Search This Blog

Tuesday, October 04, 2011

சிக்கலில் சிதம்பரம்!

புது ‘2G'பாம்


ஒரு மர்ம நாவலுக்கே உரிய பல திடுக் திருப்பங்களுடன் விரைகிறது அலைக்கற்றை ஊழல் விசாரணை. கனிமொழியின் ஜாமீனுக்காக வாதாடிய வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, என் கட்சிக்காரருக்கு எதுவுமே தெரியாது. எல்லாம் ராசாதான்," என்றார்.ராசாவின் வழக்கறிஞரோ, என் கட்சிக்காரர் எடுத்த நடவடிக்கைகள் எல்லாமே பிரதமருக்கும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்துக்கும் தெரியும்," என்று காங்கிரஸ்காரர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தார். ஏர்செல் நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தயாநிதி மாறன் பங்கு குறித்து விசாரணை நடத்தப்படுகிறது," என்று சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தில் போட்ட அதிரடியால் ஆடிப் போனார்கள் மாறன் ப்ரதர்ஸ்.
மற்றொரு திருப்பமாக, சிதம்பரத்தையும் சாட்சியாக விசாரிக்க வேண்டும்" என்று ராசா சொல்ல, சூடானது காங்கிரஸ். 

ராசா மீதும் கனிமொழி மீதும் நம்பிக்கை துரோகம் என்ற புதிய குற்றச்சாட்டை சி.பி.ஐ. எடுத்து வைத்தது கருணாநிதிக்கு மேலும் அதிர்ச்சி.போதாததற்கு சுப்பிரமணிய சுவாமி, சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பல முக்கிய ஆவணங்களைக் கொடுத்திருக்கிறார். பற்றிக்கொண்டது காங்கிரஸில் கலவரத் தீ.சுவாமியின் ஆவணங்களில் முக்கியம், நிதி அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி அன்று பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய அலுவலகக் குறிப்புதான். நிதி அமைச்சகத் துணை இயக்குனர் ராவ், பிரதமர் அலுவலக விநித் மகாஜன் என்ற இணைச் செயலாளருக்கு எழுதிய குறிப்பு தான் அது. ‘இரண்டாம் அலைக் கற்றையை, ஏல முறையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்று முன்பு சொல்லியிருந்தது நிதி அமைச்சகம். ஆனால், தொலைத் தொடர்பு இலாகா, ‘இந்த விவகாரத்தை வியாபாரமாகப் பார்க்காமல், வளர்ச்சி நோக்கில் பார்த்துச் செயல் பட வேண்டும் என்றும், முதலில் வந்தவருக்கு முதலில் வழங்குவோம்’ என்று செயல்பட்டது மட்டுமல்லாமல், 2001இல் என்ன நுழைவு மற்றும் உரிமக் கட்டணம் வசூலிக்கப்பட்டனவோ அதே தொகையை வசூலித்தால் போதும் என்று சொல்லி விட்டது. ‘நிதி அமைச்சர் ஏல முறையை வற்புறுத்தியிருந்தால் ஊழலைத் தவிர்த்திருக்கலாம்’ என்றும் அந்தக் குறிப்பில் சொல்லப்பட்டிருந்தது. 
எனவேதான் சுவாமி, இந்த விவகாரத்தில் ராசாவும் சிதம்பரமும் இணைந்தே செயல்பட்டிருக்கிறார்கள்," என்று உச்ச நீதிமன்றம் சென்றுவிட்டார். கடுகடுத்துப் போயிருக்கிறது காங்கிரஸ் என்பது மத்திய அரசு வழக்கறிஞர் வாதத்தில் தெரிகிறது. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இனி உச்ச நீதிமன்றம் வழக்கைக் கண்காணிக்கத் தேவையில்லை," என்று தமது வாதத்தில் சொன்னார் மத்திய அரசு வழக்கறிஞர் ராவ். பா.ஜ.க., ஜெயலலிதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ‘சிதம்பரமே ராஜினாமா செய்’ என்று கொடி தூக்கி விட்டன.2009 செப்டெம்பரில் இந்த வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்யும்போது, அடையாளம் தெரியாத தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள்தான் முறைகேடுகளுக்குக் காரணம் என்று சொன்னது சி.பி.ஐ. சுவாமி மற்றும் பிரசாந்த் பூஷனின் இடை விடாத, சட்டப் போராட்டத்தின் மூலமாகத்தான் விஷயங்களே வெளி வந்தனவே தவிர, சி.பி.ஐ. காரணமல்ல," என்கிறார் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச். ராஜா.இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றம் சொல்லி எடுக்கப்பட்டவையே தவிர மத்திய அரசு தானாக எடுத்தவை அல்ல. ‘எனவே ஊழலைக் கண்டித்து நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று சொல்ல காங்கிரசுக்குத் தார்மிக உரிமை இல்லை. ரேஷன் அரிசியை வாங்கி வெளி மார்க்கெட்டில் விற்றால் தவறு. அது போலவே, அலைக்கற்றை உரிமத்தைக் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றவர்கள் மீதும் நடவடிக்கை என்பதுதானே சரி. 
2001ல் அலைக்கற்றை உரிமம் கொடுத்த விஷயத்தில் அப்போதைய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை விசாரித்தது சரி என்றால், 2008ல் நடந்த விற்பனைக்கு அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்தை விசாரிப்பதுதானே முறை. ஏல முறையைக் கடை பிடிக்க வேண்டும் என்று பிரதமரும், சிதம்பரமும் சொன்ன பிறகு, ராசா ஏன் வேறு முறையைக் கடைபிடித்தார்? அவரை அப்படித் தூண்டியது எந்த சக்தி?" என்று காட்டமாகக் கேட்கிறார் அவர்.சிதம்பரத்தைச் சாட்சியாக விசாரிக்க ராசா சொல்வதற்குக் காரணம், உரிமம் வாங்கிய இந்திய நிறுவனங்களின் பங்குகளை, அன்னிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாங்கியதைப் பங்கு விற்பனை என்று கருதாமல், அரசே அனுமதித்துள்ள ‘அன்னிய நேரடி மூதலீடாக’க் கருத வேண்டும் என்று அவர், பிரதமர் முன்னிலையில் கருத்து சொன்னாராம்," என்கிறார் பிரபல ஆடிட்டரும் பொருளாதாரக் கட்டுரைகள் எழுதுபவருமான எம்.ஆர்.வெங்கடேஷ். ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தொலைத் தொடர்பில் அனுபவம் இல்லாதவை. ஒரு நிறுவனத்தின் மூலதனமே ஒரு லட்ச ரூபாய்தான். அதற்கு 1651 கோடி உரிமம் விற்கப்பட்டது. அது 6000 கோடிக்கு விற்றுவிட்டது. இது அன்னிய நேரடி முதலீடு அல்ல. திட்டமிட்ட கொள்ளை. இரண்டு விஷயங்களை இன்னமும் யாரும் சரியாகக் கவனிக்கவில்லை. ஒன்று உரிமம் பெற்ற டுபாக்கூர் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் தொகை ஏற்பாடு செய்தது யார்? மற்றொன்று அன்னிய நிறுவனங்கள் வெளிப்படையாகக் கொண்டு வந்த தொகையைவிட வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில் காட்டாமல் நமது அரசியல் வாதிகள் கணக்கில் போட்ட தொகை எவ்வளவு? சிதம்பரத்துக்கு இதில் தொடர்பு இல்லையென்றால் ராசாவை உடனே விடுதலை செய்ய வேண்டும். ராசா முறைகேட்டில் ஈடுபட்டார் என்றால் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும்," என்கிறார் வெங்கடேஷ்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையே கடித்த கதையாக, இந்த விஷ வட்டம் இறுதியில் பிரதமரைச் சென்றடைந்துவிடுமோ என்ற கலக்கத்தால் மொத்த காங்கிரஸ் படையும் சிதம்பரத்துக்கு ஆதரவாகத் திரண்டு எழுந்திருக்கிறது.  சீதை போன்ற தூய்மையானவர் சிதம்பரம்," என்கிறார் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி. சுவாமி, ஜெயலலிதா போன்றவர்கள் பேனை பெருமளாக்குகிறார்கள். சோனியாவுக்கும் பிரதமருக்கும் உற்ற இணையாக இருக்கும் சிதம்பரத்தை வீழ்த்தி விட்டால், அவர்களையும் வீழ்த்தி விடலாம் என்று முனைகிறது ஒரு கூட்டம். நிதி அமைச்சகக் குறிப்புகள் எழுதியவர் ஒரு ஜூனியர் அதிகாரி. அவர் கூறியதால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. இதுவரை இந்த விவகாரத்தில் சிதம்பரம் மீது எந்த அமைப்பும் குற்றம் சாட்டவில்லை. 2007ல் பிரணாப்முகர்ஜி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட அமைச்சரவைக் குழுவுக்குத் தலைவராக இருந்தார். ஏல முறையைக் கடைபிடிக்க வேண்டும் என்றார். அதை சிதம்பரம் ஏற்றுக்கொண்டார். ஆனால், தொலைத் தொடர்பு அமைச்சகம் பழைய நடைமுறை மற்றும் முந்தைய கட்டணத்தையே பின்பற்ற வேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்தது. இந்த நிலையில் எந்த அதிகாரியாவது, ‘பிரணாப் முகர்ஜி அழுத்தமாகக் கருத்தைச் சொல்லியிருந்தால் ஊழலே நடந்திருக்காது என்று எழுதி வைத்தால் பிரணாப் ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைப்பார்களா? நிதி அமைச்சகக் குறிப்பில் சிதம்பரம் கிரிமினல் நோக்கில் செயல்பட்டார் என்று சொல்லப்படவில்லை. ஏல நடைமுறையைப் பின்பற்றாதது குறித்து சி.பி.ஐ. வழக்கு தொடரவில்லை. அனுமதி வழங்கப்பட்ட வகையில் லஞ்சப் பணம் கைமாறியதா என்றுதான் விசாரணை. சொத்துக் குவிப்பு வழக்கைச் சந்திக்கும் ஜெ.வுக்கு சிதம்பரத்தை பதவி விலகச் சொல்ல தார்மிக உரிமை கிடையாது," என்கிறார் கே.எஸ். அழகிரி.
சி.பி.ஐ. சரியாக விசாரணை செய்யவில்லை. உண்மையைக் கண்டுபிடிக்காமல் விடமாட்டேன். காங்கிரஸ் அரசேகூட கவிழ்ந்தாலும் சரி..." என்று அடித்துச் சொல்கிறார் சுப்பிரமணிய சுவாமி. ஆனால், சுவாமி கொடுத்த ஆவணங்கள் எதுவுமே புதிதல்ல; ஏற்கெனவே பரிசீலித்தவைதான் என்கிறது சி.பி.ஐ.

இந்த நிலையில், உட்கட்சியில் நடக்கும் பனிப்போர்தான் இது போன்ற விவகாரங்கள் வெடிக்கக் காரணம்" என்கிறார்கள் சில காங்கிரஸ் தலைவர்கள். சிதம்பரத்தைத் தூக்கி விட்டால் நாளை ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக பிரதமர் பதவி விலகும் நிலையில் அந்த இடத்தைப் பிடிக்க பிரணாப் முயன்று வருகிறார்; அவருக்குச் சில பெரு முதலாளிகள் உதவியாக இருக்கின்றனர்," என்கிறார்கள் அவர்கள்.

‘தான் பதவி விலகி, எந்தத் தவறும் செய்யவில்லை’ என்பதை நிரூபிக்கத் தயார் என்று சோனியாவிடம் சொல்லிவிட்டார் சிதம்பரம். உச்ச நீதிமன்றம் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டால் காங்கிரஸ் பெரும் சோதனைகளைச் சந்திக்க நேரிடும்.

சிக்கல் நம்பர் 2


2 ஜி சிக்கல் ஒரு பக்கம் இருக்க, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிதம்பரத்திடம் பாராளுமன்றத் தேர்தலில் தோற்ற ராஜ கண்ணப்பன் போட்ட தேர்தல் வழக்கு, மற்றொரு சிக்கல். தேர்தலின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு, பதிவான வாக்குகளைத் தவறாகப் பதிவு செய்தது, முடிவை அறிவிக்காமல் தாமதம் செய்தது என்று பல காரணங்களைச் சொல்லி, சிதம்பரம் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார் ராஜ கண்ணப்பன்.

தொடக்கத்திலேயே ஆட்சேபம் தெரிவித்து சிதம்பரம் போட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது; அதேபோன்ற மனுவை மீண்டும் போட்டிருக்கிறார் சிதம்பரம். விசாரணை வரும் 14ஆம் தேதி," என்கிறார் ராஜ கண்ணப்பனின் வழக்கறிஞரான ஜி. சரவணக்குமார்.
 

No comments:

Post a Comment