Search This Blog

Tuesday, March 01, 2011

பட்ஜெட் - ஒரு பார்வை

பத்திரிகைகளும் ஊடகங்களும் ஒருநாள் முன்னதாகவே நடத்தி முடித்துவிட்ட ஊக-பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளிப்படையான புள்ளிவிவரங்களுடன் தாக்கல் செய்தார் என்று சொல்லும் அளவுக்குத்தான் இருக்கிறது அவருடைய 2011-12-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்.எல்லாரும் கணித்தபடியே விவசாயச் சலுகைகளும், வருமான வரி வரம்பு உயர்வும் அறிவிக்கப்பட்டாலும்கூட, அதனால் பயனடைவோர் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். ஏதாவது செய்ய வேண்டுமே என்ற கட்டாயத்துக்காகச் செய்திருப்பதாகவே தோன்றுகிறது. 

வருமான வரிக்கான வரம்பை ரூ.1.6 லட்சத்திலிருந்து ரூ.1.8 லட்சத்துக்கு உயர்த்தி இருக்கிறார்கள். இந்த ரூ. 20,000-ஐ உயர்த்தியதால், ஒவ்வொருவருக்கும் ரூ. 2,000 மிச்சப்படும் என்கிறார் பிரணாப்ஜி. ஆனால், இந்த வரம்புக்குள் வருவோர் அனைவருமே சம்பளக்காரர்கள் என்பதும், ஆறாவது ஊதியக் குழு அமலுக்கு வந்தபிறகு ஒவ்வோர் அரசு ஊழியரும் குறைந்தபட்சம் ரூ. 3,000-க்கு சம்பள உயர்வு பெற்றிருக்கிறார்கள் என்பதையும் நினைத்துப் பார்க்கும்போது, இந்த ரூ. 20,000 கணக்கு நமக்குப் புரியாமல் இல்லை.


இந்த பட்ஜெட் அறிவிப்பில் ஒரு நல்ல செய்தி உண்டு. வருமான வரித்துறையின் மூத்த குடிமகன் வயது 65 என்றிருந்ததை 60 ஆகக் குறைத்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5 விழுக்காடு வட்டி அதிகம் என்று சொல்லிவிட்டு, வருமான வரித் துறையைப் பொறுத்தவரை 65 வயதுவரை வரி செலுத்த வேண்டும் என்று சொல்லி, அவர்களது வைப்புத் தொகைக்குக் கிடைத்த சிறுவட்டியிலும் வங்கிகள் வருமானவரி பிடித்தம் செய்த வேதனையான நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

 பயறு உற்பத்திக்காக ரூ.300 கோடி செலவிட்டு, 60,000 ஹெக்டேரில் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்துதல், சமையல் எண்ணெய் பற்றாக்குறையைத் தவிர்க்க ரூ.300 கோடியில் 60,000 ஹெக்டேரில் எண்ணெய்ப் பனை சாகுபடி, கம்பு சோளம் உற்பத்திக்காக ரூ.300 கோடி, 15 இடங்களில் மாபெரும் உணவுப் பூங்கா ஏற்படுத்துதல் என்கிற நிறைய அறிவிப்புகள் இருந்தாலும், ஏழை விவசாயிக்கு நேரடியாகப் போய்ச் சேரும் பலன் என்ன என்பது தெளிவாக இல்லை.


விவசாயத்துக்கான வங்கிக் கடனுதவி அளவு ரூ. 3,75,000 கோடியிலிருந்து ரூ. 4,75,000 கோடியாக உயர்த்தியிருக்கிறார்கள். இதில் விவசாயிக்கு 4 விழுக்காடு வட்டியில் கடன் என்று சொல்லப்படுகிறது. இதனை நுட்பமாகப் பார்த்தால், இந்தப் பலனை மிகச் சில விவசாயிகள் மட்டுமே பெற்றிருப்பார்கள், இனி பெறுவார்கள். ஏனென்றால், நிதியமைச்சர் பிரணாப்ஜி கூற்றுப்படி விவசாயக் கடன் 7 விழுக்காடு வட்டி 2011-12-ம் ஆண்டுக்கும் தொடரும். இதில் ஒழுங்காக, தவணை தவறாமல் கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிக்கு 2 விழுக்காடு வட்டி தள்ளுபடி சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்டது. அது நிகழாண்டில் 3 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது, அவ்வளவே! 

அதாவது, ஒரு விவசாயி கடன் தவணைகளைத் தவறாமல் செலுத்தினால் மட்டுமே அவருக்கு 3 விழுக்காடு வட்டி தள்ளுபடியாகும். அதாவது அவர் 4 விழுக்காடு வட்டியில் கடன் பெற்ற விவசாயியாக முகம் மலர்வார். இதெல்லாம் நடக்கிற காரியமா? எத்தனை விவசாயிகளால் இவ்வாறு மாதம்தோறும் தவணையைச் செலுத்த முடியும்? 

 இந்தத் திட்டம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது என்கிறார் பிரணாப்ஜி. விவசாயிகளின் நகைக்கடனுக்குக் குறைந்த வட்டி என்பதால், அந்தத் திட்டத்தின் கீழ் நகைகளை அடமானம் வைப்போர் நிறையப்பேர் இருப்பதைப்போலவே, வேறு காரியங்களுக்காக விவசாயக் கடன்வாங்கிக்கொண்டு, தவணை தவறாமல் செலுத்தி பலன் பெறப்போவதிலும் விவசாயிகள் சிலராகவும், விவசாயிகள் அல்லாதோர் பலராகவும் இருக்கப்போகிறார்கள் என்பதை பிரணாப்ஜி அறிவாரா? வட்டிச் சலுகை, சாகுபடி செய்யும் விவசாயிக்கு மட்டுமே கிடைக்க வழிவகை செய்தால் என்ன?

சேவை வரி மூலம் வரும் நிதியாண்டில் ரூ. 4,000 கோடி வருவாய் ஈட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது. விமானப்பயணிகள் உள்நாடு என்றால் ரூ. 50-ம் வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தால் ரூ. 250-ம் சேவை வரி செலுத்த வேண்டும். மது விநியோகிக்க உரிமம் பெற்ற ஓட்டல்கள் 10 விழுக்காடு சேவை வரி செலுத்த வேண்டும்.வர்த்தக இலச்சினை பெற்ற ஆயத்த ஆடை நிறுவனங்கள் 10 விழுக்காடு சேவை வரி செலுத்த வேண்டும், இதெல்லாம்கூடப் பரவாயில்லை, 25 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் 5 விழுக்காடு சேவை வரி செலுத்த வேண்டும் என்கிறது பட்ஜெட். தனியார் மருத்துவமனைகளில் ஏற்கெனவே கிண்டியெடுக்கிற "சேவை' போதென்று, பிரணாப்ஜியும் சேர்ந்து கொண்டிருக்கிறார். இனி நோயாளிகள் பாடு பரிதாபம்தான்.

"செபி'யில் பதிவுபெற்ற பரஸ்பர நிதித் திட்டங்களில் 40 மில்லியன் டாலர் வரை (ஏறக்குறைய ரூ. 2 லட்சம் கோடி) நேரடி அந்நிய முதலீட்டாளர் முதலீடு (ஃபாரின் இன்வெஸ்டார்ஸ் இன்வெஸ்ட்மென்ட்) அனுமதிக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. 2010 அக்டோபர் மாதத்தில் மட்டுமே 6.11 பில்லியன் டாலர் முதலீடு வந்துள்ளது என்றும், நிகழாண்டில் அக்டோபர் வரை 24.8 பில்லியன் டாலர் முதலீடு எப்.ஐ.ஐ. மூலமாக வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இப்போது இதன் அளவை உயர்த்தி இருக்கிறார்கள்.அந்நிய நேரடி முதலீட்டை (எப்.டி.ஐ.) ஊக்குவிப்பதைப்போல, அந்நிய முதலீட்டாளர் முதலீட்டை (எப்.ஐ.ஐ.) ஊக்குவிப்பது ஆபத்து. அந்நிய நேரடி முதலீட்டைப்போல அல்லாமல், அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு என்பது பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீடு என்பதால், எந்தநேரமும் அந்த முதலீடு திரும்பப் பெறப்பட்டு நிதி நெருக்கடியும், பங்குச்சந்தை வீழ்ச்சியும் ஏற்படக்கூடும் என்பதுதான் இதனால் ஏற்பட இருக்கும் பேராபத்து.

உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க, ரூ. 30,000 கோடிக்கான (இந்திய ரயில்வே நிறுவனம் ரூ. 10,000 கோடி, நெடுஞ்சாலை ஆணையம் ரூ.10,000 கோடி, ஹட்கோ ரூ.5,000 கோடி, துறைமுகங்கள் ரூ. 5,000 கோடி) தரும் கடன்பத்திரங்களை அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்த பிரணாப்ஜி, இதற்காக அந்நிய முதலீட்டைக் கொண்டு வருவதற்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதன்மூலம், வெளியே போன கறுப்புப் பணம் உள்ளே வருவதற்கான வாசல்கள் இந்த பட்ஜெட் மூலம் அகலமாக்கப்பட்டுள்ளதோ என்றும் சந்தேகம் எழுகிறது.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒரு பொருளாதார நிபுணரின் சாதுர்யத்தைவிட ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் சாமர்த்தியம்தான் அதிகம் தெரிகிறது. உணவுப்பற்றாக்குறை, விலைவாசி போன்ற மக்கள் பிரச்னைகளை உரக்க எழுப்பி, அவர்களது உணர்வுகளைப் பிரதிபலித்துவிட்டு, அதற்கு விடை தேடாமலே ஒரு பட்ஜெட்டை சாமர்த்தியமாகச் சமர்ப்பித்துத் தப்பித்துக் கொண்டிருக்கும் பிரணாப் முகர்ஜியின் அரசியல் சாதுர்யத்துக்கும் புத்திசாலித்தனத்துக்கும் ஒரு சபாஷ்!          


தினமணி     

No comments:

Post a Comment