Search This Blog

Sunday, September 23, 2012

டி20 உலகக் கோப்பை - யார் புதிய உலக சாம்பியன்?


இலங்கையில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியை எந்த அணி வெல்லும் என்கிற கேள்விக்குச் சுலபத்தில் விடை தேடமுடியவில்லை. ஃபேவரைட்ஸ் என்கிற முத்திரை இல்லாமல் எந்த அணி ஜெயிக்கும் என்பதில் ஒரு ரகசியம் ஒளிந்திருப்பதுதான் இந்த டி20 உலகக்கோப்பையை மேலும் சுவாரஸ்யப் படுத்தியிருக்கிறது. 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மார்க்கெட்டிங் பிரிவைச் சேர்ந்த ஸ்டூவர்ட் ராபர்ட்சன், இங்கிலாந்து லோக்கல் மேட்சுகளில் கூட்டம் வராத காரணத்தால் டி20 விளையாட்டை முதல் முதலாக அறிமுகப்படுத்தினார். உடனடியாக இது தீ போல இதர கிரிக்கெட் நாடுகள் முழுக்க பரவிவிட்டது. இதுவரை 3 டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் நடந்தாலும் முதல் டி20 உலகக் கோப்பைக்கு ஈடுஇணை ஏதுமில்லை. டி20யெல்லாம் உண்மையான போட்டியல்ல என்று அந்த உலகக்கோப்பையில் கலந்துகொள்ளவே இந்தியா மிகவும் யோசித்த காலம் அது. சச்சின், கங்குலி, திராவிட் ஆகிய மூவரும் போட்டியில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவித்ததால் அப்போது ஒருநாள் அணியின் துணைத்தலைவராக இருந்த தோனி, டி20 அணியின் கேப்டனாக்கப்பட்டார். அதன்பிறகு, யுவ்ராஜ் ஆறு பாலிலும் ஆறு சிக்ஸர்கள் அடித்தது, மிஸ்பாவின் ஷாட்டை ஸ்ரீசாந்த் கேட்ச் பிடிப்பதற்குள் கோடிக்கணக்கான இதயங்கள் துடிதுடித்ததெல்லாம் வரலாறு. பிரபலங்கள் இல்லாமல் தென் ஆப்பிரிக்கா டி20 உலகக்கோப்பைப் போட்டி மகத்தான வெற்றி அடைந்தது. அதன் பிறகு, டி20யை இந்தியா வாரி அள்ளிக்கொண்டது. ஐ.பி.எல். பிறந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டுக் குக்கூட டி20 மேட்சுகளிலிருந்துதான் வீரர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள். 

இரண்டாவது உலகக்கோப்பையை பாகிஸ்தானும் மூன்றாவதை இங்கிலாந்தும் (இதன் முதல் உலகக் கோப்பை வெற்றி) கைப்பற்றின. ஆனால், இந்தியா இந்த இரண்டு உலகக்கோப்பைகளிலும் தர்ம அடி வாங்கியது. ஆனாலும், இலங்கைக்குச் சென்றுள்ள இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை. அஸ்வின், கோலி போன்ற புதிய ரத்தங்கள் மிகக் குறைவு. இந்திய அணியின் பலவீனங்கள்தான் மிகவும் உறுத்துகின்றன. ஷாகீர் கானும் ஷேவாக்கும் எப்படி ஆடப்போகிறார்கள் என்று யாருக்குமே தெரியாது. அஸ்வின் ஐ.பி.எல்-லில் மிகச்சிறந்த பௌலராக இருந்தாலும் சர்வதேச டி20 மேட்சுகளில் மிகச் சுமாராகவே பந்து வீசி இருக்கிறார். ஹர்பஜனின் ரிட்டர்ன், அணிக்கு எந்தவிதத்தில் உதவப்போகிறது? சென்னையில் நடந்த டி20 மேட்சில் யுவ்ராஜ் அருமையாக ஆடினாலும் ரன்னிங் பிட்வீன் தி விக்கெட்ஸ் மெச்சும்படி இல்லை. கம்பீரின் அவுட் அஃப் ஃபார்ம் இலங்கையிலும் தொடருமா? என பல கேள்விகள் இந்திய அணியின் முன் வைக்கப்படுகின்றன. அரையிறுதி வரை நிச்சயம் முன்னேறும் என்கிற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது. ஆனால், அதற்கே பெரிய சோதனைகளைத் தாண்டியாக வேண்டும்.  

முதல் ரவுண்டில்- ஆப்கானிஸ்தான், இங்கி லாந்துடன் இந்தியா இணைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள சிறந்த 2 அணிகள் சூப்பர் எயிட் போட்டிக்கு நுழையும். சூப்பர் எயிட்டில் இரண்டு பிரிவுகள். நினைத்தபடி முடிவுகள் அமைந்தால் சூப்பர் எயிட்டில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா... ஆகிய நான்கு பலமான அணிகளும் ஒரு பிரிவிலிருந்து அரையிறுதிக்காகப் போட்டியிடும். இன்னொரு பிரிவில் இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவு, இலங்கை, நியூசிலாந்து. 

பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவு, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகள் டி20 ஸ்பெஷலிஸ்டுகளாகப் பார்க்கப்படுகின்றன. தரவரிசைப் பட்டியலில், தென் ஆப்பிரிக்காதான் உச்சத்தில். ஆனாலும், இதுவரை அந்த அணி ஒரு உலகக் கோப்பை கூட வாங்காதது சோக வரலாறு. பாகிஸ்தான் ஒரு சிறந்த டி20 அணியை உருவாக்கியிருக்கிறது. இளமையான, திறமையான வீரர்கள்; பார்க்க அவ்வளவு புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. மேற்கு இந்தியத் தீவு அணி வீரர்கள்தான் ஐபிஎல்-லில் தன்னிகரற்ற நட்சத்திரங்கள். கேல், பொலார்ட், நரேன், பிராவோ போன்ற டி20 ஸ்பெஷலிஸ்டுகள் ஒன்றாக ஓர் அணியில் ஆடுவதென்பது கனவு. மே.இ.தீவு உலகக்கோப்பையை வெல்லாவிட்டால் அது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். முதல் மூன்று உலகக் கோப்பையிலும் யார் சாம்பியன் என்கிற சஸ்பென்ஸ் இறுதிவரை நீடித்தது. டி20யின் தன்மையே அதுதான் என்பதால் இலங்கையிலும் யாரும் எதிர்பார்க்காத ஓர் அதிசயம் நிகழலாம். 


No comments:

Post a Comment