வரலாற்றைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளவும்,
முடியாதபோது அதை அழித்து ஒழித்துவிடவுமே அதிகாரம் விரும்புகிறது.
வரலாற்றைத் திருத்தி எழுதும் முயற்சிகளுக்குத் தடையாக இருப்பவை புராதனச்
சின்னங்களும், கல்வெட்டுக்களும், அகழாய்வுச் சான்றுகளுமே ஆகும். ஆகவே,
அவற்றை அழித்துவிட்டால் விரும்பியபடி ஒரு வரலாற்றை உருவாக்கிக்கொள்ளலாம்
என்ற எண்ணம் அரசியல் உலகில் இருக்கிறது. ஆனால், ஊதினால் உடைந்துவிடும்
நீர்க்குமிழி போல, வரலாறு எளிதாக மறைந்துவிடாது.
வரலாற்றை ஆய்வு செய்வது என்பது உண்மையைக் கண்டறியும் ஒரு பரிசோதனை.
வரலாற்றைப் புரிந்துகொள்ள அறிவியல்பூர்வமான சிந்தனையும், திறந்த மனதும்,
கூர்மையான அவதானிப்புகளும், தொடர்ந்த தேடுதலும் வேண்டும். வரலாற்றுச்
சின்னங்களை அறிந்துகொள்வதிலும் பராமரிப்பதிலும் எப்போதுமே அலட்சியமாகவே
இருக்கிறோம். வரலாறு என்பது பெருமை அடித்துக்கொள்வதற்கு மட்டுமே நமக்குத்
தேவைப்படுகிறது.
மனிதப் பண்பாட்டின் வளர்ச்சி பற்றியோ, இந்தியாவின் சமூக, கலாசார,
பொருளாதார நிலைகள் எப்படிக் காலம்தோறும் மாறி வந்திருக்கின்றன என்பதைப்
பற்றியோ, பண்பாட்டு வரலாற்றைப் புரிந்துகொள்ளுதல் குறித்தோ,
பெரும்பான்மையினர் அக்கறை காட்டுவதே இல்லை. கலைப் பொருட்களைத் திருடி
விற்பது, கல் குவாரிகள், முறையற்ற பராமரிப்புப் பணிகள், ஆக்கிரமிப்பு,
அலட்சியமாக உடைத்தெறிவது எனப் பல்வேறு மோசமான செயல்பாடுகளால் நம் தேசிய
முக்கியத்துவம் வாய்ந்த அரிய ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள்,
பட்டயங்கள், கலைப் பொருட்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை கண் முன்னே
அழிக்கப்பட்டு வருகின்றன.
மத்திய அகழ்வாய்வுத் துறை, இந்தியா முழுவதும் 3,685 இடங்களைப் புராதன
நினைவுச் சின்னங்களாகப் பராமரித்துவருகிறது. தமிழகத்தில் 411 இடங்கள்
இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் பாதுகாப்பில் இருக்கின்றன. ஆனால்,
இவற்றை முறையாகப் பாதுகாக்க போதிய காவலர்கள் கிடையாது. நேரடியாகப்
பார்வையிடச் செல்பவர்கள் அங்கே அடிப்படைத் தகவல்களைக்கூட அறிந்துகொள்வது
சிரமம். தொல்லியல் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல்,
வகைப்படுத்துதல், பகுப்பாய்தல், பேணிக் காத்தல் ஆகியவையே தொல்லியல்
துறையின் முக்கியப் பணிகள். கட்டடக் கலை, தொல் பொருட்கள், தொல்லுயிர்களின்
எச்சங்கள், மனித எலும்புகள் மற்றும் நிலத் தோற்றங்கள் உள்ளிட்ட எஞ்சிய
பொருட்களை முறையாக வெளிக்கொணர்ந்து ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்வதன்
மூலம் மனிதப் பண்பாட்டு வளர்ச்சியை அறிந்துகொள்வதற்கு அகழ்வாய்வுத் துறை
உதவி செய்கிறது.
இன்னமும் முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்படாத புராதன இடங்கள், இந்தியாவில்
நிறைய இருக்கின்றன. அவற்றில் அகழ்வாய்வு மேற்கொள்ளப் போதுமான நிதி
ஒதுக்கப்படவில்லை என்று தொல்லியல் துறை கூறுகிறது. அதே நேரம்,
கண்டறியப்பட்ட வரலாற்று உண்மைகள் பலவும் இன்றும் முறையாகக்
கவனப்படுத்தப்படவில்லை. உதாரணமாக, சிந்து சமவெளி பற்றிக் குறிப்பிடும்போது
மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா மட்டுமே முன்னிறுத்தப்படுகின்றதே அன்றி ஹரப்பா
நாகரிகத்தைச் சேர்ந்த லோதல், அடையாளம் காட்டப்படுவது இல்லை.
இதற்கு முக்கியக் காரணம் மார்டிமர் வீலர். அவர்தான் சிந்து சமவெளி
பற்றிய வரலாற்றுக் கவனத்தை ஏற்படுத்தியவர். மொகஞ்சதாரோ, ஹரப்பா இரண்டை
மட்டுமே பிரதானமாகக்கொண்டு சிந்து சமவெளி நாகரிகம் பற்றி மார்டிமர் வீலர்
ஆய்வு செய்தார். ஆகவே, அவரது ஆய்வுகளின் வழியாக முன்வைக்கப்பட்ட
கருதுகோள்களை அப்படியே பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இந்தியக் கல்வித் துறை
தனதாக்கிக்கொண்டது. அதுதான் முக்கியக் கோளாறு.
சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியத் தொல்லியல் துறை சிந்து சமவெளி
நாகரிகம் குறித்து தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கியது. காரணம் மொகஞ்சதாரோ,
ஹரப்பா போன்ற தொல் நகரங்கள் இந்தியப் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்குப்
போய்விட்டன. ஆகவே, இந்தியா தனது புராதனத்தை அடையாளம் காட்டும் நினைவுச்
சின்னங்களை தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கியது. ராஜஸ்தான் மற்றும்
குஜராத்தில் நடந்த இந்தக் கள ஆய்வில் கனேரிவாலா, ராக்கிகார்ஹி காலிபங்கன்,
ரூபர், தோலவீரா, லோதல் என ஆறு முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டன. இவை, ஹரப்பா
காலகட்டத்தைச் சேர்ந்தவை. சிந்து நதிக் கரையில்தான் நாகரிகம் பிறந்தது
என்ற பொதுக் கருத்துருவாக்கத்தை இந்தக் கண்டுபிடிப்புகள் மாற்றி அமைத்தன.
காரணம், இவை சிந்து நதிக் கரையில் இல்லை. சபர்மதி மற்றும் நர்மதா ஆற்றில்
அமைந்து இருக்கின்றன. ஹரப்பா நாகரிகம் பல ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு
விரிந்து பரந்து இருந்திருக்கிறது என்ற புதிய வெளிச்சத்தை இந்தக்
கண்டுபிடிப்புகள் உலகுக்கு அறிவித்தன.
இந்த ஆய்விடங்களில் லோதல் மிகவும் தனித்துவமானது. காரணம், இது ஒரு துறைமுக
நகரம். கப்பல் கட்டுமானம் மற்றும் கடற்சார் வணிகத்தில் இந்தியா முன்னோடியாக
விளங்கியதற்கு லோதலை சாட்சியாகக் கூறுகிறார்கள். அகமதாபாத் மாவட்டத்தில்
உள்ள தோல்கா தாலுகாவின் சரகவாலா கிராமத்தின் அருகே லோதல் உள்ளது. லோதல்
என்றால், மரண மேடு என்று அர்த்தம். 1955-ம் ஆண்டு குஜராத்தில் உள்ள லோதலில்
எஸ்.ஆர்.ராவ் தலைமையில் ஒரு குழு அகழ்வாய்வு அப்போது, அங்கே ஒரு பழைமையான மேடு, அழிந்துபோன நகரத்தின் மிச்சங்கள் மற்றும் ஒரு சந்தை இருந்த இடம் ஆகியவை கண்டறியப்பட்டன.
லோதல், அன்றே ஒரு தொழில் நகரமாக இருந்திருக்கிறது. மணி மாலை செய்வது,
கடல் சிப்பி, சங்குகளில் கலைப் பொருட்களைச் செய்தல், அணிகலன்களை
உருவாக்குவது, இரும்புக் கருவிகளைச் செய்வது, சுடுமண் கலயங்கள்
உருவாக்குவதுபோன்ற பணிகள் நடைபெற்று இருக்கின்றன. வெண்கலம் பிரதானமாகப்
பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு கண்டெடுக்கப்பட்ட அம்புகள், கத்திகள்,
அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் யாவும் வெண்கலத்தில்
செய்யப்பட்டு இருக்கின்றன.
லோதலின் முக்கிய இடம் அதன் படகுத் துறை. மிக நீளமான படகுகளை லோதல்
மக்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். அங்கே இருந்து, கப்பலில் வணிகப்
பொருட்கள் சுமேரியா வரை சென்றிருக்கிறது. கடலில் இருந்து நீரோடை வழியாகப்
படகுகள் நகருக்குள் வந்து செல்லும்படி நகரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
கடலின் ஏற்ற இறக்கத்தைச் சாதகமாகக்கொண்டு படகுகள் உள்ளே வருவதும்
வெளியேறுவதற்கும் வழி செய்யப்பட்டு இருப்பதே இதன் தனித்துவம்.
மொகஞ்சதாரோ, ஹரப்பா இரண்டின் அழிவுக்குப் பிறகும், பல ஆண்டு காலம் லோதல்
செழுமையாக வளர்ந்தோங்கி இருந்திருக்கிறது. இயற்கைச் சீற்றமே அதன்
அழிவுக்குக் காரணமாக இருந்திருக்கும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
லோதலில் கண்டறியப்பட்ட சுடுமண் கலயங்கள் தனித்துவம்கொண்டவை. அவை, லோதலுக்கு
என்றே ஓவியம் தீட்டப்பட்ட சுடுமண் கலயம் உருவாக்கும் முறை ஒன்று
இருந்திருப்பதைக் காட்டுகிறது. லோதலில் கண்டெடுக்கப்பட்ட பாத்திரம் ஒன்றில்
ஒரு மரத்தில் காகம் இருப்பதுபோன்றும், அதன் அடியில் நரி காத்துக்கிடப்பது
போலவும் ஓவியம் இருக்கிறது. இது, பஞ்ச தந்திரக் கதையின் ஒரு வடிவமாக
இருக்கக்கூடுமோ என்று கருதுகின்றனர். லோதலில் செய்யப்பட்ட பாசி மாலைகள்,
அணிகலன்களுக்கு வெளிநாட்டில் பெரிய வரவேற்பு இருந்திருக்கிறது.
லோதல் பகுதியில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட
காரணத்தால், வெள்ளத்தில் சேதம் அடையாத வண்ணம் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு
இருக்கிறது. செங்கல் கட்டடங்கள்கொண்ட இந்த ஊர், மூன்று பிரிவாக
அமைந்துள்ளது. நகரை ஆள்பவர்கள் ஒரு புறத்தில் தனியாக வசித்து
இருக்கின்றனர். இன்னொரு பக்கம், சந்தை போன்ற வணிகப் பகுதி. சந்தையை ஒட்டி
இரு பக்கமும் குடியிருப்புகள் காணப்படுகின்றன.
துறைமுகப் பகுதியே நகரின் பிரதானம். அங்கே, பொருட்களை ஏற்றி இறக்கவும்
பாதுகாத்துவைக்கவும் உரிய வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. நகர வீதிகள்
அளவு எடுத்தாற் போல கச்சிதமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இது, முறையான
நகர நிர்வாகம் இருந்திருப்பதைக் காட்டுகிறது. வீடுகளில் குப்பைகளைப்
போட்டுவைப்பதற்கு எனத் தனித் தொட்டிகள் இருந்திருக்கின்றன. அலை
எழுச்சியின்போது நகருக்குள் புகுந்துவிடும் தண்ணீரை வெளியேற்றும் வசதிகள்,
பொதுக் குளியல் அறை மற்றும் முறையான சுகாதார ஏற்பாடுகள் காணப்படுகின்றன.
சிந்து சமவெளியில் காணப்படுவது போலவே இங்கும் செங்கற்களின் அளவு ஒன்று போல
இருக்கிறது. அதுபோலவே, எடைக் கற்கள், கருவிகள், முத்திரைகள், அணிகலன்களின்
அளவு போன்றவையும் சிந்து சமவெளியின் தொடர்ச்சியே லோதல் என்பதை நிரூபணம்
செய்கின்றன.
No comments:
Post a Comment