Search This Blog

Sunday, March 20, 2011

நாங்க ரெடி... நீங்க ரெடியா? - ஓ பக்கங்கள்

“உங்கள் வோட்டு எங்களுக்கு. எங்கள் வோட்டு உங்களுக்கு. ஆனால், உங்கள் கொள்கை எங்களுக்கும் எங்கள் கொள்கை உங்களுக்கும் என்பதல்ல கூட்டணி” என்ற திருமாவளவனின் தாரக மந்திரத்தின் அடிப்படையில், எல்லாக் கட்சிகளும் ஒருவரோடொருவர் கெஞ்சினால் மிஞ்சுவது, மிஞ்சினால் கெஞ்சுவது என்ற தந்திரத்தைப் பயன்படுத்தி இரு பெரும் கூட்டணிகளை ஏற்படுத்திவிட்டார்கள்.

உண்மையில் இவர்கள் யாரிடமும் எந்த வோட்டும் இல்லை. எல்லா வோட்டுகளும் நம்மிடம்தான் இருக்கின்றன. நம்மை இவர்கள் வெவ்வேறு அடிப்படையில் தரம் பிரித்து, நாம் அவர்களுடைய கொத்தடிமைகள் என்ற நம்பிக்கையில், நம்மை வோட்டு வங்கிகளாக உருவகித்து அவர்களுக்குள் பங்கு போட்டு, பேரங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 


தேர்தலுக்கு முன்னால் ஒவ்வொரு வாக்காளரும் நினைக்க வேண்டிய அடிப்படை அம்சம் - என் வோட்டு என்னுடையது. இதை நான் என் விருப்பப்படிதான் போடுவேன். இன்னின்ன நெறிகளின் அடிப்படையில்தான் போடுவேன். ஆட்சியாளரிடம்/ மக்கள் பிரதிநிதியிடம் நேர்மை, சுயநலமின்மை, வெளிப்படைத் தன்மை, திறமை ஆகிய நான்கு தன்மைகளும் இருக்க வேண்டும். ஒன்றிருந்து இன்னொன்று இல்லாவிட்டாலும் சிக்கல்தான். எனவே நான்கும் எந்த அளவு உள்ளன என்பதைப் பரிசீலித்துதான் வாக்களிப்பேன் என்று நாம் முதலில் உறுதி கொள்ள வேண்டும். 


எனக்குத் தேர்தல் விதிகளை நிர்ணயிக்கும் அதிகாரம் இருந்தால் மிகக் குறைந்தபட்சமாக உடனடியாகச் சிலவற்றைக் கட்டாயமாக்குவேன். 1. அறுபது வயதுக்கு மேல் யாரும் தேர்தலில் நிற்கக் கூடாது. 2. இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் மறுபடியும் நிற்கக்கூடாது. 3. அவர்களுடைய குடும்பத்திலிருந்தும் உடனடி உறவுகளும் நிற்கக் கூடாது. இது போல இன்னும் சில உண்டென்றாலும் இவற்றையெல்லாம் ஏற்படுத்தும் அதிகாரம் எனக்கு இல்லாததால், உடனடியாக நாம் செய்யக் கூடிய சிலவற்றைப் பார்ப்போம்.  

முந்தைய 2006-ஆம் வருட சட்ட மன்றத் தேர்தல் தொடர்பான ஆய்வறிக்கையை அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. அதில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான செய்திகளில் ஒன்று நம் எம்.எல்.ஏ.க்களின் குற்றப் பின்னணி பற்றியதாகும். மொத்தம் 234 எம்.எல்.ஏ.க்களில் 77 பேர் மீது மொத்தமாக 176 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த 77ல் 39 பேர் தி.மு.க. 15 பேர் பா.ம.க. 9 பேர் காங்கிரஸ். ஒரு விடுதலைச் சிறுத்தை. அ.இ.அ.தி.மு.க. வினர் எட்டு பேர். ம.தி.முக - 2. கம்யூனிஸ்ட் - 2. மார்க்சிஸ்ட்- 1.  மொத்த 77 பேரிலும் மிகக் கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் 25 பேர். அதில் தி.மு.க - 16. பா.ம.க. - 4. காங்கிரஸ் - 3. அ.இ.அ.தி.மு.க - 1 . கம்யூனிஸ்ட் - 1. 

ஆள் கடத்தல், அடைத்து வைத்தல், மிரட்டல், பொய் வாக்குமூலம் அளித்தல், கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி, கொடூர ஆயுதங்களால் தாக்குதல், ராஜ துரோகம் போன்ற இ.பி.கோ. பிரிவுகளில் 51 வழக்குகளில் 35 வழக்குகள் தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீது உள்ளன. பா.ம. க.வினர் மீது 9, காங்கிரசார் மீது 5, அ.இ. அ.தி.மு.க.வினர் மீது ஒன்று, கம்யூனிஸ்ட் டுகள் மீது 2 வழக்குகள் உள்ளன.


கொடும் குற்றச்சாட்டுகளுக்கான கிரிமி னல் வழக்குகள் உள்ள 25 எம்.எல்.ஏ.க்கள் யார்? யார்? தி.மு.க: 1. வில்லிவாக்கம் ரங்கநாதன். 2. கண்டமங்கலம் புஷ்பராஜ் 3. திருவொற்றியூர் கே.பி.பி.சாமி 4. குறிஞ் சிப்பாடி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். 5. மொரப்பூர் முல்லைவேந்தன். 6. பெண்ண கரம் பெரியண்ணன். 7. ராதாபுரம் அப்பாவு. 8. விழுப்புரம் பொன்முடி. 9. ஆண்டிமடம் சிவசங்கர். 10. சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் . 11. புரசைவாக்கம் வி.எஸ்.பாபு. 12. சத்தியமங்கலம் ஏ. தர்மலிங்கம். 13. எழும்பூர் பரிதி இளம் வழுதி. 14. (மறைந்த) மதுரை மத்திய தொகுதி பழனிவேல்ராஜன். 15. ஆயிரம் விளக்கு மு.க ஸ்டாலின். 16. சேப்பாக்கம் மு.கருணாநிதி. பா.ம.க: 17. மேட்டூர் ஜி.கே மணி. 18.முகையூர் கலியவரதன். 19. பண்ருட்டி வேல்முருகன். 20. பவானி ராமநாதன். காங்கிரஸ்: 21. போளூர் விஜயகுமார். 22. தொட்டியம் ராஜசேகரன். 23. அரியலூர் அமரமூர்த்தி. அ.இ.அ.தி.மு.க. : 24. பர்கூர் தம்பிதுரை. கம்யூனிஸ்ட்: 25. சிவகங்கை குணசேகரன்.


ஒவ்வொரு சொத்துக்குப் பின்னாலும் ஒரு குற்றம் இருக்கிறது என்று ஒரு பழ மொழி உண்டு. குற்றத்துக்குப் பின்னால் சொத்து இருப்பது இயல்புதானே. தமிழ் நாட்டின் 234 எம்.எல்.ஏ.க்களில் அவர்களே அறிவித்த சொத்துக் கணக்கின்படி 57 பேர் கோடீஸ்வரர்கள். அதில் 31 பேர் தி.மு.க., 12 பேர் காங்கிரஸ், 9 பேர் அ.இ.அ.தி.மு.க., இருவர் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., தே.மு.தி.க.வில் தலா ஒருவர். சொத்துக் கணக்கு காட்டியபோது பான் கார்டு எண்ணைக் குறிப்பிடாதவர்கள் 114 எம்.எல்.ஏ.க்கள்.

இட ஒதுக்கீடு இருந்தாலொழிய பெண்கள் வரும் வாய்ப்பே கிடையாது என்பதற்கு ஆதாரம்: சென்ற தமிழக சட்ட மன்றத் தேர்தலில் நிறுத்திய மொத்த வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்கள் வெறும் ஆறு சதவிகிதம்தான். ஜெயித்து வந்த எம்.எல்.ஏ.க்களில் பெண்கள் ஒன்பது சதவிகிதம் !இந்த விவரங்களையெல்லாம் நாம் இப்போது நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்னவென்றால், இந்த முறை அரசியல் கட்சிகள் எத்தனை கிரிமினல் குற்றவாளிகளை, எத்தனை கோடீஸ்வரர்களை, எத்தனை பெண்களை நிறுத்துகின்றன என்று ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளத்தான்.

 யார் ஆட்சிக்கு நிச்சயம் வரக்கூடாது என்ற அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கக்கூடிய மோசமான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். குறைந்தபட்சம் வேட்பாளர்கள், கட்சிகள் எல்லோரும் வாக்காளர்களுக்கு எப்போதும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதையாவது இந்தத் தேர்தல் சமயத்தில் நாம் நிலைநிறுத்த வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களையும், ஒரே மேடைக்கு வந்து, பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் கூறச் சொல்லவேண்டும். கட்சி சார்பற்ற சமூக அமைப்புகள் இதற்கு ஏற்பாடு செய்யலாம். நிகழ்ச்சிக்கு வர மறுக்கும் வேட்பாளரின் பெயர் எழுதிய காலி நாற்காலியை அரங்கில் வைக்கலாம். 



முதலில் ஒவ்வொரு வேட்பாளரும் தன்னைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்துவிட்டு, தமக்கும் தம் கட்சிக்கும் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லவேண்டும். அதன்பின் பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். கேள்விகள் கறாராகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியை உள்ளூர் கல்லூரி, பள்ளி அரங்குகளை ஏற்பாடு செய்து நடத்தலாம். லோக்கல் கேபிள் டி.வி.யுடன் பேசி, நேரடி ஒளிபரப்பும் செய்யலாம்.  இன்னும் சொல்லப் போனால் இந்த நிகழ்ச்சிகளைத் தேர்தல் ஆணையமே ஏற்பாடு செய்யலாம். குறைந்தபட்சம், ஏற்பாடு செய்யும் அமைப்புக்கு ஒத்துழைக்கும்படி வேட்பாளர்களை அறிவுறுத்தலாம். 

நேருக்கு நேர் மக்களைச் சந்திக்க வருமாறு எல்லா வேட்பாளர்களையும் அழைக்கிறேன். நாடெங்கும் கிராமசபை கூட்டங்களைச் சுதந்திர தினத்தன்று நடத்துவது போல, முடியுமானால் எல்லா ஊர்களிலும் வருகிற ஏப்ரல் 1 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 10 மணி வரை இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும்படி ஆர்வலர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்பதற்காக அல்ல. அந்த நாளை நான் எப்போதும் விழிப்புணர்வு தினமாகவே கொண்டாடி வருகிறேன். ஏனென்றால் அன்றைய தினம் காலையிலிருந்தே நம்மை யாரும் ஏமாற்றி விடக்கூடாது என்று விழிப்போடு இருக்கிறோம் அல்லவா. அதே விழிப்புணர்வுடன் வேட்பாளர் - வாக்காளர் சந்திப்பை நடத்த முயற்சிப்போம்.
நன்றி : ஞானி

1 comment:

  1. நடைமுறைக்கு சாத்தியமாகுமா?

    ReplyDelete