‘நான் ஒரு அத்லெட். தினமும் ஆறு மணி நேரத்துக்கும் அதிகமாகப் பயிற்சி
எடுக்கிறேன். காலை முதல் மாலை வரை தொடர்ந்து கிரிக்கெட் ஆடுகிறேன். ஒரு
நாளில் இவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குகிற என்னை எப்படி ஒரு நோய் தாக்கும்?’
என்று
ஆரம்பத்தில் தமக்கு ஏற்பட்ட பிரச்னைகளைச் சட்டை செய்யாமல் இருந்த யுவ்ராஜ்
பெரிய பாதிப்பிலிருந்து தப்பித்து வந்தது அதிர்ஷ்டம். 2011 உலகக்
கோப்பையின்போது யுவ்ராஜ் படாதபாடுபட்டது பெரிய விஷயமாக யாருக்கும்
தோன்றவில்லை. சென்னையில்
நடந்த மேற்கு இந்தியத் தீவுக்கு எதிரான மேட்சில் செஞ்சுரி அடித்தபோது,
களத்திலேயே ரத்த வாந்தி எடுத்து மூச்சுவிடச் சிரமப்பட்டார். ஆனால்
இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து அட்டகாசமாக விளையாடி இந்தியா
உலகக்கோப்பையைக் கைப்பற்ற முதல்
காரணமாக இருந்தார். ‘மேன் அஃப் தி சீரீஸ்’ பட்டம் பெற்றார். அந்தச்
சமயத்தில் தோனிகூட, ‘யுவ்ராஜ் நிறைய வாந்தி எடுத்தார்’ என்று
பேட்டியளித்தார். யாருக்கும் அடுத்து நடக்கப்போவதை யூகிக்க முடியவில்லை.
உலகக்கோப்பை முடிந்த அடுத்த ஐந்தாவது நாள்
ஐ.பி.எல். தொடங்கியது. வழக்கம் போல உடல் உபாதைகளை உதாசீனப்படுத்திவிட்டு
ஐ.பி.எல்.லில் கலந்துகொண்டார். புனே அணிக்காக அதிக ரன்களை அடித்தவர்,
யுவ்ராஜ்தான். நிலைமை மோசமாகவே, அடுத்த ஒரு மாதம் முழுக்க பரிசோதனையிலேயே
கழிந்தது.
ஆனால், யாராலும் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. இந்த வேளையில்,
இங்கிலாந்து டூரிலும் கலந்து கொண்டார். நல்லநேரம். இரண்டாவது டெஸ்டில்
கையில் காயம் ஏற்பட்டதால் டூரிலிருந்து பாதியில் விலகி, ஒழுங்காக
மருத்துவமனைக்குச் செல்ல
ஆரம்பித்தார் யுவ்ராஜ் சிங்.
மருத்துவர்களுக்கே யுவ்ராஜின் உடல் நிலை குறித்து நிறைய குழப்பங்கள்
ஏற்பட்டன. என்னவிதமான நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆறு மாதங்கள்
பரிசோதனையிலேயே கழிந்தன. இறுதியில் லண்டன் மருத்துவரான டாக்டர் ஹார்பர்,
யுவ்ராஜின் நுரையீரலில்
mediastinal seminoma என்கிற அரிதான கேன்சர் கட்டி பரவியிருப்பதாகக்
கண்டுபிடித்தார். கேன்சர் கட்டி ஆரம்ப நிலையில் இருந்ததால், அதை கீமோதெரபி
மூலம் குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறினார்கள். அமெரிக்காவின் இண்டியானா பொலிஸிலுள்ள IU Simon Cancer Centre என்கிற
மருத்துவமனையில் யுவ்ராஜ் சிகிச்சை எடுத்துக் கொண்டார். ‘கீமோ தெரபி
சிகிச்சையில் உட்கொண்ட மருந்துகளால் என் உடல் மிகவும் பலவீனமடைந்தது.
முடியை இழந்தேன். நாளுக்கு
நாள் நிறைய இழப்புகளையும் வேதனைகளையும் சந்தித்தேன். அழுது அழுதுதான் என்
துயரத்தைப் போக்கினேன்’ என்கிறார் யுவ்ராஜ். முதலிரண்டு கீமோதெரபி
சிகிச்சையை வீட்டில் இருந்து மேற்கொண்ட யுவ்ராஜ், மூன்றாவது கீமோதெரபிக்கு
மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது.
சிகிச்சைக் காலத்தில் ஒருநாளைக்கு ஒருமுறைதான் உணவு உட்கொண்டார். 1996ல்
லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் என்கிற சைக்கிள் வீரருக்கு டெஸ்டிகுலர் புற்றுநோய்
பாதிப்பு ஏற்பட்டும், சிகிச்சையினால் குணமாகி, பிறகு, தொடர்ந்து 7முறை
ஐரோப்பிய அளவிலான சைக்கிள்
பந்தயங்களில் வெற்றி பெற்றார். இவருடைய புத்தகமும் ஆறுதல் வார்த்தைகளும்
யுவ்ராஜ்க்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தன. ஆம்ஸ்ட்ராங்குக்கு
மருத்துவம் பார்த்த நிபுணர் குழுதான் யுவ்ராஜ்க்கும் சிகிச்சை அளித்தது.
அமெரிக்காவில்
கும்பிளேவும் லண்டனில் சச்சினும் யுவ்ராஜை நேரில் சந்தித்து உற்சாக
மூட்டினார்கள்.
ஏப்ரலில் இந்தியாவுக்குத் திரும்பினார் யுவ்ராஜ். இனிமேல் வழக்கம் போல
கிரிக்கெட் ஆடலாம் என்று மருத்துவர்கள் சொன்ன விநாடி முதல் சுறுசுறுப்பு
அடைந்துவிட்டார். ஜூன் மாதம் முதல் பெங்களூருவில் உள்ள கிரிக்கெட்
அகாடமியில் கடுமையாகப் பயிற்சி எடுத்தார்.
செப்டெம்பரில் இலங்கையில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் கலந்து
கொள்ளவேண்டும் என்று இலக்கு வைத்துக் கொண்டு திட்டங்களை உருவாக்கினார்.
யுவ்ராஜ் நலம் பெறவேண்டும் என்று வேண்டாத ரசிகர்கள் இல்லை. மத்திய அரசும்
தம் பங்குக்கு, அர்ஜுனா விருது அளித்து
யுவ்ராஜை மேலும் குஷிப்படுத்தியது.
2011 நவம்பர் முதல் எந்த ஒரு கிரிக்கெட் மேட்ச்சிலும் பங்குபெறாமல்
இருந்தார் யுவ்ராஜ் சிங். ஆனால் இப்போது மீண்டும் கிரிக்கெட்
வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார். யூவிகேன் என்கிற ஒரு
புற்றுநோயாளிகளுக்கான சேவை அமைப்பை உருவாக்கியிருக்கிறார். ‘இந்தியாவுக்காக
பன்னிரண்டு
வருடங்கள் ஆடிய காலத்தில் ஒவ்வொரு நாளும் நான் எப்படி விளையாடுவேன்,
மற்றவர்கள் என்னை என்ன நினைப்பார்கள் என்கிற சிந்தனையிலேயே
இருந்துவிட்டேன். பத்திரிகைகளும் விமர்சகர்களும் என்னைப் பற்றி நினைப்பதை
மாற்றவேண்டும், அவர்களுக்கு என் திறமையை நிரூபிக்கவேண்டும்
என்றே எண்ணியிருந்தேன். ஆனால், இப்போது அப்படிப்பட்ட துர்சிந்தனைகளே
என்னிடம் இல்லை. இனிமேல் எந்த ஓர் அழுத்தமும் இல்லாமல், கிரிக்கெட்டை
ரசித்து ரசித்து ஆடப் போகிறேன்,’ என்கிறார் யுவ்ராஜ்.
நம்பிக்கையோடு வந்துள்ளார்... வாழ்த்துவோம்...
ReplyDelete