சுயநலமில்லாமல், கட்சி நலம், பொது நலத்துக்கு மட்டுமே பாடுபடும் எம்.எல்.ஏ., எம்.பி.யாக இருக்க
நீங்கள் விரும்பினால், முதலில் குடும்பம் உங்கள் வருவாயை நம்பியிராத அளவுக்காவது உங்களுக்குப் பணவசதி இருக்க வேண்டும்.
எனக்கு எம்.எல்.ஏ., எம்.பி., கவுன்சிலர்... பதவிகளே வேண்டாம். வட்டச்
செயலாளர், நகரச் செயலாளர் அளவில் மக்களுக்குச் சேவை செய்கிறேன் என்று
சொல்லுகிறீர்களா? அது சாத்தியம்தானா? பார்ப்போம். ஒரு வட்டச் செயலாளராக
நீங்கள் இருந்தால் காலையில் தூங்கி எழுந்தவுடன் வாசற் கதவைத் திறந்தால்,
உங்கள்
உதவிக்காக நிச்சயம் ஏழெட்டுப் பேராவது காத்திருப்பார்கள். மகனை அநியாயமாக
போலீஸில் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள் என்று கதறுகிற குடிசைவாசி அம்மா
முதல், தன் தெரு முழுவதும் பாதாளச் சாக்கடை நிரம்பி வழிந்து தன் வீட்டுக்
கழிப்பறைக்குள் நுழையவே முடியவில்லை என்பதை ஆங்கிலத்தில் வாசகர் கடிதம்
எழுதித்
தயாராக வைத்திருக்கும் ரிட்டையர்ட் பெரியவர் வரை பலதரப்பட்ட பிரச்னைகளுடன்
அவர்கள் காத்திருப்பார்கள்.
ஒரு சராசரி நாளில் ஒரு முறையாவது போலீஸ் ஸ்டேஷன், தாசில்தார் அலுவலகம்,
ரேஷன் கடை, மாநகராட்சி மண்டல அலுவலகம் முதலியவற்றுக்கு நீங்கள்
இந்தப் பிரச்னைகளுக்காகச் சென்றுவர வேண்டியிருக்கும். தவிர ஃபோனில்
ஏழெட்டு அதிகாரிகளுடன் மன்றாட வேண்டியிருக்கும். எந்தப் பிரச்னையும் ஒரே
நாளில் தீர்ந்துவிடும்
வாய்ப்பு இல்லையென்பதால், முன்தினப் பிரச்னைகளுடன் வந்தவர்களின் ஃபாலோ அப்
வேலைகளும் அடுத்த நாள் புது வேலைகளுடன் சேர்ந்துகொள்ளும்.
தினசரி ஒவ்வொரு இடத்துக்கும் பஸ்சில் போய் வந்தால், கால்வாசி வேலை கூட
முடியாது. வாழ்க்கையில் பாதி நேரத்தை பஸ்சில்தான் கழித்திருப்பீர்கள்.
நிச்சயம் ஆட்டோவாவது
தேவை. உங்களுடன் வருகிற கட்சிக்காரர், பிரச்னையில் அவதிப்படுபவர் என்று
மூன்று பேராவது இருப்பீர்கள். ஒரு நாளில் மூன்று முறையாவது காபி/ டீ/சோடா
ஏதாவது
குடிக்காமல் இருக்கவும் முடியாது. இந்த ஆட்டோ, டீ செலவுகளுக்கும் உங்கள் சாப்பாட்டுக்கும் உங்களை
நம்பியிருக்கும் குடும்பத்தின் தேவைக்கும் எங்கிருந்து சம்பாதிப்பீர்கள்?
இந்த வேலைகளை முழு நேர
அரசியல்வாதியாக / சமூக சேவகராக இல்லாமல் செய்ய முடியாது. வேறு
தொழிலிலிருந்து கணிசமான வருமானம் வந்தாக வேண்டும். அல்லது உங்கள் குடும்பம்
நேர்த்திக்
கடனாக உங்களை அரசியலுக்கு எழுதிவிட்டிருக்க வேண்டும். இன்றைய நிலையில் கணக்கிட்டால் இந்தச் செலவுகளுக்கெல்லாம் தினசரி 500 ரூபாய்
முதல் ஆயிரம் ரூபாய் வரை தேவை. எங்கிருந்து வரும் இந்தப் பணம்?
