Search This Blog

Friday, September 21, 2012

எனது இந்தியா ( சந்தால் எழுச்சி ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

இந்தியாவில் உள்ள ஆறு கோடிக்​கும் அதிகமான பழங்குடி மக்கள் இன்றும் இரண்டாம் தரக் குடிமக்க​ளாகத்​தான் நடத்தப்படுகின்றனர். நூற்றாண்டுகளாகவே அவர்களுக்கு அடிப்​படை உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுகின்றன.

கோலி இனத்தின் போராட்டம், தோமார்களின் எழுச்சி, மிசிமி, சிங்போ இனங்கள் பிரிட்டிஷ் அதிகாரத்தை எதிர்த்துச் செய்த கலகம் மற்றும் காசி, முண்டா, நாகா, மக்களின் போராட்டங்கள், கோண்டு, லூசி இனத்தவர் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் என்று, காலனிய ஆட்சிக்கு எதிராகப் பழங்குடி இன மக்கள் நடத்திய 50-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் மிக முக்கியமானவை.

முதல் இந்திய சுதந்திரப் போர் எனப்படும் சிப்பாய் எழுச்சிக்கு 100 ஆண்டு​களுக்கு முன்பே, பிரிட்டிஷ் அதிகாரத்துக்கு எதிராகப் பழங்குடி மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுவிட்டது. 1771-ல், சந்தால் இனத்தைச் சேர்ந்த தில்கா மஞ்ஜியின் போராட்டம், அன்று நிலவிய ஜமீன்தார்களின் வன்கொடுமைகளுக்கு எதிராக மட்டுமின்றி அவர்களுக்குத் துணை நின்ற பிரிட்டிஷ் அதிகாரத்துக்கும் எதிராகவே நடந்தேறியது. பிரிட்டிஷ் அதிகாரிகளால் தில்கா மஞ்ஜி கைது செய்யப்பட்டு குதிரை வாலில் கட்டித் தொங்கவிடப்பட்டு  ஓடஓட விரட்டிக் கொல்லப்​பட்டார். இந்தச் சம்பவம், சந்தால் மக்களிடையே பிரிட்டிஷ் அதிகாரத்​துக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியது.



1885-ல் ஏற்பட்ட சந்தால் பழங்குடி மக்களின் எழுச்சியும், 1899-ல் ஏற்பட்ட பிர்சா முண்டாவின் தலைமையிலான முண்டா எழுச்சியும் இந்திய சுதந்திரப் போரின் முக்கிய அடித்தள நிகழ்வுகள்.

இந்தியாவில் 68 மில்லியன் பழங்குடி மக்கள் வசிப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில், 31 பேர் மட்டுமேகொண்ட ஜார்வா பழங்குடியும் இருக்கிறது. 70 லட்சம் மக்கள்கொண்ட கோண்டு பழங்குடி இனமும் இருக்கிறது. இந்தியா​வின் எல்லா மாநிலங்களிலும் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். வனத்தில் விளையும் பொருட்களைக் கொள்ளை​யடிப்பது, மரங்களை வெட்டி விற்பது, நில அபகரிப்பு, ஆதிவாசிப் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் என அதிகார வர்க்கம் தனது சுயநலத்துக்காக பழங்குடி மக்களின் வாழ்க்கையை சூறையாடிவருகிறது.

நிலக்கரி, அலுமினியம், தாமிரம் மற்றும் இரும்புத் தாதுக்களைத் தோண்டி எடுத்து விற்பதற்காக, பன்னாட்டு நிறுவனங்கள், பழங்குடி இன மக்களைக் காட்டில் இருந்து வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. வெளியேற மறுப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குகின்றனர். இந்த வாழ்வுரிமைப் போராட்டங்களால், பழங்குடி மக்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரிக்கப்படும் சூழல்.

இந்தியப் பழங்குடி மக்களில் 55.2 சதவிகிதம் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். 40.1 சதவிகிதம் பேர் காட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். 76 சதவிகித மக்களுக்கு முறையான வீடுகள் கிடையாது. 53.1 சதவிகிதம் பேர் முறை​யான குடிநீர், மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்​படுகின்றனர். 53 சதவிகிதம் பேருக்கு இன்னமும் கல்வி கிடைக்கவில்லை என்கிறது பழங்குடி இன மக்களைப் பற்றிய ஓர் ஆய்வு அறிக்கை.

இந்திய வரலாற்று நூல்களில்கூட, சமூக மேம்​பாட்டுக்குப் பழங்குடி மக்கள் அளித்த பங்களிப்பு பற்றிய முறையான பதிவுகள் இல்லை. அவர்களைக் காட்டுமிராண்டிகளைப் போல சித்திரிக்கும் மேற்கத்திய வரலாற்று ஆய்வுகளையே நாமும் தொடர்ந்து பயன்படுத்திவருகிறோம். இந்தியாவில் உள்ள பழங்குடி இனத்தில் மூன்றாவது பெரிய இனம் சந்தால். அஸ்ஸாம், பீகார், ஜார்கண்ட், ஒரிஸ்ஸா, திரிபுரா மற்றும் மேற்கு வங்காளத்தில் சந்தால் இன மக்கள் வசிக்கின்றனர். இதில், பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் ஜார்கண்ட். இந்த மாநிலத்தில் சந்தால், ஒரான், முண்டா, கரியா, கோண்டு எனப் பல்வேறு இனங்களைச் சேர்ந்த பழங்குடிகள் வசிக்கின்றனர். 18 மாவட்டங்களைக்கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில், சந்தால் பர்கானா எனப்படும் மாவட்டத்தில்தான் இவர்கள் அதிகம் வசிக்கின்றனர். அந்த மாவட்டமே அடர்ந்த வனப் பகுதி, பாரம்பரியமாக சந்தால் இன மக்கள், வேட்டை​யாடுதல் மற்றும் விவசாயம் செய்பவர்கள். இவர்களின் பரம்பரை நிலங்களை 1793-ம் ஆண்டில் ஜமீன்தார்கள் பறித்துக்கொண்ட காரணத்தால், ராஜ்மகால் மலைப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். அந்த நிலம், சாயம் பயிரிடத் தேவை என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அங்கிருந்தும் துரத்தினர். அதோடு, ரயில் பாதை அமைப்பதற்காக பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமங்கள் காலி செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இன்னொரு பக்கம், பழங்குடி மக்களை நாகரிகம் ஆக்குவதாகச் சொல்லி மத மாற்றம் செய்வதற்காக கிறிஸ்துவ மிஷனரிகள் மலைக்குள் வந்து தங்கி, அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். எந்தக் காட்டு மிருகத்துக்கும் பயப்படாத பழங்குடி இன மக்கள், நகரங்களில் இருந்து காட்டுக்குள் வந்த மனிதர்களைப் பார்த்து பயந்து நடுங்கினர். காரணம், எந்த மிருகமும் நம்பிக்கைத் துரோகம் செய்வது இல்லையே!

மொகலாயர்கள் ஆட்சியின்போது, வரி வசூல் செய்வதற்காக ஜமீன்தாரி முறை அறிமுகம் செய்யப்​பட்டது. இரண்டு கிராமங்களில் இருந்து 200 கிராமங்கள் வரை உரிமை பெற்ற 500-க்கும் மேற்பட்ட ஐமீன்தார்கள், இந்தியா முழுவதும் இருந்தனர். அவர்களில் பலர் தாங்களாகவே ராஜா எனப் பட்டம் சூட்டிக்கொண்டனர். சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் மன்னரால் ஆளப்பட்ட ராஜ்ஜியங்கள் 572 இருந்தன. ஜமீன்தார்கள், உயர் சாதி நிலப்பிரபுகள் மற்றும் கந்து வட்டிகாரர்களின் கொடுமை, இடைத்தரகர்களின் வன்முறை, நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை எனப் பலமுனைத் தாக்குதல்களுக்கு உள்ளான பழங்குடி மக்கள், அடிமைகளைப் போல வாழும் நிலை உருவானது.

ஜமீன்தார்கள், பிரிட்டிஷ் அதிகாரிகளின் விசு​வாசி​களாக இருந்த காரணத்தால், அவர்கள் செய்யும் முறைகேடுகளை பிரிட்டிஷ் ஆட்சி கண்டு​கொள்ளவில்லை. மேலும், பழங்குடி மக்கள் நீதிமன்றத்தை அணுகி நியாயம் கேட்க முடியாது என்பது ஜமீன்தார்களுக்கு சாதகமாக அமைந்தது. சோட்டா நாகபுரியில் உள்ள அமரபாரா என்ற இடத்​தில் கேனா ராம் பகத் என்ற வட்டிக் கடைக்காரன், பழங்குடி மக்களை உறிஞ்சி வாழ்ந்து வந்தான். அவனது கொடுமைகளைத் தாங்க முடியாமல் பீர்சிங் என்பவர், இனிமேல் தன்னால் வட்டி தர முடியாது என்று மறுக்கவே, அவரை குரூரமாக அடித்து உதைத்து சங்கிலியால் கட்டி சித்ரவதை செய்தான் ராம்பகத். இந்தச் சம்பவத்தால் கொதிப்படைந்த சந்தால் இன மக்கள் திரண்டு, ராம் பகத்தைத் தாக்கினர். அதுதான், சந்தால் எழுச்சியின் முதல் புள்ளி. இந்தச் சம்பவம் அதுவரை உள்ளுக்குள் கோபத்துடன் ஒடுங்கிக்கிடந்த சந்​தால் மக்களை ஆவேசத்துடன் எழுச்சிகொள்ளச் செய்தது.
 தங்கள் நிலத்தை அபகரித்துக்கொண்டவர்களை, தங்களது மனைவி பிள்ளைகளை கொத்தடிமை ஆக்கிய​வர்களை, வரி கேட்டு வதைக்கும் நிலப்​பிரபுக்களை, தாங்களே நேரடியாகத் தண்டிக்க வேண்டும், இழந்த உரிமைகளை மீட்க வேண்டும் என்று பழங்குடிகள் வீறுகொண்டு எழுந்தனர். அதன் விளைவு, சந்தால் மக்களை அடிமைப்படுத்திவைத்திருந்த ஜமீன்தார்கள், வட்டிக் கடைக்காரர்கள், நிலப்பிரபுக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்றன. ரயில்வே கான்ட்ராக்டர்கள் தாக்கப்பட்டனர். ஜமீன்தார்கள், வட்டிக் கடை முதலாளிகள் மற்றும் போலீஸ்​காரர்கள் கொல்லப்பட்டனர். தங்கள் இனத்துப் பெண்​களைப் பாலியல் கொடுமை செய்த ரயில்வே இன்ஜீனியர்​களைத் தேடித் தேடிக் கொன்றனர். இதனால், தபால் மற்றும் சாலைப் போக்குவரத்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.

இந்த எழுச்சிக்கு, ராஜ்மகால் மாவட்டத்தில் உள்ள பாகா தீகி கிராமத்தைச் சேர்ந்த முர்மு சகோதரர்கள் தலை​மை வகித்தனர். சிந்து முர்மு தலைமையில் அவரது தம்பிகள் கானு முர்மு, பைரவ் முர்மு, சாந்த் முர்மு ஆகியோர் சேர்ந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்தால் இன மக்களைத் திரட்டினர். 1885-ம் ஆண்டு ஜுன் 30-ம் தேதி போராட்டம் தொடங்கியது. அது, இரண்டு மாதங்களில் காட்டுத் தீ போல வேகமாகப் பரவியது. சாந்தால் இன மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நிலப்பிரபுகளுக்கும் பிரிட்டிஷ் அதிகாரத்துக்கும் எதிராகப் போராடினர். ஜமீன்தார்கள் தங்களது அடியாட்களைக்கொண்டு, சந்தால் மக்களை எளிதாக ஒடுக்கிவிடலாம் என்று நினைத்தனர். ஆனால், வில்லும் அம்பும் ஏந்திப் போரிடும் சந்தால் மக்களின் முன், ஜமீன்தார்களின் அடியாட்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.  ஆகவே, ஜமீன்தார்கள் தங்களைக் காப்பாற்றும்படி பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் முறையிட்டனர். வனவாசி​களின் எழுச்சியை ஒரு சிறிய கலகம் என்று நினைத்த பிரிட்டிஷ் அரசு, அதை ஒடுக்குவதற்காக சிறிய படைப் பிரிவு ஒன்றை அனுப்பியது. ஆனால், சந்தால் மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத அந்தப் படை, காட்டைவிட்டுத் தப்பி ஓடி வந்தது.

1855-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி தொடங்கப்பட்ட சந்தால் எழுச்சியை ஒடுக்க 1855-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி பிரிட்டிஷ் அரசு ராணுவச் சட்டம் ஒன்​றைப் பிரகடனம் செய்தது. இந்தச் சட்டம், 1856-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி வரை கிழக்கு இந்தியாவில் நடைமுறையில் இருந்தது.



No comments:

Post a Comment