Search This Blog

Saturday, February 26, 2011

கடாஃபி- லிபியா

லிபியா நாட்டு சர்வாதிகாரி மம்மர் கடாஃபியின் மகுடம் சரிந்து​ கொண்டு இருக்கிறது. அவரது கழுத்தை, புரட்சி ரீங்காரம் நெருக்​கும் காலம் இன்னும் ஒரு சில நாட்களே இருக்கக்கூடும்! மன்னர் இண்டிரிசின் ஆட்சியைத் தனது அசைக்க முடியாத தைரியத்தாலும், படை பலத்தாலும், பேச்சுத் திறமையாலும் வீழ்த்தி, 42 ஆண்டுகளுக்கு முன்னால் வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் ஆட்சியைப் பிடித்தவர், மம்மர் கடாஃபி.

மன்னரை வீழ்த்திய கடாஃபிக்கு மக்களின் கஷ்டங்கள் தெரியும். சாதாரண மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது புரியும். அடிப்படைத் தேவைகளைக் கொடுத்து, சுதந்திரக் காற்றை சுவாசிக்கவைப்பார்’ என்ற நம்பிக்கையில்தான் முழுக்கவே அந்த நாட்​டில் இருந்த இஸ்லாமிய மக்கள் இவரை ஆதரித்தனர். 

ஆனால், மன்னர் ஆட்சிக் காலத்தில் அடக்குமுறையும் ஆணவமும் மட்டுமே இருந்தது என்றால், இவரது ஆட்சியில் மத மயக்கமும் கலந்தது. மக்களின் மத உணர்வுகளைத் தூண்டிவிட்டதால், கடாஃபி என்ன சொன்னாலும், எதைச் செய்தாலும் சகித்துக்கொண்டார்கள் லிபியர்கள். 

இன்னொரு பக்கம், உலகில் தலையெடுக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவும் உதவிகளும் பகிரங்கமாகவே செய்தார் கடாஃபி. அமெரிக்காவை எதிர்த்த ஓர் இயக்கத்துக்கு ஆதரவு காட்ட... அன்றைய அதிபர் ரொனால்டு ரீகன், கடாஃபி மீது கடுப்பாகி 'நாய்’ என்று பட்டம் சூட்டினார். பொதுவாகவே அமெரிக்காவை எதிர்க்கும் நாட்டின் அதிபர்கள் அளவுக்கு அதிகமாகக் கொச்சைப்படுத்தப்படுவார்கள் என்பது வேறு விஷயம்!

ஆயுதம், அதிகாரத்தைப் பெற்றுத் தரும். ஆனால், அதை மட்டுமே வைத்து ஆட்சி நடத்திவிட முடியாது என்பது கடாஃபிக்குப் புரியவில்லை. நாட்டின் தேசிய வருமானத்தில் 80 சதவிகிதத்துக்கும் மேல் ராணுவத்துக்கே செலவிட்டு, லிபியர்களை ரிங் மாஸ்டராக நின்று ஆட்டுவிக்க நினைத்தார். வெறுப்பை மனதுக்குள் அடக்கிக்கொண்டு வாழ்ந்தனர் லிபிய மக்கள். பெரிதாக கிளர்ச்சிகள் எதிலும் ஈடுபடவில்லை.

2009-ம் ஆண்டு, அவர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து 40 ஆண்டுகள் முடிந்திருந்தது. 'மிக நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் தலைவர்’ என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டு கொண்டாட்டங்கள் நடத்தினார். ரஷிய அதிபர் வந்தார். இத்தாலிய பிரதமர் வந்தார். ஆப்பிரிக்கத் தலைவர்கள் எல்லோருமே லிபியத் தலைநகர் திரிபோலியில் கூடினார்கள். கடாஃபியை மதவாதி, பயங்கரவாதி என்று பட்டம் கொடுத்த நாட்டின் பிரதிநிதிகளும் வந்து வாழ்த்தினார்கள். இவர்களோடு சேர்ந்து லிபிய மக்களும்!


ஆனால், இவர்களின் மௌனத்தை அண்மையில் அடித்து உடைத்​தது எகிப்து. சர்வாதிகாரி முபாரக் ஆட்சியை 18 நாள் போராட்டத்தில் விரட்டிய எகிப்தின் எஃகு நிகழ்வுகள், லிபிய மக்களின் ரத்தத்தையும் சூடேற்ற... கொண்டாட்​டமும், குதூகலமும் இருந்த திரிப்போலி வீதிகளில் இளைஞர்கள் கூட ஆரம்பித்தார்கள். 'அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குங்கள்’ என்ற பொதுவான முழக்கம் முதலில் வந்தது. 'பொருளாதார சீர்திருத்தம் வேண்டும்’ என்று இன்னோர் இளைஞன் சொன்னான். பிப்ரவரி 20-ம் நாள் நிலவரம் இந்தளவே! 

இது மற்ற ஏரியாக்களுக்கும் பரவிவிடக் கூடாது என்று நினைத்த கடாஃபி, பத்திரிகைகளைத் தடை செய்தார். இணையதளங்களை முடக்கினார். மின்சாரத்தைத் தடை செய்தார். இதை அடுத்துதான், 'பத்திரிகைகளின் குரலை ஒடுக்காதே!’, 'உலகின் மோசமான அடக்குமுறையை செய்​யாதே’, 'எங்கே திரும்பினாலும் ஊழல்’, 'பெண் பித்தனுக்கு அதிகாரம் ஒரு கேடா’, 'குடும்ப ஆட்சி நடத்தாதே’ - என்ற ஐந்து முழக்கங்கள் உரக்கக் கிளம்பின. நாலா பக்கமும் பொதுமக்கள் திரள ஆரம்பித்து... தெருவை, நகரத்தை, தலைநகரை முற்றுகையிட்டார்கள்.


முதன் முறையாக கடாஃபியின் கண்களில் பய ரேகை!  'எகிப்து முபாரக்கைப்போல கடாஃபியும் நாட்டைவிட்டு ஓடிவிட்டார்’ என்று ஒரு தொலைக்காட்சியில் செய்தி ஓட... கடாஃபிக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது. 'நானா கோழை, நானா கோழை?’ என்று ராணுவ அதிகாரிகளைப் பார்த்து கத்த ஆரம்பித்தார். ''நான் திரிபோலியில் இல்லை என்றும், வெனிசூலாவுக்குத் தப்பி​விட்டேன் என்றும் சில நாய்கள் சொல்வதை நம்பாதீர்கள். இதோ திரிபோலியில்தான் இருக்கிறேன்...'' என்று டி.வி-யில் பேசியபடி மாளிகையைவிட்டு வெளியே வந்தார். சாலையில் இறங்கினார். ''இதோ பாருங்கள்... நான் நிற்பது திரிபோலிதானே!'' என்றார் கெத்தாக. இந்த காமெடியை மக்கள் ரசிக்கவில்லை. எதிர்ப்பு முழக்கங்கள் மேலும் வலுத்தன. இதில் இன்னும் எரிச்சலானார் கடாஃபி.

இருந்தாலும், 'அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இரண்டு மடங்கு சம்பளம்’ என்று அறிவித்தார். 'நாடு எப்படி நாசமானாலும் பரவாயில்லை. தங்களுக்கு சமபளம் கூட்டினால் ஆட்சியை ஆதரிப்பார்கள்’ என்று கடாஃபி போட்ட கணக்கும் தப்பாய்ப் போனது. ரோடு​களில் கூட்டம் மேலும் அதிகரித்தபடியே இருந்தது.

'போராடும் எவனைப் பார்த்தாலும் சுடுங்கள்’ என்பது அடுத்த உத்தரவு. தெருவில் நேருக்கு நேர் வந்து போராட்டக்காரர்களை எதிர்க்கொள்ளப் பயந்த ராணுவம், ஹெலிகாப்டரில் பறந்து குண்டுகள் வீசியது. லிபிய வீதிகளில் திரும்பிய பக்கமெல்லாம் பிணக் குவியல்கள்! 

''இப்போதாவது போராட்டத்தைக் கைவிடுங்கள். இல்லை​என்றால் தெருவில் உடல்களைத்தான் பொறுக்கவேண்டி இருக்கும்!'' என்று கொக்கரித்தார் கடாஃபி. அவரது மகன் சயீஃப் அல் இஸ்லாம் கடாஃபி அதை செயலாக்கினான். ''கடந்த நான்கைந்து நாட்களில் மட்டும் 2,000 பேர் கொல்லப்​பட்டு இருக்கலாம்'' என்று லிபியாவில் இருந்து வரும் தகவல்​கள் கூறுகின்றன. ''சர்வதேச மனித உரிமைப்படி, மக்கள் கருத்துகளைச் சுதந்திரமாகத் தெரிவிப்பதற்கும், பிரச்னைகள் தொடர்பாகப் போராடுவதற்கும் உரிமை உள்ளது. எனவே, போராட்டக்காரர்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்​டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து தர வேண்டும். அமைதியாகப் போராட்டம் நடத்துபவர்கள் மீது அரசாங்கம் தாக்குதல் நடத்தினால், விளைவுகள் கடுமையாக இருக்கும்!'' என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை செய்துள்ளது.  

'வட அமெரிக்க இஸ்லாமிய சமூகம்’ என்கிற அமைப்பு, அமெரிக்காவில் இருக்கிறது. அவர்கள் அதிபர் ஒபா​மாவுக்கு ஓர் அறிக்கையைக் கொடுத்திருக்கிறார்கள். ''லிபிய மக்களைக் காப்பாற்றும் காரியத்தை அமெரிக்கா உடனடியாகச் செய்ய வேண்டும். 1988-ல் ஈராக்கிலும், 1994-ம் ஆண்டு ருவாண்டாவிலும் 1996-ல் செர்பியாவிலும் நடந்ததைப் போன்ற பேரழிவு இன்று லிபியாவில் நடக்கப்போகிறது!'' என்று எச்சரிக்கை செய்துள்ளது. ஆனால், அதைப் பற்றி கடாஃபிக்கு கவலை இல்லை. பக்கத்து நாடுகளில் இருந்து கூலிப் படைகளை வரவழைத்து ஒடுக்குமுறை அட்டகாசங்களைத் தொடர்கிறார். ''நீங்கள் விரட்டி அடிப்பதற்கு நான் ஒன்றும் இந்த நாட்டின் அதிபர் அல்ல. நானே ஒரு போராளி. கூடாரத்தில் இருந்து கோட்டைக்கு வந்தவன். செத்தாலும் இந்த மண்ணில்தான் சாவேன்...'' என்று இல்லாத பொல்லாத வசனமெல்லாம் பேசிக்கொண்டே இருக்கிறார்.  

''எகிப்தில் முபாரக்கை விரட்டியதைப்போல, எங்களை விரட்டிவிடலாம் என்று நினைக்​காதீர்கள். லிபியா ஒன்றும் எகிப்து அல்ல. கடாஃபியை எதிர்க்கும் கடைசி ஆணும் கடைசிப் பெண்ணும் இருக்கும் வரை, எங்களிடம் கடைசிக் குண்டு இருக்கும் வரை போராடியே தீருவோம்!'' - இது கடாஃபியின் மகன் விடுக்கும் அறைகூவல்!  

பதிலுக்கு, ''எங்களின் கடைசி மூச்சு இருக்கும்வரை கடாஃபியை எதிர்த்துக்​கொண்டே இருப்போம்...'' என்கிறார்கள் போராட்டக்​காரர்கள்.  கடாஃபியின் கையிருப்​பில் ஆயுதங்கள் கரைந்துகொண்டே போகிறது. ஆனால், அவரை எதிர்க்கும் மக்களின் மூச்சுக் காற்றின் வெப்பம் நித்தம் கூடிக்கொண்டே இருக்கிறது!   


No comments:

Post a Comment