பிரச்னைகளுக்குத்
தீர்வு தேடி உங்களிடம் வருவோரில் வசதியானவர்களை நீயே ஆட்டோவுக்குக் கொடு
என்றெல்லாம் கூடச் சொல்லிவிடலாம். ஆனால் அந்த வசதி இல்லாத அடிமட்ட
மக்களிடம்
அப்படிக் கேட்க முடியாது. அவர்கள்தான் நாளைக்கு விசுவாசமாக நீங்கள் கை
காட்டும் கட்சிக்கு வோட்டுப் போடப் போகிறவர்கள்.
எனவே படு நேர்மையான ஆளாக
நீங்கள் இருந்தாலும், குடும்பத் தேவைகளுக்குப் போக இந்த அரசியல் சமூகப்
பணிகளுக்காக மாதம் குறைந்தபட்சம் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் ரூபாய் வரை
செலவிட
முடிந்தால்தான் நீங்கள் சமூக அரசியல் களப்பணியாளராக இருக்க முடியும்.
இப்படி நீங்கள் செலவிட்டுச் செயல்பட்டாலும், உங்கள் கட்சியிலேயே இன்னொருவர்
சில மாதங்களுக்குள்
உங்களைப் புறந்தள்ளிவிட்டு அவர் வட்டமாகிவிடுவார். காரணம் நீங்கள்
நேர்மையாக இருந்தால், கட்சித்தலைமை விரும்பும் பல விஷயங்களைச் செய்ய
முடியாது. மூன்று மாதங்களுக்கொருமுறை உங்கள் பகுதியில் கட்சிக் கூட்டம் நடத்த
வேண்டும். பேச்சாளரின் சம்பளம் முதல், மேடை, மாலை, சால்வை, மைக், போஸ்டர்
எல்லா
செலவுக்கும் ஏது பணம்? மின்வாரியக் கம்பத்திலிருந்து மின்சாரம் திருடியது
போக மீதி செலவுக்கு உள்ளூர் கடைக்காரர்களிடமிருந்து சாம/தான/பேத/தண்ட
முறைகளைப்
பயன்படுத்தித் தான் வசூலிப்பீர்கள். பணம் கொடுத்த கடைக்காரர் நடை பாதையை
ஆக்கிரமித்திருந்தால், அதைப் பற்றி உங்களிடம் பொது மக்கள் புகார் செய்தால்,
புகார் செய்தவரை
மிரட்டுவதில் தான் உங்கள் ஊழல் அரசியல் வாழ்க்கையின் அஸ்திவாரமே
போடப்படுகிறது. செலவழித்த ஒவ்வொரு காசுக்கும் கணக்கு வைத்திருந்தவர்கள், கேட்டவர்கள்
காந்தியும் பெரியாரும். ஆனால் அவர்கள் காலத்தில் கூட அன்றாட அரசியல்
நடத்துவதென்பது
பணக்காரர்களின் தயவை நம்பித்தானிருந்தது. இன்று சொல்லவே வேண்டாம்.
அரசியல் கட்சிகளை நடத்த பெரும் பணம் தேவைப்படுகிறது. இதற்கு அரசு
இயந்திரத்தைப் பயன்படுத்திச் சம்பாதிக்கிறார்கள். உடந்தையாக இருப்பவர்கள்
அரசு ஊழியர்கள்,
அதிகாரிகள். அவர்கள்தான் சயண்ட்டிஃபிக் முறையில் மாட்டாமல் எப்படி ஊழல்
செய்வது என்பதை அரசியல்வாதிகளுக்குச் சொல்லிக் கொடுப்பவர்கள். அவர்களும்
கூடவே
சேர்ந்து சம்பாதிக்கிறார்கள். இதை ‘சம்பாதிப்பது’ என்று
சொன்னால் என் நண்பர் அதியமான் பொங்கி எழுவார். முறையாக உழைத்துக்
கிடைப்பதுதான் சம்பாதிப்பு. இது கொள்ளை என்று சொல்லுங்கள் என்பார்.
சரிதான். எனவே ஊழலை ஒழிக்க வேண்டுமானால், அரசியலுக்குப் பெரும் பணம் தேவைப்படுவதை
முதலில் ஒழித்தாக வேண்டும். அதற்கு நாம் முதலில் கை வைக்க வேண்டியது
தேர்தலில்தான். ஓரளவு நல்ல பெயர் உள்ளவர்களாகவும் அதிக ஊழல்
குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாதவர்களாகவும் இருக்கும் சைதை துரை
சாமியையும் மா.சுப்பிரமணியனையும் இரு பெரும் கட்சிகளும் மேயர் தேர்தலில்
வேட்பாளர்களாக நிறுத்தாமல் இருந்திருந்தால், நான் மேயர் தேர்தலில்
சுயேச்சையாக நின்றிருக்கக்
கூடும். அப்படிப் போட்டியிட்டால், மிகக் குறைந்தபட்ச செலவு எவ்வளவு ஆகும்
என்று கணக்கிட்டேன். சென்னை மாநகராட்சிக்குள் சுமார் 14 எம்.எல்.ஏ.
தொகுதிகள் இருக்கின்றன.
மிக மிகச் சிக்கனமாகச் செலவு செய்து பிரசாரம் செய்தால் கூட, ஐந்து லட்சம்
ரூபாயாவது தேவைப்படுகிறது. நானே அதைச் சம்பாதிக்க வேண்டுமானால், குறைந்தது
13 வருடங்கள்
‘ஓ’ பக்கம் எழுத வேண்டும்.பல தனி நபர் அரசியல்வாதிகளைக் கூட தேர்தல்தான் பெரும் செலவாளிகளாகவும்
கடனாளிகளாகவும் ஊழல் பேர்வழிகளாகவும் மாற்றுகிறது. ஒரு சில அரசியல்
பிரமுகர்கள்
எந்தக் கட்சியில் இருந்தாலும், மாறினாலும், சுயேச்சையாகத் திரும்பத்
திரும்ப ஜெயிப்பது உண்டு. தொகுதி மக்களிடையே அந்த அளவுக்கு அவருக்கு
செல்வாக்கு என்று
மீடியா வர்ணிக்கும் இந்த செல்வாக்கு அவருக்கு எப்படி வந்தது ? தொகுதியில்
யார் வீட்டுக் கல்யாணமானாலும், காது குத்தானாலும் பிரமுகர் தவறாமல் ஆஜராகி
கணிசமான பணத்தை
மொய் எழுதுவார். நேரில் சந்தித்து உதவி கேட்பவருக்கு ஏதாவது கொடுத்து
அனுப்புவார் என்றெல்லாம் பத்திரிகைகளே சொல்கின்றன. இந்தப் பணம் அவருக்கு
எங்கிருந்து எப்படி
வந்தது என்பதை யாரும் எழுதுவதில்லை. பல பேரங்களை முடித்துக் கொடுத்துப்
பெறுகிற லஞ்சப் பணம்தான் அது.
கட்சிகளுக்கு தொழிலதிபர்களும் சில பணக்கார கம்பெனிகளும் பணம் தருகிறார்கள்
என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் யார் எவ்வளவு கொடுத்தார்கள்
என்பது
தெரியாது. இதைப் பகிரங்கப்படுத்த வேண்டுமென்று சட்டம் இருக்கிறது.
