Search This Blog

Friday, March 04, 2011

Kawasaki வரலாறு

ரு நூற்றாண்டைக் கடந்த ஜப்பான் நிறுவனம் கவாஸாகி. சூப்பர் பைக் தயாரிப்பில் தனித்துவம் பெற்ற இது, 1896-ல் 'ஷோஸோ கவாஸாகி’ என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம். துவக்க காலத்தில் கப்பல் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. பின்பு, விமானத் தயாரிப்பிலும் நுழைந்தது. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்புதான் மோட்டார் சைக்கிள் தயாரிப்புக்கே வந்தது கவாஸாகி!  

முதன்முதலில் 1949-ம் ஆண்டு மோட்டார் சைக்கிள் தயாரிப்பதற்கான ஆராய்ச்சியைத் துவங்கிய கவாஸாகி,  'மெய்ஹட்சு-125’ (Meihatsu-125)   என்ற தன் முதல் பைக்கை 1955-ம் ஆண்டு ஜப்பான் மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. அறிமுகமான சில மாதங்களிலேயே இந்த பைக்கின் விற்பனை டாப் கியருக்குச் சென்றது. இதற்கு முக்கிய காரணம், பைக்கில் பொருத்தப்பட்டு இருந்த 125 சிசி 2 ஸ்ட்ரோக் இன்ஜின்தான். அதிக சக்தி, அதே நேரத்தில் குறைந்த பராமரிப்புச் செலவு, சிறந்த மைலேஜ் என ஒரு வெற்றிகரமான பைக்குக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் இதில் இருந்தன.


தொடர்ந்து பல பைக்குகளை உருவாக்கியதற்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கால் வைத்தது கவாஸாகி. இந்த நாடுகளில் பைக்குகளை விற்கத் தொடங்கியதுமே உலக அளவில் பிரபலமடைந்தது கவாஸாகி. 1984-ம் ஆண்டுதான் கவாஸாகியின் எவர்கிரீன் பைக்கான 'நின்ஜா’ சூப்பர் பைக் அறிமுகமானது. நின்ஜாவை அறிமுகம் செய்த பின்புதான் கவாஸாகி, பர்ஃபாமென்ஸ் பைக் தயாரிப்பிலும் முன்னணி இடத்தைப் பிடித்தது. 

பைக் தயாரிப்போடு நிறுத்திக்கொள்ளாமல், 1966-ல் இருந்தே 'கிராண்ட் ப்ரீ’ (Grand Prix) ரேஸ் பந்தயங்களிலும் கவனம் செலுத்தியது. அதன் பின்பு மோட்டோ ஜீபி, வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் என இன்று வரை பல ரேஸ் போட்டிகளில் தன் முத்திரையைப் பதித்து வருகிறது. 

கவாஸாகி, இந்தியா வருவதற்குக் காரணமாக இருந்தது பஜாஜ் நிறுவனம்தான். ஆரம்ப காலங்களில் ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோ தயாரிப்பில் மட்டுமே ஈடுபட்டு வந்த பஜாஜ் நிறுவனம், மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் நுழையத் திட்டமிட்டு, 1986-ம் ஆண்டு கவாஸாகி நிறுவனத்துடன் தொழில்நுட்பக் கூட்டணி அமைத்தது.  

டிவிஎஸ் - சுஸ¨கியின் 'இண்டு சுஸ¨கி’, யமஹாவின் 'ஆர்.எக்ஸ்-100’ ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக, கவாஸாகி - பஜாஜ் கூட்டணியில் வெளியான முதல் பைக் 'கேபி 100.’ அதிக சக்தி, நல்ல மைலேஜ், நீளமான வீல் பேஸ், ரோட்டரி வால்வு இன்ஜின், டேக்கோ மீட்டர் என இந்த பைக்கின் நவீன அம்சங்கள் உடனடியாக வெற்றியடைய வைத்தன. பின்பு, இதன் இன்ஜின் அளவு அதிகரிக்கப்பட்டு, சக்தி வாய்ந்த 'கேபி 125’ பைக்காக உருவெடுத்தது. மேலும், எண்ட்யூரோ (ENDURO) எனும் இந்தியாவின் முதல் ஆஃப் ரோடு பைக்கும் வெளியானது. 

அதிக மைலேஜுக்குப் பெயர் போன 4 ஸ்ட்ரோக் பைக்குகள் இந்தியாவில் பிரபலமடையத் தொடங்கிய சமயத்தில், பஜாஜ் மீண்டும் கவாஸாகியின் கூட்டணியில் '4 எஸ்’ மற்றும் '4 எஸ் சாம்பியன்’ ஆகிய 100 சிசி 4 ஸ்ட்ரோக் இன்ஜின் கொண்ட பைக்குகளை வெளியிட்டது. இவை ஹீரோ ஹோண்டாவின் 'சிடி-100’ பைக்குக்குக் கடும் போட்டியாக விளங்கியதுடன், சட்டென மார்க்கெட்டில் விறுவிறுவென விற்பனையாக... பஜாஜ் நிறுவனம் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் தனக்கென தனி இடம் பிடித்துக்கொண்டது.

பின்பு 'பாக்ஸர், கேலிபர்’ போன்ற பல வெற்றிகரமான பைக்குகளை கவாஸாகி கூட்டணியில் அறிமுகம் செய்தது பஜாஜ். 2001-ம் ஆண்டு, 'எலிமினேட்டர்’ எனும் இந்தியாவின் முதல் க்ரூஸர் பைக்கையும் அறிமுகப்படுத்தியது இந்தக் கூட்டணிதான். 175 சிசி இன்ஜின் கொண்ட இந்த பைக், பிரீமியம் பைக் செக்மென்ட்டில் பஜாஜின் கால் தடத்தை ஆழமாகப் பதிக்க உதவியது. பின்பு, 2003-ல் 'விண்ட்-125’ என்ற பைக் அறிமுகம் செய்யப்பட்டது. பர்ஃபாமென்ஸ், மைலேஜ், ஓட்டுதல் அனுபவம் என அனைத்திலும் முன்னிலையில் நின்று, 2004-ல் அந்த ஆண்டுக்கான விருதை (Bike of the Year) தட்டிச் சென்றது!

  ஆனால், 2004-ல் கவாஸாகியுடன் இருந்த கூட்டணியை முறித்த பஜாஜ், 2008-ம் ஆண்டு மீண்டும் அதே நிறுவனத்துடன் கூட்டணியை புதுப்பித்தது. சூப்பர் பைக் விற்பனைக்காக புனே அருகே உள்ள சக்கானில் புதிய அசெம்பிளி தொழிற்சாலையைத் துவக்கியுள்ளது கவாஸாகி. 2010-ல் கவாஸாகியின் முதல் பர்ஃபாமென்ஸ் பைக்கான 'நின்ஜா-250’ அறிமுகம் ஆனது. கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் இது, பைக் பிரியர்களின் கனவு பைக்காகவே இருந்து வருகிறது. மேலும் ER-6 N, Z 1000  நின்ஜா-ZX 10 R, ZX 6 R  மற்றும் வல்கன் க்ரூஸர் ஆகிய பைக்குகளை இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறது இந்த பஜாஜ் - கவாஸாகி கூட்டணி!

No comments:

Post a Comment