Search This Blog

Tuesday, March 08, 2011

மார்ச்-8-மகளிர் தினம் - ஒரு அலசல்

 
பூமலர்வது மனதுக்கு மகிழ்ச்சி; பூப்போன்ற குழந்தை பிறப்பது மட்டும் மகிழ்ச்சியில்லாமல் இருக்குமா? "என்ன குழந்தை?' என்று கேட்கும்போதே, அது பெண்குழந்தையாக இருந்துவிடக் கூடாதே என்ற ஏக்கமும் தெரிகிறது. ஏன் இந்த நிலை? மனித உயிர்களில் ஆண் என்ன? பெண் என்ன? ஏன் இந்த வேறுபாடு?
 
பெண்களைத் தெய்வமாகவே வழிபடும் நாடு இது. செல்வத்தை லட்சுமியாகவும், கல்வியை சரசுவதியாகவும் உருவகப்படுத்தி வணங்கும் பூமி இது. இங்கு "பெண் என்றால் பேயும் இரங்கும்' என்பதுபோன்ற பழமொழிகளும் உள்ளன. இந்நாட்டில் பெண்களை வெறுக்கும் பேதமை எப்படி வளர்ந்தது? 

"அஞ்சாறு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டியடா' என்ற பழமொழியும் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறதே! பெண் பிறந்தால் செலவு என்றும், ஆண்குழந்தை பிறந்தால் வரவு என்றும் சமுதாயம் கணக்குப் போடுகிறது. எத்தனை சட்டங்கள் போட்டாலும் இந்த இழிநிலையைத் தடுக்க முடியவில்லையே!
 
 
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மார்ச்-8-மகளிர் தினம் வெறும் சடங்காகிவிட்டது. ஆட்சியாளர்களும், உயர் பதவியில் இருப்பவர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக் கூறுவதோடு சரி. வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இத் தினத்தைக் கேளிக்கை தினமாகக் கொண்டாடுகின்றன. எத்தனையோ நாள்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது. இந்த நாளில் பெண்களின் விடுதலையையும், உரிமையையும் முன்னிறுத்த வேண்டாமா?
 
இந்திய மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கே இந்நாளைப் பற்றித் தெரியாது. "தானுண்டு, தன் வேலையுண்டு' என்று நாள் முழுதும் உழைத்துழைத்து அலுத்துப்போன கிராமத்துப் பெண்களுக்கு இதைப்பற்றி நினைக்கவும் நேரம் ஏது? "வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோம்' என்று காலத்தை ஓட்டும் அவர்களுக்கு விடுதலையாவது, உரிமையாவது? 
 
படித்த உயர்குடிப் பெண்கள் சிலரே இதைப்பற்றி அறிந்திருக்கின்றனர். அவர்களுக்கும் பத்தோடு பதினொன்றுதான். மற்றவர்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளவும், வெளிப்படுத்திக் கொள்ளவும் இது பயன்படுகிறது. தங்கள் அரசியல், பொருளாதார, சமூக உயர்வுக்காகவும் இதைப் பேச வேண்டிய தேவை இருக்கிறது.பல காலமாகத் தாங்கள் சமுதாயத்தால் ஒடுக்கப்படுகிறோம், அடக்கப்படுகிறோம், அடிமையாகவே வாழ்கிறோம் என்பதுகூடத் தெரியாத பாமர மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்காதது யார் குற்றம்? படித்தவர்களின் குற்றமல்லவா? தாம் படும் துன்பங்கள் தமது குழந்தைகளுக்கும் வரக்கூடாது என்பதற்காகவே பெண்சிசுக் கொலையைச் செய்யச் சம்மதிக்கும் பெண்களும் உண்டு. இந்த அநியாயத்தைக் கேட்டுச் சமுதாயம் வெட்கப்பட வேண்டாமா? 
 
 "உங்களுக்கென்ன தெரியும்? இப்போது விற்கிற விலைவாசியில் ஒரு பெண்ணைக் கரை ஏற்றுவது என்பது சாதாரண காரியமா? பையனைப் பெத்தவங்க நாக்கில் நரம்பில்லாமல் கேட்கிறாங்க. வரதட்சிணை கொட்டிக் கொடுக்க நாங்க எங்கே போவோம்? அதனால்தான் மனசைக் கல்லாக்கிட்டு இப்படி செய்யறோம்...'' என்று அடக்க முடியாத கண்ணீரோடு அவர்கள் கூறும்போது, அந்தப் பாவச்செயலுக்கு அவர்களை மட்டும் பழி சொல்வது தவறு என்பது அப்போது புரியும்.
 
எந்தச் சட்டமும் இவர்களின் கண்ணீரோடு வழக்காட முடியாது. சட்டமும், அதிகாரமும் அவர்களை இன்னும் அடிமைப்படுத்தித்தானே வைத்திருக்கிறது. அவர்களின் கைவிலங்குகளைக் கழற்றி விடவில்லையே! இந்தத் துயரங்களுக்கு முடிவு கட்டவே மகளிர் நாள் வந்தது என்பதை இவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டாமா? 
 
 1857-ம் ஆண்டு நியூயார்க்கில் உழைக்கும் மகளிர் அமைப்புகள் ஒன்றுகூடிப் போராடினர். சட்ட சீர்திருத்தங்கள் மூலம் சலுகைகள், திருமணமான பெண்களுக்குச் சொத்துரிமை, தொழிற்கல்வியில் அதிக வாய்ப்பு, வணிகத் துறையில் வாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம், வேலைவாய்ப்புகள், கருச்சிதைவு உரிமை, குழந்தை பராமரிப்பில் ஆண்களுக்குள்ள கடமை, விவாகரத்து உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்துப் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றின் மூலம் வென்றெடுக்கப்பட்ட உரிமைகளே இன்று உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. 
 
  
 படித்த சில நவீனவாதிகள் மகளிர் உரிமைகளுக்குப் புதுப்புது விளக்கங்களும் கூறுகின்றனர். பெண்களுக்கான உரிமை என்பது ஆண்களை அடிமைப்படுத்துவது ஆகாது; மரபுகளைத் தூக்கி எறிவதும் ஆகாது. யாரோ சில ஆண்கள் செய்யும் தவறுகளைத் தாமும் செய்வதற்கான உரிமை என்று எண்ணவும், பேசவும், எழுதவும் செய்கின்றனர். இது எதிர்மறை விளைவுகளையே உருவாக்கும். தவறு யார் செய்தாலும் தவறுதான்.
 
காலங்கள் மாறினாலும், சில கட்டாயங்கள் மாறுவதில்லை. "அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?' என்று கல்வியை மறுத்து, "வீட்டை விட்டே வெளியில் போகக் கூடாது' என்றது ஒருகாலம். இப்போது பெண்களை வேலைக்குப் போகச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் புதிய ஆதிக்கம் அறிமுகமாகி வருகிறது. எல்லா மாற்றங்களும் பெண்களுக்கு எதிராகவே போய் முடிவது ஏன்?  
 
கிராமமாக இருக்கட்டும், நகரமாக இருக்கட்டும்; படித்தவராக இருக்கட்டும், பாமரர்களாக இருக்கட்டும், எங்கும் மகளிரை அடிமைப்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதற்கு சொத்துரிமை பற்றிய கருத்தாக்கமே காரணமாகிறது.மனிதர்கள் இறந்த பிறகு "கொள்ளி' வைப்பவருக்கே சொத்துரிமை என்பது ஏற்பட்டபோது, சொத்துகளைக் கைப்பற்றிக் கொள்வதற்காக பெண்களுக்கு "கொள்ளி' வைக்கும் உரிமை மறுக்கப்பட்டது. பின் அதற்கு ஆதாரமான கல்வி உரிமை மறுக்கப்பட்டது; கோயிலில் பூசை செய்யும் உரிமையும் மறுக்கப்பட்டது; பூசை செய்த பொருள்களை உண்ணும் உரிமையும் மறுக்கப்பட்டது; இதன் தொடர்ச்சியாகவே தன் துணைவனைத் தானே தேடிக் கொள்ளும் உரிமையும் மறுக்கப்பட்டது. இதுவே காலம் காலமாக வழக்கமாகிப் போனது.
 
  
இந்த வழக்கங்களை மாற்றுவதற்கு நடந்த போராட்டங்கள் ஏராளம். இராஜாராம் மோகன்ராய் முதல் பெரியார் வரை இதற்காகக் குரல் கொடுத்தனர்.  பாரதியார் கனல்பறக்கும் பாடல்களைப் பாடியதோடு, "சக்கரவர்த்தினி' என்று மாதருக்கான பத்திரிகையும் நடத்தினார். "பெண்ணடிமைத் தீருமட்டும் பேசும் திருநாட்டு - மண்ணடிமை தீருவது முயற்கொம்பே' என்று பாரதிதாசனும் பாடினார்.
 
 இப்போதும்கூட சட்டமன்றம், நாடாளுமன்றம் இவற்றில் உள்ள இடங்களில் மூன்றில் ஒரு பங்கு (33%) பெண்களுக்கு ஒதுக்கும் இடஒதுக்கீடு பற்றிப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை சட்டமாக நிறைவேற்றப்படவில்லை. இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் கட்சிகளே தங்கள் கட்சியில் கடைப்பிடிப்பதில்லை. சட்டம் வந்த பிறகுதான் இடஒதுக்கீடு தரவேண்டும் என்று சட்டம் இருக்கிறதா?
 
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்குள்ள 234 இடங்களில் இதுவரை மகளிர் 10 விழுக்காடுதான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 1991 தேர்தலில் மட்டும் அதிகப்படியாக 32 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த சட்டப்பேரவையில் 25 பேர் மட்டுமே இடம்பெற்றனர்.
 
தமிழ்நாடு வாக்காளர்களில் சரி பாதிப்பேர் பெண்கள். ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 30 லட்சம் என்றால், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 28 லட்சம் பேர். இவர்களின் பலம் இவர்களுக்கே தெரியவில்லை.    
 
கடந்த ஆண்டு உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டபோது வைக்கப்பட்ட மையக்கருத்து என்ன தெரியுமா? "மகளிருக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்குச் சட்டப்படி ஒரு முற்றுப்புள்ளி' என்பதாகும். ஆனால் உலக அளவிலோ, தேச அளவிலோ, மாநில அளவிலோ மகளிருக்கு எதிரான வன்கொடுமைகள் குறைந்திருக்கிறதா என்றால் இல்லையே! 
 
பெற்றோரின் சொத்தில் பெண்களுக்கு உரிமை வழங்கிடத் தனிச்சட்டம், ஏழைப் பெண்களுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், சமத்துவ சமுதாயம் மலர்ந்திட அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித்திட்டம், விதவைகள் வாழ்வில் விளக்கேற்ற டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமணத் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவித் திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு, அரசுப் பணிகளில் 30 விழுக்காடு தனி ஒதுக்கீடு எனத் தமிழக அரசு பெரும்பட்டியல் வெளியிட்டுள்ளது. 
 
எனினும், இத்தனை சட்டங்களையும், திட்டங்களையும் மீறி பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும், அவர்களின் எழுத்தறிவின்மையும் தேசத்துக்கே மாறாத களங்கமாகவே தொடர்கிறது.
 
"நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதிலிருந்து அவர்களைப் பாதுகாக்கக் கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்...'' என்று மனித உரிமை தினத்தை முன்னிட்டு நடந்த விழாவில் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா தேவிசிங் பாட்டீல் பேசியுள்ளார்.   
 
பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கச் சட்டங்களா இல்லை? இருக்கிற சட்டங்களே நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே மகளிரின் குறையாக மட்டுமல்லாமல், மக்களின் குறையாகவும் இருக்கிறது. மகளிர் உரிமை என்பதும் மனித உரிமையின் மறுபக்கமே! 
 
 

1 comment: