Search This Blog

Monday, October 17, 2011

நாமினி: செய்யக்கூடாத தப்புகள்!

ருவர் எதற்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறார்..? தனக்குப் பிறகு தன் குடும்பத்தினருக்குப் பொருளாதார ரீதியாக நெருக்கடி எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தானே? இவ்வளவு அக்கறையோடு பாலிசி எடுப்பவர்களில் சிலர், கடைசியில் ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிடுகிறார்கள். தனக்குப் பிறகு பாலிசித் தொகை யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்கான நாமினியை நியமிக்காமல் விட்டுவிடுகிறார்கள். அல்லது தவறான நபரை நியமித்து விடுகிறார்கள்! விளைவு பாலிசி எடுத்த நோக்கமே நிறைவேறாமல் திசைமாறி, குடும்பத்தில் குழப்பத்துக்கு வித்திட்டுவிடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளைத் தவிர்க்க நாமினியை நியமிக்கும்போது, எந்தெந்த விஷயங்களில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்..

யாரை நியமிக்கலாம்?

உங்கள் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள், உறவினர் கள், ஏன் ரத்த சம்பந்தம் அல்லாத நண்பர்களைக்கூட நாமினியாக நியமிக்கலாம். ஆனால், நாமினியாக நீங்கள் நியமிப்பவரின் பெயர் தெளிவாக இருக்க வேண்டும். வயது, முகவரி, பாலிசிதாரருக்கு என்ன உறவுமுறை போன்ற விவரங்களையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். நீங்கள் நியமிக்கும் நாமினி மைனராக இருந்தால் அவருக்கு காப்பாளர் ஒருவரையும் நியமிக்க வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட நாமினி?

வங்கிச் சேமிப்பு கணக்கு, பி.எஃப். போன்றவைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நாமினி களை நியமிப்பது போல இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும் போதும், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை நாமினியாக நியமிக்கலாம். அப்படி ஒன்றுக்கு மேற்பட்டவர்களை நியமிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எவ்வளவு சதவிகிதம் பாலிசி தொகை கொடுக்க வேண்டும் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டால் எதிர்காலத்தில் இழப்பீட்டுத் தொகை பெறுவதில் பிரச்னை இருக்காது.


நாமினி இறந்துவிட்டால்?

பாலிசிதாரர் உயிரோடு இருக்கும்போதே நாமினியாக நியமிக்கப்பட்ட நபர் இறந்துவிட்டால் புதிதாக இன்னொருவரை நாமினியாக நியமிக்கலாம். இதற்கு சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் உரிய படிவத்தைப்  பூர்த்தி செய்து கொடுத்தால் போதுமானது.

நாமினி அல்லாத பாலிசி?

ஒருவேளை யாருமே நாமினியாக நியமிக்கப்பட வில்லை எனில், இழப்பீட்டுத் தொகை பாலிசிதாரரின் சட்டப்படியான வாரிசுகளுக்கு கிடைக்கும். ஆனால் அவர்கள் உரிய சான்றிதழ்கள் எல்லாம் கொடுத்து கிளைம் தொகையை வாங்க சிறிது காலதாமதமாகும். இதைத் தவிர்க்க ஆரம்பத்திலேயே யாராவது ஒருவரை நாமினியாக நியமித்துவிடுவதே நல்லது.  

உரிமை மாற்றம்!

நாமினிக்கும் உரிமை மாற்றத்திற்கும் (அசைன்மென்ட்) வேறுபாடு உள்ளது. நாமினி என்பவர் பாலிசிதாரரின் மறைவுக்குப் பிறகு அந்தத் தொகையை பெற்றுக் கொள்ளும் உரிமையுடையவர். ஆனால், பாலிசி பத்திரத்தை வைத்து வங்கியில் கடன் வாங்கும்போது, வங்கி ஒரு கேரன்டிக்காக பாலிசி பத்திரத்தை வாங்கிக் கொள்ளும். இதையே 'உரிமை மாற்றம்’ என்கிறோம்.

வங்கியிலிருந்து வாங்கிய கடன் முழுமையாக திருப்பிக் கட்டப்படும் வரை பாலிசியின் மீதான முழுஉரிமையும் வங்கிக்கே உண்டு. கடன் முழுவதும் கட்டப்படாத நிலையில் பாலிசிதாரர் மறைந்துவிட்டால் இழப்பீடு அவரது குடும்பத்துக்கு கிடைக்காது; வங்கிக்கே சேரும்! இன்னொரு முக்கியமான விஷயம் உரிமை மாற்றம் கொடுக்கும்போது நாமினி செயல் இழந்து போகும்!

'நன்றே செய்க; அதை இன்றே செய்க’ என்பது பொதுவாழ்க்கைக்கு மட்டுமல்ல; நாமினி நியமிப்பதற்கும் நன்றாகவே பொருந்தும்!     .

2 comments:

  1. அருமையான தகவல்
    பகிர்ந்க்தமைக்கு மிக்க நன்றி
    வாழ்க வளமுடன்
    என்றும் உங்கள் நண்பன் Tallykarthick

    ReplyDelete
  2. நல்ல பயனுள்ள பதிவு.

    ReplyDelete