமார் 1 ஆண்டு சென்னையில் வேலை பார்த்துவிட்டு, ஊர் திரும்பி இருக்கிறேன். என்னுடன் படித்த நண்பர்கள் அனைவருமே பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் பணி செய்து கொண்டிருப்பதால் ஊருக்குள் யாருமே இல்லை. எனக்கு கொண்டாட்டம் என்றால் பண்டிகை காலம்தான். அப்போதுதான் அனைத்து நண்பர்களும் ஊர் திரும்புவார்கள். தீபாவளி அன்று வ குவாட்டர் கட்டிங் படம் பார்ப்பதற்கு தியேட்டருக்கு வெளியே நின்று கொண்டிருந்தோம். நீண்ட நாள் கழித்து ஒரு நண்பனை சந்திக்க நேர்ந்தது. எல்லோரும் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தோம். அந்த நண்பன் சொன்ன ஒரே வார்த்தை, "எனக்கு தெரிந்து இருபது வருடங்களாக மாறாமல் இருப்பது இந்த ஊரு ஒண்ணுதான்." அதாவது இருபது வருடங்களுக்கு முன்னால் இந்த ஊர் எப்படி இருந்ததோ அப்படியேதான் இப்பவும் இருக்கிறது. எந்த ஒரு வளர்ச்சியும் கிடையாது. நான் சிந்தித்து பார்த்தேன். நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது இருந்த ஊர் அப்படியே தான் இருக்கிறது. எந்த மாற்றத்தையும் காணோம். இன்னும் சொல்லப்போனால் சீர்கெட்டுத்தான் போயிருக்கிறது.
எங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் மிக அதிகம். முன்பெல்லாம் இரண்டு நாளைக்கு ஒரு தடவை முனிசிபல் குழாயில் குடிதண்ணீர் விநியோகிக்கப்படும். அதிகம் போனால் மூன்று நாளைக்கு ஒருமுறை. கடந்த சில ஆண்டுகளாக சுமார் இருபது நாளைக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க படுகிறது. இது எங்களுக்கு பழகி விட்டது. எப்படி இரண்டு மணி நேர மின்வெட்டு பழகி விட்டதோ அதுபோல. இந்த ஆண்டு விருதுநகரில் வரலாறு காணாத மழை. இப்போதும் வாரத்துக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்க படுகிறது. அதாவது நல்ல மழை பெய்தால் கூட சரிவர குடிநீர் விநியோகம் கிடையாது. ஊரை சுற்றி சிறு சிறு கண்மாய்கள், அணைகள் இருக்கின்றன. ஆனால் மதகுகள் தான் இல்லை. மழை பெய்தால் அனைத்து தண்ணீரும் வீணாக வெளியேறி விடும். இது குடிநீரில் உள்ள குழறுபடி.
எங்கள் ஊருக்கு மிக அருகில் இருக்கும் இரண்டு பெரிய நகரங்கள் மதுரை மற்றும் சிவகாசி. இந்த இரண்டு ஊர்களில் இருந்தும் விருதுநகருக்கு என்று தனியாக மொபாசல் பேருந்துகள் கிடையாது. மதுரை டு சிவகாசி, மதுரை டு கோவில்பட்டி, மதுரை டு திருநெல்வேலி ஆகிய பேருந்துகள்தான் உண்டு. இவை விருதுநகர் வழியாகத்தான் செல்லும். ஆனால் பேருந்து நிலையத்தில் நிற்கும்போது விருதுநகர்காரன் யாரும் பேருந்தில் ஏறிவிட கூடாது. கண்டக்டர் பேருந்து அருகில் நின்று கொண்டு, "விருதுநகர் ஏறாதே!!" என்று கூவிக்கொண்டே இருப்பார். பேருந்து நிரம்பி கிளம்பும் நேரத்தில் போனால் போகட்டும் என்று ஏற்றி கொள்வார்கள். அதாவது விருதுநகர்காரன் ஏறி உட்கார்ந்து விட்டால் சிவகாசிகாரனுக்கோ கோவில்பட்டிகாரனுக்கோ சீட் கிடைக்காமல் போய்விடும் என்று இந்த திட்டம். இது தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் கடைபிடிக்கபடுகிறது. என்னை மாதிரி ஒரு சிலர் கண்டக்டரின் பேச்சை கேட்காமல் முன்னமே ஏறி உட்கார்ந்து கொண்டு, கண்டக்டரின் நெற்றிக்கண் பார்வையை கண்டுகொள்ளாமல், இருந்து விடுவோம். ஆனால் விபரம் புரியாத சிலர் குறிப்பாக பெண்கள் மிகவும் பாதிக்க படுகிறார்கள். இதில் திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் இன்னும் மோசம். எல்லா பேருந்துகளுமே ஊருக்குள் வருவதே இல்லை. ஏனென்று அடுத்த பத்தியில் சொல்கிறேன்.
தமிழ்நாட்டின் எல்லா ஊர்களின் தலைவிதிக்கு எங்கள் ஊர் மட்டும் என்ன விதி விலக்கா? எங்கள் ஊரிலும் இரண்டு பேருந்து நிலையங்கள் உண்டு. ஜன சந்தடி நிறைந்த இடத்தில் சிறிய பழைய பேருந்து நிலையம். ஆள் அரவமே இல்லாத இடத்தில் ஒரு புதிய பேருந்து நிலையம். இந்த புதிய பேருந்து நிலையம் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் பழைய பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்த வியாபாரிகளின் எதிர்ப்பையும் மீறி அப்போதிருந்த எம்எல்எ வீம்புக்காக கட்டியது. ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் கட்டப்பட்ட அந்த பேருந்து நிலையம் தற்போது சீந்துவாரற்று கிடக்கிறது. எப்போதாவது சில சமயம் திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் ஊருக்குள் வராமலேயே புதியபேருந்து நிலையத்துக்கு வந்து அட்டெண்டன்ஸ் போட்டு விட்டு செல்லும். இந்த மாதிரி பல பேருந்துகள் ஊருக்குள் வராமல் போவதற்கும் காரணம் இருக்கிறது.
நகரின் பல்வேறு சாலைகளில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்
உலகத்தரமான சாலைகளை உடையது எங்கள் ஊர். மலைப்பாங்கான ஊராக இல்லாமல் சமவெளியில்தான் எங்கள் ஊர் அமைந்துள்ளது. ஆனால் ஒரு மலை பிரதேசத்தில் பயணம் செய்த அனுபவம் கிடைக்கும். ஆங்காங்கே சர்ப்ரைஸ் குழிகளும் உண்டு. வாகனத்தில் மணிக்கு பதினைந்து கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் உங்களால் செல்ல முடியாது. மீறினால் ஒன்று டயர் பஞ்சராகும், இல்லை ஷாக் அப்சார்பரின் சீன் முடிந்து விடும். எங்கள் ஊர் பக்கம் ஒரு சொல் வழக்கு உண்டு. "விருதுநகருக்குள் வண்டி ஒட்டி பழகி விட்டால். உலகத்தில் எந்த மூலையில் வேண்டுமானாலும் வண்டி ஒட்டி விடலாம்." ஊர் முழுக்க இதே நிலைதான். இதற்கு முக்கிய காரணம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கபட்ட பாதாள சாக்கடை திட்டம். அதற்கு முன் மெயின் ரோடுகள் மட்டுமே குண்டும் குழியுமாக இருந்தன. தற்போது ஊரின் ஒவ்வொரு மூலை முடுக்கில் இருக்கும் சாலையும் நாசமாகி விட்டது. ஒட்டுமொத்ததில் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து விருதுநகரில் சாலை என்று ஒன்று இருந்ததாக நான் பார்த்ததே இல்லை.
இப்படி தொட்ட இடமெல்லாம் ஏதாவது ஒரு குறை இல்லை குழறுபடி. இதற்கு பாதி காரணம் அரசியல்வாதிகள் என்றால் மீதி காரணம் மக்கள். மக்கள் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்கள். எனக்கு விபரம் தெரிந்து எம்எல்எ வாக இருந்தவர்கள் திரு ARR சீனிவாசன் (திமுக-1996), திரு தாமோதரன்(காங்கிரஸ்-2001), திரு வரதராஜன் (மதிமுக-2006). இவர்கள் யாரென்றே மக்களுக்கு தெரியாது. நான் ARR சீனிவாசன் அவர்களை வோட்டு கேட்டு வரும்போது பார்த்திருக்கிறேன். மேலும் எங்கள் பள்ளி ஆண்டுவிழாவில் ஒருதடவை பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். மற்ற இருவரையும் வோட்டு கேட்டு வரும்போது பார்த்ததோடு சரி. இப்படி அரசியல்வாதிகள் எல்லாம் ஒரு கணக்குக்காக எங்கள் ஊரை வைத்திருக்கிறார்களே ஒழிய அதன் முன்னேற்றத்துக்கு எதுவும் செய்ததில்லை.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் |
எங்கள் ஊர் வியாபார தலமாக இப்போதும் சிறந்து விளங்குகிறது. கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த ஊர். அதனால்தான் என்னவோ இருபது வருடங்களுக்கும் மேலாக பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் முதலிடம் பெற்று வருகிறது. 120 ஆண்டுகளை கடந்த காமராசர் படித்த ஆண்கள் பள்ளி, 100 ஆண்டுகளை கடந்த பெண்கள் பள்ளி இன்னும் இயங்கி வருகிறது. இத்தனை சிறப்பம்சம் கொண்ட எங்கள் ஊர் எந்த வித முன்னேற்ற பாதையிலும் செல்லாததை நினைத்து வருத்தம் அடைகிறேன்.
சொல்ல மறந்துட்டேங்க. எங்க ஊர்தான் விருதுநகர் மாவட்டத்தின் தலைநகர். ஒரு மாவட்ட தலைநகருக்கே இந்த நிலைமை.
இது என் பள்ளி நண்பன் எழுதி அனுப்பியது. நண்பன் பாலா எழுத்துக்கள் போல் உள்ளது. விருதுநகர் மக்களின் எண்ணத்தை சொல்கிறது..
புற்று நோயால் பாதிக்கப் பட்ட உறுப்பு போல் இருக்கும் தெருக்கள் , என்று தான் இந்த அரசியல் வாதிகள் மக்களின் அடிப்படை தேவைகளை கேட்காமலே செய்து தருவார்கள். கல்வியின் தந்தை காமராசர் இரு கைகளிலும் இரு குழந்தைகளை பிடித்துச் செல்லும் இந்த சிலை ஒரு பொறியியல் கல்லூரி வாசலில் பார்த்திருக்கிறேன்ரசித்திருக்கிறேன்.
ReplyDelete