காய்கறி மற்றும் பழங்களை அதிக நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டி, மின்சாரம் இருந்தால் மட்டும்தான் இயங்கும். ஆனால், மின்சாரம் இல்லாமலே காய்கறி மற்றும் பழங்களை கூடுதல் நாட்கள் வரை பாதுகாக்கும் 'காய்கறி சேமிப்புக் கலன்’ ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் மத்திய அரசு செயல்படுத்தும் 'சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரைலேண்ட் அக்ரிகல்ச்சர்’ (கிரிடா) என்ற நிறுவனம்தான் இதை அறிமுகம் செய்திருக்கிறது.
சாதாரண பேரல் போன்று இருக்கும் இதன் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியில் வைக்கோல் போன்ற பொருள் வைக்கப்பட்டுள்ளது. 'இதனுள்ளே தண்ணீர் ஊற்றிவிட்டால், எந்நேரமும் ஈரத்தன்மை காக்கப்படும். அதனால், சாதனத்தின் உள்ளே வைக்கப்படும் காய்கறிகள் வழக்கத்தைவிட கூடுதல் நாட்கள் வரை வாடாமலும், கெடாமலும் இருக்கும்.
வெளியில் இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை மட்டும் தாக்குப்பிடிக்கும் தக்காளி, கத்திரி, வெண்டை, திராட்சை, கொய்யா, சீத்தா உள்ளிட்ட அனைத்து காய்கறி மற்றும் பழங்களும் சுமார் ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும். விவசாயிகள், சிறு வியாபாரிகள், ஹோட்டல், ஹாஸ்டல், வீடு என அனைத்து இடங்களிலுமே இந்தக் கலனைப் பயன்படுத்தி மின்சாரச் செலவில்லாமல் காய் மற்றும் பழங்களை நீண்ட நாள் பாதுகாக்க முடியும்’ என்கிறார்கள்.
ஐம்பது கிலோ வரை காய்கறிகளை வைக்கும் கலனுக்கு 3,600 ரூபாய் விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இதுபோக 30, 15 மற்றும் 5 கிலோ கொள்ளளவு கொண்ட கலன்களையும் வடிவமைத்திருக்கின்றனர்.
தொடர்ப்புக்கு : வேளாண் அறிவியல் மையம், தொலைபேசி: 04342-245860
No comments:
Post a Comment