Search This Blog

Sunday, February 27, 2011

ஜி.டி.பி. என்றால்? - அடிப்படை...


''போன வருஷம் ஒரே ஒரு மாருதி கார்தான் வச்சிருந்தாரு. இப்ப ஸ்விஃப்ட், ஐ10, இண்டிகான்னு மூணு காரை வாங்கிட்டாரே...!''

''இரண்டு வருஷத்துக்கு முன்னாடிகூட வாடகை வீட்லதான் குடியிருந்தாரு. இப்ப பங்களா மாதிரி வீடு வாங்கிட்டாரே...!''

யாரைப் பற்றியாவது இப்படி பலரும் சொல்லி வியப்பதைக் கேட்டிருப்பீர்கள். இதற்கு என்ன அர்த்தம்? சம்பந்தப்பட்ட நபர் பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையில் சொத்து பத்துகள் அதிகரித்திருப்பதை, வசதி வாய்ப்புகள் கூடியிருப்பதை அவர் களின் பொருளாதார முன்னேற்றத் துக்கான ஓர் அடையாளமாகச் சொல்கிறோம்.இது போல ஒரு நாடு முன்னேறுகிறதா, இல்லையா என்பதை எடுத்துச் சொல்லும் ஒரு எளிய அளவீடுதான் ஜி.டி.பி. அதாவது, (Gross Domestic Product.) தமிழில் இதை 'ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி’ என்கிறோம். 


இந்த ஜி.டி.பி-யை எப்படி அளவிடுகிறார்கள் என்பதை அவ்வளவு சுலபமாக விளக்கிவிட முடியாது. காரணம், உற்பத்தி, விற்பனை என பல விஷயங்களை உள்ளடக்கியது இது. ஜி.டி.பி. என்பது ஓர் ஆண்டின் அனைத்து சேவை மற்றும் உற்பத்தியான பொருட்களின் சந்தை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படுகிறது. உற்பத்தி முறை (Output approach), செலவீன முறை, வருமான முறை என பல முறைகளின் அடிப்படையில் இந்த ஜி.டி.பி. கணக்கிடப்படுகிறது.

வருமான முறை என்பது ஒரு பொருளை உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்குக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கணக்கிடும் முறையாகும். செலவீன முறை என்பது தனிமனிதர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவது. இந்தியாவில் செலவீன முறையைக் கொண்டே மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிட்டு வருகின்றனர்.

செலவீன முறையின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இப்படித்தான் கணக்கிடுகிறார்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தி = நுகர்வு + முதலீடு + அரசு செலவினங்கள் + (ஏற்றுமதி - இறங்குமதி) . நுகர்வு என்பது தனிப்பட்ட மனிதனின் உணவு, பொழுதுபோக்கு, மருத்துவம் முதலான சொந்தச் செலவுகளைக் குறிக்கும்.

முதலீடு என்பது ஒரு புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான செலவைக் குறிக்கும். தொழிற்சாலைக்கு இடம் வாங்குதல், மென்பொருள் களுக்கு காப்புரிமை பெறுதல், உபகரணங்கள் வாங்குதல் போன்றவற்றைக் குறிக்கும்.அரசு செலவினங்கள் என்பது ஒரு நாட்டின் அரசு, அதன் மக்களுக்கும் ராணுவத்திற்கும் மற்றும் இதர அம்சங்களுக்கும் செய்யும் செலவின் மதிப்பீட்டைக் குறிக்கிறது. 

 ஏற்றுமதி, இறக்குமதி பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. பொதுவாக ஒரு நாட்டின் ஜி.டி.பி-யானது சென்ற ஆண்டு அல்லது கடைசியாக வெளியான காலாண்டு முடிவோடு ஒப்பிட்டுச் சொல்லப்படும். எடுத்துக் காட்டாக, ஒரு நாட்டின் ஜி.டி.பி. 5% உயர்கிறது எனில், அந்த நாடு கடந்த ஆண்டைவிட பொருளாதார ரீதியில் 5% வளர்ந்திருப்பதாக அர்த்தம்.


இப்படித்தான் ஆரம்பித்தது ஜி.டி.பி.! - வரலாறு
1930... அமெரிக்காவை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஆட்கொண்ட காலம். இந்த காலகட் டத்தில் அமெரிக்கா முழுக்க பல ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப் பட்டு, மக்கள் வேலை இல்லாத் திண்டாட்டத்தினால் பெரும் அவதிப்பட்டனர். 


இந்தச் சூழலில் 1934-ல் அமெரிக்காவின் சைமன் குஸ்நெட்ஸ் (Simon Kuznets) என்பவர் ஜி.டி.பி. என்கிற கருத்தை முதன் முதலாக அமெரிக்க காங்கிரஸின் பொருளாதாரக் கூட்டத்தில் முன் வைத்தார். 'தனிநபர், நிறுவனம், அரசாங்கம் என அனைத்துத் தரப்பின் பொருளாதார உற்பத்தியையும் ஒற்றை குறிப்பில் கணக்கிட இந்த ஜி.டி.பி. உதவும்’ என்றார் சைமன். 


1944-ல் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி ஆணையம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளவிடும் முறையாக ஜி.டி.பி.யை ஏற்றுக் கொண்டன. 1962-ல் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியின் பொருளாதார ஆலோசனை கமிட்டி யிலிருந்து ஆர்தர் ஆகன் (Arthur Okun) எழுப்பிய கேள்விகளை வைத்து 'ஆகன் விதி’ அமெரிக்காவில் உருவானது. இந்த விதி, ஜி.டி.பி. வீழ்ச்சிக்கும், வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் முடிச்சுப் போட்டது. இந்த 'ஆகன் விதி’யைத் தூசி தட்டி புதிய வேலைவாய்ப்புக் கொள்கையை வெளியிட முனைந்து வருகிறது தற்போதைய ஒபாமா நிர்வாகம். 


1947-2010 வரையிலான அமெரிக்காவின் காலாண்டு சராசரி ஜி.டி.பி. வளர்ச்சி 3.3% ஆகும். அதிகப்படியான காலாண்டு ஜி.டி.பி. வளர்ச்சியான 17.20% வளர்ச்சியை மார்ச், 1950-ல் சந்தித்தது. இன்றளவும் இதை ஒரு சாதனையாகச் சொல்லி மெச்சிக் கொள்கிறது அமெரிக்கா. 


பாய்ச்சலும் பதுங்கலும்... - இந்திய ஜி.டி.பி.  


 மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இன்று இந்தியாவுக்கு இரண்டாம் இடம்... அதுமட்டுமல்ல, உலக அளவில் நம் நாட்டின் பொருளாதார நிலை 11-வது இடத்திலும், வாங்கும் சக்தியில் 4-வது இடத்திலும் இருக்கிறது. இதையெல்லாம் கேட்கும்போது நமக்குப் பெருமையாக இருக்கிறது அல்லவா?

ஆனால், வரலாற்றின் ஆரம்ப கட்டத்தில் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கையும் அதன் வலிமையையும் அறிந்தவர்களுக்கு இன்றைய நிலை அவ்வளவு சந்தோஷமளிப்பதாக இருக்காது. காரணம், அன்று உலகின் உச்சத்தில் இருந்தது நமது நாடு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேற்கத்திய நாடுகளுடன் இந்தியாவிற்கு வணிகத் தொடர்புகள் இருந்திருக்கின்றன. குறிப்பாக, தென்னிந்தியாவுக்கு தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனும், சீனா உள்ளிட்ட கீழை தேசங் களுடனும் ரோம், அரபு நாடுகள் உள்ளிட்ட மேலை நாடுகளுடனும் கடல் மார்க்கமாக வணிகத் தொடர்புகள் இருந்து வந்தன. மிளகு, கிராம்பு, கசகசா உள்ளிட்ட வாசனைப் பொருட்கள், மசாலாப் பொருட்கள், பட்டுத்துணிகள், விவசாய விளைபொருட்கள், முத்துக்கற்கள் போன்றவை இந்திய வணிகர்களால் விற்கப்பட்டன. இதற்கு ஈடாக பெருமளவில் தங்கம், வெள்ளி போன்றவற்றை ஈட்டினர். இந்தியாவில் செல்வம் குவிய ஆரம்பித்தது. கி.பி.1500-களுக்குப் பிறகு தங்கக் காசுகள், வெள்ளிக்காசுகள், செப்புக் காசுகள் பெருமளவில் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. 



1700-களில் உலக நாடுகளின் ஒட்டுமொத்த வருவாயில் இந்தியாவின் பங்கு 22.6% என்ற அளவில் இருந்தது. அன்று ஒட்டு மொத்த ஐரோப்பாவின் பங்கே 23.3% சதவிகிதம்தான். இதன் பிறகுதான் இந்தியாவிற்கு சனி பிடித்தது, வெள்ளைக்காரர்களின் வருகை என்கிற பெயரில். 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இந்தியாவின் வளம் சுரண்டப்பட்டு, சுதந்திரம் பெற்றபோது இந்தியாவின் பங்கு வெறும் 3.8% என்ற பரிதாப மான நிலைக்குச் சென்றது. 

ஆங்கிலேயர்களின் ஆட்சி இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறித்துப் போட்டது. விவசாயத்தை ஆதாரத் தொழிலாகக் கொண்டிருந்த இந்திய மக்களை மூச்சு முட்ட வைக்கும் வரிச்சுமைகள், அடக்குமுறைகள் போன்றவற்றால் நிலைகுலைய வைத்தனர். போதாக்குறைக்கு இயற்கைப் பேரிடர்கள் வேறு.  

ஆங்கிலேய ஆட்சி முடிவடைந்த போது, நசுக்கப்பட்ட விவசாயத் தொழில், சுத்தமாக வளர்ச்சி அடையாத தொழிற்துறை, வேகமாக வளர்ந்து வந்த மக்கள் தொகைப் பெருக்கம், மிக மிக சொற்பமான அளவிலேயே கல்வியறிவு பெற்றிருந்த மக்கள், படுபாதாளத்தில் இருந்த அடிப் படைக் கட்டுமான வளர்ச்சி என்று கிட்டத்தட்ட மரணப்படுக் கையில்தான் இந்தியா இருந்தது.

ஆனால், பிரதமர் நேருவின் முயற்சியால்  எஃகுத்துறை, தகவல்தொடர்பு, அடிப்படைக் கட்டுமானம், இன்ஷூரன்ஸ், எரிசக்தித் துறை உள்ளிட்ட தொழிற் துறைகள் மட்டுமல்லாது, விவசாயத் துறையிலும் தெளிவான திட்டத் துடன் முன்னேறத் தொடங்கியது.

பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி போன்ற நீண்ட காலத் திட்டங்களால் உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டியது. கட்டுமானத்துறைகள் பெரும் வளர்ச்சியடைந்து சாலை வசதிகள், மிகப் பெரும் அணைகள், மின் உற்பத்தி நிலையங்கள் எல்லாம் அமைக்கப்பட, ஒருங்கிணைந்த முன்னேற்றம் சாத்தியமானது.குறிப்பாக, 1990-க்குப் பிறகு இந்தியா அதிவேகத்தில் வளர ஆரம் பித்தது. வளைகுடாப் போரினால் 1990-களின் ஆரம்பத்தில் எகிறியி ருந்த எண்ணெய் விலையும் தடுமாற்றத்தில் இருந்த உலகப் பொருளா தாரச்சூழலும் இந்தியாவின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. திவாலாகும் நிலையில் இருந்த இந்தியாவை மீட்டெடுக்க அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் மற்றும் நிதியமைச்சர் மன்மோகன் சிங் இருவரும் சேர்ந்து துணிச்சலாக பொருளாதார தாராளமயமாக்கலை அரங்கேற்றினர். 

 அதற்கேற்ப உலகளவில் தகவல் தொழில்நுட்பம், சாஃப்ட்வேர், பி.பி.ஓ. துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்தியாவிற்குச் சாதகமாக அமைந்தன. 8 சதவிகித ஜி.டி.பி. வளர்ச்சியை அடைய முடியுமா என்பது 2004-ம் ஆண்டில்கூட சந்தேகமாக இருந்தது. ஆனால், 2008-லேயே இதை எட்டியது  இந்தியா. அடுத்து இரட்டை இலக்க ஜி.டி.பி. வளர்ச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது.  


முதலிடம் பெறுவது எப்போது? - தமிழகம்! 


ந்தியாவின் ஜி.டி.பி-யில் தமிழகத்தின் பங்கைத் தவிர்க்கவே முடியாது. தற்போது இந்தியாவிலேயே அதிக ஜி.டி.பி. இருக்கும் மாநிலங்களில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது நம் தமிழகம்.  2010-ம் ஆண்டு கணக்கின்படி மிகக் குறைந்த வித்தியாசத்தில் தமிழகத்தை முந்தியுள்ளது குஜராத். அதாவது, இந்த ஆண்டில் குஜராத்தின் ஜி.டி.பி. வளர்ச்சி 6.87%. தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியோ 6.86%. அடுத்து வரும் ஆண்டுகளில் தமிழகம், குஜராத்தைத் தாண்டிச் செல்லுமா என்பது பில்லியன் டாலர் கேள்வி என்றாலும் இது சாத்தியமான விஷயமே என்கி றார்கள் பலர்.


ஒரு மாநிலத்தில் தொழில் சிறந்து விளங்க அடிப்படையானது அரசின் ஆதரவு. தமிழகத்தில் அரசின் ஆதரவு இருந்தாலும் அரசு நடைமுறைகள் அதிகம் என்கிறார்கள் பன்னாட்டு ஐ.டி. நிறுவன உயரதிகாரிகள்.  ''நிலம் வாங்கி கம்பெனி கட்டுவதற்குள் இரண்டு வருடம் முடிந்துவிடுகிறது. காரணம் ஒவ் வொரு துறையும் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறது. இத்தனை பேரின் அனுமதி வாங்கி ஆரம்பிப் பதற்கே எங்களின் முழுசக்தியும் வீணாகிவிடுகிறது. தொழிற்துறை சம்பந்தப்பட்ட அத்தனை அதிகாரி களும் ஒரே இடத்தில் இருந்தால்தான் பல வேலைகளை விரைவாக முடிக்க முடியும்'' என்கிறார்கள் அவர்கள்.   


இதற்கடுத்து மின்சாரம். தமிழகத்தில் மின்சாரத்தின் நிலைமை அனைவரும் அறிந்ததே. கோவை மாவட்டத் தொழில் நிறுவனங்கள் இன்றும் போதிய அளவுக்கு மின்சாரம் கிடைக்காமல் தவிக்கின்றன. மின்சாரத்தோடு சாலை வசதிகளும்  மேம்பட்டால், தமிழகத்த்தைத் தேடி பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வர நிறையவே வாய்ப்புள்ளது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி, நம்  ஜி.டி.பி.யும் உயரும்.  

3 comments:

  1. அருமையான தொகுப்பு பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. Very descriptive, Thanks Sir & Shared it.

    ReplyDelete
  3. ஜி.டி.பி. பற்றி அறிந்துகொள்ள உதவியதற்கு நன்றி.

    ReplyDelete