அரசியலில் எதுவும் எப்போதும் நிகழலாம். அதன் அழகே அதுதான்! கருணாநிதியின் இலவசத் திட்டங்களுக்குப் போட்டியாக, இதோ ஜெயலலிதாவின் இலவசத் திட்டங்களும் அணிவகுத்து வந்துவிட்டன!
லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், தாலிக்குத் தங்கம், இலவச பஸ் பாஸ், குறைந்த கட்டணத்தில் கேபிள் என்று கேட்கும் இடத்தில் எல்லாம் இலவசங்கள் பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. இப்படி வழங்குவது சாத்தியம்தானா ???
தமிழருவி மணி
''ஜெயலலிதா வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் பாராட்டத்தக்க அம்சங்கள் பல இருக்கின்றன. அதே நேரத்தில், 'தி.மு.க-வின் இலவசத் திட்டங்களைவிட கூடுதலான இலவசத் திட்டங்கள் இருந்தால்தான் வாக்குகளைத் தன் பக்கம் ஈர்க்க முடியும்’ என்கிற கட்டாயத்தின் காரணமாகவே நிறைய இலவசங்களை அறிவித்து இருக்கிறார். ஒட்டுமொத்தமாக, இரண்டு திராவிடக் கட்சிகளின் இலவசத் திட்ட அறிக்கைகளையும் பார்க்கும்போது, ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை 'சமூக நலன் சார்ந்ததாக’ இருக்கிறது. விவசாயம், கல்வி, மின்சாரம், சுகாதாரம் எனப் பல தரப்பட்ட துறைகளிலும் ஆக்கபூர்வமான பார்வையோடு வாக்குறுதிகளைத் தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக, மாநில அரசின் திட்டக் குழு உறுப்பினராக நான் இருந்தபோது, விவசாயத் துறையின் வளர்ச்சிக்காக திரும்பத் திரும்ப நான் வலியுறுத்திய அம்சங்கள் அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் இருப்பது மகிழ்ச்சிக்கு உரியது. முதலாவதாக, சொட்டு நீர்ப் பாசன வசதியின் மூலம்தான் நீர் மேலாண்மையை ஒழுங்குபடுத்த முடியும் என்பதை உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரிவித்து இருப்பது பாராட்டுக்கு உரியது. இரண்டாவதாக, குளிர்பதனக் கிடங்குகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க ஏற்பாடு செய்வது. மூன்றாவதாக, விவசாய விளை பொருட்கள் சேமிப்புக் கிடங்குகள் அமைப்பது. இப்படி விவசாய வளர்ச்சிக்குப் பல நல்ல திட்டங்களை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ரூபாய் 2,500 விலை நிர்ணயம் செய்யப்படும்’ என்றும், 'அரசு கரும்பாலைகள் நவீனமயமாக்கப்படும்’ என்று சொல்லி இருப்பதும் நல்ல அம்சங்கள். மக்கள் நலனைப் பொறுத்த வரையில், நம் நாடு மிகவும் பின்தங்கி இருக்கிறது. தமிழகத்தில், ஏழைகளுக்கு 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ கொண்டு வரப்பட்டது. ஆனால், அதில் ஆயிரம் குறைகள். இந்தத் திட்டத்தை முழுதாக நீக்கிவிடாமல், அதில் உள்ள குறைகளைக் களைந்து சீரமைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் ஜெ. மாவட்டம் தோறும் அதிக எண்ணிக்கையில், மிக உயர்ந்த மருத்துவ வசதிகள்கொண்ட அரசு மருத்துவமனைகளை அமைத்தாலே, மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகள் கிடைக்கும் என்பதுதான் உண்மை. அதே சமயத்தில், கிராமங்கள்தோறும் நடமாடும் மருத்துவமனைகள், 24 மணி நேர தொலைதூர மருத்துவச் சேவைகள் போன்றவை வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதும் பாராட்டுக்குரியதுதான்!
'வீடுகளுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்’ என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சி. அதேபோல தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், அதற்கான திட்டங்கள் என்ன என்பதைக் குறிப்பிடவில்லை. மும்முனை மின்சார இணைப்பு வழங்குதல், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் சூரிய ஒளி மூலம் மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்தல், தெரு விளக்குகளை சூரிய ஒளி மூலம் பயன்படுத்துதல் என ஆக்கபூர்வமான அறிவிப்புகளை செய்திருக்கிறார்!
தி.மு.க-வைப்போல 'கோவையில் இருந்து மதுரைக்கு புல்லட் ரயில் விடப்படும்’ என்று சாத்தியமாகாத திட்டங்களை அறிவிக்காமல்,'சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடற்கரை சாலை அமைக்கப்படும்’ என்று ஓரளவு ஆக்கபூர்வமான திட்டங்களை ஜெயலலிதா அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதே! உலக வங்கியின் உதவியுடன் நீர் வழிச்சாலை அமைப்பது, ஈழ அகதி முகாம்களை நன்கு பராமரிப்பது போன்ற விஷயங்களும் இவரது அறிக்கையில் மிகவும் வரவேற்கத்தக்கன!
தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் '58 வயதானவர்கள் இலவச பஸ் பயணம் செய்யலாம்’ என்று அறிவித்து இருக்கிறது. ஏற்கெனவே அரசுப் பேருந்துகள் ஆண்டுக்கு 1,000 கோடி நஷ்டத்தில் இயங்கும் சூழலில், இந்தத் திட்டங்கள் எந்த அளவுக்கு சாத்தியம் எனப் புரியவில்லை! ஆனால், கேபிள் டி.வி-யால் தனிப்பட்ட குடும்பம் மட்டுமே அதிக வருமானம் ஈட்டுவதற்குத் தடைபோடும் நோக்கில், 'கேபிள் டி.வி. அரசுடைமை ஆக்கப்படும்’ என்று சொல்லப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
நிறைகுறைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது, தி.மு.க. தேர்தல் அறிக்கையைவிட, அ.தி.மு.க-வின் அறிக்கையில் ஆக்கபூர்வமான திட்டங்கள் இருக்கின்றன
'துக்ளக்’ ஆசிரியர் சோ
''ஜெயலலிதாவைப் பொறுத்த வரையில், செய்ய முடியாத காரியங்களை சொல்லிப் பழக்கம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். எந்த ஒரு கூட்டணியுமே இலவசத் திட்டங்களை அறிவித்துத்தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டன. மக்களும் அவற்றை ஆர்வமாக எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்! 2001-06 ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் வரி வசூல் சிறப்பாக நடந்தது. அதுபோன்று அதிக அளவில் வரி வசூல் நடந்து, ஊழல் இல்லாத நிர்வாகம் நடைபெற்றால், ஜெ. அறிவித்து இருக்கும் அனைத்துத் திட்டங்களுமே நிறைவேற்றப்படக் கூடியவைதான்!'' என்று சொன்னார்.
''இந்தத் தேர்தலில் கோட்டைவிட்டால்... இனி திரும்பவும் ஆட்சிக்கு வருவோமா என்ற பயம் ஆட்டிவைக்கிறது. ஆகவே, தங்கள் இஷ்டத்துக்கு 'கிரைண்டர் தருகிறேன், மிக்ஸி தருகிறேன்’ என்று வாக்குறுதிகளை அள்ளிவிடுகிறார்கள்.ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருப்பதைத்தான் எல்லா அரசுகளும் விரும்புகின்றன. சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலும் நம் வளர்ச்சி ஒரு ரூபாய் அரிசியை நம்பித்தான் இருக்கிறது என்றால், அது எத்தகைய கேவலமான விஷயம்? இலவசம் என்பதே பொருளாதார வளர்ச்சி நிலை அல்ல. அதாவது, அடுத்த தலைமுறையில் இருந்து திருடித்தான் இந்தத் தலைமுறைக்கு நன்கொடையாகத் தரப்படுகிறது. பொதுவாகப் பெற்றோர்கள், 'தங்கள் குழந்தைகளுக்குச் சொத்து சேர்த்துவைக்காமல் போனாலும், கடன் வைத்துவிட்டுப் போகக் கூடாது’ என்று நினைப்பார்கள். ஆனால், இன்று ஒவ்வொரு தமிழன் மீதும் சுமார் 15,000 கடன் இருக்கிறது!
முறையான ஆட்சித் திறன் இல்லாததால்தான், இலவசத் திட்டங்களை அறிவிக்கிறார்கள். மாற்று ஆட்சி வந்தாலும்கூட, இந்த நிலை சட்டென மாறிவிடாது. இலவசத் திட்டங்களில் உள்ள பொருட்களை மாற்றலாமே தவிர, இலவசத் திட்டம் என்ற பழக்கம் மாறாது. பொருளாதாரச் சிந்தனை துளியுமற்று இப்படிச் செயல்படும் இந்த அரசியல் கட்சிகளை நம்பி இருக்கும் மக்களை நினைத்தால்தான் மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது!'' என்று சொன்னார்.இனி சீர் தூக்கிப்பார்த்து ஓட்டுப் போடவேண்டியது மக்கள்தான்!
- பொருளாதார நிபுணர் எம்.ஆர்.வெங்கடேஷ்
ஜூனியர் விகடன்
No comments:
Post a Comment