Search This Blog

Tuesday, February 22, 2011

கருணாநிதிக்கு டாட்டா சொல்வோம்! அடுத்து யார்? - ஞாநி


கருணாநிதி முழுப்பூசணிக்காயை எப்படியாவது சோற்றில் மறைப்பதில் உறுதியாக இருக்கிறார். கடைசியில் இது பூசணிக்காயே இல்லை, சோற்றில் வைத்த ஊறுகாயில் இருந்த எலுமிச்சம் பழம்தான் என்று கூட அவர் சொல்லக்கூடும்.


கருணாநிதிக்கு ரத்தன் டாட்டா நவம்பர் 13, 2007 தேதியிட்டு, தம் கைப்பட கடிதம் எழுதி அனுப்பிய விஷயத்தை எடுத்துக் கொள்வோம். டெலிகாம் துறை ராசா வசம் சென்ற பிறகு ராசா ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எடுத்த நடவடிக்கைகள் பற்றியது அந்தக் கடிதம். முறைகேடுகள் நடப்பதாக ராசாவை விமர்சித்துச் செய்திகள் வடபுலத்தில் வெளிவரத் தொடங்கியிருந்தன. ராசாவின் செயல்களால் டாட்டா நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பயனடைவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.


அப்போது டாட்டா, கருணாநிதிக்கு அந்தரங்கமான ரகசியக் கடிதம் என்று தலைப்பிட்டு எழுதுகிறார். ராசாவைப் பாராட்டியும், டெலிகாம் துறையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராசா எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பாராட்டியும், இதுவே தேசிய அளவில் தி.மு.க.வின் ஒற்றைத் தனிப் பெரும் சாதனையாக அமையும் (என்ன தீர்க்கதரிசனம்!) என்று குறிப்பிட்டும் டாட்டா எழுதியிருக்கிறார்.  


அப்படி ஒரு கடிதம் தமக்கு வரவே இல்லை என்று இப்போது கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கடிதம் எழுதப்பட்ட செய்தி வெளியாகிப் பல மாதங்கள் ஆகின்றன. ஆனால் கருணாநிதி அப்போதெல்லாம் இதை மறுக்காமல் இப்போதுதான் மறுக்கிறார்.  தமக்கு அப்படி ஒரு கடிதம் வரவில்லை என்றும் அந்தக் கடிதத்தை யாரும் கொண்டு வந்து தம்மைச் சந்திக்கவும் இல்லை என்றும் கருணாநிதி சொல்கிறார். இதில்தான் முடிச்சு இருக்கிறது. ரத்தன் டாட்டாவின் கடிதத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது; இந்தக் கடிதத்தை நீரா ராடியா மூலமாக உங்களுக்கு நேரடியாக அனுப்புகிறேன் என்கிறார் டாட்டா.


கடிதம் வரவில்லை; கடிதத்துடன் தம்மை யாரும் சந்திக்கவில்லை என்று கருணாநிதி மறுப்பு அறிக்கை இப்போது வெளியிட்ட மறு நாளே, டாட்டா நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அது கடிதம் எழுதப்பட்டு அனுப்பப்பட்டதை மறுக்கவே இல்லை! உறுதி செய்திருக்கிறது.எந்தச் சூழ்நிலையில் ரத்தன் டாட்டா அந்தக் கடிதத்தை எழுதினார் என்று மட்டுமே டாட்டா நிறுவனமான டாட்டா டெலிசர்வீசஸ் விளக்கியிருக்கிறது. டெலிகாம் துறையில் செல்வாக்குடைய சில சுயநல சக்திகள் ஆதிக்கம் செலுத்தியதை முறியடிக்கும் விதத்தில் நல்ல கொள்கை முடிவுகளை ராசா எடுத்ததாகவும் அதைப் பாராட்டியே டாட்டா கடிதம் எழுதினார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. 


டாட்டா தாம் எழுதிய கடிதத்தை நீரா ராடியா மூலமாக அனுப்புவதாகக் அக்கடிதத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார். கடிதத்தின் ஒளிநகலை, பல வடஇந்திய சேனல்களும் பத்திரிகைகளும் வெளியிட்டுவிட்டன. தமக்கு வரவில்லை என்று இத்தனை வருடமாகச் சொல்லாத கருணாநிதி இப்போதுதான் அதை மறுக்கிறார் என்றால் அதற்கு என்ன காரணம்? நேரடியாக ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதை அக்கடிதத்தின் அடிப்படையில் உறுதிசெய்ய வாய்ப்புண்டு. நீரா ராடியா டெலிஃபோன் உரையாடல் டேப்புகளில் ஏற்கெனவே கனி மொழி, ராசாத்தி அம்மாள் தொடர்புகள் வெளிப்பட்டிருக்கின்றன. 



ராசாவுக்கான டாட்டாவின் பாராட்டுக் கடிதத்தை கருணாநிதியிடம் நீரா ராடியா சேர்ப்பிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. அந்தக் கடிதம் ராசாவுக்கு எதிராக தயாநிதி மாறன் தரப்பினர் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் எழுதப்பட்டது. எனவே கடிதம் நீரா ராடியாவால் நேரடியாகக் கருணாநிதியிடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது ஏற்கெனவே நீரா ராடியாவுக்குப் பழக்கமான கனிமொழி அல்லது ராசாத்தி அம்மாள் இருவரில் ஒருவர் மூலமாக அனுப்பியிருக்க வேண்டும். அல்லது ராசாவிடமே நீரா ராடியா கொடுத்து அனுப்பியிருக்கலாம். அதை கருணாநிதியிடம் சேர்ப்பித்து, தமக்கும் கழகத்துக்கும் நல்ல பெயரைச் சம்பாதிக்கும் அவசியம் ராசாவுக்கு இருந்தது.


ஆனால் கருணாநிதி கடிதம் வரவில்லை என்று மறுக்கிறார்.  


எப்படியும் சி.பி.ஐ விசாரணயில் நீரா ராடியா, கலைஞர்- டாட்டா கடிதத்தைப் பற்றிச் சொல்லியிருப்பார் என்று எதிர்பார்க்கலாம். விசாரணைக்கு இப்போது டாட்டா டெலிசர்வீஸ சின் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். அந்த நிறுவனத்துக்கு ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் லாபம் ஏற்பட்டதாகவும் அதனால் அரசுக்குப் பல கோடிகள் இழப்பு என்றும் சி.பி.ஐ. இப்போது உச்சநீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறது. கலைஞர் டி.வி.க்கு ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் லாபமடைந்த இன்னொரு கம்பெனியின் வழியே பணம் கைமாறியதையும் அது உச்சநீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறது. 



இத்தனைக்குப் பிறகும் எதுவுமே நடக்கவில்லை என்பது போல மறுப்பு அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கும் கருணாநிதி, எந்த தைரியத்தில் எல்லாவற்றையும் மறுக்கிறார்? காங்கிரசுடன் இருக்கும் கூட்டு, தம்மையும் தம் குடும்பத்தையும் கடைசியில் எப்படியும் காப்பாற்றி விடும்; உச்சநீதிமன்றம் இறுதியில் எந்தக் குற்றச்சாட்டும் போதுமான சாட்சியங்களுடன் நிரூபிக்கப்படவில்லை, இருந்த சாட்சிகளும் பிறழ்சாட்சிகளாகி விட்டனர் என்று வழக்கை முடித்துவிடும் என்றெல்லாம் அவர் நம்புகிறாரா?


இந்தச் சூழல் மாறவேண்டுமானால், அதை மக்கள்தான் மாற்ற வேண்டும். அதற்கு மக்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தேர்தல்தான். வரவிருக்கும் தமிழகத் தேர்தலில் தி.மு.க தோற்கடிக்கப்பட்டால்தான், கருணாநிதி வழிகாட்டுதலில் நடந்து கொண்டிருக்கும் பிரம்மாண்டமான ஊழல் கலாசாரத்துக்கு ஒரு இடைவேளையாவது விட முடியும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் தி.மு.க.வுக்குப் பதிலாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி வரும்போது ஏற்படும் குழப்பம்தான் இன்னமும் தி.மு.க.வைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. தி.மு.க. தோற்கடிக்கப் பட்டால் அ.தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. 



மூன்றாவதாக இங்கே வேறு எவரும் இல்லை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் ஸ்பெக்ட்ரம் போல இன்னொரு ஊழல் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தி.மு.க ஆட்சியில் இப்போது ஊராட்சி அலுவலகம் முதல் தலைமைச் செயலகம் வரை வட்டம் தொடங்கி மண்டலங்கள் வரை நடந்துகொண்டிருக்கும் எண்ணற்ற ஊழல்கள், முறைகேடுகள் எல்லாம், எழு பதுகளில் கருணாநிதி ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு, அடுத்தடுத்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சிகளில் வளர்த்தெடுக்கப்பட்டு, இன்று தமிழர்களின் வாழ்க்கை முறையாக ஆக்கப்பட்டிருப்பவை.  


ஒவ்வொரு சாதாரண தமிழரையும் ஊழல் பேர்வழியாக மாற்றுவதுதான் கரு ணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிகள் தொடர்ந்து செய்துவந்திருக்கும் சமூக விரோதப் பண்பாட்டுச் சீரழிவுச் செயல். இதில் யார் யாரை விட விஞ்சியவர் என்ற பட்டிமன்றங்கள் வேண்டுமானால் நடத்தி ஆறுதலடையலாம்.  அடுத்து வரும் எந்த ஆட்சியிலும் இந்தச் சீரழிவுகள் முற்றிலும் இல்லாமல் போய்விடும் வாய்ப்பே இல்லை. படிப்படியாகக் குறைக்கப்படக்கூடிய ஓர் ஆட்சியை அடுத்து உருவாக்க முடிந்தாலே மக்களுக்கு வெற்றிதான். 


நன்றி - கல்கி 

2 comments:

  1. நல்ல பதிவு.
    மக்களின் மனதை எதிரொலிக்கிறது.

    ReplyDelete
  2. மிகச்சரியான ஒரு சிறு ஆய்வு கட்டுரை எனலாம். நாட்டின் நலன் மக்களின் நலன் என்று மட்டுமே யோசிப்பவர்கள் அனைவரும் இதனை ஏற்றுகொள்வார்கள்.

    ReplyDelete