Search This Blog

Monday, March 21, 2011

ஜப்பான்


ஜப்பான்: ஒரு நல்ல குடிமக்களின் தேசம்..!!

ஒரு நெருக்கடியான சூழ்நிலைக்கு மனிதன் தள்ளப்படும் போது முதலில் அவனது நேர்மை காணாமல் போய்விடும்.. அனால் ஜப்பானின் மக்கள்   ஒரு விதிவிலக்கு...இயற்கை சீற்றங்களால் தற்போது ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் அவலங்கள் அனைவரும் அறிந்ததே..அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகலாம்..ஆனால் இப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் ஜப்பானில் எந்த ஒரு சூரையாடலோ, கொள்ளையோ நடக்கவில்லை என்பது தான் மிகவும் பாராட்டுக்குரியது. மாறாக அனைத்து சூப்பர் மார்க்கெட்டிலும் பொருட்களின் விலையைக் குறைத்து விற்கின்றனர்..vending machine உரிமையாளர்கள் இலவசமாக குடிபானங்களை வினியோகிக்கின்றனர். அனைவரது மனதிலும் இருக்கும் ஒரு கொள்கை "people work together to survive”.

ஆயிரக்கணக்கான உயிர்சேதம், குடியிருக்க வீடு இல்லை, சரியான உணவு கிடையாது,குடிக்க தண்ணீர் இல்லை, சரியான மருத்துவ வசதி இல்லை, நகரங்கள் முற்றிலுமாக சிதைந்து போய் விட்டன, அணு உலை வெடித்து கதிரியக்க ஆபத்து...இத்தனை துயரத்திலும் அவர்களது நம்பிக்கையும், நேர்மையும் பாதிக்கப்படவில்லை..மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்றனர். 

அமெரிக்காவில் நடந்த ஒரு கருத்துக் கணிப்பில் பெரும்பாலானோர் காத்ரீனா சூறாவளி துயரத்தின் போது நடந்த கசப்பான சம்பவங்களை நினைவுகூர்கின்றனர். பலர் தமது சொந்த நலனுக்காக கடைகளை சூரையாடியதையும், கைக்கு கிடைத்த அனைத்தும் தம்முடையதாக ஆக்கிக் கொண்ட நிகழ்வுகளும் மிகவும் வேதனைக்குரியதாக தெரிவிக்கின்றனர். இவ்வளவு துயரத்திலும் ஜப்பான் மக்கள் அவர்களது தேசத்தின் பெருமையை நிலைநாட்டுவதாக பாராட்டுகின்றனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பான் மிகவும் மோசமான ஒரு நிலைமையைச் சந்தித்திருக்கிறது. இனி இயல்பு நிலை திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆனாலும் அது ஒரு நல்ல மாற்றமாக அமையும் என்பது துளி அளவு சந்தேகம் இல்லை. எந்த ஒரு நல்ல இயற்கை வளங்களும் இல்லாத ஜப்பான் ஒரு மிகப்பெரிய சக்தியாக வளர்ந்தது அந்த நாடு மக்களின் அயராத உழைப்பால் என்பதை யாரும் மறுக்க இயலாது. ஜப்பானியர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. நூறில் 99 சதவீத இந்தியர்கள் நம் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி கவலை கொள்வதில்லை, தமது வாழ்க்கையைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொள்கிறோம். ஆனால் ஜப்பானியர்கள் நாட்டிற்கு எது நல்லதோ அதை மட்டுமே செய்கிறார்கள். 

பீனிக்ஸ் பறவை சாம்பலில் இருந்து உயிர் பெற்று மறுபடியும் வரும் என்பது கற்பனைக் கதையாகக் கூட இருக்கலாம். எவ்வளவு துயரம் வந்து வீழ்ந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்கும் ஜப்பான் ஒரு வாழும் பீனிக்ஸ் பறவை..!!

1 comment: