Search This Blog

Saturday, September 08, 2012

கால்கள் இல்லாமலேயே ஓடும் மனிதன்!


ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்த பிறகு, அதே இடத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும். இதை பாராலிம்பிக்ஸ் (Paralympics) என்றழைப்பார்கள். இதில் கலந்துகொள்கிற ஒவ்வொருவரிடமும் நெஞ்சைக் கனக்கவைக்கும் கதைகள் இருக்கும். மாற்றுத் திறனாளிகளின் உசைன் போல்ட் என்று மெச்சப்படும் இங்கிலாந்தைச் சேர்ந்த 36 வயது ரிச்சர்ட் ஒயிட்ஹெட்டின் கதையைக் கேட்டால் வாழ்க்கைமேல் எல்லோருக்கும் நம்பிக்கை துளிர்க்கும்.

ஒயிட்ஹெட்டுக்குப் பிறவியிலேயே முட்டிக்குக் கீழே இரண்டு கால்களும் கிடையாது. பள்ளியில் தம் நண்பர்களெல்லாம் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது முதலில் வேடிக்கை பார்த்த ஒயிட்ஹெட், மனத்தைத் தளர விடாமல் ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் எனத் துணிந்து மற்ற மாணவர்களுக்கு இணையாக விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் காட்டியிருக்கிறார். பதினொரு வயதில் கனடாவைச் சேர்ந்த டெரிஃபாக்ஸ் பற்றிய ஓர் ஆவணப் படத்தைப் பார்த்ததுதான் அவர் வாழ்க்கையில் முதல் திருப்பம். புற்று நோயால் ஒரு காலை இழந்தாலும், சக புற்றுநோயாளிகளுக்காக மிகவும் அக்கறைப்பட்டவர், டெரிஃபாக்ஸ். புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக நிதி திரட்ட 1980ல், ஒற்றைக் காலுடன் கனடா முழுக்க நெடும்பயணம் மேற்கொண்டார். 143 நாள்களாக 5,300 கி.மீ. ஓடி, பொதுமக்களிடமிருந்து 1.7 மில்லியன் டாலரை (ரூ. 9.35 கோடி) நன்கொடையாகப் பெற்றதோடு, புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார் டெரி. பிறகு, புற்றுநோய் மிக மோசமாக முற்றியதால் தமது இருபத்திரெண்டாவது வயதில் இறந்துபோனார். டெரியைக் கௌரவப்படுத்தும்விதமாக கனடா அரசு, தம் அலுவலகங்களில் தேசியக் கொடியைப் பாதியில் பறக்கவிட்டது. இப்படிப்பட்ட டெரி ஃபாக்ஸின் கதையினால் உத்வேகம் கொண்டு, இன்று சர்வதேச அளவில் ஒரு நட்சத்திரமாகி இருக்கிறார் ஒயிட்ஹெட்.

செயற்கைக் கால்கள் கிடைத்ததால் 2004ல், மரத்தான் போட்டியில் கலந்துகொண்டு 26 மைல் தூரம் ஓடினார். அப்போதெல்லாம் இந்தத் தூரத்தைக் கடக்க ஒயிட்ஹெட்டுக்கு 5 மணி நேரம் ஆகும். இப்போது 2 மணி நேரத்தில் கடந்துவிடுகிறார். டெரிஃபாக்ஸ் போல புற்றுநோயால் வாழ்க்கையை இழந்த நண்பர் சைமன் மெல்லோஸ் அளித்த ஊக்கம், ஒயிட்ஹெட்டின் சிந்தனையையே மாற்றியது. உன்னால் வெளிஉலகைச் சந்திக்க முடியும், அவர்கள் முன்னால் சாதிக்கமுடியும் என்று வார்த்தைகளால் பூஸ்ட் கொடுத்தார் மெல்லோஸ். நண்பரின் ஊக்கம் வீணாகக்கூடாது என்பதற்காகத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டார் ஒயிட்ஹெட். காலை, மாலை வேளைகளில் பயிற்சி எடுத்தால் எல்லோரும் கிண்டல் செய்வார்கள் என்று இருட்டான பிறகு, ஒரு வாரத்துக்கு 35 மணி நேரம் என கணக்கு வைத்துக்கொண்டு செயற்கைக் கால்களுடன் பயிற்சி எடுத்திருக்கிறார்.
லண்டனில் நடந்த பாராலிம்பிக்ஸ் போட்டியில், 200 மீட்டர் தூரத்தை 24.38 விநாடிகளில் ஓடி உலகச் சாதனை செய்திருக்கிறார் ஒயிட்ஹெட். இந்தப் பந்தயத்தை லண்டன் மைதானத்தில் 80,000 ரசிகர்கள் கண்டுகளித்துப் பரவசமானார்கள். இரண்டும் செயற்கைக் கால்கள் என்பதால் நின்ற நிலையில்தான் ஓட்டத்தை ஆரம்பித்தார் ஒயிட் ஹெட். இதனால் தொடக்கத்தில் சட்டென்று வேகமாக ஓடமுடியாது.

முக்கால்வாசி தூரம்வரை பின்தங்கியிருந்த ஒயிட்ஹெட், அதற்குப் பிறகு, நிலவரத்தைப் புரிந்துகொண்டு உயிரைக் கொடுத்து ஓடி, மற்ற போட்டியாளர்களைச் சடுதியில் பின்னுக்குத் தள்ளி ஜெயித்தது கண்கொள்ளாக் காட்சி. டி.வி.யிலும் யூடியூப்பிலும் இதைப் பார்த்தவர்கள் சிலிர்த்துப் போனார்கள். ‘என் நண்பன் மெல்லோஸ், மேலேயிருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன்தான் என்னை வேகமாக ஓடவைத்தான்’ என்றார் ஒயிட் ஹெட்.

இரண்டு செயற்கைக் கால்கள் இல்லாவிட்டால், மூன்றரை அடி உயரம்தான் இருப்பார். ஒயிட்ஹெட்டுக்கு ஒரு காதலி இருக்கிறார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. எப்படி பாராலிம்பிக்ஸில் உலக சாதனை படைக்க முடிந்தது என்றதற்கு ஒயிட்ஹெட் கொடுத்த பதில்: வாழ்க்கையில் என்ன தடைகள் வந்தாலும் தகர்த்தெறிய முடியும் என்பதற்கு நானே உதாரணம். எத்தனையோ கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டதால் இந்த 200 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாகக் கடப்பதைச் சிரமமாக எண்ணவில்லை. உலகிலேயே கால்கள் இல்லாமல் அதிவேகமாக ஓடும் மனிதன் நான்தான்.

1 comment:

  1. போற்றப்பட வேண்டியவர்... பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete