Search This Blog

Sunday, September 09, 2012

பேங்கஸ்யூரன்ஸ்..!

 
சமீப காலமாக படுவேகமாக பிரபலமாகி வருகிறது பேங்கஸ்யூரன்ஸ், அதாவது வங்கிகள் மூலம் இன்ஷூரன்ஸ் திட்டங்களை விற்பனை செய்வது. கடந்த 2010-11-ல் மட்டும் பேங்கஸ்யூரன்ஸ் மூலம் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு கிடைத்த முதல் பிரீமியம் சுமார் 11,062.63 கோடி ரூபாய். இது மொத்த முதல் பிரீமியத்தில் சுமார் 13.30 சதவிகிதம்.
 
பெரிய நகரங்களில் உள்ள வங்கிக் கிளைகளில் மட்டுமே விற்பனையாகி வந்த இந்த பேங்கஸ்யூரன்ஸ், இப்போது சிறிய ஊர்களில் உள்ள வங்கிக் கிளைகளிலும் விற்பனையாகத் தொடங்கிவிட்டது. இந்த பேங்கஸ்யூரன்ஸ் திட்டங்களை எடுக்கும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்? இதிலுள்ள சாதக, பாதகங்கள் என்ன?
 
பேங்கஸ்யூரன்ஸ்..!

''இந்திய காப்பீட்டுத் துறை தனியார்மயமானவுடன், காப்பீடு விற்பனையில் ஏற்பட்ட மிகப் பெரிய மாறுதல் இந்த பேங்கஸ்யூரன்ஸ். மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இது, இன்று தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் விற்பனையில் முக்கிய பங்கு அளிக்கிறது.

பேங்கஸ்யூரன்ஸ் விற்பனை முறை ஐரோப்பிய நாடுகளில் முதலில் தோன்றி, பிற்பாடு பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இது இந்தியாவில் இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு வாரியமான ஐ.ஆர்.டி.ஏ.வின் வரைமுறைகளுக்கு உட்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக காப்பீட்டு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, தங்களுடைய பல்வேறு இன்ஷூரன்ஸ் திட்டங்களை வங்கிக் கிளைகள் மூலம் மக்களுக்கு விற்பனை செய்கின்றன. தற்போது நடைமுறையில் உள்ள ஐ.ஆர்.டி.ஏ. வரைமுறைகளின்படி, ஒரு வங்கியானது ஒரு ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்ஷூரன்ஸ் மற்றும் ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் திட்டங்களை மட்டுமே விற்க முடியும்.

வங்கிகளின் பங்கு!

வங்கிகள் தங்களுக்குப் பொருத்தமான காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தபிறகு, தங்கள் அலுவலர்களில் சிலரை தேர்வு செய்து காப்பீடு விற்பனை செய்வதற்கான பயிற்சி மற்றும் ஐ.ஆர்.டி.ஏ. லைசென்ஸையும் அளிக்கிறது. இந்த லைசென்ஸ் பெற்ற வங்கி அலுவலர்களை 'ஸ்பெசிஃபைடு பெர்சன்ஸ்’

(Specified Persons) என்று அழைக்கிறார்கள். இவர்கள்தான் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் காப்பீட்டுத் திட்டங்களை விற்பனை செய்வார்கள். வங்கிகள் மூலம் நாம் தனிநபருக்கான காப்பீடு (Individual insurance scheme) திட்டங்களையும் குரூப் இன்ஷூரன்ஸ் திட்டங்களையும் வாங்க முடியும்.

மேலும், வங்கிகள் தங்களது வங்கி சார்ந்த திட்டங்களில் பயன்பெறும் வாடிக்கையாளர்களின் தேவையைக் கருதி, வாடிக்கையாளர்களை குழுப்படுத்தி காப்பீட்டுத் திட்டங்களை குழு காப்பீடாக (Group depositors insurance, Group loan assurance) வழங்குகின்றன.

சாதகங்கள்!
வங்கிகள் மூலம் இன்ஷூரன்ஸ் திட்டங்களை வாங்குவதில் நமக்கு என்ன நன்மை கிடைக்கும் எனில், நம் வீட்டுக்கு அருகில் உள்ள வங்கிக் 
கிளையிலேயே இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிடலாம். நமக்கு தேவையான ஆயுள் காப்பீடு, பொதுக் காப்பீடு திட்டங்களை ஒரே இடத்தில் கிடைக்க வழி செய்கிறது. நகர்ப்புறம் அல்லாத (Non Urban Market) இடங்களில் உள்ள வங்கிகள் மூலம் சாதாரண மக்களுக்கும் இன்ஷூரன்ஸ் கிடைக்க வழி செய்து தருகிறது.
வங்கி அலுவலர்கள் சரியான திட்டங்களையும் ஆலோசனைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க இயலும். வங்கிகள் நம் வீட்டுக்கு அருகில் இருப்பதால் விற்பனைக்குப் பின் தேவையான சேவைகளையும் நாம் எளிதில் பெறலாம்.

வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப தேவையான புதிய திட்டங்களை தருமாறும் காப்பீட்டு கம்பெனிகளை வற்புறுத்த முடியும். குறிப்பாக, கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்காக மட்டும் சில திட்டங்களை, உதாரணமாக குரூப் கிரடிட் இன்ஷூரன்ஸ், குரூப் லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டங்களை பெற முடியும். இவை வங்கி வாடிக்கையாளர்களுக்காக வங்கிகள் மட்டும் விற்பனை செய்யும் திட்டங்களாகும். மேலும், வங்கிகள் மூலம் காப்பீட்டுத் திட்டங்கள் விற்பனை செய்வதன் மூலம் விநியோகச் செலவு கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இதனால் பிரீமியம் குறைவதற்கும் வாய்ப்புள்ளது.

பாதகங்கள்!
 
பேங்கஸ்யூரன்ஸில் சில பாதகங்களும் இருக்கவே செய்கின்றன. முதலில், வங்கிக் கிளைகள் தங்களது விற்பனை டார்கெட்டை முடிப்பதற்காக வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், குறிப்பாக வங்கியில் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களிடம் காப்பீட்டுத் திட்டங்களை விற்பனை செய்கின்றன. இத்தகைய வாடிக்கையாளர்கள், தமது தொழிலுக்காக வங்கிக் கிளைகளை நம்பி உள்ளதால், மறுக்க முடியாத சூழ்நிலையில், காப்பீட்டுத் திட்டங்களை வாங்குகின்றனர். வாடிக்கையாளர் இந்த பாலிசிகளை விரும்பி வாங்காததால், முதலாம் ஆண்டு முடிந்தபின், பலரும் அந்த பாலிசியைத் தொடருவதில்லை.
சில குறிப்பிட்ட வங்கிச் சேவைகளுடன் காப்பீட்டுத் திட்டங்கள் இணைக்கப்பட்டும் விற்பனை செய்யப்படுகின்றன. இது தொடர்பாக ஐ.ஆர்.டி.ஏ. சில விதிமுறைகளை கொண்டுவந்தபிறகும், இது மாதிரியான காப்பீட்டுத் திட்டங்களை விற்பதன் மூலம் வங்கிகள் நிறைய வருமானம் பெறுகின்றன. இந்த வருமானத்தை தனியார் வங்கிகள் தங்கள் ஊழியர்களுக்குப் பிரித்து அளிக்கின்றன. இதனால் வங்கி ஊழியர்கள் தங்கள் டார்கெட்டை அடையவும், அதிக கமிஷன் கிடைக்கும் என்கிற ஆசையாலும் இந்த திட்டங்களை விற்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்களுக்குத் தேவையில்லாத திட்டங்கள் தலையில் கட்டப்படவும் வாய்ப்புண்டு.

வங்கிகள் காப்பீட்டு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு, வேறொரு காப்பீட்டு நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்துகொள்ள முடியும். இப்படி காப்பீட்டு நிறுவனம் மாறும்போது (வங்கிக் கிளைகள் புதிய காப்பீட்டு நிறுவனத்தின் விற்பனையில் முனைப்பாக இருப்பதால்) முன்பு விற்ற பாலிசிகளில் அதிக கவனம் செலுத்தாது. இதனால் நமக்கு சேவை குறைபாடு ஏற்படலாம்.

கவனம்..!

வங்கிக் கிளைகளில் குறைந்த பிரீமியத்தில் எளிதாக இன்ஷூரன்ஸ் பாலிசி கிடைக்கிறதே என்பதற்காக கண்மூடித்தனமாக வாங்குவதை விட்டுவிட்டு, மற்ற எல்லா முதலீடுகளையும் ஆராய்வது போல், இதன் சாதக - பாதகங்களை ஆராய்ந்து நமக்கான திட்டங்களைத் தேர்வு செய்யவேண்டும்.

 
 

1 comment:

  1. "வங்கிகள் தங்களுக்குப் பொருத்தமான காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தபிறகு, தங்கள் அலுவலர்களில் சிலரை தேர்வு செய்து காப்பீடு விற்பனை செய்வதற்கான பயிற்சி மற்றும் ஐ.ஆர்.டி.ஏ. லைசென்ஸையும் அளிக்கிறது. இந்த லைசென்ஸ் பெற்ற வங்கி அலுவலர்களை 'ஸ்பெசிஃபைடு பெர்சன்ஸ்"....ஆனால் நடைமுறையில் அப்படி நடப்பதில்லை. தனியார் வங்கிகள் தங்களின் இன்சூரன்ஸ் பங்காளிகளை அவர்களுக்கு அதிக வருமானம் வரும் வகையில் மாற்றிக் கொள்கிறார்கள். மற்ற தேசிய வங்கிகளில், ஊழியர்கள் உண்டான வேலையைப் பார்ப்பதற்கே ஆள் பற்றாக்குறை என்கிறார்கள். அப்படியிருக்க, வேறுவழியின்றி, கிளை நிர்வாகிகளே இந்த வேலையைச் செய்கிறார்கள். உண்மையில், இது வங்கிகளுக்கு ஒரு நல்ல வருமானம் என்ற அளவிலேயே Bancassurance தொழில் நடைபெறுகிறது. ஒரு முகவர், முழு நேரமாக இந்தத் தொழிலச் செய்து என்ன கமிஷன் பெறுவாரோ, அதையே இந்த வங்கிகளும், நீங்கள் எழுதியிருப்பது போல வேறு காரணங்களை முன்னிறுத்தி பெறுகிறார்கள்.( ”குறிப்பாக வங்கியில் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களிடம் காப்பீட்டுத் திட்டங்களை விற்பனை செய்கின்றன. இத்தகைய வாடிக்கையாளர்கள், தமது தொழிலுக்காக வங்கிக் கிளைகளை நம்பி உள்ளதால், மறுக்க முடியாத சூழ்நிலையில், காப்பீட்டுத் திட்டங்களை வாங்குகின்றனர். வாடிக்கையாளர் இந்த பாலிசிகளை விரும்பி வாங்காததால், முதலாம் ஆண்டு முடிந்தபின், பலரும் அந்த பாலிசியைத் தொடருவதில்லை”. முற்றிலும் உண்மை. அதிலும் இந்த சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் யூலிப் திட்டங்களில் வருடாவருடம் கட்ட வேண்டும் என்பதறியாது, வங்கி மேனேஜரின் வற்புரித்தலில் பாலிசி எடுத்து நட்டமடைந்தது ஏராளம். பாலிசிதாரருக்கு சேவை செய்வதற்கு வங்கிகளில் ஆள் கிடையாது.
    மொத்தத்தில், ஆயுள் காப்பீடு என்பது, காப்பீடு எடுப்பவர் மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தார்க்கும் பரிச்சயமானவர்க்ளிடம் மட்டுமே எடுக்க வேண்டும். அதுவும், அரசுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி.யில் எடுப்பது மட்டுமே பாதுகாப்பானது.
    ரிஸ்க் கவர் விஷயங்களில் ரிஸ்க் எடுக்கக் கூடாது.
    நீங்கள் குறிப்பிட்டுள்ள சாதகங்கள் ஒன்றும் இன்னும் நடைமுறையில் காணோம். IRDA ஆணையம் இது குறித்து பலமுறை அறிக்கைகளும் வெளியிட்டுள்ளது.

    ReplyDelete