தமிழக சட்டசபைக்கான முதல் பொதுத் தேர்தல் நடந்தது 1920-ம் ஆண்டு! தமிழக முதலமைச்சர்களை 'பிரீமியர்’ என்றும் 'பிரதம மந்திரி’ என்றும் அப்போதெல்லாம் அழைத்தனர். அன்று முதல் இன்று வரை தமிழக முதலமைச்சர்களாக இருந்தவர்கள் யார் யார்? இதோ அந்தக் குறிப்பு:
'அகரம்’ சுப்பராயலு ரெட்டியார் (17.12.1920 முதல் ஆகஸ்ட் 1921 வரை)
அந்நாளில் தமிழகத்தில் 'நீதிக் கட்சி’ என்ற 'ஜஸ்டிஸ் பார்ட்டியைச் சேர்ந்த கடலூரைச் சேர்ந்தவரும் பிரபல வழக்கறிஞருமான 'திவான் பகதூர்’ அகரம் சுப்பராயலு ரெட்டியார், 1920-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி தமிழக சட்டசபைக்கு முதன்முதலாக முதலமைச்சராகப் பதவியேற்றார். உடல்நிலை காரணமாக, 1921-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் தமது 66-ம் வயதில் காலமானார். இவர் ஏழு மாதங்களே முதலமைச்சராகப் பதவியில் இருந்தார்!
பனகல் ராஜா (17.12.1921 முதல் 3.12.1926 வரை)
'பனகல் ராஜா’வின் முழுப் பெயர் 'ராஜாராமராயநிங்கர்’, உடல்நிலை காரணமாகத் தமது பதவியை இடையிலேயே ராஜினாமா செய்துவிட்டுச் சென்றார்!
டாக்டர் பி.சுப்பராயன் (4.12.1926 முதல் 27.10.1930 வரை)
'நீதிக் கட்சி’யின் ஆதரவில் இருந்த டாக்டர் பி.சுப்பராயன், 1926-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 'சுயராஜ்யக் கட்சி’யினரால் (காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு) கவரப்பட்டு, 'பிரீமியரானார்’. 1929- பிப்ரவரி 18-ல் சென்னைக்கு விஜயம் செய்த 'சைமன் கமிஷன் குழு’வை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்தனர். அந்தப் புறக்கணிப்பில் பங்குகொள்ளாமல், 'சைமன் குழு’வுக்கு நீதிக் கட்சியினர் அளித்த வரவேற்பில் சுப்பராயன் கலந்துகொண்டார். பின்பு, சுயராஜ்யக் கட்சியின் ஆதரவில் இருந்து விலகி, மீண்டும் நீதிக் கட்சியின் ஆதரவைப் பெற்று, தொடர்ந்து முதலமைச்சராகப் பதவி வகித்து, 1930-ம் ஆண்டு அக்டோபர் 27-ல் பதவியில் இருந்து விலகினார்!
'பொலினி’ முனுசாமி நாயுடு (27.10.1930 முதல் 4.11.1932 வரை)
'பொலினி’ முனுசாமி நாயுடு 'நீதிக் கட்சி’யின் பிரமுகராக இருப்பினும், 'காங்கிரஸ் கட்சி’ மீது அவருக்கு அந்தரங்க அபிமானம் இருந்தது. ஜஸ்டிஸ் கட்சி முன்னேற்றம் அடைய வேண்டுமானால், அந்தக் கட்சியின் ஆலோசனைகளில் பிராமணர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று, இவர் கொண்டுவந்த தீர்மானத்தினால், கட்சிக்குள் அபிப்ராய பேதங்கள் வலுத்தன. இதனால் 'பொலினி’ முனுசாமி நாயுடு அதன் பிறகும் முதலமைச்சராகப் பதவி வகிப்பது இழுக்கு என்று கருதி ராஜினாமா செய்தார்!
பொப்பிலி ராஜா (5.11.1932 முதல் 4.4.1936, 25.8.1936 முதல் 31.3.1937 வரை)
'விஜயநகர ராஜ’ குடும்பத்தைச் சேர்ந்த பொப்பிலி ராஜாவின் முழுப் பெயர் ஸ்வேத செலபதி ராம கிருஷ்ண ரங்கராவ். நீதிக் கட்சியைச் சேர்ந்த இவர், சுமார் மூன்றரை ஆண்டுகள் ஆட்சி நடத்திய பிறகு, திடீரென உடல்நலமின்றிப் போய்விட்டது. 1936-ம் ஆண்டு சிகிச்சைக்காக 'ரஜா’வில் சென்றார். சிகிச்சைகள் முடிந்து 1936 ஆகஸ்ட் 25-ல் மீண்டும் பிரீமியராகப் பதவிக்கு வந்தவர், ஏழு மாதங்கள் கழித்து அவராகவே விலகிவிட்டார்!
பி.டி.இராஜன் (4.4.1936 முதல் 24.8.1936 வரை)
'பொன்னம்பல தியாகராஜன்’ என்பது முழுப் பெயர். பொப்பிலி ராஜா 'ரஜா’வில் சென்ற காலத்தில், இவர் பிரீமியராகப் பதவியில் இருந்தார்!
கே.வி.ரெட்டி (1.4.1937 முதல் 15.7.1937 வரை)
1937-ம் ஆண்டு மார்ச்சில் நடந்த சட்டசபைக்கான பொதுத் தேர்தலில் சுயராஜ்யக் கட்சி அதிக இடங்களைப் பெற்று வெற்றி அடைந்தது. 'சுயராஜ்யக் கட்சி’யினர் சட்டசபையில் மந்திரி சபை அமைக்கும் வரையில், நீதிக் கட்சியினர் இடைக் கால மந்திரி சபையில் கே.வி.ரெட்டி என்ற கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு மூன்றரை மாதங்கள் பிரீமியர் பதவியில் இருந்தார்!
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என்கிற ராஜாஜி (15.7.1937 முதல் 29.10.1939 வரை)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஆலோசனைப்படி, சென்னை சட்டசபைக்கு பிரீமியராக சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என்ற முழுப் பெயருடைய ராஜாஜி 1937-ம் ஆண்டு பதவிப் பிரமாணம் ஏற்றார். சுமார் இரண்டு ஆண்டுகள் வரை பிரீமியராக ஆட்சி நடத்தினார். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் காரணமாக, பிரிட்டிஷாருக்கும் மகாத்மா காந்திக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு முற்றியது. காந்திஜி, 'எல்லா மாகாண சட்டசபைகளிலும் காங்கிரஸ் கட்சியில் பதவியில் இருப்பவர்கள் மற்றும் டெல்லி சட்டசபையில் உள்ளவர்கள் அனைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு எதிராகத் தனி நபர் சத்யாகிரகத்தில் ஈடுபட வேண்டும்’ என அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, ராஜாஜி தமது பதவியை ராஜினாமா செய்தார்!
இரண்டாவது உலக மகா யுத்தம்... பிரிட்டிஷார் நாடெங்கும் 'அவசர நிலை’ பிறப்பித்து இருந்தனர். 1939 நவம்பர் முதல் 1946 ஏப்ரல் வரை நாடெங்கும் எந்தத் தேர்தல்களும் நடைபெறவில்லை. இந்தக் காலத்தில் தமிழகத்தில் பிரீமியர் யாரும் இல்லை!
டி.பிரகாசம் (30.4.1946 முதல் 23.3.1947 வரை)
அடுத்து 1946-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் பிரபலமானவருமான டி.பிரகாசம் சட்டசபைக்கு பிரீமியராகப் பதவி ஏற்றார்.
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே டி.பிரகாசம் மந்திரி சபை மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வந்து, சட்டசபையில் வாக்கெடுப்பில் அது நிறைவேற்றப்பட்டது. டி.பிரகாசம் தலைமையிலான அமைச்சரவை கவிழ்ந்தது!
ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் (23.3.1947 முதல் 6.4.1949 வரை)
டி.பிரகாசம் மந்திரிசபை கலைக்கப்பட்ட அதே தினம் பிற்பகல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் சட்டசபைக்குப் புதிய முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நம் பாரதம் சுதந்திரம் அடைந்த திருநாளை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் கொண்டாடியபோது, இவர் தலைமையில் 'தமிழக அமைச்சரவை’ சிறப்புடன் அதைக் கொண்டாடியது!
பி.எஸ்.குமாரசாமிராஜா (7.4.1949 முதல் 7.4.1952 வரை)
ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜா முதலமைச்சராக இருந்த சமயம்தான் பாரதம் 'குடியரசு’ நாடாகியது. 'இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும்’ அமலுக்கு வந்தது. அந்தச் சட்டத்தின்படி 1952-ம் ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலாகப் பொதுத் தேர்தல் நடக்க இருக்கவே, பி.எஸ்.குமாரசாமி ராஜா பதவியில் இருந்து விலகினார்!
சி.ராஜகோபாலாச்சாரியார் (எ) ராஜாஜி (12.4.1952 முதல் 13.4.1954 வரை)
ராஜாஜி இரண்டாம் முறையாக முதலமைச்சராகப் பதவி ஏற்றார். 1953-ம் ஆண்டு இறுதியில் ராஜாஜி அவர்கள் கொண்டுவந்த 'புதிய கல்வித் திட்டத்தை’ச் சட்டசபையில் பலர் எதிர்த்தனர். ''இந்தத் திட்டம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், நான் இங்கு முதலமைச்சராகப் பதவியில் இருப்பதும் நியாயம் இல்லை!'' எனக் கூறி ராஜாஜி தம் பதவியை ராஜினாமா செய்தார்!
கு.காமராஜர் (13.4.1954 முதல் 12.4.1957, 13.4.1957 முதல் 14.3.1962, 15.3.1962 முதல் 1.10.1963 வரை)
மூதறிஞர் 'ராஜாஜி’ அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதுமே, காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிகுந்த, 'பெருந்தலைவர்’ என எல்லோராலும் அழைக்கப்பட்ட கு.காமராஜர், அடுத்த முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 9 ஆண்டுகள் முதலமைச்சராகப் பதவி வகித்து வந்த அவர், 1962-ம் ஆண்டு மூன்றாம் முறையாகவும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை மேலும் பலப்படுத்தும் வேலையில் இறங்குவதற்காகப் பாரதப் பிரதமரின் விருப்பப்படி 1963-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார்!
எம்.பக்தவத்சலம் (2.10.1963 முதல் 5.3.1967 வரை)
காமராஜர் விலகியதுமே, அதே அமைச்சரவையில் இருந்து எம்.பக்தவத்சலம் பதவியேற்றார். இவரது ஆட்சியில் அரசியல் இடைஞ்சல்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்தன. 1967-ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்நாட்டில் சட்டசபைக்கான பொதுத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான - வலுவான கூட்டணி யும் ஏற்பட்டது.அந்தச் சமயம், வலுவான அமைப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் குதித்து, அதில் அறுதிப் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. இதனால், 1967-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதியோடு தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்!
சி.என்.அண்ணாதுரை (6.3.1967 முதல் 3.2.1969 வரை)
அண்ணா என்று அழைக்கப்பட்ட அண்ணாதுரை இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே முதல்வராக இருந்தார். 1968-ல் அவரது உடல்நலன் பாதிப்படைந்தது. அமெரிக்க நாட்டில் சிகிச்சை பெற்று, சென்னை திரும்பிய அவர், 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ல் காலமானார்!
இவர்களைத் தொடர்ந்து தமிழகத்தின் நம்பர் ஒன் நாற்காலியில் அமர்ந்த, இந்தத் தலைமுறைக்கு நன்கு அறிமுகமானவர்கள்...
மு.கருணாநிதி
10.2.1969 முதல் 5.1.1971 வரை
15.3.1971 முதல் 31.1.1976 வரை,
27.1.1989 முதல் 30.1.1991 வரை
13.5.1996 முதல் 14.5.2001 வரை
13.5.2006 முதல் இப்போது வரை
எம்.ஜி.ராமச்சந்திரன்
30.3.1977 முதல் 17.12.1980 வரை
9.6.1980 முதல் 15.11.1984 வரை,
10.2.1985 முதல் 24.12.1987 வரை.
ஜானகி ராமச்சந்திரன்
7.1.1988 முதல் 30.1.1988 வரை
ஜெ.ஜெயலலிதா
24.6.1991 முதல் 13.5.1996 வரை
14.5.2001 முதல் 21.9.2001 வரை
2.3.2002 முதல் 13.5.2006 வரை
ஓ.பன்னீர்செல்வம்
21.9.2001 முதல் 1.3.2002 வரை
விகடன்
No comments:
Post a Comment