Search This Blog

Friday, September 21, 2012

கூடங்குளம் இன்று - ஒரு கேள்வி பதில்! - ஓ பக்கங்கள், ஞாநி


கூடங்குளத்தில் இத்தனை நாட்களாக அமைதியாகப் போராடி வந்த மக்கள் திடீரென்று அணு உலைக்குள் நுழைய முற்பட்டதனால்தானே வன்முறை ஏற்பட்டது?

இல்லை. இது தவறான பிரசாரம். இடிந்த கரை மக்கள் அணு உலைக்குள் நுழைய வேண்டுமென்றால், சாலைகள் வழியே கூடங்குளம் பக்கம்தான் செல்ல வேண்டும். அவர்கள் அந்தப் பக்கம் செல்லவே இல்லை. தங்கள் இடிந்தகரை கிராமத்தின் கடற்கரைப் பகுதிக்குத்தான் சென்றார்கள். அந்தப் பகுதிக்கருகே அணு உலையின் சுற்றுச்சுவர்தான் இருக்கிறது. நுழைவு வழி எதுவும் கிடையாது. சுவரையடுத்து கடற்கரை வரை புதர்கள். பின்னர் மணற்பரப்பு. அடுத்து கடல். மணற் பரப்பில் கூடிய மக்கள் அங்கேயே இருந்து முற்றுகைப் போராட்டம் செய்யப் போவதாகத்தான் தெரிவித்தார்கள். அதற்காகப் பந்தல் போடத் தொடங்கினார்கள். அதைக் கண்டு அரசு பயந்தது. இடிந்தகரை லூர்து கோவில் மைதானத்தில் சுமார் 400 நாட்களாக பந்தலில் உண்ணாவிரதமிருந்தது போல இங்கேயும் தொடர்ந்து உட்கார்ந்துவிடப் போகிறார்களே என்ற பயத்தில் அவசர அவசரமாக தடியடி, கண்ணீர்ப் புகை பயன்படுத்தி மக்களை அடித்து விரட்டியது.

அணு உலையை முற்றுகை இடுவது என்பது வன்முறையில்லையா?

இல்லை. அவர்கள் உலை வளாகத்துக்குள் நுழையப் போவதாகச் சொல்லவில்லை. முயற்சிக்கவும் இல்லை. வெளியே உட்கார்ந்து தர்ணா செய்வது என்பது ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறவழி முறை. 

பெண்களையும் குழந்தைகளையும் முன்னே நிறுத்தி கேடயமாக்கி உதயகுமாரும் இதர தலைவர்களும் தப்பித்துக் கொள்வது கோழைத்தனமில்லையா? இது காந்திய அறவழியா?

விருப்பமில்லாதவர்களைக் கொண்டு வந்து முன்னே நிறுத்தினால்தான் தவறு; கோழைத்தனம். ஓராண்டுக்கு முன்னர் இந்தப் போராட்டம் தொடங்கிய நாள் முதல் இதில் கலந்துகொள்வோரில் பெரும்பாலோர் பெண்கள்தான். தங்கள் குடும்பம், அடுத்த தலைமுறைகளின் பாதுகாப்பு பற்றிய கவலையில் அவர்கள் பங்கேற்பது மட்டுமல்ல, ஆண்களையும் அவர்கள்தான் வழிநடத்துகிறார்கள். குழந்தைகளை வீட்டில் தனியே விட்டுவிட்டு வந்து போராடுவது பெண்கள் வழக்கமல்ல. காந்தியின் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் வந்து போராடியது வரலாறு. தாங்கள் நேசிக்கும் தலைவரை போலீசிடமிருந்து காப்பாற்ற முயற்சிப்பது போராடும் சாதாரண மக்களின் இயல்பு. நெருக்கடி நிலையின்போது வரதராஜனைக் காப்பாற்றியது போன்று இன்று உதயகுமாரையும் காப்பாற்றியிருக்கிறார்கள்.  

போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை இல்லாத கடுமையோடு பேசுகிறார்களே?

உண்மையில் ஜெயலலிதா அரசை தன் அடியாளாக நினைத்து மத்திய அரசு நடத்துகிறது. போராடுவோரைக் கொன்றால் கூட காங்கிரசுக்கு மகிழ்ச்சியாகத்தானிருக்கும். ஒரிசாவில் முதல் நாள் போராட்டத்திலேயே ஒரு பெண் போலீசை அடித்து உதைத்த காங்கிரசாருக்கு 400 நாள் அறவழியில் போராடுவோர்தான் தீவிரவாதிகளாகத் தெரிவார்கள்.

அணு உலையில் எரிபொருள் நிரப்பத் தடையேதுமில்லை என்று சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் ஏன் மக்கள் போராடவேண்டும்? மேல் முறையீட்டுக்குச் செல்ல வேண்டியதுதானே?

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது கூடங்குளம் இடிந்தகரை மக்கள் அல்ல. அவர்கள் எப்போதும் களத்தில்தான் அமைதியாகப் போராடி வருகிறார்கள். அவர்களை ஆதரிக்கக்கூடிய அறிவுஜீவி-நேச சக்திகளில் ஒன்றான பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்புதான் வழக்கு தொடுத்தது. அது மேல்முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது. தவிர கடந்த 400 நாட்களாகவே பல அணு உலை தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன. அதனால் மக்கள் அங்கே தொடர் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என்று சொல்லமுடியுமா என்ன? சட்ட ரீதியான போராட்டம் ஒருபக்கமும், களத்தில் அறவழிப் போராட்டம் இன்னொரு பக்கமுமாக நடப்பதில் எந்த முரண்பாடும் இல்லை.

உச்ச நீதிமன்றம் சொன்னால் ஒப்புக்கொண்டு விடுவார்களா?

என்ன சொல்லும் என்பதைப் பொறுத்தது அது. உச்ச நீதிமன்றம் சொல்லும் தீர்ப்பு மக்களுக்கு ஏற்கத்தக்கதாக இல்லையென்றால் தொடர்ந்து போராடுவதில் என்ன தவறு? பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை இல்லாத தாக்குவதற்காக, அரசாங்கங்கள் தீர்ப்பு வந்த பின் சட்டங்களைத் திருத்தியிருக்கின்றன. காவிரி நீர் பங்கீடு பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இன்றுவரை கர்நாடக அரசு மதித்து நிறைவேற்றவே இல்லையே. ஓர் அரசாங்கமே உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதபோது, அதன் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவும் இல்லையே. ஆனால் சாதாரண மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பாதுகாக்கப் போராடும்போது மட்டும் நீதிமன்றத்தைக் காட்டி மிரட்டுவது நியாயமா? தவிர இந்தப் பிரச்னையில் கீழ் நீதிமன்றம் பல முக்கியமான வாதங்களைப் புறக்கணித்துவிட்டது. அவற்றை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கும் என்ற நம்பிக்கை மக்கள் சார்பில் வழக்கு தொடுப்பவர்களுக்கு இருக்கிறது. 

என்ன விஷயங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும்?
இந்திய அணுசக்தி ஒழுங்குபடுத்தல் வாரியம், உலக அணுசக்தி ஒழுங்குபடுத்தல் முகமை ஆகியவற்றின் விதிகளின்படி அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு முன்பாக, சுற்று வட்டாரப் பகுதிகளில் பேரிடர் மேலாண்மை ஒத்திகைப் பயிற்சிகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கூடங்குளத்தில் ஒரே ஒரு கிராமத்தில் சுமார் 50 பேர் முன்னால் ஓர் உரையை நிகழ்த்திவிட்டு, ஒத்திகைகள் மொத்தமாக நடத்தப்பட்டு விட்டதாக அணுசக்தித் துறை சாதிக்கிறது. 

புகோஷிமா அணு உலை விபத்துக்குப் பின் இந்திய அணுசக்தி ஒழுங்குபடுத்தல் வாரியம் அமைத்த குழு, இனி இந்திய அணு உலைகளில் பின்பற்றவேண்டிய கூடுதல் பாதுகாப்புக்கான வழிமுறைகளை வகுத்தது. மொத்தம் 17 நெறிமுறைகள். அவற்றைக் கூடங்குளத்தில் நிறைவேற்றாமல் அடுத்த கட்டத்துக்குச் செல்லக்கூடாது. அவற்றை நிறைவேற்ற இரு வருடங்கள் தேவைப்படும் என்று வாரியமே சொல்லியிருக்கிறது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் எரி பொருள் நிரப்பும் பணியை வேகமாகச் செய்ய அணுசக்தித்துறை அவசரப்படுகிறது. அதற்கு தமிழக அரசு போலீஸ் உதவியை அளித்து மக்களை ஒடுக்குகிறது. 

அணு உலைகளே வேண்டாம் என்பவர்கள் ஏன் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றிக் கவலைப்படவேண்டும்? தொடர்ந்து உலையை மூடு என்ற போராட்டத்தையே செய்ய வேண்டியதுதானே?

உலையே வேண்டாம் என்பதுதான் சரியான கருத்து. ஆனால் உலை வேண்டும் என்பவர்கள் அக்கறை காட்டவேண்டிய விஷயம் உலையின் பாதுகாப்பு அம்சங்கள். அவர்கள் அதற்குக் குரல் கொடுக்காமல் இருப்பதால், அவர்கள் சார்பில் அவர்கள் நன்மைக்காகவும் சேர்த்து உலை எதிர்ப்பாளர்கள் பேச வேண்டியிருக்கிறது.

உலை பாதுகாப்பானது என்று அப்துல் கலாம் முதல் பல நிபுணர்கள் சொன்னதைக் கேட்டு உலை எதிர்ப்பாளர்கள் கூட மனம் மாறலாம் இல்லையா?

எதிர்ப்பாளர்கள் திறந்த மனதோடு மத்திய அரசின் நிபுணர் குழு, மாநில அரசின் நிபுணர் குழு கொடுத்த அறிக்கைகளை எல்லாம் படித்தார்கள். தங்களுக்கு உதவுவதற்காக, அணு உலைகளை எதிர்க்கும் விமர்சிக்கும் விஞ்ஞானிகளுடன் கலந்தாலோசித்தார்கள். அரசாங்க விஞ்ஞானிகள் கொடுத்த அறிக்கைகள் தொடர்பாக பல கேள்விகளை, சந்தேகங்களை எழுப்பினார்கள். அவற்றுக்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல முன்வரவே இல்லை. எதிர்ப்பாளர்கள் அமைத்த மாற்று விஞ்ஞானிகள் குழுவைச் சந்தித்து விவாதிக்கச் சொல்லியும் அரசு விஞ்ஞானிகள் தயாராக இல்லை. இவையெல்லாம் இல்லாமல் எப்படி வெறும் வாய்ப்பேச்சை நம்பி மக்கள் ஒப்புக்கொள்வார்கள்? விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு? 

அரசும், உலையை நிறுவிய ரஷ்ய கம்பெனியும் தானே பொறுப்பு?
நஷ்ட ஈடு யார்யார் தரவேண்டும், எவ்வளவு தரவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் ரஷ்யாவுடன் மன்மோகன் சிங் அரசு போட்ட ஒப்பந்தத்தை வெளியிடச் சொல்கிறோம். அதை வெளியிட அரசு தொடர்ந்து மறுக்கிறது. இது ராணுவ ரகசியம் அல்ல. ஆனாலும் மறுக்கிறார்கள்.
இப்போது இதெல்லாம் அன்னிய என்.ஜி. ஓ.க்களின் சதி என்று மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே சொல்லுகிறாரே?
இது ஏற்கெனவே நாராயணசாமி ஓராண்டில் பல முறை சொல்லி அடிபட்டுப்போன அவதூறு. சில தொண்டு நிறுவனங்கள் மீது ரெய்டு கூட செய்யப்பட்டது. ஆனால் கடைசியில் நாடாளுமன்றத்திலேயே இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றுதான் அமைச்சர் பதில் சொல்ல வேண்டியிருந்தது.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?

போலீசை வைத்து மக்களை அடித்து நொறுக்கிவிட்டு அணு உலையைத் திறப்பது தான் தீர்வு என்று மத்திய அரசும் மாநில அரசும் நினைக்கின்றன. இது தீர்வு அல்ல. இந்த நினைப்புதான் பிரச்னை.

அப்படியானால் என்ன செய்யவேண்டும்?

முதலில் அறவழியில் போராடிய மக்கள் மீதும் அவர்களைச் சிறப்பாக நெறிப்படுத்திய தலைவர்கள் மீதும் போட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். உச்ச நீதிமன்ற வழக்குகள் முடியும் வரையிலும், பாதுகாப்பு தொடர்பான எல்லா விதிமுறைகளும் பின்பற்றப்படும்வரை, எரிபொருள் நிரப்பி உலையை மேலும் ஆபத்தானதாக ஆக்காமல் நிறுத்த வேண்டும். இரு தரப்பு விஞ்ஞானிகளையும் ஒன்றாக உட்கார்ந்து விவாதிக்கச் செய்ய வேண்டும். இந்திய அணுசக்தித் துறையின் கடந்த காலச் செயல்பாடுகள் பற்றி சுயேச்சையான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். உலக நாடுகள் எல்லாம் அணு உலைகளை மூடி வரும் நிலையில் நமது அணு உலைகள் பற்றிய மறுபரிசீலனையை நேர்மையாகச் செய்யவேண்டும். 

இதையெல்லாம் இந்தக் கூடங்குளம் உலையைக் கட்டுவதற்கு முன்பே செய்திருக்கலாம் இல்லையா?

சுமார் 40 வருடங்களாக இந்தியா வெங்கும் அணு உலை எதிர்ப்பு அறிஞர்கள் சொல்லி வந்ததை அரசு அலட்சியப்படுத்தியது. இடிந்தகரை உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பின்னர்தான் முதல்முறையாக அணுசக்தித் துறை பதில் சொல்லவே ஆரம்பித்திருக்கிறது. 

இந்த எதிர்ப்பை உலை கட்டும் முன்பு ஆரம்பத்திலேயே செய்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று கலைஞர் கருணாநிதி சொல்லியிருக்கிறாரே?

அதைச் சொல்லும் தகுதியே அவருக்குக் கிடையாது. 1987-88 சமயத்தில், அப்போது தினசரி சந்திக்கும் முரஸோலி மாறனிடம் அணு உலைகளின் ஆபத்து பற்றி நானும் நண்பர்களும் எடுத்துச் சொன்னோம். அதையடுத்து அவர் கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்று தி.மு.க செயற்குழுவில் தீர்மானம் போடவைத்தார். அடுத்த சில மாதங்களில் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசின் உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சி, போதிய பாதுகாப்புகளுடன் அணு உலையை ஆரம்பிக்கும்படி மாற்றித் தீர்மானம் போட்டது. மே 1, 1989ல் கலைஞர் முதல்வராக இருந்த போது கன்னியாகுமரியில் அணு உலையை எதிர்த்து மாபெரும் மீனவர் பேரணி நடந்தது. அதில் கலைஞரின் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு மீனவர் இறந்தார். ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்னையை அவர் அணுகிய விதம் இதுதான்.

ஜெயலலிதா அணுகிய விதம் வித்தியாசமானதா?

முதலில் உள்ளாட்சித் தேர்தல்கள், பின்னர் மார்ச் 18 சங்கரன்கோவில் தேர்தல் முடியும்வரை போராட்டத்துக்கு ஆதரவு நிலை எடுப்பது போல சில செயல்களைச் செய்தார். தேர்தல் முடிந்த மறுநாளே மக்கள் மீது போலீஸ் முற்றுகையை ஏவி, பால், குடி நீர், உணவு எதுவும் கிராமங்களுக்குச் செல்லவிடாமல் தடுத்தார். அந்த அணுகு முறையின் அடுத்த கட்டம்தான் செப்டெம்பர் 10 தடியடி. 

இப்போது ஜெயலலிதா என்ன செய்யவேண்டும்?

வாராவாரம் ஊடகங்களைச் சந்தித்து விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல முன்வர வேண்டும். தேர்ந்தெடுத்த சில அதிகாரிகளையும் கட்சிக்காரர்களையும் மட்டுமே சந்திப்பது என்ற பழக்கத்தைக் கைவிடவேண்டும். அசல் உலகம் என்ன என்று அவருக்குத் தெரியாமல் அவரை வைத்திருப்பதில் சில அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் லாபம் இருக்கலாம். ஆனால் நஷ்டம் மக்களுடையது. ஒரு பக்கத் தகவல்கள் மட்டுமே ஜெயலலிதாவுக்குக் கிடைக்கின்றன என்பதும் அதன் அடிப்படையில்தான் அவர் முடிவுகள் எடுக்கிறார் என்பதும் தான் அவரது மிகப்பெரிய பலவீனம். இதிலிருந்து வெளியே வராவிட்டால் அவருக்கு அதிகபட்ச நஷ்டம் அடுத்த தேர்தல் தோல்வி. ஆனால் மக்களுக்கு ஏற்படும் இழப்பு மிக அதிகம். எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து விசுவாசமாக அ.தி.மு.க.வுக்கு வோட்டுப் போடும் மீனவ மக்களின் ஓட்டை, ஜெயலலிதா அணு உலை விவகாரத்தைக் கையாண்ட விதத்திலும்; இடிந்தகரை தாக்கு தலையடுத்தும் இழந்து விட்டார் என்று இப்போதே சொல்லலாம். அதை மனத்தில் வைத்துத்தான் கருணாநிதி, தாக்குதல் நடந்து 48 மணி நேரம் வரை யோசித்துவிட்டு பின்னர், இடிந்தகரை மக்கள் சார்பான அறிக்கையை வெளியிட ஆரம்பித்திருக்கிறார். அடுத்த 25 வருடங்களுக்கு நிச்சயமாக மீனவர் ஓட்டு தனக்கு உறுதிப்பட வேண்டுமென்றால் ஜெயலலிதா செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். போலீஸ் நடவடிக்கைக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, (மக்கள் ரொம்ப நல்லவர்கள்; உடனே மன்னித்துவிடுவார்கள்! ) கூடங்குளம் அணு உலையைக் கைவிடும்படி மத்திய அரசுக்குச் சொல்லவேண்டும். எப்படியும் அதிலிருந்து மின்சாரம் பெரிதாக வந்துவிடப் போவதில்லை. ஓட்டாவது வருகிறமாதிரி பார்த்துக் கொள்ளலாம்.

மற்ற அரசியல் கட்சிகள் என்ன செய்யவேண்டும்?

அணு உலையை இதுவரை ஆதரிக்கும் கட்சிகள் எல்லாரும் நேர்மையாக அணு உலைப் பிரச்னையைப் பரிசீலிக்க வேண்டும். அணு உலை கூடாது என்ற போராட்டத்தை ஆதரிக்கும் கட்சிகள், இயக்கங்கள் எல்லாம் ஒவ்வொரு முறையும் போராடும் மக்கள் மீது அரசு வன்முறை நடந்த பிறகு தெருவுக்கு வந்து குரல் கொடுக்கும் அபத்தத்தைக் கைவிட வேண்டும். செப்டெம்பர் 9 அன்றே இடிந்தகரையில் மக்கள் கடற்கரையில் கூடினார்கள். போலீஸ் சுற்றி வளைத்தது. அன்றே ஆதரவுக் கட்சிகள் எல்லாம் தமிழ்நாடெங்கும் பின்னர் நடத்திய சாலை மறியல், போராட்டம், தர்ணா எல்லாவற்றையும் நடத்தியிருந்தால், நிச்சயம் அரசு செப்டெம்பர் 10 காலை இடிந்தகரை மக்கள் மீது தாக்குதல் நடத்தத் தயங்கியிருக்கும்.No comments:

Post a Comment