நம் நாட்டின் நிலப்பரப்பு உலகப்பரப்பில் 2 விழுக்காடு மட்டுமே. ஆனால், மக்கள்தொகையோ உலக மக்கள்தொகையில் 16 விழுக்காடு. அதுதான் நம்மை எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்னை.இந்த நிலையில் நம் நாட்டில் ஓடும் நதிகளின் நீர் அனைத்தையும் நாம் பயன்படுத்தி, ஓர் அங்குல நிலம்கூட தரிசாகக் கிடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உலகில் உள்ள நீரில் 97 விழுக்காடு கடலில் உப்புத் தண்ணீராக இருக்கிறது. மீதமுள்ள 3 விழுக்காட்டை நூறாக்கினால் அதில் 77 விழுக்காடு பனியாக உறைந்து கிடக்கிறது. உலக மலைகளிலும் தென்துருவ, வடதுருவங்களிலும் பனிப்பாறைகளாக இருக்கும். இவற்றுள் அடைபட்டுக்கிடக்கும் தண்ணீர் இன்று உலகிலுள்ள ஆறுகளனைத்தும் 700 ஆண்டுகள் கொண்டு செல்லும் தண்ணீருக்குச் சமமாகும். ஆனால், பயிர் செய்யவோ உயிர்காக்கவோ பயனில்லாமல் இப்பனிப்படலங்கள் அமைந்துள்ளன.
22 விழுக்காடு நிலத்தடி நீராகப் பூமியிலிருக்கிறது. ஆக எஞ்சியிருப்பது ஒரு விழுக்காடுதான். இந்த ஒரு விழுக்காடுதான் ஆறுகளில், ஏரிகளில், குளங்களில் நீராகப் பயன்படுத்தத்தக்கதாக இருக்கிறது.எனவே, நீர் அரிதினும் அரிய பொருளாகிவிட்டது. நம்நாட்டில் பெய்யும் அளவு மழைதான் அமெரிக்காவிலும் பெய்கிறது. ஆனால், அவர்கள் நாம் சேமிப்பதைவிட ஆறுமடங்கு அதிகமாகச் சேமித்து வைக்கிறார்கள்.
நம் நாட்டிலேயே வற்றாத ஜீவ நதிகள் இருக்கின்றன. மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் தரும் நதிகளும் இருக்கின்றன. ஒருபுறத்திலே வெள்ளப்பெருக்கால் சேதமேற்படுகிறது. மறுபுறத்தில் வெள்ளமில்லாமல் பயிர்கள் கருகி, பஞ்சமும் பசியும் ஏற்படுகின்றன.இவற்றுக்கு நிரந்தரத் தீர்வு நம்நாட்டில் ஓடும் கங்கை, பிரம்மபுத்திரா நதிகள் தொடங்கி, தெற்கே ஓடும் வைகை, தாமிரபரணி வரையும் அதற்கும் தெற்கே ஓடும் பழையாறு வரையும் இணைப்பதுதான்!
இந்தியாவில் 50 மைல்களுக்கிடையே ஏதேனும் ஒரு நதி ஓடுகிறது. அவற்றைச் சீரமைத்து ஒன்றோடொன்று இணைப்பது எளிது. சிலர் விந்தியமலை குறுக்கே நிற்கிறதே என்கிறார்கள். தொழில்நுட்ப வல்லுநர்கள் விந்தியத்துக்கு மேல் நீரை ஏற்றுவதற்கு எவ்வளவு மின்சக்தி தேவையோ அதே அளவு சக்தியையோ அதைவிட அதிகமான சக்தியையோ அது மறுபக்கம் அருவியாய்க் கொட்டும்போது நீர் மின் திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்கின்றனர்.
வேறு சில நிபுணர்கள் விந்தியத்தை நெருங்காமலே கூட இணைப்புத்திட்டக் கால்வாயை வெட்டிக் கொள்ள முடியும் என்று கூறுகின்றனர்.தேசிய நீர் வழிப்பாதை அமைந்துவிட்டால் பல்லாயிரம் கோடிக்கணக்கில் எண்ணெய்க்கு அந்நியச் செலாவணியை அதிகமாகச் செலவு செய்ய வேண்டியதில்லை.தேசிய நில வழிச்சாலை வந்துவிட்டதைப்போல்; தேசிய நீர் வழிச்சாலை அமைந்துவிட்டால் மக்களின் பயணச் செலவும்; சரக்குகளைக் கொண்டு செல்லும் செலவும் வெகுவாகக் குறைந்துவிடும்.
சான்றாக, ஒரு குதிரை சக்தியைக் கொண்டு; தரை வழியில் 150 கிலோ பாரத்தைக் கொண்டு செல்ல முடியும் என்றால், இதே ஒரு குதிரை சக்தியைப் பயன்படுத்தி 500 கிலோ பாரத்தை ரயில் மூலம் கொண்டு போகலாம். இதே ஒரு குதிரை சக்தியைப் பயன்படுத்தி நீரின் மேல் கப்பலில் ஐயாயிரம் கிலோ பாரத்தைக் கொண்டு செல்லலாம்.எவ்வளவு அந்நியச் செலாவணி மிச்சமாகும் என்று சிந்தித்துப் பார்ப்போமாக. கடலோர ஊர்களுக்கு மட்டுமல்லாமல் நதியோர ஊர்களுக்கும் மக்கள் பெரிய கப்பலிலோ சிறிய கப்பலிலோ செல்ல முடியும். ஆண்டுதோறும் சாலைப் பராமரிப்புக்குச் செலவிடும் தொகையும் கணிசமாகக் குறையும்.சுற்றுச்சூழல் மாசுபடாமல்; மக்கள் நலம் பேணும் இத்திட்டத்தைச் செயல்படுத்த நம் அரசு தீர்மானிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் பத்து ஆண்டு காலத்துக்குள் செயல்படுத்துங்கள் என்று கூறிய கால எல்லை தாண்டிப் பல ஆண்டுகள் ஆகின்றன.நமது நாட்டு நதிகளில் ஓரடி உயரத்தில் 250 கோடி ஏக்கர் பரப்பளவில் உள்ள நீரில் நாம் 30 விழுக்காடுமட்டும்தான் பயன்படுத்துகிறோம். மீதி நீரெல்லாம் கடலுக்குப் போகிறது.எந்தவொரு மாநிலத்தின் தேவையையும் புறக்கணிக்காமல் கடலுக்கு வீணாகச் செல்லும் நீரில் ஒரு குறிப்பிட்ட அளவு தேவைப்படும் நீரைத் தேசியத் திட்டத்துக்குத் திருப்புவதும்; வீணாகும் நீரைத் தடுப்பதுமே இத்திட்டம்.எல்லா மாநிலங்களும் பயனடையுமே தவிர, எந்தவொரு மாநிலத்துக்கும் பாதகம் ஏற்படாது.
"இந்திய நதிகளை இணைப்போம். இந்தியர் ஒன்றென நினைப்போம்''
No comments:
Post a Comment