Search This Blog

Sunday, September 30, 2012

அருள்வாக்கு - சாந்தம் பழகு!

ஆசையையும் கோபத்தையும் நம்மால் அடக்க முடியவில்லை. இவை இரண்டுமே நம்மை எப்போதும் துன்புறுத்தி வருகின்றன. எந்தப் பொருளை எவ்வளவு அடைந்த போதிலும், போதும் எனும் மன நிம்மதி நமக்கு ஏற்படுவதில்லை. உலகத் துயரம் நம்மை விட்ட பாடில்லை. சிறு துயரத்தைக் கண்டுவிட்டாலும் மனம் கலங்கத்தான் செய்கிறது. இதனின்றும் கரைஏற வழியென்ன?
நமது மனம் நமக்கு வசமாக வேண்டும். எவ்வளவோ காலமாகத் தன் இஷ்டப்படியெல்லாமே தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த இந்த மனத்தைத் தன்னுள் அடக்க சிறிது சிறிதாக முயற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும். மனம் அடங்கிவிட்டால் நமக்கு வேறொன்றும் தேவையில்லை. அதுதான் நாம் பெற வேண்டிய பூர்ண சுதந்திரமாகும்.

ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனத்தைச் சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல், கடவுளது தியானத்தில் அமர வேண்டும். வேறு நினைவுகள் இல்லாமல் தியானம் செய்வதால் நாளடைவில் புத்தியானது தெளிவடையும். ஆசையையும் கோபத்தையும் அடக்குவதற்கு இது ஒரு சாதனம். இவ்வித சாதனையைப் படிப்படியாக மேற்கொண்டவனுக்குச் சீக்கிரமாக ஆத்ம ஞானம் உண்டாகும். குறைவில்லாத அந்த ஞானத்தைப் பெறுபவன்தான் உண்மையான சுதந்திரன்.
பிற ஸ்திரீகளைத் தாயார்களாக மதிக்க வேண்டும். பிற உயிரைத் தம்முயிர் போல் மதிக்க வேண்டும். உயிர் போவதாக இருந்தாலும் உண்மையே பேச வேண்டும். சமூகச் சச்சரவுகள், வகுப்புச் சச்சரவுகள் செய்வதை அறவே ஒழிக்க வேண்டும். எல்லோரிடமும் சம அன்பு கொண்டு ஒழுக வேண்டும். மக்களெல்லாம் சுகமாக வாழ வேண்டுமென ஒவ்வொருவனும் நினைக்க வேண்டும். ஒவ்வொருவனும் தமது அறிவு வளர்ச்சிக்கும், ஆத்ம முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும். இவற்றுக்கெல்லாம் புத்தியும் சக்தியும் தருமாறு கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

1 comment:

  1. /// குறைவில்லாத அந்த ஞானத்தைப் பெறுபவன்தான் உண்மையான சுதந்திரன். ///

    சிறந்த, உண்மை வரிகள்...

    ReplyDelete