ஒரு மாநில முதலமைச்சர் காரில் போகிறார். சாலையில் சென்று கொண்டிருக்கும் அவசர உதவி வண்டி ஒன்றின் மீது மோதுவது போல அவர் கார் நெருக்கமாகப் போகிறது. உடனே காவல் துறை அதிகாரி, முதல்வர் காரை நிறுத்தி அபராதச் சீட்டு தருகிறார். கோர்ட்டில் வந்து ஆஜராகி பணத்தைக் கட்டாவிட்டால், சம்மன் அனுப்பப்படும் என்று முதலமைச்சரை எச்சரிக்கிறார்.
முதலமைச்சருக்கு எரிச்சலாக இருக்கிறது. தம் கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசி, அந்தக் காவல் துறை அதிகாரி ஒரு இடியட் என்று திட்டுகிறார். கூட்டத்தைப் படம்பிடித்த ஒரு டி.வி.சேனல் இதை ஒளிபரப்பி விடுகிறது. முதலமைச்சருக்குப் பெரும் கண்டனங்கள் குவிகின்றன.
முதல்வர் உடனே காவல் அதிகாரியைச் சந்தித்து தாம் இடியட் என்று கூறியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறார். தாம் செய்தது ஒரு தவறான முன்னுதாரணம். இனி அப்படிச் செய்ய மாட்டேன் என்று சொல்கிறார். கோர்ட்டிலும் போய் அபராதத் தொகையைக் கட்டுகிறார்.
இதெல்லாம் சென்ற வாரம் நிஜ வாழ்க்கையில் நடந்தவை என்றால் நமக்கு நிச்சயம் பிரமிப்பாகவும் நம்ப முடியாமலும் தான் இருக்கும். ஆனால் அத்தனையும் நடந்தன. அமெரிக்காவில் ஒஹையோ மாநிலத்தின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் (அங்கே கவர்னர் என்று பெயர்) ஜான் காசிச், காவல் அதிகாரி ராப் பாரெட்டிடம் மன்னிப்புக் கேட்டிருக் கிறார். அபராதமாக 85 டாலர் கட்டியிருக்கிறார். இதுபோல ஒரு நிகழ்ச்சி எந்த நாளிலாவது நம் ஊரில் நடக்கும் வாய்ப்பு இருக்கிறதா என்று யோசிக்கும்போது ஏக்கமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.
சாதாரண, நடுத்தர வகுப்பினர் மட்டத்திலேயே இருக்கும் அதிகார மனோநிலையின் பிரம்மாண்ட வடிவங்களாகவே நம் தலைவர்களும் இருக்கிறார்கள். அதிகாரம் செலுத்தினால்தான் நாம் அவர்களை மதிக்கிறோம். பெரும் பதவியில் இருந்துகொண்டு அதிகாரம் செய்யாமல், எளிமையாகவும் இயல்பாகவும் ஒருவர் நடந்துகொண்டால், அவரை இளிச்சவாயனாகக் கருதுகிறோம். நம்முடைய இந்த மனநிலைகளுக்கேற்ற தலைவர்கள்தான் நமக்குக் கிட்டுவார்கள். அதனால்தான் மோசமான ஒரு தலைவருக்குப் பதிலாக நமக்குக் கிடைக்கக்கூடிய மாற்றுத் தலைவர்களும் அதே போல மோசமான தரத்திலேயே இருக்கிறார்கள்.
இந்த அரசியல் எந்த அளவுக்கு நம்மை சீரழித்துவிட்டதென்றால், அண்மையில் ஒரு லயன்ஸ் சங்க மாநாடு நடந்த போது அதன் பிரமுகர்கள் படம் போட்ட ஃப்ளெக்ஸ் போர்டு கள் ஸ்டாலினுக்கும் திருமா வளவனுக்கும் தெரு நெடுக வைக்கப்படுவது போல் வைக்கப்பட்டன. அரங்கத்தில் வாழ்த்தப்பட்ட பிரமுகருக்கு மலர்க் கிரீடம் சூட்டப்பட்டது. ரத்த தானம், கண் தானம் போன்ற சமூக சேவைகளில் ஈடுபடும் அமைப்புகளும் இதே சீரழிவுக் கலாசாரத்தைப் பின்பற்றக்கூடியவையாக மாற்றப்படுவதுதான் நம் முடைய மோசமான அரசியல்; நம் மீது செலுத்தும் பலமான பாதிப்பின் அடையாளம்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கொழும்பு விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்ட செய்தி மட்டுமே நம் கவனத்துக்கு வருகிறது. அவரை இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதித்திருக்க வேண்டும். அவர் அதில் பங்கேற்பதால் யாருக்கும் எந்தத் தீமையும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. தடுத்தது ராஜ பக்ஷே அரசின் முட்டாள் தனம் .
அதே சமயம் கொழும்புவுக்கு விமானம் ஏறும் முன்னால் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சி நம் கவனத்துக்குக் கொண்டு வரப்படுவதில்லை. திருமாவளவன் தன் பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை தொடர்பாக இலங்கை புறப்படுவதற்குச் சில மணி நேரங்கள் முன்னர் சாஸ்திரி பவன் பாஸ் போர்ட் அலுவலகத்துக்கு அவர் ஆதரவாளர்கள் புடைசூழ ஏராளமான கார்களில் சென்று இறங்கினார். அலுவலக நேரம் முடிந்து விட்டது. ஆனால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இப்படிப்பட்ட சலுகை ஒரு சாதாரண மனிதனுக்கு ஒரு போதும் எந்த அரசு அலுவலகத்திலும் கிடைக்கவே கிடைக்காது. பத்துப் பதினைந்து கார்களில் கொடி பறக்க ஆதரவாளர்களின் முழக்கங்கள் ஒலிக்க வரும் செல்வாக்கு இருந்தால் மட்டுமே இத்தகைய விதி மீறல்கள் சாத்தியம். ஒரு திருமா அல்ல, ஒவ்வொரு அரசியல் பிரமுகரும் அப்படிப்பட்டவர்களாகவே இங்கே வார்க்கப்பட்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவிலோ, வேறு மேலை ஜனநாயக நாட்டிலோ இதெல்லாம் நடக்கவே நடக்காது. நடக்கவிடமாட்டார்கள். சின்ன அத்துமீறல்களை ஜான் காசிச் போன்றவர்கள் செய்தால் கூட உடனடியாக எதிர்ப்புக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. மக்கள் சக்திக்கும் நியாயத்துக்கும் அடிபணியவேண்டியிருக்கிறது.
இங்கே படித்த வர்க்கம் எல்லா முறைகேடுகளுக்கும் உடந்தையாகத் துணை போகிறது. மயிரைப் பிளக்கும் வாதங்கள் மூலம் ஊழல்களை நியாயப்படுத்த இங்கே அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். பள்ளிக் கூட நிர்வாகத்தின் ஆணவம் பற்றியோ, பாஸ்போர்ட் அலுவலகச் சம்பவம் பற்றியோ படித்த வர்க்கம் முணுமுணுப்பது கூட கிடையாது. வாய்ப்புக் கிடைத்தால் நீரா ராடியாவாக ஆவதற்குத் தயாரான மனநிலையிலேயே மெத்த படித்த பலரும் இருக்கிறார்கள். மாட்டினால் ராசாக்கள் மட்டும்தானே மாட்டுவார்கள்.
நமக்குத் தலைமையேற்க காமராஜ்களும் கக்கன்களும் கிடைக்கமாட்டார்கள். காவலன் விஜய்தான் நம் தகுதிக்கேற்றத் தலைமை.
ஓ பக்கங்கள்
பகல்ல பக்கம் பார்த்திட்டு பேசாம இருங்க. இரவில எதுவுமே பேசாம இருங்க. மொத்தத்தில வித விதமா அலை பேசி நிறுவனங்கள் வந்தாச்சு. ஆனா என்ன பேசினாலும் பாதுகாப்புஇல்லை
ReplyDelete