Search This Blog

Thursday, July 25, 2013

ஜெயலலிதா ஃபார்முலாவாக ஜெயிக்கும் ஃபார் முலாவா?

தனித்த பயணத்துக்குத் தயாராகி விட்டார் ஜெயலலிதா!
 
வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்துப் போட்டி யிடுவது என்ற தனது முடிவில்  உறுதியாக நிலைகொண்டுவிட்டார் ஜெயலலிதா!

''நாம் யாரையும் சார்ந்திருக்க முடியாது. வேறு எத்தனையோ கட்சிகள் அப்படி இருக் கலாம். அவர்கள் தேசியக் கட்சியைச்சார்ந்து இருக்கலாம். சில பெண்கள் இளம் வயதில் அப்பாவைச் சார்ந்திருப்பார்கள். வளர்ந்ததும்  கணவனைச் சார்ந்திருப்பார்கள். வயதானதும் பிள்ளைகளைச் சார்ந்திருப்பார்கள். என்னைப் போன்ற பெண்களும் உள்ளனர். நான் யாரையும் சார்ந்து இல்லை. நல்லது, கெட்டதை நானே முடிவு செய்து கொள்கிறேன்.  

தேசிய அரசியலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கூட்டணிகள் உள்ளன. சில கட்சி கள்காங்கிரஸோடும் சில கட்சிகள் பாரதிய ஜனதாவோடும் கூட்டு சேர்கின்றன. ஆனால், அ.தி.மு.க. தனித்தே நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. நம் எதிர்காலத்தை நாம் தான் உருவாக்க வேண்டும். நாம், வரும் தேர் தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸைச் சார்ந் திருக்க முடியாது. தமிழகத்தின் உரிமையைப் பெற 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மத்தி யில் அதிகாரத்தை நாம் உருவாக்கிக்கொள்ள முடியும்'' - இப்படி அ.தி.மு.க. பொதுக் குழுவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா பேசினார். இப்படி தைரியமாகச் சொல்லி விட்டாரே தவிர, அறிவிப்புக்குப்பிறகுதான் அவருக்குத் தயக்கம் அதிகம் ஏற்பட்டது.


ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பைப் பார்த்து அதிகமாக மகிழ்ச்சி அடைந்தவர் கருணாநிதி. அந்தக் காலகட்டத்தில் அவருடன் காங்கிரஸ் நெருக்கமாக இருந்தது. கருணாநிதியை விஜய காந்தும் நெருங்கிக்கொண்டிருந்தார். தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. ஆகிய மூன்றும் இணைந் தால், அது பலமான கூட்டணியாக அமையும், தனித்து நிற்கும் ஜெயலலிதாவை வீழ்த்தலாம் என்பது அவரது நினைப்பாக இருந்தது. இந்த நிலையில், 'நாம் தப்புக்கணக்கு போட்டு விட் டோமோ’ என்று கூட ஜெயலலிதா நினைத்தார். அதனால்தான் மதுவிலக்கு நடைப்பயணத்தில்  இருந்த வைகோவை, வலிய வழி மறித்து எதுவுமே தெரியாதவராக, 'எதுக்காக நடைப் பயணம்?’ என்று கேட்டார். 'மீண்டும் ஜெயலலிதா கூட்டணி அமைக்கலாம்’  என்று ஒருபுறம் பேச்சு கிளம்பிய நிலையில், மறுபுறம்  கருணாநிதியும் பலவீனம் அடைய ஆரம்பித்தார்.

ஈழத் தமிழர் பிரச்னை, தி.மு.க-வுக் கும் காங்கிரஸுக்குமான ஐக்கியத்தைக் குலைத்தது. நேரம் கெட்ட நேரத்தில் காங்கிர ஸைக் கழற்றிவிட்டு, டெசோவுக்கு உயிரூட்ட வேண்டிய நிலைக்கு கருணாநிதி தள்ளப்பட் டார். விஜயகாந்துடன் மட்டும் அணி சேர லாம் என்று கருணாநிதி நினைத்திருந்தார். மாநிலங்களவைத் தேர்தலில் விஜயகாந்த் தனது மச்சானை எம்.பி. ஆக்கத் துடிக்க, கருணாநிதி தனது மகளை எம்.பி. ஆக்க நினைக்க... அங்கும் நேரடியாக மோதும் சூழல். இதனை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டு கருணாநிதியுடன் மீண்டும் ஒட்டிக்கொண்டது. 'நாங்கள் கூட்டணி சேரவில்லை’ என்று இப்போதைக்கு கருணாநிதி சமாளித்தாலும், அவருக்கு வேறு வழியே இல்லை, காங்கிரஸு டன் சேர்வதைத் தவிர!இப்படிப்பட்ட நிலையில் தனது ஐந்தாவது வேட்பாளரை வெற்றி பெறவைக்க வாய்ப்பு இல்லாமல் போனதால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அந்த இடத்தைக் கொடுத்து,  அவர் களது நன்மதிப்பை ஜெயலலிதா வாங்கிக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடத்தை விட்டுக்கொடுத்ததைவைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட்களை தனது அணியில் ஜெயலலிதா சேர்த்துக் கொள்வார் என்று சிலர் நினைக்கிறார்கள்.''இல்லை. அவர்களோடு நட்பு பாராட்ட மட்டுமே ஜெயலலிதா நினைக்கிறார். தேர்தல் கூட்டணி வைக்க மாட்டார். தேர்தலுக்குப் பிறகு நடக்க இருக்கும் அரசியல் காய் நகர்த்தல்களுக்கு கம்யூனிஸ்ட்கள் பயன்படுவார்கள் என்பதற் காகத்தான் ஒரு ராஜ்யசபாவை டி.ராஜாவுக்கு விட்டுக்கொடுத்தார்'' என்று சொல்லப்படுகிறது. வைகோவை நடைப் பயணத்தில் வலியப்போய் பார்த்தவர் ஜெயலலிதா. ஆனால், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது சம்பந்தமாக வைகோ விடுத்த ஓர் அறிக்கைக்கு வேளாண் துறை அமைச்சர் தாமோதரர் விட்ட அறிக்கையில், வைகோவை மிகக் கடுமையாக விமர்சித்தார். பொதுவாக அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு அறிக்கைவிடும் அதிகாரம் எல்லாம் வழங்கப்படவில்லை. அதுவும் இன்னொரு கட்சித் தலைவருக்கு எதிராக, அதுவும் கூட்டணிக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படும் வைகோவுக்கு எதிராக தாமோதரன் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்றால், ஜெயலலிதா அதன் மூலமாக ஏதோ சொல்ல விரும்புகிறார் என்று அர்த்தம். மேலும், அவரது அணியுடன் கைகோத்து நின்ற மனிதநேய மக்கள் கட்சியும் புதிய தமிழகமும் கனிமொழியை ஆதரிக்கும் வாய்ப்பாக தி.மு.க. பக்கம் தாவியது பற்றிய எந்த வருத்தமும் ஜெயலலிதாவின்செயல்பாட்டில் இல்லை. அவரே வழியனுப்பியதுபோல நடந்துகொண்டார். மொத்தத்தில், 'யாரும் இல்லாமல், தனித்துப் போட்டி!’ என்ற இறுதி முடிவை அவர் எடுத்துவிட்டுத்தான் இப்படிச் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது.

ஜெயலலிதா இரண்டு முடிவுகளை எடுத்து வைத்திருந்தார். ஒன்று தேசிய அளவில் அமையும் பாரதிய ஜனதா அணியில் சேர்வது அல்லது கம்யூனிஸ்ட்கள் அமைக்கும் மாற்று அணியில் பங்கேற்பது. பாரதிய ஜனதா அணியில் சேர்ந்தால், தமிழகத்தில் சிறுபான்மையினர் வாக்குகளை இழக்க வேண்டிவரும். மேலும், அந்தக் கட்சியின் வாக்கு சதவிகிதம் மிகவும் சொற்பம். கம்யூனிஸ்ட்கள் நம்மோடு சேர்ந்தால் கூடுதல் பிரசார பலம் கிடைக்குமே தவிர, மற்றபடி அவர்கள்தான் இரண்டு தொகுதிகளில் நம்மால் ஜெயிப்பார்கள் என்பது ஜெயலலிதாவின் எண் ணம். 'தனித்து நிற்பதன் மூலமாக அ.தி.முக-வுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்பதையாவது நாம் தெரிந்துகொள்ளலாமே?’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளார் ஜெயலலிதா. கடந்த இரண்டு வாரங்களாக அவருடைய எண்ணவோட்டம் இப்படித்தான் இருப்பதாகச் சொல்கிறார்கள்.அதனால்தான் கொடநாடு சென்ற ஜெயலலிதா, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைத் திட்டங்களை வகுக்க ஆரம்பித்துவிட்டார். 40 தொகுதிகளுக்குமான அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்பதை இறுதிப்படுத்தத் தொடங்கி விட்டார். இந்த முறை வேட்பாளர்களாக அறிவிக்கப்படுபவர் மீது எந்தப் புகாரும் எழக் கூடாது என்று நினைக்கிறார். மாவட்டச் செய லாளர்கள் மீது இதுவரை வந்த புகார்களை அமைச்சர் கே.பி. முனுசாமியும், அமைச்சர்கள் மீதான புகார்களை அமைச்சர் நத்தம் விஸ்வ நாதனும், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் பற்றிய புகார்களை அமைச்சர் வைத்தியலிங்கமும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா. இந்த மூவரையும் கண்காணிக்கும் பொறுப்பு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வசம். இவர்கள் அ.தி.மு.க. பிரமுகர்களில் மிகச் சரி யான ஆட்களை அடையாளம் காட்டுவார்கள் என்றும், அந்தப் பட்டியலை வைத்து வேட்பாளரை ஜெயலலிதா முடிவுசெய்வாராம். ஜெயலலிதா தயாரிக்கும் வேட்பாளர்கள் பற்றி அதன் பிறகு உளவுத் துறையும் விசாரிக்குமாம். இத்தனை அக்னிப் பரீட்சைகளையும் தாண்டி வருபவரைத்தான் தேர்தல் களத்தில் நிறுத்த வேண்டும் என்பது ஜெயலலிதாவின் எண்ணம்!  

'கருணாநிதி கஜானாவை காலியாக வைத்துச் சென்றார். அந்த நிலைமையிலேயே நம்மால் இவ்வளவு சாதனை செய்ய முடிந்துள்ளது. இந்தச் சாதனைகளைப் பிரசாரம் செய்ய வேண்டும். நல்ல வேட்பாளரை நிறுத்த வேண்டும். மற்றபடி வேறு யார் தயவும் தேவை இல்லை’ என்பதை எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஃபார்முலாவாக ஜெயலலிதா நம்புகிறார். ஆனால், இது ஜெயிக்கும் ஃபார் முலாவா என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது.

மேலும், அதிகப்படியான எம்.பி-க் கள் பெற வேண்டும் என்பதைவிட, பிரதமர்  ஆசையும் கடைக்கோடியில் இருப்பதால், கயிற்றின் மீது நடக்கும் சாகசத்துக்குத் தயாராகிவிட்டார் ஜெயலலிதா!  

ப.திருமாவேலன்

1 comment:

  1. நல்ல அலசல் கட்டுரை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete