Search This Blog

Thursday, February 17, 2011

எகிப்து-முபாரக்

'தன் மனைவியும் மகன்​களும் வைத்ததுதான் சட்டம்’ என்று எகிப்தில் எதேச்​சதிகார ஆட்சி நடத்திய முகமது ஹாஸ்னி முபாரக் என்ற ஆட்சியாளனின் கொடுமை தாங்க முடியாமல், நான்கு இளைஞர்கள், தங்கள் உடலுக்குத் தீ வைத்து எரிந்து போனார்கள். ஆட்சியாளருக்கு எதிராக அந்த இளைஞர்கள் செய்த காரியம் அமைதியே உருவான அஸ்மாவை உலுக்கியது. அஸ்மா மஹ்பூஸ்! 26 வயதான எகிப்தியப் பெண். நாட்டுக்காக தானும் ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று நினைத்தாள். நாடு ஒரு நாசகாரனின் கையில் சிக்கியிருக்கும் நேரத்தில், மௌனமாக இருக்க முடியாமல், அவள் தனது ஃபேஸ்புக்கில் ஒரு பகிரங்க அழைப்பு விடுத்தாள். 
 
'தீக்குளித்த நான்கு இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்த தஹரீர் சதுக்கத்துக்கு நான் செல்ல இருக்கிறேன். என்னைப் போல் சிந்தனை உடைய எவரும் வரலாம்...’ என்று அஸ்மா மஹ்பூஸ் அறிவித்து இருந்தாள். அவள் தஹரீர் சதுக்கத்துக்குப் போன நேரத்தில், அவளுக்கு முன்பே போலீஸ் காத்திருந்தது. அஸ்மா எழுதியதைப் படித்து, மூன்றே மூன்று இளைஞர்கள் மட்டும் வந்திருந்தார்கள். அஸ்மாவுடன் அந்த மூன்று இளைஞர்களையும் பிடித்துச்சென்று விசாரித்து எச்சரிக்கை செய்து அனுப்பியது எகிப்து போலீஸ்.
 

திரும்பிவந்த அஸ்மா மஹ்பூஸ் அமைதியாகி விடவில்லை. ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டாள். அந்த வீடியோவில் அவளே பேசி இருந்தாள், ''உங்களுக்குத் தன்னம்பிக்கை இருக்குமானால்... இந்த நாட்டில் கண்ணியமாக வாழ விருப்பம் இருக்குமானால்... ஜனவரி 25-ம் நாளன்று நாம் போராட்டத்தில் குதிக்க வேண்டும். உங்களில் யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் தனியாகச் செல்வேன். தீக்குளிப்பதற்காக அல்ல. என்னைப் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை. நீங்கள் உங்களை ஆணாகக் கருதினால் என்னுடன் வாருங்கள்!'' என்று ஆவேசமாகப் பேசியிருந்த அவர், ''அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த சக்திக்கும் அஞ்சாதீர்கள்!'' என்று தைரியம் சொல்லி இருந்தார்.ஜனவரி 25-ம் தேதி. எகிப்தின் எல்லாத் திசைகளும் தஹரீர் சதுக்கத்தின் தலைவாசலைத் தேடிவந்தன. திரும்பிய பக்கம் எல்லாம் மனிதத் தலைகள். ஏழை, பணக்காரர், இளைஞர், முதியவர், பெண்கள், குழந்தைகள் என்று வேறுபாடில்லாமல் நிறைந்து நின்றார்கள். அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒலித்தது மூன்றே முழக்கங்களைத்தான். 'ஊழல் ஒழியட்டும், குடும்ப ஆதிக்கம் முடியட்டும், முபாரக் பதவி விலகட்டும்’ என்பதே அவை.

மக்கள் ஒன்றுகூடி, உரிமைக்குரல் எழுப்பும் செய்தி தஹரீர் சதுக்கம் தாண்டி, எகிப்தில் வேறு யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்று அதிபர் முபாரக் நினைத்தார். அதனால் முதல் வேலையாக பத்திரிகைகளைத் தடை செய்தார். நாடு முழுமைக்கும் இன்டர்நெட் இணைப்புகளைத் துண்டித்தார். ஊரடங்கு கண்டிப்புடன் அமலுக்கு வந்தது.

ஆனாலும் எகிப்தியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறினார்கள். கல்லடி பட்ட தேன்கூட்டின் தேனீக்களாக ரோட்டில் கூடினார்கள். மக்களை நோக்கி குதிரைப்படையை அனுப்பினார் முபாரக். பீரங்கி வண்டியை நிறுத்தி பயமுறுத்தினார். ஆனால், எதற்கும் பயப்படவில்லை மக்கள். இறுதியில் ஒன்றுகூடுபவர்களை நோக்கி சுடச்சொன்னார். திடீர் திருப்பமாக ராணுவ வீரர்களும் 'ஸ்டிரைக்’ செய்தார்கள். ''எகிப்து மக்கள் இந்த நாட்டின் குடிமக்கள். சட்டபூர்வமாகப் போராட அவர்களுக்கு உரிமை உண்டு. சொந்த நாட்டு மக்களை நாங்கள் தாக்க மாட்டோம்!'' என்று பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டு அமைதி காத்தது ராணுவம்.

இதை எதிர்பாராத முபாரக் சில ராணுவ டிரக்குகளை கட்டாயப்படுத்தி, கூட்டத்தைக் கலைக்க அனுப்பி வைத்தார். டிரக்குகள் முன்னேறுவதைப் பார்த்ததும் முதலில் மக்கள் பயந்தார்கள். இரண்டு டிரக்... நான்கு ஆனது... பிறகு எட்டு ஆனது. மக்கள் ஆவேசமானார்கள். பயத்தில் இருந்து உடனே விடுபட்டு, அந்த டிரக்குகளைச் சுற்றி வளைக்க ஆரம்பித்தனர். நின்று கொண்டிருந்த டிரக்குகளைப் பிடித்து அசைத்தனர். கடைசியில் குப்புறப் புரட்டிப் போட்டார்கள். கூட்டத்தை நோக்கி வந்த பல வாகனங்களும் குப்புறக் கவிழ்த்துப் போடப்பட்டன. ராணுவம் முடக்கப்பட்ட பிறகுதான் முபாரக்குக்கு யதார்த்தம் புரிந்தது.

ஒரு பக்கம் அமெரிக்கா, இன்னொரு பக்கம் இஸ்ரேல், அடுத்த பக்கம் அரபு நாடுகள் என முபாரக்குக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட போதெல்லாம், ஆக்ஸிஜன் கொடுத்த நாடுகளின் ஆலோசனைகள் கை கொடுக்கவில்லை. அடுத்த அஸ்திரமாக, பசப்பு வார்த்தைகள் சொல்லி மக்களை மயக்க நினைத்தார் முபாரக்.


''செப்டம்பர் மாதம் வரை பொறுத்திருங்கள் அல்லது நான் பதவி விலகி என் மகனை உட்கார வைக்கிறேன்!'' என்று நீட்டி முழக்கியதை மக்கள் விரும்பவில்லை, நம்பவில்லை. ''நீயே வேண்டாம் என்றால் உன் மகன் மட்டும் எதற்கு? முப்பது ஆண்டுகளாக உன் குடும்பம் இந்த நாட்டைச் சுரண்டியது போதாதா?'' என்று கோபப்பட்டார்கள்.

அடுத்து, ''எகிப்து எனது நாடு. இது நான் பிறந்த பூமி. இது நான் போராடிப் பாதுகாத்த நாடு. இதை விட்டுவிட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன். நான் மரணிப்பதும் இந்த பூமியில்தான்!'' - என்று சென்டிமென்ட் அட்டாக் நடத்திப் பார்த்தார் முபாரக். ''உங்களுக்காகவே உழைக்கிறேன், ஓடாகத் தேய்கிறேன்...'' என்று அவர் சொன்னதையும் மக்கள் நம்பத் தயாரில்லை. 'பதவி விலகு’ என்ற ஒற்றை வார்த்தைக்கு மாற்றுச் சொல் இல்லை என்பதில் பிடிவாதமாக இருந்தார்கள். சமாளிக்கவே முடியாது என்ற நிலையில், பிப்ரவரி 11-ம் தேதி முபாரக் எகிப்தில் இருந்து எங்கோ பறந்தார்.

 முப்பது ஆண்டு சர்வாதிகாரத்தை 18 நாளில் பந்தாடிய எகிப்திய யுத்தம் அது. கத்தியும், ரத்தமும் கம்மிதான். சத்தமும் கோபமுமே இதைச் சாத்தியப்படுத்தியது. இப்படியும் செய்யலாம் என்று அவர்களைத் தூண்டியது டுனீசியா நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு நடந்த எழுச்சி. அந்த நாட்டின் அதிபர் பென் அலியின் கொடூரத்துக்கு எதிராக அந்த மக்கள் போராடினார்கள். உயிருக்கு பயந்து பென் அலி, ஃபிரான்ஸுக்கு ஓடினான். பின்னர் அங்கே இருக்க முடியாமல் எகிப்தில் தஞ்சம் புகுந்தான். 'பென் அலி இங்கே ஏன் வந்தான்?’ என்ற கேள்வியின் மூலமாகத்தான் எகிப்து மக்கள், புரட்சியின் பாதையைப் புரிந்து கொண்டார்கள். 1987-ல் ஆட்சியைக் கைப்பற்றிய பென் அலி, நடத்திய ஒரு தேர்தலில் 99.9 சதவிகித மக்கள் அவனை ஆதரித்து வாக்களித்ததாக அவனே அறிவித்தான். எங்கே திரும்பினாலும் வேலையில்லாத் திண்டாட்டம். அதற்கு நிவாரணம் தேடத் தெரியாமல் அடக்கு முறை நடத்துவதே பென் அலியின் பாதையாக இருந்தது. டுனீசியாவில் வேலை கிடைக்காத ஓர் இளைஞன் தீக்குளித்து உயிரை விட்டிருந்தான்.

இந்தத் தகவலை தெரிந்து கொண்டுதான் எகிப்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் தீக்குளித்தனர். அந்த சம்பவத்தை வைத்துத்தான் அஸ்மா மஹ்பூஸ் போராட்டத் தீ மூட்டினாள். முகம் தெரியாத அந்த இளைஞர்கள், தங்கள் மூச்சை நிறுத்திக் கொண்டு டுனீசியாவுக்கும் எகிப்துக்கும் உயிர் கொடுத்து இருக்கிறார்கள்.

மக்களை மயக்கங்களில் வைத்து, மீடியாக்களின் குரல் வளையை நெரித்து, 'தன் பெண்டு... தன் பிள்ளை... சோறு... வீடு... சம்பாத்தியம்...’ மட்டுமே நோக்கமாகக் கொண்ட சர்வாதிகாரஆட்சியாளர்கள்அத் தனை பேருக்கும் எகிப்துப் புரட்சி எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அடக்கப்பட்ட மக்களுக்கு ஆனந்தம் பிறந்திருக்கிறது.

No comments:

Post a Comment