Search This Blog

Wednesday, March 02, 2011

மார்ச் 2 சிவராத்திரி


இறைவன் எளிமையானவன். அவன், பக்தனிடம் விரும்புவதும் எளிமையை தான். இதை வலியுறுத்தும் விரதம் தான் சிவராத்திரி. சிவனை வணங்க பெரிதாக எதுவும் தேவையில்லை. ஒரு கைப்பிடி வில்வ இலை, கொஞ்சம் தண்ணீர்... இதைக் கொண்டு தனக்கு செய்யும் பூஜையை, அவன் அன்புடன் ஏற்றுக் கொள்கிறான். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியை, சிவராத்திரியாக அனுஷ்டிக்கிறோம். இந்த நாளில், எல்லா சிவன் கோவில்களும் இரவு முழுவதும் திறந்திருக்கும். நான்கு ஜாம பூஜை நடக்கும்.

இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுவதற்குரிய காரணத்தைக் கேளுங்கள்..

ராமபிரான் காட்டுக்குச் சென்ற போது, கங்கை நதியைக் கடக்க உதவியவன் குகன் எனும் படகோட்டி. இவன், முற்பிறவியில் வேடனாகப் பிறந்தான். ஒருநாள், பகல் முழுக்க வேட்டையாடியும் மிருகங்கள் ஏதும் சிக்கவில்லை. குடும்பத்தார் பட்டினியுடன் கிடப்பர், இரவானாலும் பரவாயில்லை, வேட்டையாடி, ஏதாவது ஒரு மிருகத்தைப் பிடித்துச் செல்லலாம் என, ஒரு மரத்தின் மீதேறி காத்திருந்தான். அவனுக்கு கடும் பசி; சாப்பிட ஏதுமில்லை. தன் இடுப்பில் கட்டியிருந்த குடுவையில் இருந்து, அவ்வப்போது, தண்ணீர் குடித்துக் கொண்டான். அப்போது, தண்ணீர் கீழே சிந்தியது. அவன் அமர்ந்திருந்தது வில்வ மரம். அவ்வப்போது வரும் மிருகங்களை, அவன் குறி வைக்கும் போது, மரம் அசைந்து, வில்வ இலைகள் கீழே விழுந்தன. இப்படியே விடிய விடிய விழித்திருந்தான். பொழுது விடிந்ததும் கீழே பார்த்தான். மரத்தடியில் சிவலிங்கம் இருந்தது. அதன் மேல், வில்வ இலைகளும், இவன் சிந்திய தண்ணீரும் சிதறி இருந்தது. அவன், அதைக் கண்டு கொள்ளாமல், சென்று விட்டான். அவன் தன்னையறியாமல் வழிபட்ட நாள், மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி. இதன் காரணமாக, அந்த வேடனுக்கு, சிவன் காட்சியளித்தார். அவரைக் கண்டதும், அவனுக்கு ஞானம் பிறந்தது.  




பாவத் தொழிலான வேட்டையாடுவதை விட்டு விடுவதாகக் கூறினான். விஷ்ணு, ராமாவதாரம் எடுக்கும் போது, அவருக்கு சேவை செய்யும் பாக்கியத்தை கொடுப்பதாக வரமளித்தார் சிவன். அதன்படி, அவன் குகனாகப் பிறந்து, நதியைக் கடக்க உதவினான். "குகனொடு ஐவரானோம்...' என்று அவனைத் தன் சகோதரனாக ஏற்றுக் கொண்டார் ராமபிரான். அறியாமல் கடைபிடித்த எளிய விரதத்துக்கே, குகனுக்கு இவ்வளவு பெரிய பெருமை கிடைத்தது என்றால், மிகுந்த பக்தியுடன் இந்த விரதத்தை அனுஷ்டித்தால், கிடைக்கும் பலனுக்கு அளவே இருக்காது. 

இந்த விரதம் மிகவும் எளிமையானது. சிவராத்திரியன்று காலையில் நீராடியதும், சுத்தமான ஆடை அணிய வேண்டும். சிவாலயத்துக்குச் சென்று, "இன்று முதல் எந்த உயிருக்கும் தீங்கு செய்ய மாட்டேன். என் மூச்சுக்காற்று கூட, "சிவ சிவ' என்று தான் சொல்லும். சிவபெருமானின் திருவிளையாடல்களை வாழ்நாள் முழுவதும் கேட்பேன். அவரைப் பாடிய அருளாளர்களின் தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களை தினமும் படிப்பேன்...' என, உறுதியெடுக்க வேண்டும். பிறகு வீட்டிற்கு வந்து நீர் மட்டும் அருந்தி, சிவபுராணங்களைப் படிக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாதவர்கள் பழம், எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். 

மாலையில், சிவாலயத்துக்கு அபிஷேகப் பொருட்கள் எடுத்துச் செல்ல வேண்டும். முதல் ஜாம பூஜை முடிந்ததும் அரிசி, இரண்டாம், மூன்றாம் ஜாம பூஜை முடிந்ததும் கோதுமை, நான்காம் ஜாம பூஜை முடிந்ததும் அரிசி, உளுந்து, பாசிப்பயறு, தினை ஆகியவற்றை அர்ச்சகருக்கு தானமாக வழங்க வேண்டும். முதல் ஜாம பூஜைக்கு தாமரை, செவ்வரளி, வெள்ளை அரளி பூக்களும், இரண்டாம் ஜாம பூஜைக்கு வில்வமும், மூன்றாம் ஜாம பூஜைக்கு அருகம்புல்லும், நான்காம் ஜாம பூஜைக்கு வாசனை மலர்களும் வாங்கிக் கொடுக்கலாம். பலா, மாதுளை உள்ளிட்ட பழங்களும் படைக்கலாம். 

ஜாம பூஜைகள் முடிந்ததும், வீட்டுக்கு வந்து விழித்திருந்து, காலையில் நீராடி, மீண்டும் கோவிலுக்குச் சென்று, விரதத்தை முடிப்பதற்கான அனுமதிப் பெற வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை என்பதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த எளிய விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு, வாழும் காலத்தில் செல்வ வளமும், பின்னர் பிறப்பற்ற நிலையும் கிடைக்கும்.
தினமலர்

No comments:

Post a Comment