கம்பெனி சட்டத்தின் 293ம் பிரிவின் கீழ் எந்த கம்பெனியும் பகிரங்கமாகவே
அரசியல் கட்சிக்கு நன்கொடை தரலாம். லாபத்தில் ஐந்து சதவிகிதம் வரை
தருவதாயிருந்தால்
கம்பெனியின் இயக்குனர் குழு முடிவு செய்யலாம். எல்லா பங்குதாரர்களும்
சேர்ந்து அங்கீகாரம் அளித்தால், எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம். இந்தப்
பிரிவு 1969ல் ரத்து
செய்யப்பட்டு மறுபடியும் 1985ல் கொண்டு வரப்பட்டது. டாட்டா நிறுவனம் பகிரங்கமாக நன்கொடை தருவதற்கு ஒரு முறையை
அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு கட்சிக்கும் அது முந்தைய தேர்தலில் பெற்ற
வாக்கு விகிதாசார
அடிப்படையில் வெவ்வேறு தொகைகளை நன்கொடையாக அறிவித்தது.
அசல் பிரச்னை கட்சிகளின் வருமானத் துக்கு வருமான வரிச் சட்டத்தின் 13 ஏ
பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டிருப்பதுதான். அதே வருமான வரிச்
சட்டத்தின் 2288 (2)
பிரிவின்படி 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை தருவோர் பெயர்களை வெளியிட
வேண்டும். ஆடிட் செய்யப்பட்ட கணக்கு வைத்திருக்க வேண்டும். 139 (4பி)
பிரிவின்கீழ்
ஒவ்வோராண்டும் வரி இல்லாவிட்டாலும் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டும்.
எந்தக் கட்சியும் இதை ஒழுங்காகச் செய்வதில்லை. செய்ய உத்தரவிடும்படி தில்லி
காமன்
காஸ் என்ற பொது நல அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தொடுத்தது. நீதிமன்றமும் வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டது. துறையும்
நோட்டீஸ்கள் அனுப்பியது. அதன் பிறகும் மாற்றம் எதுவும் வரவில்லை.கம்பெனிகளிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை நன்கொடையாக வாங்கிக் கொண்டு அதை
மக்களிடமிருந்து உண்டியலில் திரட்டிய நன்கொடை என்று சொல்லி,
வெள்ளையாக்குவதைத்தான் கட்சிகள் விரும்புகின்றன. வேண்டுமானால் அரசியல்
கட்சிகளுக்குக் கொடுக்கும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு உண்டு என்று சலுகை
அளித்தால், பகிரங்கமாக நன்கொடை தர தொழிலதிபர்கள் முன்வரக்கூடும்.
அடிப்படையாக, கணக்குக் காட்டாத கட்சிகள் அடுத்த தேர்தலில் போட்டியிட
முடியாது என்ற விதியை ஏற்படுத்த வேண்டும். இப்போது ஒவ்வொரு வேட்பாளரும்,
தன் சொத்து விவரங்கள், கிரிமினல் வழக்குகள் உண்டா என்ற தகவல்கள்
எல்லாவற்றையும் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தை, தேர்தல் ஆணையம் உச்ச
நீதிமன்றத்
தீர்ப்பின் உதவியுடன் செய்துவிட்டது. இதே போல கட்சிக் கணக்கு, உட்கட்சித்
தேர்தல் முதலியவற்றையும் கட்டாயமாக்கலாம். நன்கொடைகள் பகிரங்கமாக
இருந்தால்,
ஆட்சிக்கு வந்ததும் எடுக்கும் நடவடிக்கை களில் நன்கொடை கொடுத்த கம்பெனி
களுக்குச் சாதகமாக, சட்டத்தை வளைத்து ஏதாவது செய்யப்படுகிறதா என்பதை மக்கள்
கண்காணிக்க முடியும். எப்படியும் அரசியலும் குறிப்பாக தேர்தலும் பெரும் பணம் தேவைப்படும்
விஷயங்களாக இருப்பதை மாற்றினால்தான் ஊழலைக் குறைக்கவாவது முடியும். இப்போது
தேர்தலில் பெரும் பணம் இறைக்கப்படுவதற்கான காரணங் களைக் கண்டறிந்து அவற்றை
மாற்றவேண்டும். முதல் காரணம் ஒவ்வொரு கட்சியும் இன்னொரு கட்சியை விடப் பெரிய கட்சி என்று
காட்டுவதற்காக பிரம்மாண்டமான கூட்டங்கள், பேரணிகள், கட் அவுட்
கலாசாரங்களைச்
செய்வதற்குப் பெரும் பணம் வீணாகிறது. ஒரு லட்சம் பேர் கொண்ட பேரணியை நடத்த
வேண்டுமானால் மூன்று கோடி ரூபாய் வரை செலவிடுகிறார்கள். ஒரு சாதாரணப்
பொதுக்
கூட்டத்துக்கே பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவாகிறது. அண்ணா ஹசாரேவுக்கே
பத்து நாள் ராம் லீலாவுக்கு 75 லட்ச ரூபாய் செலவு.
செலவுக்கு இரண்டாவது காரணம் நமது தேர்தல் முறை. அதிக வாக்குகள் பெற்றவரே
வென்றவர் என்று சொல்வதை நாமும் நம்புகிறோம். ஒரு முறை வட சென்னை
தொகுதியில் ஜெயித்தவர் பெற்ற வாக்குகள் 2 லட்சம். அந்தத் தேர்தலில் வோட்டே
போடாதவர்கள் எண்ணிக்கையும் 2 லட்சம். பதிவான ஆறு லட்சம் வோட்டுகளில்
ஜெயித்தவருக்கு
எதிராக விழுந்தவை 4 லட்சம் வோட்டுகள். அவை பிரிந்திருந்ததால், 2 லட்சம்
பெற்றவர் ஜெயித்தவராகிவிட்டார். உண்மையில் அவர், பதிவான வாக்குகளில் கூடப்
பெரும்பான்மையைப் பெறவில்லை.இப்போது உள்ளாட்சித் தேர்தலில் பல வார்டுகளில் இதேபோல நிகழப் போவதைப்
பார்க்கலாம். மொத்தம் 40 ஆயிரம் வோட்டுகளில் 20 ஆயிரத்துக்கும் குறைவாகப்
பெற்றவர்
கூட ஜெயிக்க முடியும். இப்படி ஜெயிப்பதற்குத் தேவைப்படும் வோட்டுகளை
மட்டும் கணக்கிட்டு அதற்குப் பெரும் செலவு செய்து மக்களுக்கே லஞ்சம்
கொடுத்து ஜெயிக்கும்
உத்திதான் திருமங்கலம் ஃபார்முலா. தேர்தல் முறையையும் அரசியல் கட்சி நடத்தும் முறையையும் அரசு நிர்வாக
இயந்திரம் செயல்படும்விதத்தையும் மாற்றாமல், ஊழலை ஒழிப்பது என்பது
சாத்தியமே இல்லை.
இதெல்லாம் அண்ணா ஹசாரேவுடன் இருக்கும் அறிஞர்களுக்கும் தெரியும்.
அதனால்தான் அடுத்து தேர்தல் சீர்திருத்தம் என்று பேசத்தொடங்கி
இருக்கிறார்கள். எப்படித் தேர்தல்
முறையை மாற்றலாம், அரசு இயந்திரச் செயல்பாட்டில் என்ன மாற்றம் தேவை என்பதை
அடுத்த வாரத்தில் சொல்லி அத்துடன் இந்த சப்ஜெக்டை முடிக்கலாம்
என்றிருக்கிறேன்.
இவையெல்லாம் காலம் காலமாகப் பலராலும் என்னாலும் சொல்லப்பட்டு வருபவைதான்.
ஆனால் உடனடிச் செய்தி பரபரப்புகளே நம் கவனத்தை ஈர்ப்பதால் இந்த அடிப்படை
விஷயங்களை அவ்வப்போது திரும்பத் திரும்ப நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.
இந்த வாரப் பூச்செண்டு!
பத்தாம் வகுப்பு வரை இறுதித் தேர்வு மதிப்பெண் முறையை ஒழித்து, கிரேடு
முறையைக் கொண்டு வந்து குழந்தைகள் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்படுத்தும் ஆணை
பிறப்பித்ததற்காக
தமிழக அரசின் கல்வித் துறைக்கு இ.வா.பூ
நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
nermaiyanavarkal therthalil pottiyida mudiyatha sulnilaiyai thelivaaka puriya vaikkum katturai.
ReplyDelete