Search This Blog

Friday, September 28, 2012

சாய்னா நேவால்


லண்டன் ஒலிம்பிக்ஸ் நடக்கவிருந்த சமயத்தில் சாய்னா நேவாலுக்கு கோக் போன்ற பெரிய விளம்பர வாய்ப்புகள் வந்தன. ஆனால், அப்போது ஒலிம்பிக்குக்காக எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டார். ரித்தி ஸ்போர்ட்ஸ் என்கிற நிறுவனம் ரூ. 40 கோடிக்கு சாய்னா நேவாலை 3 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. லண்டன் ஒலிம்பிக்ஸில், வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னாவின் விளம்பர ஒப்பந்தத்தை ஏற்கெனவே நிதி நெருக்கடியில் இருக்கும் டெக்கான் குழுமம் புதுப்பிக்கவில்லை. இதனால், இப்போது சாய்னாவை ஒப்பந்தம் செய்துள்ளது ரித்தி ஸ்போர்ட்ஸ். 

உலக அளவில் ஆண்/பெண் பேட் மிண்டன் வீரர்களில் அதிகம் சம்பாதிக்கும் வீரர் என்கிற பெருமையும் சாய்னாவுக்குத் தான். விளம்பரங்களில் சல்மான் கான், தோனி, சச்சின், கோலி போன்ற பிரபலங்கள் தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்சாய்னா. இன்றைய நிலவரப்படி, வருடத்துக்கு தோனி ரூ. 70 கோடியும் சச்சின் ரூ. 40 கோடியும் கோலி ரூ. 30 கோடியும் விளம்பரம் மூலமாக சம்பாதிக்கிறார்கள். முன்பு டெக்கானிடமிருந்து வருடத்துக்கு ஒன்றரை கோடி மட்டுமே பெற்று வந்தசாய்னாவுக்கு, இனி மேல் வருட வருமானம் கிட்டத்தட்ட ரூ. 14 கோடி. ஒலிம்பிக் சாதனைக்காக சமீபத்தில், ஆந்திரா பேட்மிண்டன் சங்கம்,சாய்னாவுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்தது. அதிகம் சம்பாதிக்க கிரிக்கெட், டென்னிஸ் போன்ற புகழ்பெற்ற விளையாட்டுகளில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் சாய்னா. 

பேட்மிண்டனுக்கு ஆந்திரா அளித்துவரும் கொடைகளுக்கு அளவே இல்லை. ஏற்கெனவே சாய்னா, காஷ்யப், ஜூவாலா கட்டா என நடப்பு பேட்மிண்டன் வீரர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இப்போது, இன்னொரு ஆந்திரப் பெண்ணான 17 வயது பி.வி. சிந்து, அதிரடியான வெற்றி மூலம் பேட்மிண்டன் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். சென்ற வாரம், சைனா மாஸ்டர்ஸ் போட்டியில், லண்டன் ஒலிம்பிக் சாம்பியனைத் தோற்கடித்திருக்கிறார் சிந்து. ‘சானா நேவால் போல சிந்துவாலும் சர்வதேச அரங்கில் தொடர்ந்து சாதிக்கமுடியும்’ என்று நம்பிக்கை அளிக்கிறார் அவருடைய பயிற்சியாளர் கோபி சந்த். ஒலிம்பிக் வீராங்கனையைத் தோற்கடித்து, உலக அளவில் 20வது இடத்தைப் பிடித்திருக்கிறார் சிந்து.  

இந்திய டென்னிஸில் நிலவும் சர்ச்சைகள் நாகரிகமான எல்லையைத் தாண்டிச் சென்றுவிட்டது. இந்திய டென்னிஸ் சங்கத்தை (ஏஐடிஏ) மதிக்கவில்லை, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயஸுடன் இணைந்து ஆடவில்லை என்பன போன்ற காரணங்களால் சமீபத்தில் நடைபெற்ற டேவிஸ் கோப்பைப் போட்டியில் மகேஷ் பூபதி, பொபண்ணா ஆகியோர் சேர்க்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகாலம் இந்தியாவின் சார்பில் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இருவரையும் 2014 ஜூன் 30 வரை இந்திய அணிக்குத் தேர்வு செய்யமாட்டோம் என்று டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) அறிவித்தது. ஆரம்பத்தில் லியாண்டர் பெயஸுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த மகேஷ் பூபதி, இப்போது டென்னிஸ் சங்கத்தின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளார். ஏஐடிஏ தலைவர் அனில்கண்ணா மீது பூபதி வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் அதிரடியாக உள்ளன.

இந்திய டென்னிஸ் சங்கம் இதுவரை ஓர் உருப்படியான வீரரைக் கூட உருவாக்கவில்லை. எல்லோரும் சொந்தத் திறமையால மேலே வந்திருக்கிறோம். ஆனால், மோசமான நிர்வாகத்தால் ரமேஷ் கிருஷ்ணன், லியாண்டர் என பல வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஏஐடிஏவின் தலைவர் அனில் கண்ணா மோசமான அரசியலை நடத்தி வீரர்களிடையே மோதலை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார். லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடர்பான சர்ச்சைகளில், லியாண்டரும் பூபதிக்குமிடையே மோதல் என்றுதான் எல்லோரும் செய்தி வெளியிட்டார்கள். ஆனால், அதன் பின்னால் இருந்த அரசியலை யாரும் கண்டுகொள்ளவில்லை. என்னுடன் சண்டை போட லியாண்டரைப் பயன்படுத்துகிறார். ஏஐடிஏ என்னை என்ன செய்தாலும், அதையெல்லாம் தாண்டி என்னால் சிறப்பாக விளையாட முடியும். லண்டன் ஒலிம்பிக்ஸில், நானும், பொபண்ணாவும் தோற்றபோது, ஏராள மானோர் அதைக் கொண்டாடினார்கள். இது, இந்தியாவின் எதிர்கால டென்னிஸையே அழித்துவிடும்.  

நான் நாடு முழுவதும் டென்னிஸ் மைதானங்களை அமைத்து போட்டிகளை நடத்தி வருகிறேன். டென்னிஸ் அகாடமிகளை திறந்து வருகிறேன். அது மக்களிடையே பேசப்பட்டது. ஆனால், தனியாகச் செய்ய வேண்டாம். சேர்ந்து செய்யலாம் என்றார் அனில் கண்ணா. நான் செய்கிற எல்லா காரியங்களுக்கும் அவர் பெயர் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்." கடந்த இருபது வருடங்களாக இந்திய டென்னிஸ் என்றால் அது லியாண்டரும் பூபதியும்தான். இவர்களுக்கு மாற்றாக இன்னமும் ஒரு வீரர்கூட உருவாகவில்லை என்பதுதான் நிஜம். 

ஏற்கெனவே லியாண்டருக்கும் பூபதிக் குமிடையே பல பிரச்னைகள். இப்போது அனில் கண்ணாவின் அரசியல் வேறு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வீரர்களுக்கு மதிப்பளிக்கும், புதிய வீரர்களை உருவாக்கும் நிர்வாகிகளால் இந்திய டென்னிஸை சரிவிலிருந்து காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால், இந்திய ஹாக்கிக்கு நேர்ந்த கதிதான் டென்னிஸுக்கும் ஏற்படும்.

No comments:

Post a Comment