Search This Blog

Thursday, September 06, 2012

கசாபைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்?

 
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட கசாப்புக்கு மரண தண்டனை விதித்திருப்பதன் மூலம் உலகத்துக்கு இந்தியா ஒரு தகவலைச் சொல்லியிருப்பதாகக் கூறுகிறார்கள் நம்முடைய ஆட்சியாளர்கள். குறிப்பாக, பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இது ஓர் எச்சரிக்கை என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆமாம். இது பாகிஸ்தானுக்கு ஓர் எச்சரிக்கை; இனி, அந்நாடு திருந்திவிடும். அங்குள்ள பயங்கரவாதிகளுக்கு ஓர் எச்சரிக்கை; இனி அவர்களும் திருந்திவிடுவார்கள். உள்நாட்டுப் பயங்கரவாதிகளுக்கு? ஆம். அவர்களுக்கும் ஓர் எச்சரிக்கை; அவர்களும் திருந்திவிடுவார்கள். இனி, இந்தியாவில் தவறே நடக்காது. நம்புங்கள். நாம் இப்படி நம்புவதைத்தான் நம்முடைய அரசாங்கம் விரும்புகிறது.
 
மும்பை தாக்குதலின்போது இந்தியாவுக்கு விழுந்த அடி சாதாரணமானது அல்ல. அந்த அடியில், குஜராத்திலும் ஒடிசாவிலும் அம்பலமான நம்முடைய போலி மதச்சார்பின்மை இருக்கிறது. அண்டை நாடுகளுடன்கூட உறவைப் பேணத் தெரியாமல் காலங்காலமாகச் சொதப்பிக்கொண்டு  இருக்கும் நம்முடைய ராஜதந்திரத் துறையின் தோல்வி இருக்கிறது.காஷ்மீர் உள்ளிட்ட பல தேசிய இனப் போராட்டங்களைக் காட்டுமிராண்டித்தனமாகக் கையாண்டுவரும் நம்முடைய உள்துறையின் தோல்வி இருக்கிறது. ஒருங்கிணைந்து செயல்படத் தெரியாத நம்முடைய உளவுத் துறையின் தோல்வி இருக்கிறது. ஒரு பெரும் தாக்குதலைக் கற்பனைசெய்து பார்க்கும் திறனற்ற நம்முடைய பாதுகாப்பு அமைப்புகளின் தோல்வி இருக்கிறது. தாக்குதலுக்கு வந்திருப்பவர்கள் 'ஏ.கே.47’ துப்பாக்கிகளுடன் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்திருந்தும் '9 எம்.எம்.’ கைத்துப்பாக்கியுடனும் லத்திகளுடனும் அவர்களை எதிர்கொள்ளச் சென்ற மும்பை போன்ற ஒரு பெருநகரக் காவல் துறையின் அறியாமை இருக்கிறது. இணை ஆணையராக இருந்த ஹேமந்த் கர்கரேயின் உயிரைத் துளைத்த கவச உடைக் கொள்முதல் ஊழல் இருக்கிறது. யார் முந்துவது என்ற போட்டியில், தாக்குதலை நேரடியாக ஒளிபரப்பி பயங்கரவாதிகள் தங்கள் வியூகத்தை மாற்றிக்கொண்டே இருக்க உதவிய ஊடகங்களின் பொறுப்பற்றத்தனம் இருக்கிறது. இத்தனைக்கு நடுவிலும் வழக்கம்போல அரசியல் செய்த அரசியல் கோமாளிகள் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக எல்லாவற்றையும் அப்போதைக்கு அப்போது மறந்துபோகும் இந்நாட்டுப் பிரஜைகளான நாமும் இருக்கிறோம். இப்போது உங்களுக்கு ஞாபகம் வரலாம். மும்பை தாக்குதல் சம்பவம் நடந்த ஓரிரு மாதங்களுக்கு இவற்றைப் பற்றி எல்லாம் நாம் பேசிக்கொண்டு இருந்தோம். இப்போது, கசாப், கசாப், கசாப்... கசாபைத் தூக்கிலிட்டால் முடிவுக்கு வந்துவிடுமா எல்லாம்?
 
இது ஒரு விளையாட்டு. முழுக்க முழுக்கத் திட்டமிடப்பட்ட விளையாட்டு. விளையாட்டின் உச்சகட்ட காட்சி இப்போது அரங்கேறுகிறது. இன்னும் விளையாட்டு முடியவில்லை. ஆனால், நம் அனைவருக்குமே அந்த முடிவு தெரியும். கசாப் தூக்கிலிடப்படுவார். அதுதான் முடிவு. இந்த விளையாட்டின் தொடக்கத்தில் இருந்தே, அதாவது கசாப் பிடிபட்டதில் இருந்தே இது நமக்குத் தெரியும். அப்புறமும் ஏன் இத்தனை சுவாரஸ்யமாகப் பார்க்கிறோம்; பேசுகிறோம்? ஏனென்றால், அரசு அதைத்தான் விரும்புகிறது. அரசுக்கு நன்றாகத் தெரியும், இந்த விளையாட் டில் நாம் ஆழ்வதுதான் அதன் எல்லாத் தவறு களில் இருந்தும் நம்முடைய கவனத்தைத் திருப்பும் என்று.
 
கடந்த ஒரு வாரமாகவே டெல்லியில் உள்ள ஊடகங்கள் கசாப்பை உடனே தூக்கிலிடச் சொல்லி பிரசாரம் நடத்துகின்றன. கசாப்  உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நாளும் அவருக்காகச் செலவிடப்படும் தொகை குறித்த புள்ளிவிவரங்கள், மரண தண்டனை நிறைவேற்றுநர்களின் பேட்டிகள், அடுத்து என்ன நடக்கும் என்ற அலசல்கள்... ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் கசாபுக்கு மரண தண்டனை அளிப்பது தொடர்பான செய்திகளுக்குப் பஞ்சம் இல்லை. தொலைக்காட்சி அலைவரிசைகளோ தண்டனையை உடனடியாக நிறைவேற்றத் தடையாக இருக்கும் நம்முடைய சட்டத்தையே திருத்த வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றன. இதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. நம்முடைய ஜனநாயகத்தின் தூண்களில் சில இப்படித்தான் சர்வாதிகாரத்தைக் குழைத்து உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

ஆனால், பொதுத் தளத்தில் முன்னெப்போதையும்விடப் பரவிவரும் மரண தண்டனைக்கு ஆதரவான வெறித்தனமான குரல்களும் கூச்சல்களும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. கசாப்புக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி எம்.எல். தஹலியானியின் தீர்ப்பு வாசகங்கள் நினைவுகூரத்தக்கவை: 'கசாபுக்கு வாழ்வதற்கான உரிமை இல்லை. மனிதாபிமானரீதியாக அணுகுவதற்கான தகுதியை அவர் இழந்துவிட்டார். இதுபோன்ற ஒரு நபரைத் தொடர்ந்து உயிரோடு இருக்க அனுமதிக்க முடியாது.''

எவ்வளவு நவீன, நாகரிக அரிதாரத்தை நாம் பூசிக்கொண்டாலும் மனிதாபிமான, ஜனநாயக முகமூடிகளை அணிந்து நின்றாலும் நமக்குள் இருக்கும் நீரோக்களை, கலிகூலாக்களை, ஹிட்லர்களை இத்தகைய சந்தர்ப்பங்கள்தான் அடையாளம் காட்டுகின்றன. மரண தண்டனையை எதிர்த்துக் குரல் கொடுக்கும் ஓர் அரசியல் கட்சியையேனும் பார்க்க முடியவில்லை. வழக்கமாக மரண தண்டனைக்கு எதிராக முழங்குபவர்கள்கூட இப்போது அமைதி காக்கிறார்கள். இந்திய அளவில் மரண தண்டனைக்கு எதிராகப் பெரிய இயக்கமாக உருவெடுத்த - தமிழகத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குத் தண்டனைக்கு எதிராக நடத்தப்பட்ட - இயக்கம் இப்போது என்னவானது?

நண்பர்களே, நாம் மரண தண்டனையை எதிர்க்க வேண்டும். கசாபை அல்ல; கசாபைவிட மேலும் பயங்கரமான குற்றங்களைச் செய்திருக்கக் கூடிய குற்றவாளி ஒருவருக்கு எதிர்காலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் நாம் அதையும் எதிர்க்கவே வேண்டும். ஏன்? கசாப் செய்த அதே தவறை நாமும் செய்துவிடக் கூடாது என்பது மட்டும்தான். அதாவது, கசாபுக்கும் சரி; நம்முடைய அரசுக்கும் சரி... ஓர் உயிரைப் பறிக்கும் உரிமை இல்லை என்பது மட்டும்தான்.

கசாப் ஒரு காட்டுமிராண்டி என்பதிலோ, இப்படிப்பட்ட ஒரு கொடூரமான கொலையாளிக்கு உச்ச பட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதிலோ மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வரலாற்றின் கறுப்புக் காலங் களில் உருவாக்கப்பட்ட, காட்டுமிராண் டித்தனமான மரண தண்டனை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று கூறப்படும் இந்தியாவில் இன்னமும் தொடர நாம் அனுமதிக்கக் கூடாது. இந்தத் தருணத்தில் உலகிலேயே அமைதியான நாடுகளில் ஒன்றான நார்வேயில் கடந்த ஆண்டு 77 பேரைச் சுட்டுக்கொன்ற வலதுசாரி பயங்கரவாதி ஆண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரெய்விக்கை கசாப்புடன் நாம் ஒப்பிடலாம். நார்வே வரலாற்றிலேயே மோசமான கொலை யாளி ப்ரெய்விக். பிடிபட்ட பின், ''இன்னும் அதிகமானோரைக் கொல்ல முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்'' என்று பேசியவர். கடந்த வாரம் நீதிமன்றம் அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அறிவித்தபோது மரண தண்டனைக்கு எதிராக நார்வேக்காரர்கள் சொன்ன நியாயம் இதுதான்: ''ப்ரெய்விக் பைத்தியக்காரனாக இருக்கலாம்; ஒட்டுமொத்த நார்வேவும் அப்படி இருக்க முடியாது!''

மரண தண்டனை மட்டுமே குற்றங்களைக் குறைக்கும் என்ற வாதம் காலாவதியாகி நீண்ட காலம் ஆகிவிட்டது. உலகில் ஏறத்தாழ 140 நாடுகள் மரண தண்டனையைக் கைவிட்டுவிட்டன. இந்தியாவையே எடுத்துக்கொண்டால், தேசியக் குற்ற ஆவணக் காப்பகப் புள்ளிவிவரங்களின்படி, நாம் ஏராளமான மரண தண்டனைகளை விதித்த 1970-1980-களைவிட மரண தண்டனைகளைக் குறைத்துவிட்ட கடந்த 20 ஆண்டுகளில் இங்கு நடந்து இருக்கும் கொலைகளின் விகிதாசாரம் குறைவு.

ஆனால், ஒருபுறம் மரண தண்டனைகளை எப்படித் தொடர்கிறோமோ, அதேபோல், இன்னொருபுறம் விதிக்கப்பட்ட மரண தண்டனை குறைக்கப்படுமா அல்லது நிறைவேற்றப்படுமா என்ற பரிதவிப்புச் சித்ரவதைத் தண்டனையை வேறு தொடர்கிறோம் நாம். மரண தண்டனை விதிக்கப்பட்டு, நாளை தன் நிலை என்ன என்று தெரியாமல் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக குர்மித் சிங்கைப் போன்ற ஒரு குற்றவாளி காத்திருப்பதும் கருணை மனுக்களுக்கு கருணையே காட்டாத கலாம் போன்ற ஒரு குடியரசுத் தலைவர், 'மக்களின் குடியரசுத் தலைவர்’ என்ற பெயரோடு தன் ஆட்சிக் காலத்தை முடித்து விட்டுச் செல்வதும் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.

பயங்கரவாதம் போன்ற ஒரு பிரச்னையில் மரண தண்டனை மாற்றங்களை உருவாக்கிவிடும் என்று நாம் நம்பினால், அது அறிவீனம். மும்பை தாக்குதலையே எடுத்துக்கொள்ளுங்கள். ஏறத்தாழ அது ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல். கொலை யாளிகள் இங்கு தற்கொலையாளிகளாகவே வந்தார்கள். யோசித்துப் பாருங்கள், மரணத்துடனேயே இப்படி வருபவர்களை மரண தண்டனை எந்த அளவுக்கு அச்சுறுத்திவிடும்? ஆனால், கசாப் தூக்கிலிடப்பட்டால், காலத்தைக் கடந்த குற்ற உணர்வை நாம் சுமக்கப்போகிறோம் என்பது நிச்சயம். மேலும் ஓர் எளிய நீதி போதும், நாம் மரண தண்டனையை ஒழிப்பதற்கு: 'ஒரு கொலை எக்காரணத்தைக் கொண்டும் இன்னொரு கொலைக்கான நியாயம் ஆகிவிடாது!’

சமஸ்

 

1 comment: