உங்களுக்கு மீண்டும் ஒரு திறந்த மடல் தீட்டவேண்டிய கட்டாயம் கனிந்திருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், உங்கள் வெற்றி வாய்ப்புக்கான வியூகம் வகுப்பதில், நீங்கள் ஆழ்ந்திருக்கக்கூடும். தேசிய அரசியலில் நீங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வர வேண்டும் என்று விரும்புவதில் தவறு இல்லை. மம்தாவுக்கும் மாயாவதிக்கும் தலைநகர் தில்லியில் கிடைக்கும் முக்கியத்துவம் உங்களைவிட அவர்கள் அறிவார்ந்தவர்கள், ஆற்றல்மிக்கவர்கள் என்பதற்காக இல்லை. கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் கைகளில் இருக்கிறார்கள் என்பதால்தான் அவர்கள் மீட்டும் ராகத்துக்கேற்ப மன்மோகன் அரசு நாட்டியமாடுகிறது.
தமிழக மீனவர் பிரச்னை குறித்து வாரம் ஒரு கடிதம் நீங்கள் வரைந்தாலும், ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வை அடைவதற்கு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் ராஜபக்ஷே அரசைப் போர்க் குற்றவாளியாக உலக நாடுகள் நீதிமன்றத்தில் நிறுத்தவும் இந்திய அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று ஏகமனதாக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினாலும், 'தானே’ புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி கேட்டுக் கோரிக்கை எழுப்பினாலும், இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று வேண்டுகோள் வைத்தாலும், சோனியா காந்தியின் சொற்படி நடக்கும் மத்திய அரசு உங்கள் பக்கம் பார்வையைத் திருப்பத் தயாராக இல்லை.
ஜார்ஜ் பெர்ணான்டஸும், ஜஸ்வந்த் சிங்கும் கூப்பிட்ட குரலுக்குப் போயஸ் தோட்டத்தைத் தேடி வந்ததும்... பிரணாப் முகர்ஜியும் சிதம்பரமும் கருணாநிதி விரும்பிய போதெல்லாம் கோபாலபுரம் நோக்கி ஓடி வந்ததும் உங்கள் இருவர் மீதும்கொண்ட உயர்ந்த மதிப்பீடுகளால் அன்று. அவர்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள உங்கள் ஆதரவு தேவை. அவ்வளவுதான். உங்கள் மதிப்பு கூடுவதும் குறைவதும் உங்களிடம் இருக்கும் எம்.பி-க்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. இங்கு எண்ணிக்கையே ஜனநாயக தர்மம் என்பதை நீங்கள் அறியாதவர் இல்லை. இன்று நாடாளுமன்றத்தில் 9 பேரை வைத்திருக்கும் நீங்கள், வரவிருக்கும் தேர்தலில் 30 இடங்களையாவது கைப்பற்றினால்தான் மத்திய அரசில் உங்கள் மதிப்பு உயரும். அதற்கான வாய்ப்பை உங்கள் ஆட்சி நிர்வாகத்தின் மூலமும், அரசியல் நடவடிக்கைகள் மூலமும் உருவாக்கி வைத்திருக்கிறீர்களா என்று கொஞ்சம் ஆத்ம சோதனையில் ஆழமாக ஈடுபடுங்கள்.
மக்கள் மனங்களில் எம்.ஜி.ஆர். பெற்றிருந்த இடம் பெரிது. அடித்தட்டு மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கு அளப்பரியது. அந்த எம்.ஜி.ஆரே, 1984 சட்டமன்றத் தேர்தலில் அதிகபட்சம் 132 இடங்களைத்தான் பெற முடிந்தது. ஆனால், உங்கள் தலைமையில் அ.இ.அ.தி.மு.க. 1991 தேர்தலில் 163 இடங்களில் வெற்றிக் கனியைப் பறித்துப் புதிய வரலாறு படைத்தது. உங்கள் கூட்டணி 224 தொகுதிகளைக் கைப்பற்றிக் கருணாநிதியைக் கலங்கடித்தது. அதற்குக் காரணம், ராஜீவ்காந்தியின் ரத்தம் இந்த மண்ணில் சிந்தியதுதான் என்பதை உங்களால் மறுக்க முடியாது. சென்ற சரித்திரம் மீண்டும் திரும்பியது. உங்கள் கூட்டணி 2011 தேர்தலில் 203 இடங்களைப் பெற்றது. இரட்டை இலை 150 தொகுதிகளில் வெற்றித் தோரணம் கட்டியது. ஆண்ட தி.மு.க. அடியோடு தடம் புரண்டு, மாண்டு மண்ணில் சாய்ந்து விட்டதோ என்று அனைவரும் வியந்தனர். இந்த மாற்றத்துக்கும் நீங்கள் காரணம் இல்லை. தி.மு.கழகம் தன் தலையில் தானே கொள்ளி வைத்துக்கொண்டது என்பதுதான் உண்மை.
கருணாநிதியின் குடும்ப அரசியலையும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருடைய குட்டித் தம்பிரான்கள் அடித்த கூட்டுக் கொள்ளையையும் சகிக்க முடியாத மக்களின் கோபம்தான் உங்கள் கூட்டணிக்கு ஆதரவான காற்றாக அலை வீசியது. சென்னையில் 16 தொகுதிகளில் 14 இடங்களை நீங்கள் பெற்ற அதிசயம் அரங்கேறியதற்கு மக்களின் மாளாத சினம்தான் முழு முதற்காரணம். கருணாநிதி மீதிருந்த எதிர்ப்பும், அவரது கழகத்தின் மேல் படிந்த வெறுப்பும்தான் உங்களை ஆட்சியில் அமர்த்தின. ஆனால், கடந்த கால ஆட்சியில் நிகழ்ந்துவிட்ட தவறுகளில் இருந்து நீங்கள் முழுமையாகப் பாடம் பெறவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
மூன்றாவது முறை நீங்கள் முதல்வரான பிறகு, ஈழத் தமிழர் விவகாரத்தில் மிகச்சரியான அணுகு முறையை மேற்கொண்டதில் உலகத் தமிழர் அனை வரும் உள்ளம் மகிழ்ந்தனர். முல்லை பெரியாறு பிரச்னையில் நீங்கள் காட்டிய கண்டிப்பும், சட்ட பூர்வமாக மேற்கொண்ட முயற்சிகளும் உங்கள் அரசியல் ஆளுமையை அற்புதமாக வெளிப்படுத்தின. கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் தாரை வார்த்த கச்சத்தீவை மீண்டும் தமிழர் பெறுவதற்கு உச்ச நீதி மன்றத்தை நாடி நிற்கும் உங்கள் நடைமுறை உத்தி விவேகம் நிரம்பியது. எப்போது ஆட்சி நாற்காலியில் அமர்ந்தாலும் காவிரி நீரைப் பெறுவதில் நீங்கள் காட்டும் தீவிரம் பாராட்டுக்கு உரியது. மாநில உரிமைகளுக்காக மத்திய அரசுடன் மோதல் போக்கை மேற்கொள்ளும் உங்கள் போர்க்குணம் புகழத்தக்கது. ஆனால், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு இவை மட்டும் போதுமா? யோசியுங்கள்.
ஏறிய விலைவாசி இன்று வரை இறங்கவே இல்லை. விண்ணைத் தொட்ட விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் முழுப்பொறுப்பு என்றால், கடந்த ஆட்சியில் நீங்கள் கருணாநிதியைக் குறை கூறியிருக்கக் கூடாது. ஆட்சிக்கு வந்து ஆறு மாதங் களில் மின்பற்றாக்குறை முற்றாகத் தீர்ந்துவிடும் என்றீர்கள். ஆனால், மின்தடையின் கடுமை கொஞ்சமும் குறையவில்லை. காற்றாலைகளும் உங்களைக் கைவிடும்போது நிலைமை மிகவும் கவலைக்குரியதாகி விடும். இதை நீங்கள் பூரணமாகப் புரிந்துவைத்திருப்பதனால்தான் கூடங்குளம். அணுமின் நிலையம் குறித்து உங்கள் கருத்தை மாற்றிக்கொண்டீர்கள். ஆனால், எதிர்ப்பாளர்களைக் களத்தில் நேரில் சந்தித்து, அவர்களுடைய அச்ச உணர்வைப் போக்க நீங்கள் ஏன் முயலவில்லை? அவர்களும் உங்களுக்கு அதீத நம்பிக்கையுடன் வாக்களித்தவர்கள்தானே! வன்முறையின் உச்சத்தில் மனித ரத்தம் ஆறாக ஓடிய நவகாளியில் செருப்பும் அணியாமல் முள் நிறைந்த பாதைகளில் தடி ஊன்றி ஒற்றை மனிதராய் தனித்து நடந்து மத நெருப்பைத் தணிவித்த மகாத்மா வலம் வந்த பொதுவாழ்வில் ஒரு முதலமைச்சர் மக்களைச் சந்திக்கத் தயங்குவது எந்த வகையில் சரியானது?
உங்கள் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப்படும் என்ற தோற்றமும் இன்று பொய்த்துப் போனது. முதல்வரானதும் நீங்கள் அளித்த முதல் நேர்காணலில் 'கொள்ளையர் அனைவரும் ஆந்திராவின் பக்கம் அடைக்கலமாகி விட்டனர்’ என்று, சிரித்தபடி சொன்னீர்கள். ஆனால், கொலையும் களவும் மாநிலம் முழுவதும் இன்று பரவிவிட்டதைப் பார்த்தால், ஓடிப் போனவர்கள். தங்கள் கூட்டாளிகளுடன் மீண்டும் திரும்பி விட் டார்களோ என்று திகைப்பு எழுகிறது.
மாண்புமிகு முதல்வரே... நீங்கள் ஆட்சியில் அமர்ந்து இரண்டு ஆண்டுகள் முடிவதற்குள் பரமக்குடியிலும் கூடங்குளத்திலும் இரண்டு முறை துப்பாக்கிச்சூடு நடந்து மொத்தம் ஏழு மனித உயிர்கள் பறிக்கப்பட்டு விட்டன. பூவைப் பறிப்பதற்குக் கோடரி தூக்குபவரை நல்ல தோட்டக்காரர் என்று எப்படிச் சொல்ல முடியும்? பரமக்குடி துப்பாக்கிச் சூடு, தலித் வாக்காளர்களின் ஆதரவைக் கேள்விக்குறியாக்கி விட்டது. கூடங்குளம் துப்பாக்கிச் சூடு, மீனவர்கள் மன உணர்வைக் காயப்படுத்தி விட்டது.
பொதுப்பணித் துறையில் இருந்து கல்வித் துறை வரை ஊழல் அரக்கனின் நீள்கரங்கள் ஆக்கிரமித்து இருப்பதை நீங்கள் அறியவில்லையா?
விலைவாசி குறையவில்லை; மின்தடை நீங்கவில்லை; சட்டம் - ஒழுங்கு நிறைவைத் தர வில்லை; ஊழலற்ற நிர்வாகம் நடக்கவில்லை; விமர்சனங்களை வரவேற்கும் ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை. இந்த மோசமான சூழலிலும் தி.மு.கழகம் உயிர்த்தெழுவதைப் பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை. விரும்பி வாக்களிப்பது என்ற நிலையில் இருந்து விடுபட்டு, வேறு வழி இல்லாமல் வாக்களிப்பது என்ற நிலையில் மக்களை நீங்கள் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறீர்கள். இந்த இடத்தில்தான் உங்கள் நடவடிக்கைகளை நீங்கள் தவறாமல் மறுவாசிப்பு செய்ய வேண்டும்.
மாயாவதியிடம் 21 எம்.பி-க்கள், மம்தாவிடம் 19 எம்.பி-க்கள், முலாயம் சிங் யாதவிடம் 23 எம்.பி-க்கள், கருணாநிதியிடம் 18 எம்.பி-க்கள் இருப்பதால் தான், அவர்கள் தயவை மன்மோகன் அரசு நாடுகிறது. நீங்களோ ஒற்றை வரிசையில் 9 பேரை வைத்திருக்கிறீர்கள். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி, சங்கரன்கோவில், புதுக்கோட்டை இடைத்தேர்தல்களில் கையாண்ட செயல்முறைகள் செல்லுபடியாகாது. தேசிய அரசியல் சதுரங்கத்தில் நீங்கள் நினைத்தபடி காய்களை நகர்த்த விரும்பினால், பெரும்பான்மை மக்கள் ஆதரவை நீங்கள் பெற்றாக வேண்டும். அதற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டிய மந்திரக்கோல்தான் மதுவிலக்கு அறிவிப்பு.
உங்களுக்குப் பிடித்த மனிதர் மோடியின் குஜராத்தைப் போல் தமிழகத்தை மதுவிலக்கு மாநில மாக நீங்கள் மாற்ற வேண்டும்.
மக்கள் நலனில் நாட்டம் உள்ள எந்த அரசும் மதுவை விற்க முன்வராது. எம்.ஜி.ஆர். டாஸ்மாக்கின் கதவுகளைத் திறந்தபோது அரசின் வருவாய் 183 கோடி ரூபாய். இன்று உங்கள் ஆட்சியில் 20 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. மதுவின் மீது விதிக்கப்படும் விற்பனை வரி, கலால் வரி மூலம் அரசுக்கு வரும் வருவாய் மட்டும் 20 ஆயிரம் கோடி என்றால், டாஸ்மாக் விற்பனை எத்தனை ஆயிரம் கோடி இருக்கும் என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். சாராயத்தில் ஈட்டுவது பாவத்தின் சம்பளம் அல்லவா! குடிக்கத் தூண்டுவது அரசு; குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவரைத் தண்டிப்பதும் அதே அரசு என்றால், எவ்வளவு போலித்தனம் முதல்வரே!
இன்று 13 வயது பையன் குடிக்கிறான். கல்லூரி மாணவன் கைகளில் மதுக் கோப்பையுடன் காட்சி தருகிறான். ஏழையும் பாழையும் சாராயம் குடித்துச் சாக்கடையோரம் சரிந்து கிடக்கிறார்கள். எந்த வீட் டிலும் நிம்மதி இல்லை. வாகன விபத்துகள் அதிகரிக்க எது காரணம்? குடும்ப உறவுகள் குலைந்துபோவது எதனால்? விவாகரத்துகள் கூடிவிட்டதற்கு அடிப்படை எது? கூலித் தொழிலாளர்கள் குடல் வெந்து கிடப்பது எந்தக் கொடுமையால்? ஏழ்மை நிரந்தரமாக ஒவ்வொரு வீட்டிலும் பாய் போட்டுப் படுத்துக் கிடப்பது எதனுடைய தயவால்? இவை எல்லாவற்றுக்கும் காரணம் மது அல்லவா? தாய்மை உணர்வோடு இந்த இழிவைச் சந்தியுங்கள்!
அன்பு கூர்ந்து மதுக்கடைகளை மூடுங்கள். அரசு வருவாய்க்கு மாற்று வழி தேடுங்கள். வரி சீர்த்திருத்தத்தில் கவனம் செலுத்துங்கள். அரசு 300 ரூபாய்க்கு அளிக்கும் ஒரு யூனிட் மணல், கடைகளில் 3,000 ரூபாய்க்கு விற்கப்படும் விபரீதத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். மதுவை விற்பதை விட மணலை நேரடியாக விற்பனை செய்யுங்கள். கிரானைட் கொள்ளைக்காரர்களிடம் கையூட்டு பெற்றுக் களியாட்டம் போட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள். இயற்கை அன்னையின் மடி சுரண்டும் மனிதர்களிடம் கருணை காட்டாது கைவிலங்கு பூட்டுங்கள். மது வருவாய் இல்லாத குஜராத் மாநிலத்தில் மோடி உபரி பட்ஜெட் போட முடியும் என்றால், உங்களால் மட்டும் ஏன் முடியாது?
கருணாநிதி கட்டி முடித்த அண்ணா நூலகத்தை இழுத்து மூடினால் அது 'காழ்ப்பு அரசியல்’ என்று விமர்சிக்கப்படும். மதுவின் நிறமும் மணமும் அறியாத ஒரு தலைமுறையின் உயர்நிலைப் பண்பாட்டை மதுக் கடைகளைத் திறந்ததன் மூலம் பாழ்படுத்தியவர் கருணாநிதி. அவர் திறந்துவைத்த மதுக்கடைகளை நீங்கள் மூட முடிவெடுத்தால் தமிழின வரலாற்றில் உங்கள் நடவடிக்கை பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும். லாட்டரி சீட்டுக்குத் தடைவிதித்த நீங்கள் மதுக்கடைகளையும் தயக்கமின்றி மூடத் துணியுங்கள். தமிழகத்தில் 4.59 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் சரிபாதி பெண்கள். ஆண்கள் வாக்குகள் கட்சி சார்ந்து பிரியக்கூடியவை. பெண்கள் ஒரே உணர்வுடன் வாக்களிக்கும் வழக்கம் உள்ளவர்கள். மதுக் கடைகளை மூடினால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பெண் வாக்காளர்கள் ஒரு தேவதைக்கு வாக்களிக்கும் மகிழ்ச் சியுடன் உங்களுக்கு வாக்களிப்பார்கள்.
அன்பிற்கினிய முதல்வரே... உங்கள் ஆட்சியில் சில நிறைகளும் உண்டு; பல குறைகளும் உண்டு. லண்டன் மாநகரைப் பற்றிப் பாடும் போது‘with all they faults still I love thee’ என்றான் பைரன். மதுக் கடைகளை நீங்கள் மகாத்மா பிறந்த நாளிலோ, பின்னரோ விரைந்து மூட முடிவெடுத்தால், தமிழகத்துப் பெண் மக்கள் அனைவரும் பைரனைப் போல் உங்கள் ஆட்சியை ஆயிரம் குறைகளையும் மீறி நேசிக்கத் தொடங்கி விடுவார்கள். நீங்களும் சூளுரைத்தபடி தகுதிமிக்க தமிழுலகின் இசை மேதைகள் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருதை எளிதில் பெற்றுத் தரும் அளவுக்குத் தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அசைக்க முடியாத ஆளுமையாக உயர்ந்து விடுவீர்கள். இந்த எளியவனின் அரிய ஆலோசனைக்கு உரிய மதிப்பளித்தால், உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது. எவரிடத்தும் எனக்கொன்றும் ஆகப்போவது எதுவும் இல்லை; ஆக வேண்டிய அவசியமும் இல்லை. உள்ளதைச் சொல்கிறேன். இந்த மண்ணின் நலனுக்காக உண்மையைச் சொல்கிறேன்.
என்றும் நிறம் மாறாத நிஜமான அன்புடன்
தமிழருவி மணியன்
No comments:
Post a Comment