Search This Blog

Friday, September 28, 2012

உயிர் பெறுமா பொருளாதாரம்? - அன்னிய நேரடி முதலீடு


அன்னிய நேரடி முதலீட்டை நாங்கள் அனுமதித்தது பற்றிப் பொய்ச் செய்திகளை, பயத்தைப் பரப்பி மக்களைக் குழப்பமடையச் செய்கிறார்கள். நீங்கள் அவர்களால் தவறாக வழிநடத்தப்படக் கூடாது. இதே தந்திரங்களைத்தான் 1991ல் நான் முதன்முதலாக பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தபோதும் கடைபிடித்தார்கள். ஆனால், அவை எடுபடவில்லை. இப்போதும் எடுபடாது" என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கர்ஜித்திருக்கிறார்(?) மன்மோகன் சிங்.

சில்லறை வர்த்தகம், ஒலிபரப்புத் துறை, விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்து ஐ.மு.கூ. அரசு எடுத்த முடிவு பெரிய அரசியல் சூறாவளியைக் கிளப்பி விட்டது. திரிணாமுல் காங்கிரஸ், ‘பை’ சொல்லிவிட ஆட்டம் கண்ட அரசை தற்சமயத்துக்குத் தாங்கிப் பிடித்திருக்கிறார் முலாயம்சிங் யாதவ். ஆனால் ‘சுயநல அஜண்டாவோடு செயல்படும் முலாயம் சிங்கை நம்பி எத்தனை காலம் தாக்குப் பிடிக்க முடியும்?’ என்று காங்கிரஸுக்குள் குழப்பம் இருக்கிறது. ‘அரசியல் சூழல் எப்படி இருந்தாலும், இதுபோன்ற பொருளாதார சீர்திருத்தங்கள் நமது நாட்டுக்குக் கண்டிப்பாகத் தேவை. எனவே, எந்த நிலையிலும் அறிவித்த சீர்திருத்தங்களை, மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை’ என்று சொல்கிறார்கள் பிரதமரும், நிதி அமைச்சர் ப.சிதம்பரமும்.

1991-இல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது நிதி அமைச்சர் மன்மோகன் கொண்டு வந்த பொருளாதாரச் சீர்திருத்தங்கள் காரணமாகத்தான், இந்த இடைக் காலத்தில் உலக அளவில் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவைச் சந்தித்தபோதும் நம் நாடு உறுதியோடு நின்றது என்பது காங்கிரஸ் தரப்புவாதம். அதுவரை அரசின் வசம் இருந்த பல துறைகள் தனியாருக்குத் திறந்து விடப்பட, வேலைவாய்ப்புகள் பெருகி பொருளாதார வளர்ச்சியும் மேலோங்கியது என்கிறார்கள் காங்கிரஸ் காரர்கள்.  தவறு; அப்போது கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களால் ஏழை மேலும் ஏழையானான். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆனார்கள்" என்பது இடதுசாரிகளின் வாதம். இந்தச் சூழலில் சமீபத்தில் பிரதமரால் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்களை ‘இரண்டாம் அலை’ சீர்திருத்தங்கள் என்கிறார்கள். பொருளாதார வல்லுனர்களும், தொழிலதிபர்களும் இதைக் கைதட்டி வரவேற்க வழக்கம் போல இடது சாரிகள் உட்பட முக்கிய எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. இந்த மன்மோகன் மாஜிக் வரவேற்கத்தக்கதா... இல்லையா என்று நாடு முழுதும் பட்டிமன்ற பாணியில் விவாதம் நடக்கிறது.

1991-க்கு முந்தைய காலகட்டத்தில் நம் நாடு இருந்த நிலை மிகவும் கவலைக்குரியது. தங்கத்தை அடகு வைப்பது, அன்னியச் செலாவணி இருப்பு குறைந்தது, இறக்குமதி செய்த பொருட்களுக்கு அன்னியச் செலாவணியில் பணம் செலுத்த முடியாத நிலை என்ற மோசமான சூழலில் பயணித்தோம் நாம்," என்கிறார் பங்கு வர்த்தக நிபுணர் நாகப்பன்.

மன்மோகன் அப்போது கொண்டு வந்த தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகளால் நம் பொருளாதாரம் தலை நிமிர்ந்தது. வேலை வாய்ப்புகள் பெருகின. அதே சமயம் பர்மிட், கோட்டா, லைசென்ஸ் ராஜ்யத்திலிருந்து நாம் விடுபட முடியவில்லை. அதனால்தான் அலைக்கற்றை ஊழல், இப்போது நிலக்கரி ஊழல் என்று கிளம்புகின்றன" என்கிறார் இவர்.

தாராளமயமாக்கல் தேவைதான். அதே சமயம் அதன் காரணமாக தொழில்கள் நடத்துவதிலும் அரசு செயல் பாட்டிலும் வெளிப்படைத் தன்மையும், சுதந்திரச் சூழ்நிலையும் உருவாக வழி வகுக்க வேண்டும். எல்லா துறைகளிலும் இறுதிக் கட்ட கட்டுப்பாடு அரசைச் சார்ந்ததாக இருக்கலாமே தவிர, உரிமம், குத்தகை விஷயங்களில் அதிக வெளிப்படைத் தன்மை தேவை. ஆனால் இந்த தாராளமயமாக்கல் தறிகெட்டு ஓடக் கூடாது.

பல துறைகள் தனியாருக்கு திறந்து விட்ட காரணத்தால் போட்டிகள் உருவாகி, அரசு மற்றும் தனியார் துறையின் சேவைகள் முன்னேறியுள்ளன. இதனால் பயனடைந்தது மக்களே. தொலைத் தொடர்புத் துறை, விமானப் போக்குவரத்து, காப்பீடு ஆகிய துறைகளில் அரசும் தனியாரும் செயல்படும்போது, மக்கள் தங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இடையில் வந்த தகவல் தொழில்நுட்பப் புரட்சியும், அதனால் ஏற்பட்ட வேலைவாய்ப்புகளும் நமது நாட்டின் பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்த உதவின. ஆனால் இந்த வளர்ச்சி என்பது ஒட்டு மொத்த மக்களையும் உள்ளடக்கியதாக இல்லை. முன்பு இரண்டு ரூபாய் சம்பாதித்தவன் நான்கு ரூபாய் சம்பாதிக்கிறான். ஆனால் பத்து ரூபாய் சம்பாதித்தவன் நூறு ரூபாய் சம்பாதிக்கிறான் என்பதும் உண்மை. இது சரியான விகிதாசாரம் இல்லை!

இப்போது நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டிய அவசியம் என்ன? கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி செய்ய அன்னியச் செலாவணி தேவை. ரூபாயின் மதிப்பு குறைந்தால் டாலரில் நாம் செலுத்த வேண்டிய தொகை அதிகமாகும். தங்கத்தை வாங்கும் நமது மக்கள் அதை நகைகளாக அணிந்து கொள்வதால் முதலீடுகள் முடங்கி விடுகின்றன. இந்த நிலை பொருளாதாரச் சூழலுக்கு உகந்ததல்ல. எனவே அன்னியச் செலாவணி இருப்பை அதிகரிக்கவும், ரூபாயின் மதிப்பை உயர்த்தவும் சீர்திருத்தங்கள் தேவை. இப்போதைய அறிவிப்புகளை அந்த வகையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்னிய முதலீட்டுடன் வருபவர்கள் புதிய தொழில் நுட்பத்துடன் வரவேண்டும். அதன் பாதிப்புகள் சிறு, குறு தொழில்களின் மீது விழாமல் இருக்க வேண்டும். அப்போது அவற்றுக்கு சலுகைகள் அளிக்கலாம். வர்த்தகர்களுக்குச் சலுகை கொடுக்கலாம். அதனால் இழக்கும் வருமானத்தை நேரடி முதலீட்டிலிருந்து ஈடுகட்டிக் கொள்ளலாம். இப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்பட்டால் இன்னும் குறுகிய காலத்தில் நாம் பிரச்னைகளைச் சந்திப்போம். நீண்ட கால நோக்கில் சமாளித்து விடுவோம். ஆனால் பிரமிக்கத் தக்க வளர்ச்சி இருக்காது. அன்னிய நேரடி முதலீடுகள் மூலம் வரும் தொழில்களால் ஏற்கெனவே இருப்பவர்கள் பாதிப்புக்குள்ளாகி ஏகபோகத்துக்கு வழிவகுக்கக் கூடாது. இதற்காக சம்பந்தப்பட்டவர்களைக் கொண்டு சுய ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பை நிறுவ வேண்டும். இந்த அறிவிப்புகளுக்குப் பிறகு ரூபாயின் மதிப்பு உயர்ந்து, பங்கு மார்க்கெட் பளிச்சிடுவது நல்ல அறிகுறி," என்கிறார் நாகப்பன்.

முன்பும் இப்போதும் கொண்டு வந்திருக்கும் சீர்திருத்தங்கள் முற்றிலும் நாட்டு நலனுக்கு எதிரானது. ஏழைகளைச் சுரண்டி பணக்காரர்கள் வாழ வழிவகுப்பவை. சூதுவாதுகள் நிறைந்த முதலாளித்துவத்துக்கு ஆதரவானவை," என்கிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா.

991ல் அறிவித்த சீர்திருத்தங்களால் நாட்டில் பாலும் தேனும் ஓடியது என்றால் இப்போதைய 12ம் ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையில், ‘வேகமான, திட்டமிட்ட, நிலையான, ஒட்டுமொத்த வளர்ச்சி’ என்று பிரகடனப் படுத்துவது ஏன்? இன்றைக்குள்ள சமூகக் கொந்தளிப்புக்குக் காரணம், வேலையில்லாத் திண்டாட்டம், பண வீக்கம் மற்றும் லஞ்ச ஊழல்தானே? இதற்குக் காரணம் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள். உலக அளவில் பொதுவான வளர்ச்சி இருக்கிறது. அது இந்தியாவிலும் இருக்கலாம்.

ஆனால் அந்த வளர்ச்சி யாருக்கானது? முன்பு கொண்டுவந்த சீர்திருத்தத்தால் பங்கு மார்க்கெட்டில் மாபெரும் ஊழல் நடந்தது.

1990களில் சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய சோஷலிஸ்ட் நாடுகளில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற தன்மைகள் காரணமாக அமெரிக்கா தமது ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொள்ள உலக வங்கி, மற்றும் சர்வதேச நிதி நிறுவனம் மூலமாக வளர்ச்சியடையும் நாடுகளின் மீது திணிக்கும் கொள்கைகளே இந்தச் சீர்திருத்தங்கள். இது அமெரிக்க வல்லாண்மைக்கு அஸ்திவாரம் போடுபவை. இந்தியச் சூழலுக்குப் பொருந்தாதவை. விவசாயிகள் பயனடைவார்கள், வேலை வாய்ப்பு உருவாகும் என்பதெல்லாம் மாயை. தங்களுக்கேற்ற சூழல் உருவாகும்வரை விவசாயிகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு அவர்கள் வைத்ததே சட்டம். ஒரு வேலைவாய்ப்பு உருவானால் பதினைந்து வேலைகள் அடி வாங்கும். சீனா, ஜெர்மனியில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டாலும், அதன் பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற உள்நாட்டுச் சட்டங்கள் உண்டு. மான்யம் கொடுப்பதால் பொருளாதாரம் பாதிக்கிறது என்கிறார்கள். பெரு முதலாளிகள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகை மற்றும் நிதி நிவாரணங்களைக் கணக்கிட்டால், பெட்ரோல், டீசல், எரி வாயு சிலிண்டருக்குக் கொடுக்கும் மான்யம் மிகக் குறைவு. மத்திய அரசு உடனடியாக இந்த அறிவிப்புகளை வாபஸ் வாங்க வேண்டும்" என்கிறார் ராஜா.


எனவே வரும் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்த விவாதமும், ஓட்டெடுப்பும் வருவது நிச்சயம். அரசை ஆதரித்தாலும், அன்னிய நேரடி முதலீட்டை எதிர்க்கிறார் முலாயம் சிங். எனவே அரசின் ஸ்திரத் தன்மை பாதிக்கப்படும் சூழலில் மன்மோகனின் பொருளாதார மேஜிக் அரசியல் பின்பலத்தைப் பெறுமா என்பது முக்கியமான கேள்வி!

‘ஃபிட்ச்’ குழுமம் உலக நாடுகளின் பொருளாதார நிலையைக் கணித்து, தர நிர்ணயம் செய்கிறது. இது கொடுக்கும் தரவரிசை கீழே இறங்கினால் அன்னிய நேரடி முதலீடுகள் வருவதில் சிக்கல் வரும். இந்தக் குழுமத்தின் இந்திய அமைப்பான ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ பிரதமரின் அறிவிப்பைக் குறித்து என்ன சொல்கிறது?

பல சவால்கள் காரணமாக அன்னிய நேரடி முதலீட்டினால் வரும் பலன்கள் மக்களுக்குக் கிடைக்க இரண்டு மூன்று வருடங்கள் ஆகும். இந்திய சில்லறை வர்த்தகம் இப்போது ஆரோக்கியமாக இல்லை. ஆனால் நேரடி முதலீடு நீண்ட கால நோக்கில் மட்டுமே பலன் கொடுக்கும். இந்திய சில்லறை வர்த்தகத்தில் ஏற்கெனவே இருக்கும் பெரு நிறுவனங்கள் தங்களைச் சட்டபூர்வமாக முறைப்படுத்திக் கொண்டு சிக்கலில்லாமல் நேரடி முதலீட்டைப் பெறும் சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும். நேரடி முதலீட்டாளர்கள் சில்லறை வர்த்தகத்தில் பின் கட்டுமானங்களில் முதலீடு செய்ய வேண்டும். எனவே இது தொடர்பாக மாநில அரசின் உரிமம் பெறுவது போன்றவற்றில் தாமதம் வரும். கொள்கை குழப்பமில்லாமல், சாதகமான சூழல் உருவாக்கினால்தான் திட்டமிட்ட பலன் கிடைத்து வளர்ச்சி சாத்தியமாகும். நமது சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளில் இருந்து முப்பது சதவிகிதம் நேரடி முதலீட்டாளர்கள் கொள்முதல் செய்ய வேண்டுமென்பது சவாலான விஷயமல்ல; நமக்கு அதற்கான உற்பத்தித் திறன் இருக்கிறது."1 comment:

 1. அன்புள்ள ஊடக பொறுப்பாளர்களுக்கு வணக்கம், கீழ் குறிப்பிடும் அறிக்கையை தங்களுடைய ஊடகங்களில்

  செய்தியாக வெளியிட்டு உதவும் படி விக்டரி கட்சி சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  Please Note: Click the original copy to select your Known language and read it

  அன்னிய முதலீட்டை வரவேற்போம்


  சில்லறை வணிகத்தில் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு இடைத்தரகர்கள், விளம்பரதாரர்கள், வியாபாரிகள், போக்குவரத்து செலவுகள், பதுக்கல் காரர்கள், கூலிகள் போன்றவை முக்கிய காரணங்களாக அமைகிறது.  விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு குறைந்த அளவே விலை கிடைக்கிறது. எந்தவித உடல் உழைப்போ, பண முதலீடோ இல்லாத இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் தான் பொருட்களின் விலை கடுமையாக ஏறுகிறது.  அனேக பொருட்களுக்கு உற்பத்தி செலவு மிகவும் குறைவாகவே உள்ளது. அப்பொருட்களை மக்களிடம் பிரபலப் படுத்துவதற்காக மிகப்பெரும் தொகை விளம்பரத்திற்காக செலவு செய்யப்படுகிறது. விளம்பரச் செலவு பல பொருட்களின் விலை ஏற்றத்திற்கு காரணமாகிறது.  ஒரு நாட்டளவில், மொத்த வணிகம், ஒரு மாநில அளவில் மொத்த வணிகம், ஒரு மாவட்ட அளவில் மொத்த வணிகம், சில்லரை வியாபாரிகள் இவ்வாறு பலரிடம் பொருட்கள் மாறி மாறி வரும்போது ஒரு பெரும் தொகை கமிஷனாக சென்று விடுகிறது. எனவே வியாபாரிகளும் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணமாக மாறி விடுகிறார்கள்.  விமானம், ரயில், லாறி, மினி லாறி இப்படி பொருட்கள் வாகனங்களில் கொண்டு செல்லும் போது போக்குவரத்து செலவுகளும் பொருட்கள் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணமாகிறது. இவற்றில் விமானங்களில் கொண்டு வரப்படும் பொருட்களுக்கு மிகவும் விலை ஏற்றம் ஏற்படுகிறது.  விளைபொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் போது ஏராளமான பொருட்களை குறைந்த விலையில் வாங்கி பதுக்கல் காரர்கள் தங்கள் குடோன்களில் பதுக்கி வைக்கிறார்கள். விளை பொருட்களுக்கு செயற்கையாக ஒரு தட்டுப்பாட்டை சந்தைகளில் உருவாக்கி பின்னர் அதிக விலையில் விற்று பெரும் தொகையினை லாபமாக்கி கொள்கிறார்கள். இதுவும் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு காரணமாகிறது.  சிலவித பொருட்கள் விலை குறைவாக இருக்கும் ஆனால் சுமட்டுக்கூளிகள் அதிகமாக இருக்கும். இவ்விதப் பொருட்களுக்கு அதிகமான கூலிகளே விலை ஏற்றத்திற்கு காரணமாகிறது. பல வியாபாரிகளிடம் கைமாறும்போதும் தனிதனி கூலிகள் விலை ஏற்றத்திற்கு காரணமாகிறது.  நாடு முழுவதிலும் சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீடுக்கு அனுமதி வழங்கினால் தொலைபேசி கட்டணங்கள் குறைந்தது போல் பொருட்களும் விலை குறைந்து பொது மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும். எனவே பல்பொருள் வணிக சில்லரை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் 51 சதவீத நேரடி முதலீட்டை ஒற்றுமையாய் வரவேற்போம் வாருங்கள்.

  கன்னியாகுமரி இந்திய மக்கள் நலப்பணியில் 21-09-2012 என்றென்றும் மகிழ்வுடன்.ஸ்ரீஹரி ஸ்ரீஹரி

  ReplyDelete